நமது சமுதாயத்தில் ஞெகிழிப் பொருட்களின் பயன்பாடு மக்களின் நுகர்வு கலாச்சாரமாகவும், நாகாரிகமானதாகவும் மாறியுள்ளது. ஆனால் ஞெகிழிப் பொருட்கள் ஏற்படுத்தும் பாதிப்புகள், தீங்குகள் ஏராளமானவையாகும்.

நீர், நிலம், காற்று, தாவரம், விலங்கு என அனைத்தையும் சீர்கேடு அடையச் செய்யும் ஞெகிழிப் பொருட்கள் மனித குலத்தை அழிக்கக் கூடியனவாக உள்ளன.

நாம் காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கச் செல்லும்வரை நம்முடன் இரண்டறக் கலந்துவிட்டன‌ ஞெகிழிப் பொருட்கள். நாம் பல் துலக்கப் பயன்படுத்தும் தூரிகை-பற்பசை அடைப்பான்கள் ஞெகிழியால் செய்யப்படவை. பால் உறைகள் ஞெகிழியால் தயாரிக்கப்பட்டவை. தேநீர் வடிகட்டப் பயன்படும் வடிகட்டிகள் - குடிநீர்க் குழாய்கள் - நீர்த்தொட்டிகள்-வாளி-முகவை-வழலைப்பெட்டி (Soap box)– உடைகளை உலர்த்தப் பயன்படும் கயிறு-உடைகளைப் பிடித்திருக்கும் பிடிப்பான்கள் - சீப்பு-எண்ணெய்ப்புட்டிகள்-முகப்பூச்சு அடைப்பான்கள்-உணவு அடைப்பான்கள்-தேநீர், குளம்பி அருந்தும் குவளைகள்-பழச்சாறு, பனிக்குழைவு (ice creams) குவளைகள் அடைப்பான்கள், குளிர்பானங்களின் புட்டிகள், பொருட்கள் வாங்கப் பைகள், திருமணத் தாம்பூலப்பை, திருமண அழைப்பிதழ்கள், சாப்பாட்டு மேசை விரிப்புகள், சாப்பாட்டு இலைகள் என நம் வாழ்வில் நாள்தோறும் பயன்படுத்தும் பொருட்களாக ஞெகிழிப் பொருட்கள் உள்ளன.

ஞெகிழி தயாரிக்க 90 விழுக்காடு வேதிப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.  ஞெகிழிப் பொருட்கள் உற்பத்தியில் தீங்கு விளைவிக்கும் வேதியியல் பொருட்கள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. ஞெகிழித் தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்களும், அருகில் வசிக்கும் மக்களும் பாதிக்கப்படுகின்றனர்.

ஞெகிழியை மறு சுழற்சி செய்யும்பொழுது, வெளியேறும் வேதியியல் வாயுக்களால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். ஞெகிழி தயாரிக்கும் தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துக்களில் பலர் இறக்க நேரிடுகிறது.

ஞெகிழியை எரித்தால் வெளிவரும் புகையில் டையாசின், ப்யூரான் போன்ற நச்சு வாயுக்கள் வெளியேறி காற்றில் கலந்து, எட்டாத தொலைவில் வசிக்கும் மக்களுக்குக் கூட புற்றுநோய்களை ஏற்படுத்துகின்றன.

மண்ணில் வீசப்படும் ஞெகிழிப் பொருட்கள் மட்குவதில்லை. மேல் மண்ணுக்கும் கீழ் மண்ணுக்கும் இடையில் ஒரு கண்ணாடிச் சுவர்போல இருந்து நீரோ, காற்றோ புக வழிவிடாமல் மண்ணை மூச்சுத் திணறச் செய்கிறது. மண்வளங்களான நுண் துளைகள், மண்ணின் நயம், நீர்ப்பிடிப்புத் தன்மை, மண்ணின் இயற்கைத் தன்மையினைப் பாதித்து மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. நிலத்தின் காற்றோட்டத்தைத் தடுக்கிறது. அதை மீறி எந்த விதையும் முளைப்பதில்லை. மண் மலடாகிறது. நிலத்தடி நீர் மாசடைகிறது. இதனால் விவசாயம் நாசமடைகிறது.

அதிக அளவிலான கொழுப்பு அல்லது எண்ணெய் கூடுதலான வெப்ப நிலையில் வேகவைக்கப்பட்ட உணவில் ஞெகிழி கரைந்துவிடக் கூடியது. அந்த உணவுகளைச் சூடேற்றும் போதோ அல்லது அதே ஞெகிழியிலேயே நீண்ட நாட்கள் வைக்கும் போதோ ஞெகிழி கரைகின்றது. இதனால் நச்சுத் தன்மையுள்ள ஞெகிழியை உண்பதோடு, ஞெகிழியுடன் கூடிய வேதிக் கலவைகளையும் நாம் உண்ண வேண்டியுள்ளது. ஆனால், நாம் கவர்ச்சியான வண்ணமயமான அடைப்பான்களையும், உறைகளையும் பார்த்து, அபாயம் அறியாமல் வாங்கிப் பயன்படுத்துவதை நவ நாகாரிகம் என நினைக்கிறோம்.

கால்வாய்களில் ஞெகிழி கழிவுப் பொருட்களான பைகள், குவளைகள், புட்டிகள் ஆகியவற்றை போடுவதால்? அடைப்பு ஏற்பட்டு மழை நீர் வெளியேற முடியாமல் தேங்கிவிடுகிறது. அண்மையில் மும்பை நகரில் பொழிந்த மழையின் போது அங்கு உள்ள சாக்கடை கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு வெள்ளப் பெருக்கு உண்டாகி மாநகரமே மூழ்கும் அபாயநிலை உருவானது. மேலும், கால்வாய்களில் நீர் தேங்கி துர்நாற்றம் உண்டாகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி நோய்களைப் பரப்புகிறது.

மலைப் பகுதிகளுக்குச் சுற்றுலா செல்பவர்கள் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் ஞெகிழிப் பொருட்களால் கானுயிர்கள் (Wild Animals) பாதிக்கப்படுகின்றன.

கடற்கரையோரங்களில் மக்களால் தூக்கி வீசப்படும் ஞெகிழிப் பொருட்களால் கடல் வாழ் உயிரினங்களான கடல் பறவைகள், கடல்நீர் நாய்கள் (Sea otters) கடற்பன்றிகள் (Porpoires) கடல் ஆமைகள், டால்பின்கள் ஆகியன இறந்துவிடுகின்றன அல்லது முடமாக்கப்படுகின்றன என்று கடல்வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஞெகிழிப் பைகளைத் தின்ற யானைகள், மாடுகள், ஆடுகள் போன்றவை இறந்துவிட்டன. அவற்றின் வயிற்றை அறுத்துப் பார்த்து ஆராய்ந்தபோது கிலோ கணக்கில் ஞெகிழிப் பைகள் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.

ஞெகிழிப் பொருட்களின் கழிவுகளால் மனிதர்களுக்கு தோல் நோயிலிருந்து புற்றுநோய்வரை பல்வேறு உடல் நலக் கேடுகள் ஏற்படுகின்றன. சிலருக்கு ஞெகிழிப் பொருட்களைத் தொட்டாலும், பயன்படுத்தினாலும் ஒவ்வாமை ஏற்படுகிறது. ஞெகிழிப் பொருட்களைப் பயன்படுத்துவதால் குழந்தைப் பிறப்பு பாதிப்புகள், மரபுத் தன்மையை உருவாக்கும் உயிரவில் மாற்றங்கள் ஏற்படுதல், ஆண்மை இழப்பு ஏற்படுதல், மூச்சுக் குழாயைத் தாக்குதல், குடல்புண், செரிமானமின்மை, நரம்புத் தளர்ச்சி, கண்களில் எரிச்சல், இரத்தம், சிறுநீரகம் மற்றும் உடலின் எதிர்ப்பு ஆற்றலைக் குலைத்தல் போன்ற கேடுகளை ஏற்படுத்துகின்றது.

இந்தியாவில் 1970-களில் அந்நியச் செலவாணியில் முப்பது விழுக்காடு சணல் தொழில் உற்பத்தியிலிருந்து கிடைத்து வந்தது. இன்றைய நிலையில் அது ஒரு விழுக்காடாக குறைந்துவிட்டது. சொல்லப்போனால் சணல் தொழில் ஒழிக்கப்பட்டுவிட்டது.

சுற்றுச் சுழலுக்கு பாதிப்பில்லாத நமது மரபு ரீதியான தொழிலான மரப்பொருட்கள் தயாரிப்பு நலிந்து விட்டது.
இந்தியாவின் மக்கள் தொகையையும், பரந்த சந்தையையும் பயன்படுத்தி, கொள்ளை லாபம் ஈட்டுவதற்காக பல பன்னாட்டு நிறுவனங்கள் ஞெகிழிப் பொருட்கள் உற்பத்தியிலும், வணிகத்திலும் ஈடுபட்டுள்ளன. இந்தியாவில் ரிலையன்ஸ் (Reliance) நிறுவனம் ஞெகிழிப் பொருட்கள் உற்பத்தியிலும், விற்பனையிலும் முதலிடம் வகிக்கிறது.

இந்தியாவில் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுவரும் தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளின் காரணமாக வேதித் தொழிலகங்களின் உற்பத்திப் பொருட்களின் மீதான சுங்கவரி 130 விழுக்காட்டிலிருந்து 30 விழுக்காடாகக் குறைக்கப்பட்டது. இதனால் குறைந்த விலையில் ஞெகிழிப் பொருட்களை உற்பத்தி செய்து, மக்களிடம் அதிக நுகர்வை ஏற்படுத்தி கொள்ளை லாபம் ஈட்டி வருகின்றன.

ஞெகிழிப் பொருட்களை, கழிவுகளை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்

•ஞெகிழிப் பைகளுக்கு மாற்றாக சணல், உலர்ந்த இலைகள், தாள் பைகள், கண்ணாடி, துணிப்பைகள் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

•உணவுப் பொருட்களை ஞெகிழிப் பைகள், அடைப்பான்களில் அடைத்துக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

•மேலை நாடுகளிலிருந்து வளரும் நாடுகளுக்கு நச்சுக் கழிவுகளை இறக்குமதி செய்யத் தடை விதிக்கும் ஒப்பந்தம் ‘பேசல் ஒப்பந்தம்’ ஆகும். அந்த ஒப்பந்தத்தை மீறி நச்சுத் தன்மையுள்ள ஞெகிழிக் கழிவுகள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. நச்சுக் கழிவுகளின் இறக்குமதியைத் தடுப்பதற்குத் தேவையான சட்ட திட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்.

•ஞெகிழித் தொழிற்சாலைகள் ஏற்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும்.

•தேநீர், குளம்பிக் கடைகளில் ஞெகிழிக் குவளைகளுக்கு மாற்றாக வட மாநிலங்களில் புழக்கத்தில் உள்ள மண் குவளைகளைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

•ஞெகிழிப் பொருட்களின் தயாரிப்புகளைக் குறைத்திட வேண்டும்.

•கடைகளுக்குச் செல்லும்போது துணிப்பைகள் எடுத்துச் செல்ல வேண்டும்.

•ஞெகிழிப் பொருட்களின் கேடுகள் குறித்து, அரசு மக்களிடம் தீவிரமான பரப்புரை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

ஞெகிழிப் பைகளின் கேடுகளையும், சுற்றுச்சுழல் பாதிப்புகளையும் உணர்ந்த இமாச்சலப் பிரதேச மாநில அரசு சிம்லா நகரிரில் ஞெகிழிப் பைகள் உபயோகப்படுத்துவதற்கு தடைவிதித்துள்ளது. மேலும் கோவா, ஜம்மு காஸ்மீர், தமிழ் நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் தடைவிதிப்பு இருப்பினும் தீவிரமாக அமுல்படுத்தப்படுவதில்லை.

நாம் இன்று ஞெகிழிப் பொருட்களுக்குக் கொடுக்கும் விலை அதன் உற்பத்திக்கு மட்டுமே. ஆனால், அதனால் சுற்றுச்சுழலில் ஏற்படும் கடுமையான விளைவுகளுக்கான செலவை நாம் அதில் சேர்ப்பதில்லை. பாதிப்புகளையும், கேடுகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் ஞெகிழிப் பொருட்களின் பயன்பாடு குறையும்.

இரண்டாவது உலகப்போரின்போது அதிக குண்டுகள் உண்டாக்கிய விளைவுகளைவிட ஞெகிழி இன்று அதிக அளவு பாதிப்புகளை உண்டாக்கியுள்ளது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.

இருபதாம் நூற்றாண்டில் அறுபது லட்சம் இராசாயனப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றில், மிகவும் ஆபத்தான இரசாயனம் ஞெகிழி என இன்று அறிவியல் உலகம் தெரிந்துள்ளது. அச்சமடைந்து தப்பிக்கவும் வழி தேடுகிறது.

ஞெகிழியின் ஆதிக்கத்திலிருந்து விடுபடவும், சுற்றுச் சுழலைப் பாதுகாக்கவும் மனித குலம் வாழவும் பாடுபடுவோம்.