கா.தாமரை என்ற பெயர் புதிதாய் இருக்கும். இந்தச் சிறுகதைகளைப் படித்து முடிக்கையில் மலைப்பாகத்தான் இருக்கும். காளீஸ்வரன் -தமிழ்நாட்டின் வீதி நாடகக் கலைஞர்களிடையேயும், அறிவியல் - அறிவொளி இயக்கத்தினரிடையேயும் மிகப் பிரபலமான பெயர். அவரது புதல்வர் கா. தாமரை. எளிய நிகழ்வுகள்; உளவியல் ரீதியான உணர்வு வெளிப்பாடுகள்; எளிய வார்த்தைகள் இவற்றைப் கொண்டு படைத்துள்ள கதைகள் சுருக்கென்று தைக்கின்றன. வெட்டியானின் வாழ்க்கையும், முத்தத்திற்காக ஏங்கும் குழந்தைமை உணர்வும், பாட்டியைச் சாகடிக்கும் பசங்களும், கவிதைக்கு மட்டுமல்ல; சில சமயங்களில் காதலுக்கும் பொய் அழகுதான் என்று நிறுவுகிற தலைப்புக் கதையுமாய் தாமரை எதிர்காலத்தில் சாதிக்கப் போகிறவற்றின் அடையாளங்கள் நிரம்பவே இருக்கின்றன. ‘நான் ரசித்த ஒருவனை’ எல்லோரும் ரசிப்பார்கள். ‘சுய சரிதையின் முடிவில்’ நாமும் எழிலரசியைப் போல் குற்ற உணர்வு கொள்ள நேரிடும்.

மிக இயல்பாகப் பளிச்சிடும் நகைச்சுவை உணர்வு தாமரையின் பலமாக அமையும். உதாரணத்திற்கு “அய்யரே, இந்த மணி என்னைக்கு அடிக்கலையோ, அன்னைக்கு அவன் உனக்கு மணி அடிச்சுட்டானு அர்த்தம்” என்று வெட்டியான் கணேசய்யரைக் கலாய்க்கும் இடம்.

அ. குமரேசனின் முன்னுரையும், காளீஸ்வரனின் பெருமூச்சும் தொகுப்பின் ஆரம்பத்திலேயே நம்மை உள்ளிழுத்துக் கொள்ளும் விதத்தில் அமைந்திருக்கின்றன.

‘ஆங்கிலம்’ வராததால் ‘விலுந்து’ சாகப் போகும் மகனை “தமிழே ஒழுங்கா தெரியல. இவரு இங்கிலீஷ் வல்லைண்μ சாக வந்தாராம்” என்று சொல்லி கடிதத்தை வீசி விட்டுப் போகும் இடத்தில் புன்னகை மட்டுமல்ல; சிந்தனையும் துளிர்த்து விடுகிறது!

வெளியீடு: கா. தாமரை

விற்பனை உரிமை: பாரதி புத்தகாலயம்

பக்: 64 | ரூ. 35

 

சோஷலிசம் வானத்திலிருந்து விழுவதில்லை

“சோஷலிசமா? என்ன அது, காலாவதியாகிப் போய் எவ்வளவு காலமாயிற்று? இந்தியாவில் இன்னும் இவர்கள் அதைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார்களே!” - என்றகேலியும், கிண்டலும் அவதூறுகளும் ஓங்கி ஒலிக்கும் காலம் இது. ஆகப் பெரும்பாலான எழுத்தாளர்களும் - சிற்றிதழ் ஆசிரியர்களும் இக்குரலைத் தெரிந்தோ, தெரியாமலோ திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால்,உண்மைஎன்ன? முதலாளித்துவம்,இன்றையஉலகின்பிரச்னைகளைத் தீர்க்கவல்ல அமைப்பு கிடையாது என்று சமீபகாலமாக முதலாளித்துவஆதரவாளர்களேஎழுதவும்,பேசவும் தொடங்கியிருக்கிறார்கள். இச்சூழலில் வெனிசுலாவும், அதன் அதிபர் சாவேஸ§ம் ஒரு புதிய நம்பிக்கையை அளிக்கிற பெயர்களாக முன்னுக்கு வந்துள்ளனர். எனினும் ‘சோஷலிசம் வானத்திலிருந்து விழுவதில்லை’ என எச்சரிக்கை செய்கிறது இந்நூலின் ஒரு கட்டுரை. எது சோஷலிசம், எது சோஷலிசமில்லை என்பதற்கான அμகுமுறையை முன் வைக்கும் கட்டுரை இது.

சைமன் பொலிவாரால் விடுவிக்கப்பட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளின் அனுபவங்களும், பொலிவாரியன் அரசியல் கோட்பாடும் குறித்த நூலாசிரியரின் சுய அனுபவப் பார்வைகள் விரிவாகத் தரப்படுகின்றன. லெபோவிச் பொருளாதார ஆசிரியராயிருந்து பெற்ற பட்டறிவும், பல்வேறு மூலாதாரங்களின் அடிப்படையில் உண்மையைத் தேடும் தேடலும் இந்நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் பிரதிபலிக்கின்றன. ரஷியாவிலும், பிற கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றிய மார்க்சிய சக்திகளின் பின்னடைவிற்கான காரணங்களும் அலசப்படுகின்றன.

“மனிதர்களின் முழுமையான வளர்ச்சி லட்சியத்தை அடைய சோஷலிஸமே சிறந்த பாதை” எனக் கூறும் லெபோவிச், யூகோஸ்லாவியா, வெனிசுலாநாடுகளின் சோஷலிசக் கட்டுமான அனுபவங்களை விவரித்திருக்கும் விதம் மிக ஆழ்ந்த வாசிப்பிற்குரியது. பழைய சமுதாயத்தை மாற்றவும், புதிய சமுதாயத்தைப் படைக்கவும் நம்மைத் தகுதியுடையவர்களாக நாம் ஆக்கிக் கொள்வதற்கு உதவும் தத்துவ அறிவாயுதம் இந்த நூல்.

இப்போதே நிர்மாணிப்போம் 21ஆம் நூற்றாண்டிற்கான சோஷலிசம் மைக்கேல் எ. லெபோவிச் தமிழில்: அசோகன் முத்துசாமி பாரதி புத்தகாலயம், சென்னை\-18 பக்: 144 ரூ.60

உங்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிடாதீர்கள்

‘சே’குவாராவின் நினைவுகள் அள்ள அள்ளக் குறையாத ஓர் அட்சய பாத்திரம். ‘பின்னால் என்றேனும் மறுபதிப்பு செய்வதற்காக, திருத்தி, விரிவாக எழுதப்பட்ட நினைவுக் குறிப்பு’ என்று சே கைப்பட எழுதி வைத்திருந்த விலை மதிப்பற்ற வரலாற்று ஆவணம் இந்த நூல். ஒரு மகத்தான மனிதனின் வாழ்வின் அசாதாரண கணங்களைப் பற்றிய சரியான தகவல்களைத் தருகிறது இப்புத்தகம். சேயின் நேரடியான, தெளிவான மொழியில் போராட்டம் எவ்வாறு உருக்கொண்டது, இப்போரில் ஈடுபட்டோரின் குணாதிசயங்கள், அவர்களின் பயம், அவர்களது கம்பீரம், செயற்பரப்பெல்லை போன்ற பலவற்றைப் பற்றியும் இப்புத்தகம் பேசுகிறது. இதில் வருகிற ‘கொல்லப்பட்ட நாய்க்குட்டியின் தீனக்குரல் கொரில்லாப் போராளிகளின் குற்ற உணர்வை மிக நேர்மையுடன் பதிவு செய்வதாக அமைகிறது. போராளிகள், சில வினாடிகளுக்குள் போர்க்களத்தில் எடுத்தே தீர வேண்டிய முடிவுகளால், சக தோழர்களுக்கு ஏற்படக்கூடிய வலியையும், சிரமங்களையும் ‘சே’வின் குறிப்புகள் பகிர்ந்து கொள்கின்றன. சேவின் சகாவும், ஹவானாவில் உள்ள சேகுவாரா ஆய்வு மையத்தின் தற்போதைய இயக்குனருமான அலெய்டா குவேரா மார்ச் மிக நேர்த்தியான முறையில் இக்குறிப்புகளைத் தொகுத்துப் புத்தகமாகப் பதிப்பித்துள்ளார். சுப்பாராவின் தமிழாக்கம் எளிமையாகவும், செறிவாகவும், அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. புத்தகத்தைப் படிப்பவர்களுக்கு (பதிப்பாசிரியரின்) வேண்டுகோள் மிக முக்கியமான ஒன்று:

“புத்தகத்தை முடித்தபின், உங்கள் ஆயுதங்களைக் கீழே போட்டு விடாதீர்கள். இன்று, அறிவும் ஆழமான புரிதலும் தான் மிகப் பயனுள்ள ஆயுதங்கள். நாம் ஓர் உன்னத உலகிற்காக இணைந்து போராடுவோம்!’’

‘கியூபா புரட்சிகர யுத்தத்தின் நினைவுகள்’

சேகுவாரா | தமிழில்: ச. சுப்பாராவ்பாரதி புத்தகாலயம் | சென்னை -\ 18 பக்: 288 | ரூ.150

காந்தக் கண்களும் கடும் தண்டனைகளும்

பிரிட்டிஷ் அரசாங்கம், இந்திய நாட்டை அடிமைப்படுத்தி ஆண்ட காலத்தில் விடுதலைக்காகப் போராடிய மக்கள் தலைவர்கள் மீதும், வீரர்கள் மீதும், சுதேச மன்னர்கள் மீதும் தொடுத்த சதிவழக்குகளும், குற்ற வழக்குகளும் எண்ணற்றவை. இவற்றில் ஜவஹர்லால் நேரு எதிர்கொண்ட வழக்குகள் குறித்து முதிர்ந்த சிந்தனையாளரான ஞாலன் சுப்பிரமணியன் இந்நூலில் ஆராய்ந்திருக்கிறார். 1921 டிசம்பர் 17ல் அலஹாபாத் - லட்சுமணபுரியில் நேரு பங்கேற்ற உறுதிமொழி ஏற்பு - துண்டுப் பிரசுர விநியோகம் தொடர்பாக 7 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது. ‘தவறாகத் தண்டிக்கப்பட்டு விட்டார்’ என்று 87 நாட்கள் சிறை வாசத்திற்குப் பின் விடுதலை செய்யப்படுகிறார் நேரு. 1922 மார்ச் 3ல் விடுதலையானதும் காங்கிரஸ் இயக்க செயல்பாடுகளைச் சீரமைக்க முயன்றதன் விளைவாக மீண்டும் மே 11ல் கைது செய்யப்படுகிறார். 1923-ல் நாபா எல்லையில் மறுபடியும் கைது - வழக்கு - கைது செய்த போலீசார், நேருவின் காந்தக் கண்களுக்குப் பாரசீக மொழிச் சொல்லான சஷாம் - அ -ஆஹ§ என்று கவிகள் அழகிய பெண்களின் கண்ளை வர்ணிக்கப்பயன்படுத்தும் சொல்லையே தாமும் பயன்படுத்தியுள்ளனர்; நேருவின் ‘எதிரி’களின் வாக்கு மூலங்களே ‘நறுங்கவிதைகள்’ என்றெல்லாம் ஞாலன் சுப்பிரமணியன் இடையிடையே தரும் குறிப்புகள் மிகச் சுவையானவை .

உப்புச் சட்டத்தை மீறியதற்காக 1930 ஏப்ரலில் 6 மாத சிறைத் தண்டனை பெற்ற மற்றொரு வழக்கும் இடம் பெற்றுள்ளது. அக்டோபர் 30ல் சிறைவாசம் முடிந்து வந்த எட்டே நாட்களில் அக்டோபர் 19ம் தேதி மீண்டும் கைது. இப்படியாகத் தொடர் கதையாக நிகழ்ந்த வழக்குகளில் நேருவின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளும், அவரது பதில்களும், விசாரணைக் குறிப்புகளும், இறுதியாகத் தீர்ப்புகளின் மூலம் நேருவிற்கு விதிக்கப்பட்ட தண்டனைகளும் இந்நூல் முழுக்க இடம் பெற்றுள்ளன. வரலாற்று ஆவணங்களின் பதிவுகளாகவும், அதே சமயம் - அன்றைய போராட்ட அலைகளின் வீச்சைச் சித்தரிக்கும் எழுத்தோவியங்களாகவும் இக்கட்டுரைகள் அமைந்துள்ளன. விடுதலை வேள்வியின் ஆகுதியில், எத்தனை உன்னத மனிதர்களின் சுதந்திரம் அவிப்பொருளாக இடப்பட்டது என்பதே இந்நூலின் மையம்.

நேரு வழக்குகள் | ஞாலன் சுப்பிரமணியன்
பாரதி புத்தகாலயம் | பக்:176 | ரூ.90

இளமை என்பது தீவிரமான சமூக மயமாக்கல்

 “உலக வரலாறு அனைத்தும், யுவ, யுவதிகளின் இரத்தத்தால் எழுதப்பட்டது” என்கிற பகத்சிங், இளைஞர்களின் இலட்சிய நாயகன். ‘இளமை’ என்பதன் அர்த்தமே இன்று ஊடகங்களின் பிடியில் பிதுங்கும் சதைக் கோளங்கள் மட்டுமே என்ற அவலநிலை நிலவுகிறது. இச்சூழலில், உண்மையில் “இளமை என்பது - ‘தீவிரமான சமூக மயமாக்கல்” என்ற ஒரு புதிய பார்வையுடன் துவங்குகிறது இந்நூல். இளைஞர் இயக்கங்கள் உருவாவதற்கு அடிப்படையான காரணங்களை விவரிக்கிறது. ஒட்டுமொத்த ஐரோப்பிய இளைஞர்களைக் கட்டி இழுத்த “இளம்வெர்தரின் துயரம்” நாவலை ஜெர்மனிய மொழியில் வெளியிட்ட கேதேவுக்கு வயது அப்போது 22 தானாம்! இதே காலகட்ட நாடகமான ‘வழிப்பறிக்காரர்கள்’ என்ற கவிஞர் சில்லரின் படைப்பு இளைஞர்களின் கோபக்கனலைத் தீப்பற்றி எரியச் செய்திருக்கிறது. மொசார்ட்டின் இசை மதச்சார்பற்றதாய் இருந்தது.

1815-ல் ஜீனா பல்கலைக்கழக மாணவர்கள் துவக்கிய ‘மாணவர் சங்கம்’ தான் வரலாற்றில் முதல் மாணவர் அமைப்பு. இவர்கள் ஒற்றுமை, ஜனநாயகம், சுதந்திரம் ஆகிய முழக்கங்களுடன் போராடிய வரலாறு கூறப்படுகிறது. ஜோசப் மாஜினி ‘இளம் இத்தாலி’ என்ற அமைப்பை உருவாக்கியதும், ஒரு கடிதம் அலட்சியப்படுத்தப்பட்டதை எதிர்த்து அதுவே ஒரு பெரும் போராட்ட அலைக்கு வழிவகுத்தது என்பதும் கவனத்திற் கொள்ள வேண்டியவை. ரஷிய இளைஞர்கள் ‘நாங்கள் வலிமையானவர்கள்’ எனப் புறப்பட்டது, இளம் பிரான்ஸ், அயர்லாந்து இதர ஐரோப்பிய நாடுகள் ஆகிய இளைஞர் எழுச்சிகளின் வரலாற்றுப் பின்னணியின் உச்சகட்டமாக இந்திய இளைஞர்களின் இயக்க வரலாறு தரப்பட்டுள்ளது. கடுகைப் போல் சிறிய நூல். மலையைப் பிளக்கும் சிற்றுளியின் கூர்மை படைத்த எளிய - ஆனால் - வலிய மொழி நடை. இளைஞர்கள் ஒவ்வொருவரின் கையிலும் இருக்க வேண்டிய நூல்.

மாற்று சமூக உருவாக்கத்தை நோக்கி

50 வருடங்களுக்கு முன்பிருந்த உலகின் சாயல் எதுவும் இன்று இல்லை. இடதுசாரி மற்றும் முற்போக்கு சக்திகளுக்கு 90களில் பலத்த அடி கிடைத்துள்ள ஒரு நிலைமை. அமெரிக்கா உலகின் மிகப்பெரும் ராணுவ சக்தியாக மாறி உள்ள ஓர் உலகம். பொருளாதாரம் மற்றும் கலாச்சாரத்தின் உலகமயமாக்கல், வெகுஜன ஊடகங்களில் அதிகரித்து வரும் ஆதிக்கம் என்று புதிய தாராளமயம் தன்னுடைய மிகக் கொடூரமான ஆட்டம் போடும் முதலாளித்துவ உலகில் நாம் வாழ்கிறோம். இந்த இருபத்தியோராம் நூற்றாண்டு நம்முன் வைக்கும் புதிய சவால்களை எதிர்கொள்ள, என்ன மாதிரியான அரசியல் சாதனம் நமக்குத் தேவை என்பது பற்றிய சிந்தனைக்கு நூலாசிரியர் முன் வைக்கும் கருத்துக்களே கருப்பொருட்களாக அமைகின்றன. 4 பகுதிகளாக எழுதப்பட்டிருக்கும் இந்த நூலில் 14 அத்தியாயங்கள் உள்ளன. உலகில் ஏற்பட்டுள்ள ஆழமான மாற்றங்களால் பெரும்பாலான மக்கள் நடுவே ஆழமான அதிருப்தி அலை பரவி வருகிறது. வளர்ந்து வரும் அதிருப்தியை விரிவான சமூகப் பகுதிகள் உணர்ந்து அமைதியின்மைக்கு ஆளாகி வருகின்றன. இந்த அமைதியின்மை முதலில் மறைமுக எதிர்ப்பாகவும், பின்னர் நேரடி எதிர்ப்பாகவும் தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறது. எதிர்ப்புப் பேரலைகள் ஒரு மாற்று சமூக முகாம் உருவாக்கப்படுவதை நோக்கி உந்தித் தள்ளிக் கொண்டிருக்கின்றன.

“புதிய விடியல்கள் பிறக்கின்றன; ஆனாலும், நாம் எதிர்கொள்ளும் சவால்கள் அளவிட முடியாதவை. அவற்றுடன் மோதுவதற்கான நல்ல நிலையிலும் நாம் இல்லை. நாம் இதைப் புனரமைக்க வேண்டும். அதுவும் விரைவாக. இதைச் செய்வதற்கு, கடந்த காலத்தின் சுமையாக அழுத்திக் கொண்டிருக்கும் நம்முடைய தவறுகள், பலவீனங்கள் மற்றும் திசை மாற்றங்கள் ஆகியவை குறித்து நாம் முதலில் ஈவிரக்கமின்றிப் பரிசீலிக்க வேண்டும்” என்கிறார் ஆசிரியர். “போராட்டங்களின் மூலமே மனிதர்கள் -வளர்கிறோம். நாம் அனைவரும் ஒரே மாதிரி கோரிக்கைகளுக்காகப் போராடுகிறோம்; அதைப்புரிந்து கொள்வதுதான் நம்மை வலுப்படுத்துகிறது; சாத்தியமற்றதை சாத்தியமாக்கும் கலையாக மட்டுமே புரட்சிகர அரசியலைக் கருக்கொள்ள முடியும்” என்பது இந்நூலின் அடிநாதம். அசோகன் முத்துசாமி மிகுந்த சிரத்தையுடன் மொழியாக்கம் செய்திருக்கிறார்.

புதிய பாதையில் இடதுசாரிகள்

மார்த்தா ஹர்னேக்கர்

தமிழில்: அசோகன் முத்துசாமி

பக்: 200 | ரூ.110-

பாரதி புத்தகாலயம்

சென்னை \ 18

Pin It