CBM எனப்படும் நிலக்கரி படுகைகளில் இருந்து எடுக்கப்படும் மீத்தேன் எரிவாயு திட்டத்தினால் நிறைய நாடுகள் பாதிக்கப்பட்டு எல்லா இடங்களிலும் மக்கள் போரட்டங்கள் இதை தடை செய்யக்கோரி முழுவீச்சுடன் நடந்து வருகின்றன. இந்தக் காலத்தின் இளைஞர்களுக்கு எல்லா வகையிலும் கனவு தேசமாக இருக்கும் அமெரிக்காவிலேயே பெருமளவு விதி மீறல்களும் மற்றும் பாதிப்புகளும் நடந்திருக்கின்றன. பணம் ஒன்றே குறியாக இருக்கும் இந்த எரிவாயு நிறுவனங்களுக்கு தேசம், மக்கள் என்பதெல்லாம் ஒரு பொருட்டல்ல. எல்லா தேசத்திலும் மக்கள் பாதிக்கப்பட்டு கொண்டேதான் இருக்கிறார்கள். இந்த கட்டுரை முழுக்க முழுக்க அமெரிக்காவில் நடைபெறும் CBM மீத்தேன் எரிவாயு நிறுவனங்களால் அங்குள்ள மக்கள் அடைந்த துயரங்கள், தீமைகள், ஆபத்துக்கள் என்றே நிறைந்திருக்கும். எல்லாவற்றிலும் அமெரிக்காவை உதாரணமாக கொள்ளும் நம் மக்கள் அங்கு நடக்கும் CBM என்னும் தீமை மிகும் திடத்தையும் பார்த்து இதன் தீமைகளை உணர வேண்டும்!

"Hydraulic Fracturing" அல்லது "Fracking" என்று அழைக்கப் படும் இந்த நவீன தொழில்நுட்பத்தை பற்றி விரிவாக அனைவரும் அறிந்து கொள்வது அவசியம். ஏனென்னில் இந்த முறையில் தான் தஞ்சையில் மீத்தேன் எரிவாயு எடுக்கப் பட இருகின்றது.

CBM_600

பூமியில் மிக ஆழத்தில் அழுத்தங்கள் மிக அதிகமாக இருக்கும். சில இடங்களில் மிகப்பெரிய பரப்பளவு கொண்ட பாறைகளும் இருக்கும் (கிலோ மீட்டர் நீள, அகலம் கொண்ட பாறைகள்) சில இடங்களில் உள்ள மணல் பரப்பானது நீர் கூட புகமுடியாத தன்மை கொண்டதாக மிகுந்த இறுக்கத்தில் இருக்கும். இவை எல்லாமுமே மிக ஆழத்தில் என்று நினைவு கொள்ளுங்கள். (ஏறத்தாழ 8, 000 மீட்டர் முதல் 10, 000 மீட்டர் வரை) இப்படிப்பட்ட இடத்தில உருவாகும் இயற்கை எரிவாயு பாறைகளிலும், மணல் பரப்புகளிலும் ஊடுருவ இயலாமல் வெளிப்பட வழி இல்லாமல் அங்கேயே தங்கி விடுகின்றன. அத்தகைய இயற்கை எரிவாயுவின் சிறிய சிறிய அளவுகளை சேகரித்து முழுமையாக கொண்டுவர இந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் கண்டறிந்ததே இந்த Hydraulic Fracturing என்று அழைக்கப் படும் "நீரியல் விரிசல்" முறை.

இதன் படி பூமியை 10, 000 மீட்டர் வரையிலும் அதற்க்கு மேலுமான ஆழத்தில் துளையிட்டு அங்கிருந்து பக்கவாட்டில் 2 கிலோ மீட்டர் வரையிலும் அதற்க்கு மேலும் எல்லா திசைகளிலும் பக்கவாட்டு துளை (bore) போடப்படும். பின்பு பூமிக்கு மேலிருந்து மிகுந்த அழுத்தத்தில் தேர்வு செய்யப்பட்ட வேதி நுண் துகள்களை (Proppants) கலந்த நீர் மிகுந்த அழுத்தத்தில் செலுத்தப் படும். அவ்வாறு செலுத்தும்போது பக்கவாட்டு துளைகளில் செல்லும் நீரானது அந்த துளைகளின் மேலும் கீழும் விரிசல்களை உண்டாக்கும். அந்த விரிசல்கள் வழியே சிறைபட்ட, வழி இல்லாமல் உள்ளேயே அடைபட்டு கிடந்த மீத்தேன் எரிவாயுவின் சிறிய பகுதிகள் ஒன்றோடு ஒன்று கலந்து நீரில் ஒன்றாக கலந்து விடுகின்றன. அவ்வாறு கலந்த நீரை மீண்டும் உறிஞ்சி பூமியின் மேல்பரப்பிற்கு எடுத்து வந்து நீர் தனியாக, வாயு தனியாக சுத்தகரிக்கப்பட்டு எஞ்சிய கழிவு நீர் "நீராவி மூலம் ஆவியாகப்படும் குட்டைகளுக்கு "(Evaporation pond's) எடுத்துசெல்லப்படும். பெரும்பான்மையான இடங்களில் அவை நீர் நிலைகளில் கலந்து விடப்படும். இதுவே (Hydraulic Fracking) என்று அழைக்கப்படும் செயற்கையாக பூமிக்கு கீழே நீரின் மூலம் விரிசல்கள் உண்டாக்கி அதன் மூலமாக மீத்தேன் எரிவாயு சேகரிக்கும் முறை.

இதில் என்ன தீமை என்று நினைகிறீர்களா? பொறுங்கள் இதன் முறைகளை பகுதி பகுதியாக பார்க்கலாம். மிக பெரிய தீமைகளை 9 வகைகளாக பிரிக்கலாம். அவற்றைப் பற்றி சொல்லும் முன்...

ஒரு இடத்தைக் கண்டறிந்து அதன் சுற்றுப்புறங்களில் அருகருகே துளையிட்டு (well bore) எரிவாயு எடுப்பது பழைய முறை. நவீன தொழில் நுட்பத்தில் 10 கிலோ மீட்டர்களுக்கு ஒரே ஒரு மிகப்பெரிய துளையிட்டு அதன் அடிமட்டத்தில் இருந்து அதன் எல்லா கோணங்களிலும் பக்கவாட்டில் ஏராளமான துளைகளை வெவ்வேறு மட்டங்களில் ஏற்ப்படுத்தி அதன் மூலம் மீத்தேன் எரிவாயு எடுப்பது புதிய சர்சைகளுக்கு உள்ளாகும் முறை. இதுவே தஞ்சையை சுற்றியுள்ள பகுதிகளுக்கு வரப்போகும் ஆபத்து.

cbm_602

ஒரு கிணறு அமையும் இடத்தை சுத்தப்படுத்த 5 நாட்களும், அந்த இடத்தில துளையிட்டு கிணறு அமைக்க 50இல் இருந்து 100 நாட்களும். ஒரு முறை நீரியல் விரிசல் முறையை செயல் படுத்த 2இல் இருந்து 5 நாட்களும் ஆகும். இவ்வாறு அமைக்கும் எரிவாயு கிணற்றில் இருந்து 20 வருடங்களில் இருந்து 40 வருடங்கள் வரை மீத்தேன் எரிவாயு எடுக்கலாம்.

ஒரு கிணற்றுக்கு குறைந்தபட்சம் 400 டேங்கர் லாரிகள் நீர் எடுத்து வருவதற்கும் கழிவு நீரை எடுத்து செல்வதற்கும் தேவைப்படும்.

ஒரு முறை நீரியல் விரிசல் செயல்முறைக்கு 5,66,33,693 லிட்டர் நீர் தேவைப்படும். இந்த நீரில் மணல் மற்றும் வேதிப் பொருட்களை கலந்து (fracking fluid) நீரியல் விரிசலுக்கென்றே பிரத்தியேகமான கரைசல் திரவத்தை தயாரிப்பார்கள். குறைந்த பட்சம் 40,000 கேலன் அதாவது 1,51,416 லிட்டர் நீர் தேவைப்படும் அந்த வேதி பொருட்கள் கலந்த திரவத்தை ஒரு முறை தயாரிக்க.

இந்த பிரத்தியேக வேதிபொருட்கள் கலந்த திரவத்தை தயாரிக்க கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட வேதி பொருட்கள் உபயோகப் படுத்தப்படுகின்றன. ஈயம் (LEAD), பாதரசம் (MERCURY), உரேனியம் (URANIUM), ரேடியம்(RADIUM), மெத்தனால் (METHANOL), ஹைடரோ குளோரிக் அமிலம் (HYDROCHLORIC ACID), பார்மால்டிஹைட் (FORMALDEHYDE) ஆகியவை குறிப்பிட தகுந்தவை. இன்றுவரை எந்தெந்த வேதியியல் தனிமங்கள் மற்றும் பொருட்கள் கலந்துள்ளன என்ற விவரங்களை எரிவாயு நிறுவனங்கள் தந்ததே இல்லை. இந்த திரவத்தில் கதிரியக்கத்தை தூண்டக் கூடிய ரேடியம் 226 என்ற தனிமம் கலக்கப்படுகிறது. இது அமெரிக்காவில் எரிவாயு கிணறுகளில் அருகில் ஓடிய நீரோடையில் இதன் தாக்கம் அறியப்பட்டது.

மேலும் இந்த நீர்ம வேதி கரைசலில் அதிக ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய எளிதில் ஆவியாகக்கூடிய மற்றும் விரைவாக வேதி வினை புரியக்கூடிய வேதி பொருட்களான பென்சீன் (Benzene), டொலுயீன்(Toluene), எத்தில் பென்சீன் (Ethylbenzene), சைலீன்ஸ் (Xylenes). இதில் பென்சீன் என்பது புற்றுநோயை உருவாக்கும் முக்கியமான காரணி. இந்த வேதி கரைசல்கள் BTEX என்று சுருக்கமாக அழைக்கபடுகிறது. இந்த BTEX கலந்து மீத்தேன் எரிவாயு எடுப்பது என்பது தற்போது ஆஸ்திரலியாவில் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த நீரியல் விரிசல் செயல்படுத்தப்பட்ட கிணறுகளில் அதன் அருகில் உள்ள நீர் ஆதாரங்களின் மூலம் இந்த வேதி பொருள் கலந்த திரவம் உறிஞ்சப்பட்டு மக்கள் உபயோகப் படுத்தக்கூடிய நீர் நிலைகளில் கலந்தது. பின்பு எடுத்த ஆய்வுகள் மக்கள் எரிவாயு கிணறுகள் இல்லாத இடங்களில் பயன்படுத்தும் நீர் நிலைகளில் இருந்து 17 மடங்கு அதிகமான மீத்தேன் எரிவாயு கிணறுகளின் அருகில் இருக்கும் நீர்நிலைகளில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. தோல், சுவாசம் மற்றும் நரம்பியல் நோய்கள் அதிகமாக தாக்கியதற்கான 1000க்கும் அதிகமான ஆதாரங்கள் அங்கு திரட்டப்பட்டன. ரேடியம் 226 என்ற கதிரியக்கத்தை வெளிப்படுத்தும் தனிமத்தால் புற்றுநோயும் மக்களை தாக்கியது தெரியவந்தது.

நீரியல் விரிசல் செயல்படுத்திய பின்பு 30% விழுக்காடு வேதி திரவம் மட்டும்தான் அதிகப்படியாக மீண்டும் உரிஞ்சப் படுகின்றன. மீதி விழுக்காடு வேதி பொருட்கள் கலந்த திரவம் அதே கிணற்றிலேயே தேக்கிவைக்கப் படுகின்றன. உயிர்வேதி நொதித்தல் மற்றும் உயிர் வேதியியல் முறையில் அவற்றின் தாக்கத்தை குறைக்க முடியாது. இது மிகப் பெரிய அச்சுறுத்தல்.

அமெரிக்காவின் வடக்கு பென்சில்வேனியாவில் இருக்கும் மீத்தேன் எரிவாயு கிணறுகளின் அருகில் உள்ள வீடுகளின் நீர் எடுக்கும் போர்களில் அனுமதிக்கப்பட அளவான 7 mg மில்லி கிராமில் இருந்து 28 mg மில்லி கிராம் என்ற அளவையும் தாண்டி 64 mg மில்லி கிராம் அளவு மீத்தேன் கலந்து வந்தது தெரிய வந்தது.

# நீரின் தேவை - 2010இல் அமெரிக்காவின் சுற்றுசூழல் பாதுகாப்பு துறை எடுத்த ஆய்வுகளின் படி 70லிருந்து 140 பில்லியன் கேலன் தண்ணீர் (1 கேலன் என்பது 3. 78 லிட்டர்) அமெரிக்காவின் 35,000திற்கும் மேற்ப்பட்ட எரிவாயு கிணறுகளின் நீரியல் விரிசலுக்கு உபயோகப் படுத்தப்பட்டிருகின்றது. இது 50,000 மக்கள் தொகை கொண்ட 40லிருந்து 80 நகரங்கள் வரை உபயோகிக்கும் மொத்த நீரின் அளவிற்கு ஒப்பானது. நிலக்கரி படுகையில் இருந்து மீத்தேன் எடுக்கும் ஒவ்வொரு எரிவாயு கிணறுகளுக்கும் 50,000 கேலன் அளவில் இருந்து 3,50,000 கேலன் தண்ணீர் உபயோகப்படுத்தியிருப்பது தெரிய வந்தது. இதுவே இங்கு தஞ்சையில் வரப்போகும் திட்டம். கடினப் பாறைகளில் இருந்து மீத்தேன் எடுக்கும் நீரியல் விரிசல் முறைகளுக்காக ஒவ்வொரு எரிவாயு கிணறுகளும் 2இல் இருந்து 10மில்லியன் கேலன் அளவில் தண்ணீரை உபயோகித்து இருக்கின்றன.

இன்னும் நமது விளக்கங்களுக்காக கணக்கிட்டால் ஆண்டிற்கு 18 TMC தண்ணீரை அவர்கள் செலவழித்து இருக்கிறார்கள். ஒரு கிணறு ஒரு முறை நீரியல் விரிசல்களுக்கு 5,66,33,693 லிட்டர் தண்ணீர் செலவழித்து இருக்கிறார்கள். இது 1 TMCயில். 19% என்பதே இதன் அபாயத்தை தெரிவிக்கும். தஞ்சையில் தான் காவிரி இருக்கின்றதே அவர்களுக்கு வேறு என்ன கவலை! விவசாயத்தை தொலைத்துக்கட்டி விட்டால் நீர் எடுப்பது அரசுக்கு இன்னும் சுலபம். கூடங்குளத்திற்கு நீர் எடுக்கும் ஆதாரமாக பேச்சிப்பாறை அணையை காட்டியது போல் காவிரியை இந்த திட்டத்திற்கு உபயோகிப்பார்கள்.

400 தண்ணீர் டேங்கர் லாரிகள் சுத்தமான மற்றும் கழிவு நீரினை சுமந்து கொண்டு வந்தும் சென்ற வண்ணமும் இருந்தால் அந்த சாலை என்ன ஆகும்? நன்னீர் நிலைகளை அசுத்தமாக்குவதும் அதில் வாழும் உயிரினங்கள் இறக்க நேரிடுவதும் நிகழும்.

CBM நிலக்கரி படுகைகளில் இருந்து மீத்தேன் வாயு எடுக்கும் முறையின் விளைவுகள் மற்றும் அதன் மிக பெரிய தீமைகளை 9 வகைகளாக பிரிக்கலாம். அவை

# மணல் மற்றும் வேதி பொருட்கள் தேவை: வழக்கமான முறையில் எடுக்கப்படும் எரிவாயு கிணறுகளுக்கும் நீரியல் விரிசல் முறையின் மூலம் எடுக்கப்படும் மீத்தேன் எரிவாயு கிணறுகளுக்கும் மணல் மற்றும் அதனை ஒத்த சிறுபொருட்கள் வேதி திரவத்தில் கலக்க தேவை படுகிறது. இதை (Proppants) சிறுதிண்மங்கள் என்று பொருள் கொள்ளலாம். இந்த சிறுதின்மங்களாக சிலிக்கா கலந்த மணல்துகள்கள், பசையால் மேற்பூச்சு பூசப்பெற்ற மணல், செராமிக் துகள்கள், மேலும் பசையால் பூசப்பெற்ற செராமிக் துகள்களும் பயன் படுத்தப்படுகின்றன.

வழக்கமான முறையில் எடுக்கப்பெறும் எரிவாயு கிணறுகளுக்கு 35, 000 பவுண்டு எடையுள்ள அதாவது 13,607 கிலோ (13. 5 டன்) அளவுள்ள மணல் தேவைபடுகிறது. நிலக்கரி படுகைகளில் இருந்து எடுக்கப்படும் மீத்தேன் கிணறுகளுக்கு குறைந்த பட்சம் 75,000 பவுண்டுகள் (34,019 கிலோ/ 34 டன்) அதிக பட்சம் 3,20,000 பவுண்டு (144 டன்) எடையுள்ள மணல் தேவைப்படுகிறது. இருக்கவே இருக்கிறது காவேரி, கொள்ளிடம், சுரண்ட முடியாதா என்ன ? தஞ்சையை சுற்றியுள்ள மணல் அள்ளி பணம் சம்பாதிக்கும் அதிபர்களுக்கு ஒப்பந்தம் கொடுத்தால் முடிந்தது. அவர்கள் எதிர்பவர்களை அடக்கிகொள்வார்கள். ! சிலிக்கா கலந்த மணல் துகள்களால் நோய் ஏற்பட்டால் இருக்கவே இருக்கின்றது ராஜா மிராசுதார் அரசு பொது மருத்துவமனை.

# நஞ்சான வேதிப்பொருட்களின் பயன்பாடு : மேலும் அதிக அளவில் நீரின் பயன்பாடு மற்றும் அதில் கலந்துள்ள வேதி பொருட்களின் ஆபத்து என்ற குரல்கள் அதிக அளவு எழுந்தபோது இந்த எரிவாயு நிறுவனங்கள் கொடுத்த விளக்கம் என்பது 0. 5% விழுக்காடு என்பதில் இருந்து 2. 0% விழுக்காடு என்ற அளவில் தான் இந்த தீமை தரக்கூடிய வேதி பொருட்களை நீரியல் விரிசலுக்கு பயன்படும் திரவத்தில் கரைக்கப் படுவதாக விளக்கம் அளித்தன. ஆனால் இந்த விவரங்கள் கூட ஒப்பீட்டு அளவில் மிக அதிகமே. எப்படி என்றால் ஒரு முறை இந்த நீரியல் விரிசல் செய்யப்பட 40,00,000 (நாற்பது லட்சம் கேலன்) தண்ணீர் தேவைப்படும் நமது லிட்டர் அளவுகோலில் பார்த்தோமானால் 1,51,41,640 (ஒரு கோடியே ஐம்பதிஒரு லட்சத்து நாற்பத்திஓராயிரத்து அறநூற்று நாற்பது) லிட்டர் தண்ணீர் தேவைப்படும். இவ்வளவு மிகப் பெரிய அளவிலான திரவ கரைசலில் 80இல் இருந்து 330 டன் வேதிப் பொருட்கள் கலந்தால் அந்த நீர் எப்படி இருக்கும் என்று நம்மால் கற்பனை செய்துதான் பார்க்க இயலும். அவர்கள் நேரிலேயே நிகழ்த்தி காட்டுவதை நம்மால் வேடிக்கைதான் பார்க்க இயலும்.

சிறுதின்மங்கள், அமிலங்கள், விரிசல்களில் ஏற்ப்படும் தடைகளை உடைக்க கூடிய வேதி பொருட்கள், நுண் உயிரிகளை கொல்லக் கூடிய வேதி பொருட்கள், pH அளவை சமன்படுத்தக் கூடிய பொருட்கள், களிமண் மற்றும் சகதிகளை கிணறுகளில் உள்ளேயே பிரித்து வைக்கக் கூடிய வேதிபொருட்கள், எரிவாயு குழாய்களில் ஏற்படும் துருவை தவிர்க்க உபயோகிக்கும் வேதி பொருட்கள், சிறு தின்மங்களை விரிசல்களில் அனுப்பக் கூடிய பொருட்கள், தேவையான அளவு அழுத்தத்தை உபயோகித்து நிறைய விரிசல்களை ஏற்ப்படுத்த உதவும் வேதி பொருட்கள், பசைகள், இந்த வேதி பொருட்களுக்கு உள்ளேயே நடக்கக் கூடிய வேதி விளைவுகளை தடுக்கக் கூடிய பொருட்கள், கரைப்பான்கள், மற்றும் திரவத்தின் மேற்பரப்பில் ஏற்ப்படும் அழுத்தம் மற்றும் இழுவை அளவை கட்டுப் படுத்தும் பொருட்கள் என்று இந்த வேதி பொருட்களை வைத்தே தனியொரு கட்டுரை எழுதலாம். இவ்வளவு உபயோகங்களுக்கு பல்வேறு விதமான வேதி பொருட்கள் பயன்படுத்தப் படுகின்றன.

இந்த 600 வகையான வேதி பொருட்களில் மிகப் பெரும்பான்மையானவை மனித இனத்திற்கும், மற்ற உயிரிகளுக்கும் தீங்கு ஏற்படுத்துபவை. சில வேதிப் பொருட்கள் புற்று நோயை உண்டாக்கும் கார்சினோஜன் (Carcinogen) எனப்படும் வகையை சேர்ந்தவை மேலும் இரண்டு வேதி பொருட்கள் வேதி வினை புரிந்தால் அவை மூலம் வெளிவரும் வேதி பொருளானது மிகுந்த தீமையை உண்டுபண்ண கூடியதாக இருக்கும். சில வேதி பொருட்கள் மிக மிக சிறிய அளவில் நீர்நிலைகளில் கலந்தால் கூட நீர்நிலைகளின் இயல்பையே மாற்றி விஷமாகி விடும்.

எடுத்துக்காட்டாக சுற்றுசூழலுக்கான குழுக்கள் எடுத்த ஆய்வு முடிவுகளின் படி இந்த எரிவாயு கிணறுகளில் இருந்து வெளிவரும் மண்ணெண்ணெய் (Kerosene) கெரோசின் மற்றும் அதன் துணை வேதி பொருட்கள், நீரியல் விரிசலுக்கு பயன்படுத்தப் படும் பென்சீன் (Benzene) என்ற வேதி பொருளுடன் கலந்தால் அது புற்றுநோயை உண்டாக்கும் வீரியமான மற்றொரு வேதி பொருள் ஆகின்றது. இந்த கலவை 0.005 % என்ற அளவில் 10,00,000 (பத்து லட்சம் லிட்டர்) லிட்டர் நீரில் கலந்தாலே புற்றுநோய் வரும் என்றால் அதன் தன்மையை உணரலாம்.

இந்த நீரியல் விரிசலுக்கு பயன்படுத்திய நீரை நீராவியாக மாற்றி வெளியேற்றுவதற்கும் கழிவு நீரை சேகரிப்பதற்கும் ஆங்காங்கே குட்டைகள் அமைப்பார்கள் இந்த குட்டையில் இருந்து வெளியேறும் நீராவியின் மூலம் அமில மழை பொழிவதற்கான சாத்தியங்கள் உண்டு. பெரும் மழை பொழிந்து இந்த குட்டைகள் உடைப்பு எடுத்தாலோ அல்லது மழை நீரில் கழிவு நீர் கலந்து சென்று நிலத்தில் உரிஞ்சப் பட்டாலோ நிலமும் நீரும் மீண்டும் சரி செய்ய இயலாதவாறு மாற்றமடையும்.

#உயிரினங்களின் உடல்நல பாதிப்புகள் : இந்த நீர்ம வேதிப் பொருட்களின் மனித தாக்கம் என்பது அவற்றை சரியாக கையாளாமல் அவை நிலத்தில் சிந்தியோ அல்லது கசிவின் மூலமாக நன்னீர் நிலைகளில் கலப்பதன் மூலமும், அங்கு பணிபுரியம் தொழிலாளர்களின் சருமத்தில் நேரடியாக தாக்கப்படுவதன் மூலமாகவும், நீராவிமூலம் கழிவுகளை வெளியேற்றும் குட்டைகளில் இருந்து வெளிவரும் வாயுக்களை சுவாசிப்பதன் மூலமாகவும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களை பல்வேறு நோய்கள் தாக்குகின்றன.

2010ம் ஆண்டு தியோ கர்ல்போர்ன் (Theo Colborn) என்ற ஆராச்சியாளரும் மற்றும் அவரது 3 ஆராய்ச்சி குழுவினர்களும் சேர்ந்து "இயற்கை எரிவாயுவின் எடுக்கும் வழிமுறைகள் : பொது நலத்தின் பார்வையில் இருந்து " (Natural Gas Operations from a Public Health Perspective) என்ற தலைப்பின் கீழ் ஒரு ஆராய்ச்சி கட்டுரையை வெளியிட்டார்கள். அவர்களின் ஆய்வின்படி 353 வேதிப் பொருட்கள் அங்கு இயற்கை எரிவாயு எடுக்கும் நீரியல் விரிசல் முறைகளில் பயன் படுத்தப் பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் 12 விதமான உடல்நலக் குறைபாடுகள் வரும் என்று பட்டியலிடப்பட்டிருந்தது.

தோல், கண், தொடு உணர்வு அழிதல், சுவாசக் கோளாறு, செரிமான மண்டலங்களின் நோய் தாக்கம், ஈரல், மூளை மற்றும் நரம்பு கோளாறுகள், இதய தமனிகள் மற்றும் இரத்தத்தில் நோய் தாக்குதல், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், சிறுநீரக கோளாறு, புற்றுநோய், மரபணு மாற்ற கோளாறுகள், நாளமில்லா சுரப்பிகளில் நோயின் தாக்கம், மற்றும் சூழ்நிலை கேடுகளை தகுந்த ஆதாரங்களுடன் பட்டியலிட்டது அந்த ஆய்வு கட்டுரை. கீழே உள்ள படம் நோயின் தாக்கம் வருவதற்க்கான சாத்தியப்பாடுகளை காண்பிக்கின்றது

cbm_300

# நீர்நிலைகள் மற்றும் நிலம் மாசுபடுதல் : நீரியல் விரிசலுக்கு பயன்படும் இந்த வேதி பொருட்கள் அவற்றிக்கான போக்குவரத்திலோ, நீரியல் விரிசல்களின் செயல்முறைகளின் போதோ, அல்லது வேதி கழிவுகளை சேமிக்கும் போதோ நீரிலோ அல்லது நிலத்திலோ கலப்பதற்கான சாத்தியங்கள் உண்டு. அத்தகைய ஆபத்து நேரிட்ட நிகழ்ச்சிகள் சில. .

#2009, செப்டம்பர் மாதத்தில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகணத்தில் கபாட் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனம் (Cabot Oil and Gas) இரண்டு தடவை நீரியல் விரிசலுக்கு பயன்படுத்த படும் நீர்ம பசை போன்ற LGC-35 என்ற வேதி பொருளை கசிய விட்டது. ஹெயிட்மென் எரிவாயு கிணறு (Heitsman gas well)என்று அமைக்கபட்ட இடத்தில் இந்த நிகழ்வு நடந்தது. இந்த இரண்டு நிகழ்விலும் 8, 000 கேலன் (30283 லிட்டர்) என்ற அளவில் இது நிகழ்ந்தது, இந்த கசிவுகள் நேரடியாக ஸ்டீவன்ஸ் நீரோடையில் கலந்ததால் அந்த நீரோடையில் வசித்த மீன்கள் அனைத்தும் இறந்து விட்டன. இந்த இரண்டு கசிவிற்கு பின்னரும் மூன்றாவது தடவையாக ஒரு கசிவு நடந்தது அங்கேயே, அனால் அது நீரோடையில் கலக்காமல் தடுக்கப் பட்டது.

டிசம்பர் 2009 இல் Cowden என்ற வாஷிங்டன் மாகணத்தில் உள்ள இடத்தில எரிவாயு எடுக்கும் (Atlas Resources) அட்லஸ் ரீசோர்சஸ் என்ற கம்பெனியின் 17வது எரிவாயு கிணற்றின் கழிவு மற்றும் வேதிபொருட்கள் கலந்த நீர் அதன் நீராவி குட்டைகளில் இருந்து வெளியேறி Dunkle எனப்படும் சிற்றோடையில் கலந்தது. இது அந்த நகரத்தின் முக்கியமான நீர்ப்பிடிப்பு பகுதியாகும். இதை பற்றிய எந்த ஒரு தகவலும் அந்த எரிவாயு நிறுவனம் அரசுக்கு தெரிவிக்கவில்லை. மிகப் பெரிய அளவில் நீரில் கலந்த வேதி நீரை பின்பு கண்டறிந்த பென்சில்வேனியா சுற்று சூழல் பாதுகாப்பு அமைப்பு அந்த நிறுவனத்திற்கு $97, 350 டாலர்கள் அபராதம் விதித்தது.

மே 2010ம் ஆண்டில் ரேன்ஞ் ரீசோர்சஸ் என்ற மற்றொரு நிறுவனம் அதன் கழிவு நீர் செல்லும் குழாய்களில் ஏற்ப்பட்ட உடைப்பு காரணமாக 250 பேரல் அளவில் கழிவு நீரை Brush என்ற சிற்றோடையில் கலந்தது. இது பின்னால் பென்சில்வேனியா சுற்றுசூழல் அமைப்பினால் கண்டு பிடிக்கப்பட்டு $141,175 டாலர்கள் அபராதத்தை செலுத்தியது.

அக்டோபர் 2005இல் அமெரிக்காவின் கொலராடோ மாகணத்தில் Kerr-McGee என்ற இடத்தில அமைந்துள்ள எரிவாயு கிணற்றின் மேல்பகுதி உடைந்து கிட்டத்தட்ட 168 இல் இருந்து 230 கேலன் அளவில் இந்த நீரியல் விரிசலுக்கு பயன்படுத்தப் பட்ட நீர்மம் வானில் மிகுந்த அழுத்தத்தில் பீய்ச்சி அடித்து வெளியேறியது. இதில் எரிவாயு கிணறும் அதன் அருகில் உள்ள நிலப் பகுதிகளும் மிகுந்த சேதம் அடைந்தன. கிட்டத்தட்ட 1/2 இன்ச் அளவில் நிலத்திற்கு மேலே இந்த எரிவாயு கழிவு படிந்து காணப்பட்டது.

#நிலத்தடி நீர் பாதிப்பு : 2004ம் ஆண்டு அமெரிக்க சுற்றுசூழல் பாதுகாப்பு மையம் ஒரு இறுதி ஆய்வு அறிக்கையை வெளியிட்டது. அது இந்த நிலக்கரி படுகையில் எடுக்கப்படும் எரிவாயுவின் ஆபத்து முறையான நீரியல் விரிசல் முறையினால் நிலத்தடி நீரில் ஏற்ப்பட்ட தாக்கத்தையும், பாதிப்புகளை பற்றியும் விரிவாக அலசியது. இது அமெரிக்காவின் 11 நிலக்கரி எரிவாயு படுகைகளில் 10 நிலக்கரி படுகைகள் மக்களின் நீர் ஆதாரங்களின் அருகில் அல்லது அதற்க்கு உள்ளேயே அமைந்து இருப்பதை காட்டியது. மேலும் சில இடங்களில் எரிவாயு கிணறுகளின் கழிவுகள் நன்னீர் நிலைகளில் கலந்து இருப்பதும் தெரியவந்தது. இந்த கழிவுகள் நிலத்தடி நீரிலும், நீர் நிலைகளிலும் கலப்பது உயிரினங்களுக்கு மிகுந்த தீமையை ஏற்ப்படுத்தும் என்று சுட்டிக் காட்டியது. இந்த ஆய்வுகளின் முடிவின் படி வேதி பொருட்களின் அடர்த்தி மற்றும் செறிவு என்பது அனுமதிகப்பட்ட அளவை காட்டிலும் 4ல் இருந்து 13,000 அளவு வரை மிகுந்திருந்தது கண்டறியப் பட்டது.

இதன் பாதிப்புகள் என்பது குறுகிய காலத்திற்கு மட்டும் அல்லாமல் இந்த பாதிப்புகள் நீண்டகாலம் வரை தொடர்ந்து அச்சுறுத்தல்களாக இருக்கும் என்றும் இதில் 20இல் இருந்து 85% சதவிகிதம் வேதி பொருள்கள் அதன் தன்மையிலேயே மாறாமல் இருக்கும் என்றும் இவை நீர் நிலைகளில் கலக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

# வளிமண்டலம் மாசடைதல் : எங்கெங்கு இந்த எரிவாயு கிணறுகள் அமைக்கப்பட்டு, செயல் படும்போதும் அதன் பின்பும் அந்த இடத்தில வளி மண்டலத்தில் மிகுந்த மாசு கலந்திருப்பது தெரிய வந்தது. பெர்னட் என்ற இடத்தில் அமைந்துள்ள எரிவாயு கிணறுகளின் அருகில் எடுக்கப்பட்ட சோதனையில் மிகுந்த ஆபத்தை உயிரினங்களுக்கு ஏற்படுத்தும் பென்சீன் (Benzene) வாயு டெக்சாஸ் மாகாணம் முழுவதும் பரவியிருந்தது கண்டறியப்பட்டது. வளி மண்டலத்தில் தூசுகளின் மூலமாக வேதிப் பொருட்கள் இதன் செயல் முறைகளான நிலத்தடி நீரில் இருந்து மீத்தேன் எரிவாயு பிரித்தெடுக்கும் போதும், அழுத்தம் கொடுக்கும் பொழுதும், குழாய்களில் இருந்தது கசிவின் மூலமாகவும் கலக்கிறது.

நீரியல் விரிசல் செயல் முறைகள் முடித்தபின் இந்த கழிவுநீர் நிலத்திற்கு மேலே உரிஞ்சப்படுகிறது. பின்பு மீத்தேன் பிரித்தெடுத்த பின் கழிவுகளை சேகரிக்கும் குட்டைகளுக்கு மீதி இருக்கும் கழிவு நீர் அனுபப்படுகிறது. இந்த நிலையில் கழிவு நீர் குட்டைகளில் தேங்கும் நீரில் இருந்து அபாயகரமான அளவுகளில் வாயுமண்டலத்தில் கழிவுகள் நீராவியாக கலக்கின்றன.

இதைப் பற்றிய மேல் ஆய்வுகளின் படி சராசரியாக 10 மீத்தேன் எரிவாயு கிணறுகள் 32. 5 டன் எடையுள்ள மெத்தனால் (Methanol) வேதி பொருள் வளி மண்டலத்தில் கலக்கிறது. இந்த மெத்தனால் கலந்த காற்றை சுவாசிக்கும் மனிதன் தலைவலி, சுவாசக் கோளாறு என்று ஆரம்பித்து இறுதியில் பார்வைக் குறைபாட்டில் சென்று முடியும். இந்த ஆய்வுகளில் 70வது விதமான உடனடி வேதி வினைகளை உண்டுபண்ணும் வேதி பொருட்களும் 27விதமான மற்ற வேதி பொருட்களும் வளி மண்டலத்தில் கலப்பது உறுதி படுத்தப்பட்டது.

நீரியல் விரிசலுக்கு பயன்படுத்தப் படும் வேதி பொருட்களில் 37% சதவிகிதம் உடனடி வேதிவினைகளுக்கு உட்படக்கூடிய இயல்பு கொண்டவை இவை நீரியல் விரிசல் செயல் முறையின்போதே ஆவியாகி வளிமண்டலத்தில் கலக்கிறது. இவை வளிமண்டலத்தில் கலந்து அருகில் இருக்கும் நீர்நிலைகளில் கலப்பதன் மூலம் நீர்நிலைகளும் மாசடைகின்றன.

இந்த வளி மண்டலத்தில் ஆவியாகி கலக்கும் வேதி பொருட்களில் 81% சதவிகிதம் உயிரினங்களுக்கு மூளை மற்றும் நரம்பு மண்டலத்தில் மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய இயல்பினை கொண்டவை. 71% சதவிகிதம் இருதயம் மற்றும் இரத்தம் சம்மந்தமான நோய்களை ஏற்படுத்தும் இயல்பினை கொண்டவை. 66% சதவிகிதம் சிறுநீரகம் மற்றும் அதை சார்ந்த வியாதிகளுக்கு காரணமாகின்றன. இத்தகைய வேதி பொருட்கள் சுவாசிப்பதன் மூலமாகவோ, தோள்களின் மூலமாகவோ, நீரின்மூலம் உடலுக்கும் செல்வதன் மூலமாகவோ பல்வேறு வியாதிகள் ஒரே நேரத்தில் தாக்கும் அபாயத்தையும் உண்டு பண்ணுகின்றன.

2005ம் ஆண்டு கொலராடோ மாகாணத்தில் வசிப்பவர்கள் வெளியே வர இயலாதவாறு கொடிய நாற்றமுடைய காற்று எங்கும் பரவியது, சுற்றுசூழல் மற்றும் காவல்துறையின் விசாரணையில் அருகே அமைந்த நான்கு எரிவாயு கிணறுகளில் அப்போதுதான் நீரியல் விரிசல் முறை நடந்தது தெரியவந்தது அதன்மூலமே கழிவுகள் சேமிக்கும் குட்டைகளில் இருந்து துர்நாற்றம் பரவியது கண்டறியப் பட்டது. பென்சில்வேனியா மாகாணத்தில் கெரொசின் அல்லது பெட்ரோல் போன்ற துர்நாற்றம் ஊரெங்கும் பரவியது மட்டும் அல்லாமல் வெள்ளை நிறத்தில் தூள் போன்ற வேதிபொருட்கள் ஊரெங்கும் படிந்தது. நீண்ட நாட்கள் முயற்சித்த பின்பே அவற்றை அப்புறப் படுத்த முடிந்தது. இதுவும் எரிவாயு கிணறுகளின் பின்விளைவே.

2010, மார்ச் இல் வாஷிங்டன் பகுதியில் பென்சில்வேனியாவில் அரசு வசம் இருந்த கழிவுநீர் சேகரிக்கும் குட்டைகளில் தீபிடித்து அதனால் எழுந்த அடர்ந்த, கரும் புகை நீண்ட தொலைவுக்கு பரவியது. மேலும் கடும் துர்நாற்றத்தையும் ஏற்படுத்தியது. சில நாட்களுக்கு முன்பே அங்கு வெடி சத்தம் கேட்டதாகவும் மக்கள் புகார் அளித்தனர் அதன் பின் அந்த கழிவுகளை அங்கிருந்து அப்புறப்படுத்துவதாக உறுதி அளித்தனர்.

# கழிவுப் பொருட்களை அப்புறப்படுத்தல் : எங்கெங்கு இந்த நிலக்கரி படுகைகளில் இருந்து மீத்தேன் எடுக்கும் எரிவாயு எடுக்கும் கிணறுகள் உண்டோ அங்கு எல்லாம் நீரியல் விரிசலுக்கு பயன்படுத்தப்பட்ட வேதிபொருட்கள் கொண்ட நீரானது மீண்டும் நிலத்திற்கு 25-100% சதவிகிதம் உறிஞ்சப்படுகின்றது. இந்த மில்லியன் கேலன் பெருமளவிலான நீர் மீண்டும் பயன்படுதுவதற்க்காகவோ அல்லது வேதிபொருட்களை நீக்கும் சுத்தகரிப்பிற்கோ அல்லது கிணறுகளில் இருந்து அப்புறப்படுதுவதற்க்காகவோ இருக்கும்.

2009 இல் பென்சில்வேனியாவில் தினந்தோறும் 3,40,68,690 லிட்டர் வேதிப் பொருட்கள் கலந்த கழிவு நீரை உற்பத்தி செய்தது. இது மேலும் அதிகரித்து 19இல் இருந்து 20 மில்லியன் கேலன் கழிவு நீர் தினந்தோறும் 2011ம் ஆண்டில் இந்த எரிவாயு கிணறுகளால் வெளியேற்றப்பட்டது. இந்த பெருமளவில் வெளியான கழிவுநீர் அவற்றை வெளியேற்றுவதில் மாபெரும் சோதனையாக எரிவாயு நிறுவனங்களுக்கு ஏற்பட்டது. புவியியல் ஆய்வுகளில் இந்த கழிவுநீரில் கலக்கப்பட்ட வேதி பொருட்கள் மட்டுமல்லாமல் நிலத்திற்கு அடியில் உள்ள பல்வேறு தனிமங்களும் நீரில் கலந்து வெளியேறியது கண்டுபிடிக்கப் பட்டது. இத்தகைய கழிவு நீரில் பல்வேறு வேதிப்பொருட்கள் மட்டுமல்லாது பல்வேறு வகையான தனிமங்களும், பல்வேறு குணமுடைய உப்புக்களும், தாதுக்களும், கதிரியக்கத்தை உண்டுபண்ணும் தனிமங்களும், மற்ற ஆவியாகக்கூடிய பொருட்களும் வெளியேறுவதால் இதன் சுத்தகரிப்பு மற்றும் மறுசுழற்சி என்பது மிகுந்த சிக்கல்களும், அதிக செலவு வைப்பதாகவும் மாறுகின்றது. அங்கேயே அப்படி என்றால் இங்கு அவை காவேரியிலும் மற்ற நீரோட்டங்களிலும் வெளியேற்றப்படப் போவதில்லை என்ற எந்த உத்திரவாதமும் இல்லை. என்னெனில் கண்முன்னே திருப்பூர் சாயப் பட்டறைகளும், ஓரத்துப்பாளையம் அணையும் கண்முன்னே வந்து போகின்றன.

2009இல் நியூயார்க் நகரத்தில் இருந்து வெளிவரும் Propublica என்ற பத்திரிகையில் நியூயார்க் நகர சுகாதார துறைக்கு இந்த கழிவுகளில் இருந்து கதிரியக்கம் உள்ள பொருட்கள் வெளிவருவதை சுட்டிக்காட்டி கட்டுரை ஒன்றை வெளியிட்டு கேள்வி எழுப்பி இருந்தது. இதன் பின்பே நியூயார்க் சுகாதார துறை மிகுந்த கவனத்துடன் இந்த கழிவுநீர் மக்களின் சுகாதாரத்தை கணக்கில் கொண்டு மிகுந்த கவனத்துடன் கையாளப்படவேண்டும் என்ற குறிப்பை அனைத்து எரிவாயு நிறுவனக்களுக்கும் அனுப்பியதோடு அரசிற்கும் அறிவுறுத்தியது. இதன்படி ஒவ்வொரு முறையும் கழிவுநீர் வெளியேறும் போதும் தகுந்த கதிரியக்கத்தை அறியக்கூடிய சோதனைகள் நடத்தப்படவேண்டும் என்றும் அனைத்து எரிவாயு கிணறுகளிலும் இதை கண்டறிய தகுந்த கருவிகளோடு கூடிய சோதனைகூடம் அமைக்கப்பட வேண்டும் என்றும் மேலும் தகுந்த இடைவெளியில் இந்த எரிவாயு கிணறுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் கதிரியகத்தினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா என்று உடல்நல பரிசோதனையும் நடத்தப்பெறுவது அவசியம் என்று ஆணை பிறப்பித்தது.

இந்த கதிரியக்கம் கலந்த நீரினை மீண்டும் பூமிக்குள் செலுத்த சில வல்லுனர்கள் யோசனை கூறினார்கள். இதன்படி கழிவு நீரினை பூமிக்குள் செலுத்துவதற்கு என்றே தனியாக பூமியில் துளையிட்டு அந்த போர்வெல் துளையின் மூலம் கழிவுநீரை பூமிக்குள் செலுத்தி அகற்றலாம். இத்தகைய போர்வெல் (துளையிடும்) முறையை UIC (Underground Injection Control)வகை 2 என்று அழைக்கிறார்கள். இந்த முறையில் என்ன பிரச்சனையை எதிர் கொண்டார்கள் என்றால் முதலில் நியூயார்க் மாகாணத்தில் இந்தவகை துளையிட்ட கிணறுகள் என்பது ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தனியாக என்று அமைக்கமுடியாது அப்படி அமைத்தாலும் இந்த வகை போர்வெல் (துளையிடும் முறையில்) அமைப்பில் உருவாகும் கிணறுகள் மிக அதிகமாக இருக்கும். இவை மேலும் மேலும் சிக்கல்களை உண்டு பண்ணும். இவ்வாறு அமைக்கபட்டு சில இடங்களில் செயல்படும் கிணறுகளை மேற்ப்பார்வையிடும் தொழில்நுட்பவல்லுநர்களுக்கே இத்தகைய கதிரியக்கம் கலந்த கழிவுகளை எப்படி கையாள்வது என்பது தெரியவில்லை. அவர்களுக்கு யுக்கா மலைத்தொடரில் ஏற்ப்பட்ட தோல்வியில் முடிந்த அணுஉலை கழிவுகளை பூமிக்குள் புதைக்கும் செயல்பாடு நினைவிற்கு வந்திருக்கும்.

பென்சில்வேனியாவில் ஒவ்வொரு நாளும் உற்பத்தியாகும் பெருமளவிலான மில்லியன் கேலன் அளவிலான வேதிப் பொருட்கள் கலந்த கழிவுநீரை எவ்வாறு வெளியேற்றுவது என்று மிகப் பெரிய பிரச்னையை இப்போதும் எதிர்கொண்டிருகிறார்கள். அங்கு இருக்கக் கூடிய நீரை சுத்தகரிக்கும் நிலையங்கள் குறிப்பிட சிலவகை வேதி பொருட்களை மட்டுமே நீரில் இருந்து பிரித்தெடுக்கும் வசதிகளை கொண்டது. அனைத்தையும் சுத்தகரித்து நன்னீரை குடிநீராக்கும் வசதிகள் என்பது சாத்தியப்படவில்லை.

2008 ம் ஆண்டு பெரும் மழைப்பொழிவு நேரத்தின் போது இத்தகைய கழிவுகளை அங்கு ஓடும் பீவர் ஆறு (Beaver River) மற்றும் மனோங்கஹெலா (Monongahela River) ஆறு மற்றும் அதன் கிளை நீர்பிடிப்புகளில் அங்குள்ள கழிவுநீர் அகற்றும் நிலையங்கள் கலந்தது. இந்த செயலால் பெரும் அளவிலான கழிவு நீர்மம் இந்த இரண்டு ஆறுகளிலும் கலக்கப்பட்டது. ஆனால் இந்த இரண்டு ஆறுகளாலும் தன்னில் கலக்கப்பட்ட நீரில் கரையும் கழிவுகளை முற்றிலுமாக கரைக்கப்பட முடியவில்லை. அதுவும் பெரும் அளவிலான இந்த கழிவுகளை அந்த ஆறுகள் தன்னுள் கரைக்கும் சாத்தியத்தையும் கணக்கில் எடுக்காமல் இந்த செயல் நடைபெற்றது. விளைவு நீரில் கரையக்கூடிய கழிவுகள் கரையவில்லை மேலும் சல்பேட் (Sulfate) மற்றும் குளோரைடு கள் (Chlorides) ஆகியவற்றின் அடர்த்தி மிகுந்தது.

மிகுந்த அளவிலான இந்த வேதி பொருட்களின் அடர்த்தி அந்த ஆறுகளில் வாழும் நீர்வாழ் உயிரினங்களையும், தாவரங்களையும் தாக்கி அழித்தது. பின்பு கார்னேஜ் மெலொன் பல்கலைகழகமும் (Carnegie Mellon University) மற்றும் பிட்ஸ்பெர்க் குடிநீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மை நிறுவனமும் இணைந்து நடத்திய ஆராய்ச்சியில் இந்த எரிவாயு நிறுவனங்கள் ஆற்றில் கலந்த கழிவு நீரால் அங்கு ஓடும் அல்கேனி (Allegheny) மற்றும் பீவர்(Beaver) ஆற்றில் மிக அபாயகரமான அளவில் ப்ரோமைட் கலந்திருப்பது தெரியவந்தது. இந்த இரண்டு ஆறுகளின் தண்ணீரையும் எடுத்து மக்களுக்கு சுத்தகரித்து குடிநீர் வழங்கிக் கொண்டிருந்தது அரசு. இந்த சுத்தகரிப்பு நிலையங்களில் நீர் சுத்தகரிப்புக்கு பயன்படுத்தப்படும் (Disinfectants) வேதிகலவைகளுடன் இந்த ப்ரோமைட் கலந்த நீர் வேதிவினை புரிந்து ப்ரோமினேற்றம் என்ற வேதிவினையாக மாறி ப்ரோமினேற்றம் செய்த ட்ரைஹாலோமெத்தேன் (Brominated Trihalomethane) ஆக மாறுகிறது. இந்த ப்ரோமினேற்றம் என்ற ப்ரோமின் கலந்த ட்ரைஹலோமீத்தேன் என்பது பல்வேறு புற்றுநோய்களையும், குழந்தைகளின் பிறவி குறைபாடுகளை உண்டாக்கும் ஆபத்து கொண்டது. இந்த நீரையே மக்களுக்கு அதன் வீரியம் தெரியாமல் விநியோகித்து வந்தன அந்த நீர் சுத்தகரிப்பு நிலையங்கள்.

ஆகஸ்ட் 2010 இல் பென்சில்வேனியா புதிய சட்டம் ஒன்று இயற்றியது. இதன்படி இத்தகைய எரிவாயு கிணறுகளில் இருந்து சுத்தகரிப்புக்காக பெறப்படும் கழிவுநீரில், நீரில் மொத்தமாக கரையக்கூடிய கழிவுகளின் அளவு லிட்டருக்கு 500 மில்லிகிராம் அளவு இருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் குளோரைடு ஆனது 250 மில்லிகிராம் அளவுக்கே இருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் அறிவுறுத்தியது. இதை மீறிய பெரும் அளவிலான வேதி அடர்த்திகொண்ட கழிவு நீர் சுத்தகரிபுக்கே தகுதி இல்லாத ஆபத்து கொண்ட நீர்மங்கள் என்று அறிவித்தது. இதனால் 2010 இல் 27 ஆக இருந்த நீர் சுத்தகரிப்பு நிறுவனங்கள் 2011 இல் 15 ஆக குறைந்தது.

இன்றுவரை இந்த எரிவாயு கிணறுகளில் இருந்து வெளிவரும் வேதி பொருட்கள் கலந்த கழிவு நீர் சுத்தகரிக்க முடியாத ஒன்றாகவும், அரசுக்கு மிகுந்த சிக்கல்களை கொடுக்கும் விஷயமாகவும் அங்கு இருந்து வருகிறது.

# வெளிப்படையாக அறிவிக்காத வேதிப்பொருட்களின் பயன்பாடு : இந்த எரிவாயு கிணறுகளில் செய்யப்படும் நீரியல் விரிசல்களில் என்னென்ன வேதிபொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று நிலத்தின் உரிமையாளரால் அறியமுடியாது. அமெரிகாவில், இயற்கை வளங்கள் பாதுகாப்பு நிறுவனத்தின் தகவல்படி 1900 ஆண்டுகளின் இறுதியிலும், 2000 ஆண்டுகளில் ஆரம்பத்திலும் ஏராளமான சுற்றுசூழல் மற்றும் நில உரிமை பாதுகாப்பு அமைப்புகளும் இந்த நீரியல் விரிசல்களில் என்னென்ன வேதிப் பொருள்கள் உபயோகிக்கப்படுகின்றன? அவை எந்தெந்த அளவுகளில் கலக்கப்படுகின்றன? என்பது பற்றிய தகவல்களை பெற பல்வேறு விதமான முயற்சிகளை செய்தன. ஆனால் அந்த எல்லா முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன. ஏனென்னில் இந்த வேதிப் பொருள்களின் தகவல்கள் என்பது தங்களின் " தனிப்பட்ட மற்றும் பாதுகாக்கபட்ட உரிமை" என்று எரிபொருள் நிறுவனங்கள் தகவல்களை தர மறுத்தன.

2000 ஆம் ஆண்டுகளின் மத்தியகாலங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களுக்கு பொறுப்பேற்கும் அமைப்பும் மனித உடலின் உட்சுரப்பிகளின் நோய்தாக்கங்களை கண்காணிக்கும் அமைப்பும் இணைந்து பல்வேறு விதமான பெறபெற்ற தகவல்களின் அடிப்படையிலும் மேலும் எரிவாயு கிணறுகளில் நீரியல் விரிசலுக்காக வாங்கப்பட்ட வேதிப் பொருட்களின் பட்டியல் அடிப்படையிலும் இங்கு இருக்கும் தகவல் அறியும் உரிமை போன்ற சட்டங்களின் மூலமாக நீரியல் விரிசலுக்கு பயன்படும் வேதி பொருட்களை கண்டறிய முயற்சித்தனர். அதே நேரத்தில் மனித உட்சுரபிகளின் நோய்தாக்கத்தை கண்டறியும் அமைப்பும் சுற்றுசூழல் பாதுகாப்பிற்காக செயல்படும் குழுவும் இணைந்து ஒரு அறிக்கையை வெளியிட்டனர்.

அந்த அறிக்கையில் மிக கொடிய விஷத்தன்மை கொண்ட வேதிப் பொருட்கள் இந்த எரிவாயு குழாய்களில் நடத்தபெறும் நீரியல் விரிசல்களில் பயன்படுத்தப்படுவது தெரியவந்தது. அமெரிக்காவின் மொண்டனா, நியூ மெக்ஸிகோ, வயோமிங் மற்றும் கொலராடோ மாகணங்களில் செயல்படும் எரிவாயு கிணறுகளில் இந்த கொடிய விசத்தன்மை வாய்ந்த வேதிப் பொருள்கள் நீரியல் விரிசலுக்காக பயன்படுத்தப் படுவது கண்டறியப்பட்டது. இதை பற்றி தனியாகவே எரிவாயு மற்றும் எண்ணெய் கிணறுகளில் உட்செலுத்தப்படும் வேதிப் பொருள்கள் என்ற தலைப்பின் கீழ் ஒரு ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டது.

2006ம் ஆண்டில் இந்த நீரியல் விரிசலில் பயன்படுத்தப்படும் வேதிபொருட்களை அறிவிக்க வேண்டும் என்பதை முதன்மையான தேவையாக குறிப்பிட்டு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன. இதன் விளைவாக எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களுக்கு பொறுப்பேற்கும் அமைப்பு ஐந்து குடிமக்கள் சங்கங்களின் சார்பாக ஒரு கடிதத்தை கொலராடோ எண்ணெய் மற்றும் எரிவாயு பயன்பாட்டு அமைப்பிற்கும் மற்றும் கொலராடோ நல்வாழ்வு மற்றும் சுற்றுசூழல் துறைக்கும் அனுப்பியது. அதில் இந்த அமைப்புகள் நீரியல் விரிசலுக்கு பயன்படுத்தபடும் வேதிபொருட்கள், அந்த வேதிபொருட்களை கையாளும், கண்காணிக்கும் விதிகள், நீரியல் விரிசலுக்கு பின் வெளியேற்றப்படும் கழிவுகளின் விவரம் மற்றும் அதன் தன்மை ஆகியவற்றை மாகாண அரசின் துறைகளிடம் கோரியிருந்தது. அதே சமயத்தில் அனைத்து அமெரிக்க மாகாணங்களிலும் அரசு மன்றங்களில் இந்த நீரியல் விரிசலுக்கு பயன்படுத்தப்படும் வேதிபொருட்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று சொல்லி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இன்றும் கூட வயோமிங், ஆர்கன்சாஸ், பென்சில்வேனியா, மெக்ஸ்சிகோ மற்றும் டெக்ஸாஸ் மாகாணங்களில் வாழும் மக்கள் தங்களுக்கு தேவையான அளவு விவரங்களை கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள், போராடுகிறார்கள் ஆனால் பெரும்பான்மையான மாகாணங்களில் தொழிற்சாலைகளின் ரகசிய பாதுகாப்பு சட்டங்கள் அங்கு உள்ள எரிவாயு நிறுவனங்களுக்கு ஆதரவாக இருக்கின்றன.

# நீரியல் விரிசலுக்கான சிறந்த வழிமுறைகள் : பல்வேறு விதமான ஆய்வுகளுக்கு பின் சிறந்த வழிமுறைகள் என்று சிலவற்றை மக்கள் சங்கங்கள் பரிந்துரை செய்தன. ஆனால் அவற்றை எந்த ஒரு எரிவாயு நிறுவனங்களும் பின்பற்றவில்லை. மக்கள் பரிந்துரைத்த சில விதிமுறைகள்.

பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, நீரியல் விரிசல்கள் எங்கு எந்த எரிவாயு கிணறுகளில் நடந்தாலும் அங்கு நீரியல் விரிசலுக்காக மணல் மற்றும் நீர் கலந்த கலவையே உபயோகிக்கபடவேண்டும் என்றும் அல்லது நீர். மணல் கலந்த கலவையுடன் விஷதன்மை அற்ற வேதிபொருட்கள் பயன்படுதல்லாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இதற்கு சிறந்த உதாரணமாக இதே விதிமுறைகளை பின்பற்றி நீரியல் விரிசல் முறையை செயல்படுத்தும் ஆழ்கடலில் செயல்படும் எரிவாயு மற்றும் எண்ணெய கிணறுகள் சொல்லப்பட்டன. விஷமற்ற பசைகள் போன்ற பொருட்களையும் மணல், நீர் ஆகியவற்றை கலந்து ஆழ்கடலில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் நிறுவனங்கள் நீரியல் விரிசலுக்கான திரவத்தை தயார் செய்கிறார்கள். இந்த திரவம் கடலின் உயிரினங்களுக்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது.

அனைத்து நீரியல் விரிசலுக்கான வேதிபொருள் கலந்த திரவத்துடன் டீசல் கலக்கப்படுகிறது. இது கண்டிப்பாக தவிர்க்கப்படவேண்டும் ஏனெனில் டீசலில் புற்றுநோயை உண்டாக்கும் கார்சினோஜன் (Carcinogen) என்ற காரணிகளின் பட்டியலில் முதன்மையாக உள்ள பென்சீன் (Benzene) இருகின்றது மேலும் மிகுந்த ஆபத்தான வேதிபொருட்களான நாப்தலீன் (Naphthalene), டொலுயீன்(Toluene), எத்தில்பென்சீன்(Ethylbenzene), மற்றும் சைலீன் (Xylene) ஆகிவை இருக்கின்றன. இதை பற்றிய மேல் விவாதங்களுக்கு பின்பு ஹாலிபர்டன் என்ற எரிவாயு எடுக்கும் நிறுவனம் ஒரு விளக்கம் கொடுத்தது அதில் டீசல் என்பது நீரியல் விரிசல் செயல் முறைகளில் விரிசல்களை உண்டாகும் வலிமை கொண்டதல்ல எனவும் டீசல் இந்த நீரியல் விரிசல்களில் ஒரு கடத்தியாகத்தான் செயல் படுகிறது என்றது. அதற்க்கு இந்த நீரியல் விரிசல்களில் டீசலுக்கு பதிலாக விஷதன்மையற்ற மற்ற கடத்திகளை பயன்படுத்துவது என்பது மிகுந்த மிக எளிது என்றும் நீரை கூட கடத்தியாக பயன்படுத்த முடியும் என்று தொழிநுட்ப வல்லுனர்கள் பதிலளித்தார்கள். சுற்றுசூழல் பாதுகாப்பு நிறுவனமும் இந்த மாற்று வழிமுறைகள் அதாவது நீரை சார்ந்த கடத்திகளை நீரியல் விரிசல் முறைகளில் உபயோகிப்பது சுற்றுசூழலுக்கு நல்லது என்று சொல்லியது.

எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகளில் இருந்து பெறப்படும் கழிவு நீரானது நீராவி குட்டைகளில் சேமிக்கப்படுகின்றன. இந்த குட்டைகளின் பக்கவாட்டிலும் அதாவது அதன் கரைகளும் அடிபக்கத்திலும் சிமெண்டினால் ஆன அடித்தளங்கள் அமைக்கப்பெற வேண்டும். மேலும் தார்பாலின் கொண்டும் அடித்தளதிலும், பக்கவாட்டிலும் நிலத்தை மூடிவைத்து கழிவுநீர் எக்காரணத்தை கொண்டும் நிலத்தில் இறங்காதவாறு காத்திட வேண்டும் என்றும் அந்த அறிக்கை அறிவுறுத்தியது.

மேலே கூறியுள்ள விவரங்களில் மிகுதியான ஆபத்தை ஏற்படுத்தும் வேதிபொருட்கள் இந்த நீரியல் விரிசலுக்கு பயன்படுத்தப்படுவது பற்றி அறிந்தோம். இந்த வேதிப் பொருட்கள் நீரியல் விரிசல் செயல்முறை முடிந்தவுடன் மீண்டும் மறுசுழற்சிக்காக, கழிவுநீர் அப்புறப்படுத்தப்படுவதற்காக உரிஞ்சப்படுகின்றன அவ்வாறு வெளியேற்றப்படும் கழிவுநீரில் உள்ள ஆபத்தான வேதிபொருட்களை பயன்பாடு முடிந்த கிணறுகளில் மீண்டும் செலுத்தி அங்கு சேமிக்கலாம். கழிவுநீரில் வெளிவரும் கரிமப்பொருட்களை மீண்டும் பயன்பாடு முடிந்த கிணறுகளின் உள்ளே செலுத்தப்படவேண்டும். ஏனென்னில் அவை நிலத்தின் மீது சேமிக்கப்பட்டால் அவை நிலத்திலும், நீரிலும் கலப்பதற்கு வாய்புகள் அதிகம். மிகுந்த ஆபத்து ஏற்படுத்தும் கழிவுகளை பிரித்து தனியே இரும்பு தொட்டிகளில் சேமிக்கலாம். என்றும் அந்த அறிக்கை கூறியது.

ஆனால் இவை எவற்றிலும் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை. சட்ட திட்டங்கள் மிகுந்த அமெரிக்காவிலேயே இந்த நிலை என்றால் இங்கு இந்த வழிமுறைகள் ஒன்று கூட நிறைவேறாது என்று கணிக்கலாம்.

மத்திய அரசின் ஒப்பந்தம் சில நாட்களுக்கு முன் இணையத்தில் தேடியபோது கிடைத்தது. அதில் தெளிவாகவே சொல்லியிருக்கிறது தஞ்சை டெல்டாவில் நடைமுறைபடுத்த உத்தேசித்திருப்பது இந்த "நீரியல் விரிசல்" முறையை பயன்படுத்தி எடுக்கப்படும் மீத்தேன் எரிவாயு கிணறுகளை தான். தஞ்சை மக்கள் மாநில அரசு தடை விதித்துவிட்டது என்று அசட்டையாக இருக்கவே முடியாது. என்னெனில் இதில் ஈடுபடப்போவது அரசுகளையே மாற்றும் வல்லமை கொண்ட எண்ணெய் நிறுவனங்கள். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் தெரியவரும் மாநில அரசின் உண்மை முகம். கூடங்குளத்தில் ஏற்கனவே நாம் கண்டதுதான்.

வரும் முன் தடுக்க தவறினால், வரும்போதும், வந்தபின்னும் நம்மால் தடுக்கமுடியும் என்று உறுதியில்லை. என்னெனில் ஏற்க்கனவே சாதியில் பிளவுண்ட வரலாறு தஞ்சைக்கு... இனி எரிவாயுவினால் நிலம் பிளவுறும் எதிர்காலமும் வருமோ!

வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.

விளக்கமும் வேண்டுமா?

 - த.அருண்குமார், May17 இயக்கம். (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)