vedanthangal02_620

வேடந்தாங்கலுக்கு வரும் பறவைகள் அனைத்தும் வடக்கு ஆசியா, ஐரோப்பாவில் இருந்து வந்தவை என்று கூற முடியாவிட்டாலும் 20 அல்லது 25 சதவிகித பறவைகள் வேறு இடங்களில் இருந்து வருபவைதான். வெளிநாடுகளில் இருந்து வலசை வரும் பறவைகள் உட்பட அனைத்துக்கும் தமிழ்ப் பெயர்களும் உள்ளூர் பெயர்களும் உண்டு. இந்தப் பெயர்கள் மூலம் நமது பாரம்பரியத்திலும், அந்த கிராம மக்களின் வாழ்விலும் இப்பறவைகள் கலந்துவிட்டதை உணர முடிகிறது.

வேடந்தாங்கலுக்கு வரும் பெரும்பாலான பெரும்பறவைகள், கோடை காலங்களில் நாட்டின் பிற பகுதிகளில் வாழ்கின்றன. வலசை காலத்தில் வேடந்தாங்கல் வரும் இவை இங்கு கூடமைத்து குஞ்சு பொரிக்கின்றன. கூடமைக்கும் இடமே பறவைகளின் தாயகம் என்பார் காட்டுயிர் எழுத்தாளர் சு.தியடோர் பாஸ்கரன். இந்த பறவைகளை உள்நாட்டு வலசைப் பறவைகள் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

பொதுவான நம்பிக்கை மாறாக சிறு பறவைகளே பெரும்பாலும் தூர தேசங்களில் இருந்து இங்கு வருகின்றன. கிளுவை, ஊசிவால் போன்ற வாத்துகள், வாலாட்டிகள் (Wag Tails), உப்புக்கொத்திகள் (Plovers), உள்ளான்கள் (Sandpiper), ஆற்று ஆலாக்கள் (Terns) போன்றவை அவை. அளவில் சிறியவை என்பதால் கூர்மையான இரு கண்ணோக்கி கொண்டே இவற்றை தெளிவாகப் பார்க்க முடியும்.

Black-Ibis1_370இங்கு என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்திய இரண்டு விஷயங்களில் முதலாவது, Black lbis எனப்படும் அரிவாள்மூக்கனின் உள்ளினமான அன்றில் பறவையை குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் பார்க்க முடிந்தது. ஏரிக்கு எதிர்ப்புறம் தண்ணீர் பாய்ச்சப்பட்டிருந்த வயல்களில் வெள்ளை அரிவாள்மூக்கன்களுடன் கலந்து அவை இரை தேடிக் கொண்டிருந்தன. சங்க காலம் முதல் பதிவு செய்யப்பட்டுள்ள இந்தப் பறவையை பார்க்க முடிந்தது என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அருவாமூக்கன் எனப்படும் இந்த கொக்கு வகையில் தமிழகத்தில் மூன்று உள்ளினங்களைப் பார்க்க முடியும்.

அன்றில் பறவை தூரப்பார்வைக்கு கறுப்பு நிறத்தில் இருந்தாலும், உச்சந்தலை ரத்தச்சிவப்பாக, உடல் அடர்பழுப்பு நிறத்தில் இருப்பதை உற்றுநோக்கினால் அறியலாம். வேடந்தாங்கல், கரிக்கிளி சரணாலயங்களுக்கு நூற்றுக்கணக்கில் இவை வருவதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இரண்டாவது ஆச்சரியம், கூடு கட்டுவதற்காக மஞ்சள் மூக்கு நாரைகளும், சில அரிவாள் மூக்கன்களும் தொடர்ச்சியாக ஒன்று மாற்றி ஒன்றாக பச்சையான சிறு மரக்கிளைகளை முறித்துச் சென்றதே.

இயற்கையின் கட்டளைக்கு ஏற்ப தங்கள் இனத்தை விருத்தி செய்ய இப்பறவைகள் கூடமைக்கின்றன. சாதாரணமாக கூடமைக்க பறவைகள் சிறு மரக்கிளைகள், சுள்ளிகளை அலகில் கொத்திப் பறப்பது வழக்கம். ஆனால் மஞ்சள் மூக்கு நாரைகள் பச்சை மரக்கிளைகளை, சிலநேரம் காய்ந்த மரக்கிளைகளை அலகால் முறித்துச் செல்கின்றன. இந்த செயல்பாட்டை கவனிப்பது சுவாரசியமாக இருந்தது.

சில பறவைகள் கிளையை முறிக்க முடியாமல் மாறிமாறி ஒவ்வொரு கிளையாக அலகை திருப்பி எது வசதியாக கிடைக்கும் என்று தேடிக் கொண்டிருந்ததையும் பார்க்க முடிந்தது. இயற்கை உந்துதலின் காரணமாகவே இந்தச் செயல்பாடு நிகழ்கிறது.

வலசை காலம்

வேடந்தாங்கலில் வலசை பருவகாலம் தொடங்கும் நாள் நவம்பர் 15 என்று கருதப்படுகிறது. 2007ம் ஆண்டு அந்த நாளில் 10,000 முதல் 15,000 பறவைகள் வந்திருந்தன. வலசை வரும் பறவைகள் குளிர்காலத்தை கழிக்க ஒவ்வோர் ஆண்டும் குறிப்பிட்ட நாள். குறிப்பிட்ட இடத்துக்கு மீண்டும் மீண்டும் வரும் தன்மை கொண்டவை, தென்மேற்குப் பருவ மழையைப் போல.

வேடந்தாங்கலில் இதுவரை 115க்கும் மேற்பட்ட பறவை வகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை நீரைச் சார்ந்து வாழும் நீர்ப்பறவைகளே.

2006 ஜனவரியில் சென்றபோது 20 பறவை வகைகளை எங்களால் அடையாளம் காண முடிந்தது. முந்தைய ஆண்டு சரியான மழைப்பொழிவு இல்லாததால் ஐந்தாயிரத்துக்கும் குறைவான பறவைகளே வந்தனவாம். அந்த ஆண்டு பத்தாயிரக்கணக்கில் கூடியிருந்தன. 2007 டிசம்பரில் சென்றபோதும் அதே எண்ணிக்கையிலான பறவை வகைகளைக் கண்டோம். ஆனால் பறவைகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. காரணம் அது வலசை காலத்தின் தொடக்கம்.

2007ம் ஆண்டில்

2007ம் ஆண்டு டிசம்பர் முதல் வாரத்தில் வேடந்தாங்கல் சென்றபோது அன்றில் பறவைகளை அதிக எண்ணிக்கையில் பார்க்க முடிந்தது. நத்தை குத்தி நாரைகள், கூழைக்கடாகள், உண்ணி கொக்குகள். பெரிய கொக்குகள் அதிக எண்ணிக்கையில் கூடியிருந்தன. வலசை காலம் தொடங்கும் போது டிசம்பர் மாதத்தில் கூழைக்கடாக்கள் அதிக எண்ணிக்கையில் வருகின்றன. வேடந்தாங்கலில் வழக்கமாக பெரும் எண்ணிக்கையில் கூடும் மஞ்சள் மூக்கு நாரைகளின் வருகை நாங்கள் சென்றிருந்த 2ம் தேதிதான் அந்தப் பருவத்தில் முதன்முறையாக பதிவு செய்யப்பட்டிருந்தது.

பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் பறவைகள்:

PaintedStork_370மஞ்சள் மூக்கு நாரை (Painted Stork), கூழைக்கடா (Grey Pelican), கரண்டிவாயன் (Spoonbill), அரிவாள்மூக்கன் (White lbis), பெரியகொக்கு (Large Egret), நத்தைக்குத்தி நாரை (Openbilled Stork), பாம்புத்தாரா (Indian Darter) உள்ளிட்டவை.

அரிவாள் மூக்கன் – னின் அலகு கீழ்ப்புறமாக கதிர் அரிவாளைப் போல முன்னால் வளைந்திருக்கும். சேற்றில் பூச்சிகள், நத்தைகள் உள்ளிட்டவற்றை அலகால் குத்தியெடுத்து உண்ணும். அரிவாள் மூக்கனின் அலகும், கால்களும் கறுப்பு நிறம், உடல் வெள்ளை நிறம் என எதிரெதிர் நிறங்களைப் பெற்றிருக்கும்.

கரண்டிவாயன் என்ற பெயரைக் கேட்டவுடனேயே, ஏதோ கிண்டல் செய்கிறார்கள் என்று தோன்றுகிறதா? கரண்டிவாயனின் அலகுகள் சமையல்காரர்கள் பயன்படுத்தும் அகப்பை கரண்டிகள் இரண்டை மேலும் கீழுமாக வைத்தது போலிருக்கும். தலைப்பிரட்டை, தவளை, நீர்ப் பூச்சிகள் போன்றவற்றைப் பிடித்து தலையை மேற்புறமாகத் தூக்கி இரையை விழுங்கும். இது பார்க்க புதிய அனுபவமாக இருக்கும். வளர்ந்த கரண்டிவாயன்களின் தலைப்பகுதிக்கு பின்புறம் குடுமி போன்ற சில இறகு முடிகள் இருக்கும். இந்த கொண்டை முடிகள் அதன் அழகைக் கூட்டும்.

உணவுப் பழக்கம் காரணமாகவே மேற்கண்ட இரு பறவைகளுக்கு அலகு இப்படி அமைந்துள்ளது.

பாம்புத்தாரா ஒரு நீர்ப்பறவை. பெரும்பாலான நேரம் நீரில் நீந்திக் கொண்டிருக்கும். உடல் அளவில் நீர்க்காகத்தை ஒத்திருந்தாலும் இதன் கழுத்து நீண்டிருக்கும். உடல் பளபளக்கும் கறுப்பு-பழுப்பு நிறம். நீண்ட கழுத்து பழுப்பு நிறம். தலை மட்டும் வெளித்தெரியும் வகையில் தண்ணீரில் உடலை மறைத்து நீந்தும். அப்பொழுது நீண்ட கழுத்து பாம்பு போல வெளியே நீண்டிருக்கும். இதனால் தான் அப்பெயர் பெற்றது. அம்புபோல் கழுத்தை சட்டென்று நீட்டி மீனைப் பிடிக்கும். மீனே இதன் முக்கிய உணவு.

இளஞ்சிவப்புத் தலையுடன் காணப்படும் மஞ்சள் மூக்கு நாரையின் இறகுகள் கரும்பச்சை, வெள்ளை, இளஞ்சிவப்பு கலந்து பளிச்சென்று இருக்கும். மரத்துக்கு மேலே பறந்து வந்து ஒரு கணம் நிதானித்துவிட்டு, பின்னர் இந்தப் பறவை அமரும் அழகே தனி.

நத்தை குத்தி நாரை, மஞ்சள்மூக்கு நாரை போலவே இருந்தாலும் தலை நிறமற்றும், அலகு இடைவெளியுடனும், இறகுகள் இளஞ்சிவப்பு வண்ணமின்றியும் உள்ளன.

கூழைக்கடாவுக்கு வழக்கமாக அடி அலகின் கீழே பை இருக்கும் என்றாலும். இங்குள்ள Spot billed or Grey Pelican என்ற கூழைக்கடா வகைக்கு பெரிய பை இருப்பதில்லை. இதன் அலகு அமைந்துள்ள விதம், அதன் முகத்தை சிரித்த முகம் போல தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

பளிச்சென்ற வெண்நிறத்தில் புசுபுசுவென இறக்கைகளுடன் காணப்படும் உண்ணிக் கொக்கு கூட்டமாக பறந்து செல்வது விமான சாகசக் காட்சிகளை நினைவுபடுத்தும்.

வீட்டுக் காக்கைகளைப் போல, நீர்க்காகங்கள் என்ற வகை உண்டு. கொண்டை நீர்க்காகம் (Indian Shag), சிறிய நீர்க்காகம் (little Cormorant) என இரு வகைகள் இங்கு அதிகமாக உள்ளன. சிறிய நீர்காகம் கூட்டமாக மீன்பிடிக்கும். நீர்க்காகங்களுக்கு எண்ணெய் சுரப்பி இல்லாததால் நீந்தும் போது இறக்கைகள் நனைந்துவிடும். கொண்டை நீர்க்காகங்கள் வெயிலில் இறக்கைகளை காய வைப்பதை தெளிவாகப் பார்க்கலாம்.

வேடந்தாங்கலின் கவர்ச்சிகரமான பறவைகள் மஞ்சள்மூக்கு நாரை, கூழைக்கடா, நத்தைகுத்தி நாரை, கரண்டிவாயன் ஆகியவையே. பருவகாலம் உச்சமடையும்போது இந்த நான்கு பறவைகளையும் அதிக எண்ணிக்கையில் பார்க்கலாம். அரிவாள்மூக்கன் (வெள்ளை), அன்றில் பறவை, நீர்க்காகங்கள், பாம்புத்தாராக்கள் போன்றவற்றையும், ஊசிவால் வாத்து (Pintailed Duck), கிளுவை (Commen Teal), நாமக்கோழிகள் (Common Coot), தாழைக்கோழி (Moorhen), முக்குளிப்பான (Dab Chick) போன்ற சிறு நீந்தும் பறவைகளையும் பார்க்கலாம்.