minmini_370_copyநீங்கள் கிராமத்தில் வாழ்ந்திருக்கிறீர்களா? அல்லது கோடைகால இரவு நேரங்களில் கிராமத்துக்குப் போனதுண்டா? அது ஒரு சுவையான அனுபவம்தான். அதனை அனுபவித்து உணர்ந்தால்தான் அறிய முடியும். கோடையிலிருந்து கார்த்திகை மாதம் வரை, முக்கியமாக மே முதல் ஆகஸ்ட் மாதம் வரை அறுவடை முடிந்த வயல் வெளிகளை ஒட்டியும், நீர்நிலைகளை ஒட்டியும் இருக்கும், மரங்களில் இரவு நேரத்தில் வெளிச்சப் பட்டாளங்கள் திரியும்.

மனதை மயக்கும் பசுமஞ்சள் நிறம். நாம் சொக்கியே போவோம் அந்த ஒளியின் நிறத்தில். நீங்கள் பார்த்தீர்கள் என்றால் ஆச்சரியத்தில் பிரமித்து விடுவீர்கள். மரத்தை சுற்றித் திரிந்து பறக்கும் குட்டி மின்னல் கூட்டம் ஒரு பக்கம். தரையில் புல் நுனியில் அமார்ந்து தியானம் செய்வது போல மினுக்கும் விளக்கு வண்டுகள் மறு பக்கம். இரண்டுமே நம்மை ஆச்சரியத்தால் கட்டிப் போட்டுவிடும். விளக்கு பூச்சி விட்டு விட்டு வெளிச்சத்தை பீற்றி அடிக்கும். அதற்குப் பதில் சொல்வது போல கீழே கிடக்கும் மினுக்கும் வண்டும் அதற்கு ஈடாகவே விட்டு விட்டுப் பிரகாசிக்கும். நிஜமாலுமே அது உண்மைதான். ஆனால் காதல் தூதை முதலில் அனுப்புவர் பெண்ணேதான். பின்னர்தான் ஆண் பதிலுக்கு சம்மதம் தெரிவிப்பார். கீழே கிடக்கும் பெண் பூச்சியை மையம்/மையல் கொண்டுதான் மேலே பறக்கும் ஆண் பூச்சி ஒளியைத் தூதுவிடுகிறது தன் காதலுக்கு. அதற்கு எழுதப் படிக்க, பேசத் தெரியாதல்லவா? காதலுக்கு விழி வழி தான் பேச வேண்டுமா? ஒளி வழியும் கூட பேசலாமே, இணக்கம் தெரிவிக்கலாமே! அதனால் தனக்குத் தெரிந்த மொழியில் தூதுவிடுகிறது பூச்சி.. தன் இணைவுக்கு இணக்கமா என ஒளியால் கேட்கிறது பெண். ஒளியின் வழி மொழியிலேயே ஆணும் சம்மதம் தெரிவிக்கிறது. 

இரவு நேரங்களில் சுற்றித் திரியும் மின்மினிக்களின் வாழ்க்கை இப்படித்தான். இவைகளின் அளவு 5 to 25 மி.மீ தான். (up to 1 inch).இவைகளில் 2000 வகைகள் உள்ளன. பொதுவாக இவை இரவு நேரங்களில் மட்டுமே சஞ்சரிக்கும், சிலவகை பகலிலும் வரும். ஆனால் இரவில் இருட்டில் சுற்றுபவர்களுக்குத்தானே விளக்கும், வெளிச்சமும் வேண்டும். அதனால்தான் இந்தப் பூச்சிகள் ஒரு விளக்கைச் சுமந்து கொண்டு, அது தரும் ஒளியில் ஆகாயத்தில் அழகாக, அற்புதமாய், தன்னைத் தானே மினுக்கி, மயக்கி வலம் வருகிறது. ஆண் பூச்சியின் மேல் தோல், வண்டின் தோல் போல கடினமாக இருக்கும். பெண்ணோ பரம சாது.. ரொம்ப மென்மையானவளும் கூட. அவளுக்கு தோல் கடினம் கிடையாது. பஞ்சு போல மென்மையாக இருக்கும். அது மட்டுமா, அவள் பறந்து ஓடிவிடாமல் இருக்க, அவளின் இறக்கை உருவாக்கப்படவில்லை. அது மட்டுமல்ல பெண் முதிர்ச்சி அடைந்துவிட்டால் அவள் தாய்மைப் பொறுப்பேற்க உணவு உண்ணமாட்டாள். அதற்காகவே பறப்பது ஆண் மட்டுமே. பெண்ணுக்கு அந்த விடுதலை இல்லை. அவளின் கரங்கள், பறக்கும் கரங்கள் வெட்டப்பட்டுவிட்டன இயற்கையால். அதிக பட்சம் பெண் பூச்சி ஒரு செடி/புல்லின் மேல் ஏறலாம். ஆணும் பெண்ணும் ஒரு குறிப்பிட்ட கால கதியில் ஒளியை விட்டு விட்டுப் பிரகாசிக்கும். பெண் சம்மதம் தெரிவித்த பின், இருவரும் இணை சேருவார்கள்.. பின்னர் இயற்கை நியதிப்படி பெண்மை கருவுரும். பின்னர் அங்கேயே கொஞ்ச நாள் கழித்து பெண், பாதுகாப்பாக முட்டைகளை ஈர மண்ணில் புதைத்து வைப்பாள். முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சுகள் சுமார் ஒரு வருட காலம், இளம் பிள்ளையாய் சுற்றித் திரியும். கோடை வந்ததும்தான் அவர் இணை சேரும் பக்குவம் அடையும். பெண் இறக்கை இன்றியே காலம் கழிப்பாள்.
 
minmini_450அது சரி.. இந்த வெளிச்சம் எப்படி என்கிறீர்களா? அந்த ஒளி மின்மினியின் உடலிலிருந்து உருவாகிறது. மின்மினிப் பூச்சிகள் இளம்பருவத்திலிருந்தே மினுக்கும் தன்மையவை. ஆனால் இதில் இன்னொரு ஆச்சரியமும் அடங்கி இருக்கிறது. அதுதான் எப்படி இவை இந்த ஒளியால் இறந்து போகாமல் அதனூடேயே வாழ்கின்றன. பொதுவாக, ஒரு பொருள் ஒளிவிடும்போது, அதிலிருந்து பெரும்பாலும் வெப்பமே வரும். அதாவது ஒரு மின் விளக்கில் 90% வெப்பமும், 10% ஒளி மட்டுமே வரும். அப்படி என்றால் இந்த குட்டியூண்டு பூச்சி வெந்து கருகிவிடாதா? இங்கே அப்படி எல்லாம் நடப்பது இல்லை. மின்மினியின் உடலில் உருவாகும் ஒளி குளிர் ஒளி(cold light) /உயிர் ஒளி (Bioluminescence)என்றே அழைக்கப்படுகிறது. ஏன் தெரியுமா? அந்த ஒளியிலிருந்து இந்தப் பூச்சிகள் ஒரு மந்திரக் கோலை தன் வயிற்றில் வைத்துள்ளன. அதுதான் ஒளியைத் தரும் சிறப்பு செல்கள். அவை முழுக்க முழுக்க ஒளியை மட்டுமே தரும், துளிக்கூட வெப்பம் தருவதில்லை. அதாவது மின்மினியிலிருந்து வரும் ஒளியில் 100% ஒளி மட்டுமே. வெப்பம் பூஜ்யம் டிகிரிக்கும் குறைவே..!

ஏனெனில் மின்மினியின் உடலிலிருந்து பார்வை ஒளியலைகள் (Visible light) மட்டுமே உருவாக்கப்படுகின்றன. புறஊதாக்கதிரோ, அகச்சிவப்பு கதிரோ உற்பத்தி செய்யப்படுவதில்லை. அது மட்டுமல்ல, அதன் வெப்ப அளவு, பூச்சி எவ்வளவு விரைவில் பிரகாசிக்கிறதோ அதற்குத் தகுந்தாற்போல இருக்கும். விரைவான காலகதி என்றால் வெப்ப அளவு அதிகம். இரு மினுக்குகளுக்கு இடையே, கொஞ்ச நேரம் அதிகமானால், ஒளியின் வெப்பம் கொஞ்சம் குறைவு. இந்த ரிதமால்தான் ஆண்கள் ஈர்க்கப்படுகின்றன. இணை தேட மட்டுமல்ல, சமயத்தில் இரை தேடவும், இந்தப் பூச்சிகள் ஒளியைத் தூண்டிலாகப் போடுகின்றன. 

மின்மினியின் வயிற்றுப் பகுதியில் ஒளியை உருவாக்கும் சிறப்பு ஒளிசெல்கள் (Photcytes) உள்ளன. இதில் லூசிபெரின் என்ற வேதிப்பொருள் இருக்கிறது. இது பூச்சியில் உடலுக்குள் வரும் காற்றுக் குழாயிலிருந்து (Trachea) ஆக்சிஜனை எடுத்துக் கொள்கிறது. பின் லூசிபெரினும், ஆக்சிஜனும் லூசிபெரேஸ்(Luciferase) என்ற நொதியினால் இணைந்து ஆக்சிலூசிபெரிலின் (oxyluciferin) என்ற பொருளாக மாறுகிறது. அப்போதே ஒளியையும் கக்குகிறது மின்மினியின் வயிற்று செல்கள்.

luciferin + ATP -------------> luciferyl adenylate + PPi
adenylate + O2 -------------> oxyluciferin +AMP + light

minmini_371இந்த ஒளியின் அலை நீளம் 510 & 670 நானோ மீட்டர். இதன் நிறம் வெளிர் மஞ்சளிலிருந்து பசு மஞ்சள், இளஞ்சிவப்பு பச்சை ஆகியவை.ஆனால் இதன் ஒளி விடும் கட்டுப்பாட்டை நிறுத்தி, ஓடச் (On -Off mechanism) செய்பவைகள் நரம்பு செல்கள் + ஆக்சிஜன் வரத்து மட்டுமே. அதன்கடை நிலை லூசிபெரேஸ் மட்டும் சமீபத்தில் அறியப்பட்டுள்ளது. அதன் மரபணுவும் பிரிக்கப்பட்டுவிட்டது. இவ்வளவு அறிவியல் முன்னேறிய நிலையிலும், நம்மால் மின்மினி போன்ற ஒளியை உற்பத்தி செய்ய முடியவில்லை. லூசிபெரின் உருவாக்கம் இன்னும் முழுமையாய் விஞ்ஞானிகளுக்குப் பிடிபடவில்லை.

முடிவாக ஒரு வரலாற்றுத் தகவல்:

முதல் உலகப்போர் நடந்த காலத்தில், இராணுவ முகாம்களில், மின் விளக்கு வசதி கிடையாது. அப்போது காயம் பட்ட வீரகளுக்கு சிகிச்சை அளிக்கவும், அறுவை சிகிச்சை செய்யவும், லாந்தர் விளக்கில் மின்மினியைப் பிடித்துப் போட்டு வைத்துக் கொண்டு, சிகிச்சை செய்தனராம். அது போல, இராணுவ வீரர்கள் கடிதம் படிக்க மின்மினியின் உலர்ந்த உடலைப் பொடி செய்து, அதில் உமிழ் நீர் உமிழ்ந்து, கலந்து அதன் ஒளியில் படித்தனராம். இப்போதும் கூட, ஆதிவாசிகளின் இல்லங்களில் இரவில் மின்மினி விளக்குகள்தான் கண்ணாடி பெட்டியில்/லாந்தரில். பழங்கால சீனர்களும், மின்மினியை கண்ணாடி பாட்டிலில் அடைத்து வெளிச்சம் தர பயன்படுத்தினர்.

Pin It