கங்கை மாதாவின் வாகனமாக கருதப்படும் கங்கை முதலைகள் (Gharial), தன் இருப்பை உறுதி செய்து கொள்வதில், மிகுந்த சிரமப்படுகின்றன. நன்னீரில் வாழும் இந்த முதலைகள், ஆற்றின் அடி ஆழத்தில், வாழ்கின்றன. அவ்வப்போது தலை நீட்டி தன் இருப்பை மற்ற உயிரினங்களுக்கு அறிவித்துவிட்டு மீண்டும் உள்ளே சென்று விடும்.

 

 

சுமார் 60 முட்டைகள் இடும் இந்த முதலைகள், 90 நாட்களில் குஞ்சு பொறிக்கும்.  மீன்களை அதிகம் விரும்பி உண்ணும் இந்த முதலைகள், இந்திய துணை கண்டத்தின் பெரும்பாலான இடங்களில் பரவி இருந்தன. பாகிஸ்தான், பர்மா, பூடான் மற்றும் பங்களாதேஷ் நாடுகளில் இவை முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டன.

தற்சமயம் இவை இந்தியா மற்றும் நேபாளத்தில் தன்னுடைய வாழ்க்கைக்கு போராடிக் கொண்டிருக்கின்றன. கிர்வா மற்றும் சாம்பல் ஆறுகளில் வாழ்கின்றன. 2007 ஆம் ஆண்டு, நச்சு தன்மை ஆற்றில் கலந்து. அதன் விளைவாக பாதிப்புக்குள்ளான மீன்களை உணவாக உட்க்கொண்டதன் மூலம் சுமார் 100 முதலைகள் யமுனை ஆற்றில் இறந்து போயின. பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம், இந்த முதலைகளை அரிய வகை உயிரினமாக அறிவித்து சிகப்பு பட்டியலில் சேர்த்துள்ளது.

 

 


ஆற்றில் எடுக்கப்படும் அதிகப்படியான மணல், புதிய அணை கட்டுகள், வேளான் மற்றும் மேய்ச்சல் தொழில் காரணமாக இவை அதிகம் பாதிக்கப்படுகின்றன.

அதிகப்படியான மீன் பிடி தொழிலால், இவற்றின் உணவுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது.

மணலில் முட்டையிட்டு வைத்திருக்கும் போது, அவை சேதப்படுத்தப்படுவதால் புதிய முதலைகள் பிறப்பதில் சிக்கல் உருவாகிறது.

ஆற்றில் கலக்கப்படும் அதிகப்படியான தொழிற்சாலை கழிவுகள், மிகப்பெரிய இடையூறாக இருக்கிறது.

ஆற்றை தூய்மைபடுத்தினால் மட்டுமே இந்த முதலைகளை காப்பற்ற முடியும். இந்த முதலைகளுக்கு என்று சரணாலயங்கள் உருவாக்கப்பட்டு, மனிதர்களின் இடையூறுகளை தடை செய்ய வேண்டும். 

 

இந்த முதலைகளை காப்பாற்றி விட்டால், ஆறுகள் தூய்மையாகிவிட்டன என்று பொருள். ஆறுகள் தூய்மையாகிவிட்டால், நமக்கு ஏற்ப்படும் நன்மைகள் அனைவரும் அறிந்ததே. இந்த முதலைகள் வாழத் தகுதி இல்லாத ஆறுகள் யாவும், நமக்கும் தகுதி இல்லாத ஆறுகள் என்பதே இவை நமக்கு சொல்லும் பாடம்.

Pin It