கொஞ்சம் சாய்ந்து வெளி நீட்டிக் கொண்டிருப்பது போன்ற உலகின் தென்கோடியைப் பார்த்திருக்கீர்களா? அதுதான் அண்டார்க்டிக் என்ற பனிக்கண்டம். இது தென்பகுதி உலகின் அண்டார்க்டிக் வட்டத்தை தன் வசம் வைத்துள்ளது. இதனைச் சுற்றி தென் பெருங்கடல் உள்ளது. 1.4 கோடி ச கி.மீ. பரப்பு கொண்ட அண்டார்க்டிக் பகுதி உலகின் ஐந்தாவது பெரிய கண்டமாகும். இது ஆஸ்திரேலியாவைவிட இரண்டு மடங்கு பெரியது. அன்டார்க்டிக்காவின் 98% பகுதி பனியால் மூடப்பட்டுள்ளது. தரைமேல் சுமார் 1.6 மீ உயரத்திற்கு பனிப்பாளம் உள்ளது.

அண்டார்க்டிகாவின் குணமும் நிறமும்.. !

 Antarctica_370_copyஅன்டார்க்டிகா பொதுவாக உலகிலேயே மிகவும் குளிர்ந்த, உலர்ந்த, காற்று அதிகம் உள்ள கண்டம். அது மட்டுமல்ல அனைத்து கண்டங்களில் மிக உயரத்தில் இருப்பதும் அண்டார்க்டிகா மட்டுமே. இங்கு அதிகம் தாவரங்கள் இல்லாததால், பனிப் பாலைவனம் என்றே அழைக்கப்படுகிறது. வருடத்தில் வெறும் 200 மி.மீ. (8 இன்ச்தான்) மட்டுமே மழைப் பொழிவு உண்டு. ஆனால் இங்கு குளிர் குடலை உருவி விடும்.  இதன் வெப்பநிலை -89 டிகிரி செல்சியஸ். அதனால் இங்கு மனித வாழ்க்கையே/வாடையே கிடையாது.

ஆனாலும் கூட, அப்பகுதியில் அண்டார்க்டிகா பற்றி ஆராய தொடர்ந்து சுமார் 1000 - 5000 மக்கள் வந்து போய்க்கொண்டிருக்கின்றனர். இங்கு குளிரைத் தாக்கு பிடிக்கும் உயிரினங்கள் மட்டுமே வாழ்கின்றன. அவை ஆல்காக்கள், பாக்டீரியா, பூஞ்சைகள், விலங்குகளில் உண்ணிகள், தட்டை புழுக்கள், சீல், மற்றும் இராணுவ வீரர்கள் போல் அணிவகுப்பு நடத்தும் பெங்குவின்கள் இந்த குளிர்ப் பரப்பில், பனிப்பாளத்தை ரசித்து மகிழ்ந்து வாழ்ந்து கொண்டிருகின்றன. இங்கு பனிக் கரடியோ எஸ்கிமோக்களோ கிடையாது.

சூரியக் கதிரை விரட்டும் பனிப்பாறை!

அண்டார்க்டிகா பற்றி கிரேக்கர்கள் சொல்லி இருக்கின்றனர். ஆனால் 1820 வரை அந்தப் பனிக்கண்டத்தை யாரும் பார்த்ததில்லை. முதன் முதல் 1821ல் தான் அண்டார்க்டிகா பகுதிக்குச் சென்றனர். அன்டார்க்டிக்காவின் பனிப் பாறை 5 கி. மீ உயரம் வரை இருக்கும். இதில் உலகின் 70% நல்ல நீரைப் பெற்று விட முடியும். ஒருக்கால் இவை கரைந்தால், கடல் மட்டம் 50 - 60 மீ. உயரம் வரை உயரும். அண்டார்க்டிகாவின் பனிப்பாறைகள் மிகப் பெரிய பனியாறுகள்தான். இவை மிக மிக மெதுவாக கடலை நோக்கிச் செல்கின்றன. இந்த கண்டம், கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,300 மீ உயரமாக உள்ளது. மேலும் அண்டார்க்டிகா மிகவும் குளிராக இருப்பதன் காரணம் என்ன தெரியுமா? சூரியனிலிருந்து வரும் சூரியக் கதிரை இதன் பனிப்பாறைகள் சுமார் 80% திருப்பி அனுப்பி விடுகின்றன. மீதமுள்ள 20% சூரிய வெப்பம் வளிமண்டலம் மற்றும் மேகங்களால் உட்கிரகிக்கப்படுகின்றன.

உலகின் மிக நுணுக்கமான ஆய்வகம். !

அண்டார்க்டிகாவில் ஏராளமான கனிமங்கள் உள்ளன. அங்கே எண்ணெய் வளமும் ஆழ்ந்து கிடக்கிறது. உலகின் அற்புதமான ஆய்வகம் அன்டார்க்டிகாதான். உலகின் பல பகுதிகளிலிருந்து விஞ்ஞானிகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றனர். இங்கு அறியப்படாமல் இருக்கும் வளங்கள், உயிரிகள் போன்றவற்றை ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர். இதன் மாசு படாத சூழலைக் கணக்கில் கொண்டு, வெப்ப நிலை மாற்றத்திற்கும், பிரபஞ்ச உருவாக்கத்திற் கான காரணங்களையும் இங்குதான் தேடிக் கொண்டிருக்கின்றனர்.