சமீபத்தில் ஸ்வீடனில் இருந்து வந்திருந்த இரண்டு சூழல் இதழாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது, "எங்கள் நாட்டில் எல்லாமே பொதுமக்களின் தணிக்கைக்கு உட்பட்டவை. மக்கள் வரிப்பணம் சம்பந்தப்பட்ட எதையும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மறைத்துச் செய்துவிட முடியாது" என்றார்கள். 100 சதவீத ஆபத்து கொண்ட கூடங்குளம் அணுமின் நிலையமும், சூழலை பாதிக்காத காற்றாலைகளும் அருகருகே இருந்த முரணைப் பார்த்து அவர்களுக்குச் சிரிப்பு வந்தது. அவர்களது சிரிப்பில் பரிகாசமில்லை, வேதனையே மிகுந்திருந்தது.

இந்தியாவில் அணுமின் நிலையங்கள், அவை உருவாக்கும் கதிரியக்கக் கழிவு, விபத்துகள், மக்களிடையே கதிரியக்கம் ஏற்படுத்தி வரும் பாதிப்புகள் தொடர்பாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து அச்சமும் எதிர்ப்பும் தெரிவித்து வந்துள்ளனர்.

ஆனால் இதை புறங்கையால் தள்ளிவிட்டுவிட்டு மத்திய அரசு தன் வேலையை செவ்வனே செய்து வருகிறது. ஆனால் அணுமின் நிலையங்கள் எவ்வளவு ஆபத்தானவை என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியுள்ளது. நமது அணுமின்சாரம் எவ்வளவு பாதுகாப்பானது, அதன் உண்மையான லட்சணம் என்ன என்பதும் தெளிவாகியுள்ளது.

கர்நாடகாவில் உள்ள கைகா அணுமின் நிலைய ஊழியர்களின் உடலில் நவம்பர் 24ந் தேதி கதிரியக்கம் அதிகரித்தது. கதிரியக்கத்தை வெளியிடக் கூடிய ஹைட்ரஜனின் ஐசோடோப்பான டிரைடியம், 50 ஊழியர்களை பாதித்திருந்தது. கதிரியக்கக் கசிவு நிகழ்ந்தால்தான் இத்தனை பேர் பாதிக்கப்படுவார்கள் என்று சுற்றுச்சூழலாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் ஊழியர்கள் தண்ணீர் குடிக்கும் வாட்டர் கூலரில் கதிரியக்கத் தன்மை கொண்ட கனநீர்  கலக்கப்பட்டுவிட்டதுதான் காரணம் என்கிறது அணுசக்தித் துறை. "அதிருப்தி அடைந்த ஒரு ஊழியரின் விஷமச் செயல்" என்று இந்த பயங்கரத்தை எளிதாகக் குறுக்கிவிடவும் திசைதிருப்பவும் அணுசக்தித் துறையும் மத்திய அரசும் முயற்சிக்கின்றன.

பாதிக்கப்பட்ட அனைவரும் ஒப்பந்த ஊழியர்கள். நமது அணுமின் நிலையங்களில் கழிவை அகற்றுதல், பராமரிப்புப் பணிகளில் ஒப்பந்த ஊழியர்களே இன்னமும் ஈடுபடுத்தப்படுகின்றனர். அரைசாண் வயிற்றை நிரப்பிக் கொள்வதற்காக உயிரை மாய்த்துக் கொள்ளும் இந்த வேலையில் ஈடுபட அவர்கள் தயங்குவதில்லை. அவர்களுக்கு எந்த வகையான பாதுகாப்பும் கிடையாது. இறந்தால் உரிய நஷ்டஈடும் கிடைக்காது.

மகாராஷ்டிராவில் உள்ள தாராபூர் மின்நிலையத்தில் சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற இதேபோன்ற கதிரியக்கக் கசிவிலும், ஒரு ஊழியர் பலிகடா ஆக்கப்பட்டார். 15 ஆண்டுகளுக்கு முன் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இருந்து கதிரியக்கத் தன்மை கொண்ட பொருள் நிரம்பிய சிறிய குப்பியை, அங்கு வேலைபார்த்த ஊழியர்கள் கூவத்தில் எறிந்துவிட்டனர். அதைத் தேட கூவத்தையே சல்லடை போட்டுத் தேடியது அரசு.

நமது அணுமின் நிலையங்கள் தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்பதில் உள்ள உண்மையைவிட, உள்ளே இருக்கும் பொருட்கள் எவ்வளவு ஆபத்தானவை, அதை கையாளுவதில் காட்டப்படும் அலட்சியத்தை இந்தச் சம்பவம் தெளிவாகவே உணர்த்தும். ஐரோப்பிய நாடுகளுக்கு மாறாக நமது அணுமின் நிலையங்கள் தொடர்பான அனைத்து தகவல்களும் திட்டமிட்டு மறைக்கப்பட்டே வருகின்றன. நமது வரிப்பணத்தில் அமைக்கப்படும் இந்த அணுஉலைகளில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள நமக்கு உரிமை மறுக்கப்படுகிறது. பெரும்பாலான அணுஉலைகளில் கிடைக்கும் செறிவூட்டப்பட்ட அணுசக்தி மூலப்பொருள், அணுகுண்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன என்ற தகவலில் உண்மையில்லை என்று கூறிவிட முடியாது.

அணுசக்தியைவிட விலை குறைவான, பாதுகாப்பான, வளங்குன்றாத மின் உற்பத்தி முறைகளுக்கு மாறாத வரை, இப்படி கொள்ளிக்கட்டையை வைத்து தலையைச் சொறிந்து கொள்ளும் வேலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். கல்பாக்கம், கூடங்குளம் என்று நாட்டிலேயே இரண்டு அணுமின் நிலையங்களை பெற்ற ஒரே மாநிலம் தமிழகம்தான். இவை நமக்குப் பெருமையா?

 (பூவுலகு ஜனவரி 2010 இதழில் வெளியான கட்டுரை)