இரு சக்கர வாகன ஓட்டிகளில் பெரும்பாலோர் முகமூடி அணிந்தோ அல்லது கைக்குட்டைகளால் மூக்கை இறுக பொத்திக் கொண்டோ பயணம் செய்வதை தமிழகத்தின் பெரும்பாலான நகர்ப்புறங்களில் மிக இயல்பாகக் காண முடிகிறது. நம்மைச் சுற்றிலும் வேகமாக அதிகரித்துக் கொண்டிருக்கும் புகை மாசு, சுற்றுச்சூழலுக்கு மட்டுமன்றி, மனித வாழ்வியலின் இருப்பிற்கே உலை வைத்து விடுமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. மாசுபாடற்ற தூய்மையான காற்றை சுவாசிக்க முடியாமல், நகர்ப்புறவாசிகள் படுகின்ற பாடு சொல்லி முடிவதில்லை. இதனால்தான் தொடர்ந்து சில நாட்கள் விடுமுறை கிடைத்துவிட்டால், குடும்பத்துடன் சிலர் மலைப்பகுதிகளுக்கோ அல்லது கிராமப்புறங்களுக்கோ படையெடுத்து சென்று விடுகின்றனர். தற்போதைய நகர்ப்புற வாழ்வியல், சூழல் சீர்கேட்டிற்கு பொதுமக்களை விரைந்து அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது. இந்தியக் கிராமங்களில் அடுப்பெரித்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஏழைத் தாய்மார்களை, ஆஸ்துமா உள்ளிட்ட நுரையீரல் தொடர்பான நோய்கள் தாக்குவதால், அதிலிருந்து மீட்டெடுக்க சமையல் எரிவாயுத் திட்டங்களை இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் பரவலாக அறிமுகப்படுத்தி புரட்சி செய்து கொண்டிருக்கும் நிலையில், வாகன மற்றும் தொழிற்சாலை புகை மாசு காரணமாக, தமிழக நகர்ப்புற மக்களின் கவலை நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.

வான்வெளியிலிருந்து புறப்பட்டு பூமியை வந்தடையும் எண்ணற்ற நுண் துகள்களோடு, மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கைத் தூசுகளும், பல்வேறு வேதிப்பொருட்களால் ஆன புகைக் கரிமங்களும் மனிதர்களை மட்டுமன்றி, இம்மண்ணில் வாழும் எண்ணற்ற உயிர்களையும் பதம் பார்த்துக் கொண்டிருக்கிறது. இதனால் தான் கடந்த 2010ஆம் ஆண்டு டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் நடைபெற்ற பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் இதற்குரிய உறுதிமொழியை உறுப்பு நாடுகள் அனைத்தும் எடுத்துக் கொண்டன. 194 நாடுகள் கலந்து கொண்ட இம்மாநாட்டில் இந்தியா கரிம புகை மாசு வெளியேற்றத்தை 2020ஆம் ஆண்டிற்குள் 20லிருந்து 25 விழுக்காடு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அய்.நா.விடம் திட்ட அறிக்கையை அளித்தது. அதே போன்று அமெரிக்கா 17 விழுக்காடும், ஐரோப்பிய ஒன்றியம் 20 விழுக்காடும் குறைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அறிக்கை அளித்திருந்தன. ஆனாலும் நம்மைச் சுற்றி தொடர்ந்து புகை மாசு அதிகரிப்பதற்கான சூழல்களே மிகுந்து காணப்படுகின்றன.

புவியின் மேற்பரப்பில் உள்ள வளிமண்டலமே இந்த மண்ணில் உயிர்கள் வாழ்வதற்கேற்ற சூழலை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. ஆக்சிஜன் என்றழைக்கப்படும் உயிர்வளி இங்குதான் நிறைந்துள்ளது. சூரியனிலிருந்து வரும் அதிக வெப்பத்தை குளிர்விப்பதுடன், அவற்றிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சையும் தனக்குள்ளே வாங்கிக் கொண்டு புவியின் உயிர்ச்சூழலை தொடர்ந்து பாதுகாத்து வருகிறது. பல்வேறு வாயுக்களின் அடர்த்தியாகத் திகழும் இந்தப் பரப்பைத்தான் 'பசுங்குடில்' என்றழைக்கிறோம். வரைமுறையின்றி மனிதர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழல் மாசுபாடுகளால், உயிர்களைப் பாதுகாக்கும் பசுங்குடிலில் தற்போது சேதாரம் ஏற்பட்டுள்ளது. முன்னெப்போதையும் விட பூமியில் வெப்ப அதிகரிப்பிற்கும், அதன் தொடர்ச்சியான பேரிடர்களுக்கும் முக்கியக் காரணமாய்த் திகழ்வது பசுங்குடிலில் ஏற்பட்டுள்ள வாயுக்களின் அதிகரிப்பே. இதனைக் குறைப்பற்குரிய ஆய்வுகளை மேற்கொள்ளும் அதே வேளையில், தற்போதுள்ள நிலையிலேயே அதனைப் பேணுவதற்கும் உலக நாடுகள் அனைத்தும் முன் வர வேண்டும். இதில் இந்தியாவிற்கு கூடுதல் பொறுப்புண்டு. சீனாவிற்கு அடுத்தபடியாக மிகப் பெரிய மக்கள் சக்தியைக் கொண்டுள்ள நாடு இந்தியா. தன் குடிமக்களின் நல வாழ்வில் தனக்கிருக்கும் அக்கறையை வெளிப்படுத்தியாக வேண்டிய நிலையில் தற்போது இந்திய நாடு உள்ளது.

பொதுவாக வாகனங்கள் வெளியிடும் புகையைச் சுவாசிக்கும் ஒருவர், இருபது சிகரெட்டுகளைப் புகைப்பதற்குச் சமமாகிறார். ஹைட்ரோகார்பன்கள், கார்பன் மோனாக்சைட், கார்பன் டையாக்சைட், ஈயம், பென்சீன் போன்றவற்றை அளவுக்கு அதிகமாகச் சுவாசிப்பதால் பல்வேறு நுரையீரல் கோளாறுகளும், சுவாசச் சிக்கல்களும் ஏற்படுவதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை செய்கின்றனர். குருதிப் புற்றுநோய், நரம்புத் தளர்ச்சி, செல்களில் சிதைவு, இதயம் தொடர்பான நோய்கள், உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் நோய்கள் என பல்வேறு விளைவுகளுக்கும் ஆட்பட வேண்டியுள்ளது. புதை வடிவ எரிபொருட்களில் மிக ஆபத்தானது டீசல். இதனை எரிப்பதால் வெளியாகும் புகையில் உயிர்க்காற்றை நாசம் செய்யும் கார்பன் மோனாக்சைட் அதிகளவு உள்ளது. தற்போது சென்னையில் மட்டும் 11 இலட்சம் மோட்டார் வாகனங்கள் இயங்குகின்றன. அப்படியென்றால், வெளியாகும் கார்பனின் அளவைக் கணக்கிட்டுப் பாருங்கள். இப்போது புரியும் சென்னையில் ஏன் வெப்பம் அனலாகத் தகிக்கிறதென்று?

அதேபோன்று கடந்த 1951ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்த மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை 30 இலட்சம். ஆனால் கடந்த 2007ஆம் ஆண்டு 12 கோடியாக உயர்ந்திருக்கிறது. பொருளாதார வளர்ச்சி வேகத்தோடு கணக்கிட்டுப் பார்த்தால், தற்போது 20 கோடிக்கும் மேலாக அதிகரித்திருக்கக்கூடும். ஒட்டு மொத்த இந்தியாவோடு ஒப்பிட்டுப் பார்த்தால் மும்பை, சென்னையில் மட்டும் 32 விழுக்காடு வாகனங்கள் ஒடுகின்றன. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு சூலை மாதம் வரை 1.26 கோடி வாகனங்கள் ஒடிக் கொண்டிருப்பதாக மோட்டார் வாகனங்கள் பற்றிய புள்ளி விபரம் ஒன்று கூறுகிறது. இது இந்திய அளவில் இரண்டாவது இடம். தமிழகத்தில் ஓடும் இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை மட்டும் 24.34 இலட்சம். இது இந்திய அளவில் முதலிடம். (நன்றி தினகரன் 19.10.2010). சென்னையில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. அதற்கு ஈடாக வாகனத்திலிருந்து வெளியேற்றப்படும் புகையின் அளவும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமுள்ளது.

சென்னைப் பெருநகரத்திற்குள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவற்றை நிறுத்திப் பராமரிப்பதற்கான இடம் குறித்த மாநகராட்சியின் 'தேடல்' கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயர்நீதிமன்றத்தால் கண்டிப்பிற்கு ஆளானது. சூழலைப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் பூங்காவை அப்படியே மாற்றி வாகன நிறுத்துமிடமாக உருவாக்குவதற்கு பெரும் முயற்சி செய்த சென்னை மாநகராட்சியை உயர்நீதிமன்றம் கடுமையாய்க் கண்டித்துள்ளது. சுற்றுச்சூழலில் அக்கறையே இல்லாது, தனது வருமானத்தை மட்டுமே கணக்கில் கொண்டு இயங்கும் சென்னை மாநகராட்சியைப் போன்ற உள்ளாட்சி அமைப்புகள் இந்திய சனநாயக மாண்பின் அழகிற்கு சிறப்பான சான்றாகும். வணிகத்தையும், அதனால் பெறுகின்ற வருமானத்தையும் கணக்கிற் கொண்டு அரசு அமைப்புகளே சூழலுக்கு எதிராக இயங்குவது உலகில் வேறு எங்குமே காணாத ஒன்றாகும். பசுமைக் கட்டடங்கள், பசுமைக் கட்சிகள், பசுமை அமைப்புகள், பசுமைத் தொழிற்சாலைகள் என உலகெங்கும் பசுமை குறித்தும், சூழல் மேம்பாடு குறித்தும் விரிவாக ஆலோசனை செய்து, செயலில் இறங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இந்தியா அதற்கு எதிர் திசையில் பயணம் செய்வது, உலகின் மிகப்பெரிய சனநாயக நாட்டிற்கு அழகாகுமா?

தொழிற்சாலைகள் வெளியேற்றும் புகை மற்றும கழிவு நீரால் இந்தியா முழுவதும் பாதிக்கப்பட்ட 88 நகரங்களில் வேலூர் மாவட்டம் 8ஆம் இடத்திலும், கடலூர், மணலி, கோவை, திருப்பூர், மேட்டூர், ஈரோடு ஆகியவை முறையே 16, 20, 34, 51, 56, 78ஆவது இடங்களில் உள்ளன. இது நடுவண் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் தயாரிக்கப்பட்ட புள்ளி விபரமாகும். தொழிற்சாலையிலிருந்து வெளியாகும் மாசினை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட இப்புள்ளிவிபரத்திலேயே தமிழகத்தின் ஏழு மாவட்டங்கள் இடம் பெறுகின்றன எனும்போது, வாகனங்கள் வெளியேற்றுகின்ற புகை மாசுபாடுகளால் பாதிக்கப்பட்ட தமிழக நகரங்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாகக்கூடும். கடுமையான நச்சுப் புகை மாசுபாட்டின் காரணமாகத்தான் போபால் சம்பவத்தில் ஆயிரக்கணக்கான உயிர்ப்பலியை எதிர்கொள்ள நேரிட்டது. அதேபோன்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறிய நச்சுப்புகையாலும் பல நூற்றுக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். மேலும் கடலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலுள்ள தொழிற்பேட்டைகளில் இது போன்ற நச்சு வாயுக்களை வெளியேற்றும் ஆபத்தான தொழிற்சாலைகள் தற்போதும் இயங்கிக் கொண்டுதானிருக்கின்றன.

1952ம் ஆண்டு இலண்டன் நகரில் ஏற்பட்ட புகை மண்டலம் காரணமாக 6 நாட்களில் 4000 முதல் 8000 பேர் வரை இறந்துள்ளனர். பழைய சோவியத் யூனியனில் 1979ம் ஆண்டு உயிர் வேதியல் சோதனைக் கூடத்தில் ஏற்பட்ட வாயுக் கசிவினால் பல நூறு மக்கள் இறந்தனர். இதுபோன்று உலகம் முழுவதும் தொழிற்சாலைகள் வெளியேற்றும் புகையால் பல்லாயிரக்கணக்கானோர் இறந்து கொண்டிருக்கின்றனர் அல்லது தொடர்ந்து பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதன் விளைவாக உலகின் பல்வேறு இடங்களில் அமில மழை பொழிவதற்கான சூழல் உருவாகிக் கொண்டிருக்கிறது. தொல்லுயிர் எரிபொருட்களான நிலக்கரி, போன்றவை எரிதல், ஊர்திகளினின்று வெளிப்படும் கழிவுப்புகை, காடுகள் மற்றும் புல்வெளிகள் எரிக்கப்படுவதால் ஏற்படும் புகை, வேதி தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் வாயுக்கள் போன்றவற்றால் அமில மழை பொழிவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. இதனால் மண்ணின் அமிலத்தன்மை அதிகரிக்கிறது. தாவரங்கள் உயிர்வாழ முடிவதில்லை, மனிதர்களையும், நீர் வாழினங்களையும் அச்சுறுத்துகின்றது. காடுகள், பயிர்களை அழிக்கிறது, விவசாய உற்பத்தித் திறன் குறைகிறது, கட்டிடங்கள், நினைவு சின்னங்கள், சிலைகள், மேம்பாலங்கள், வேலிகள் மற்றும் இரயில் தண்டவாளங்கள் அரிக்கப்படுகின்றன. அமில மழை பொழிவதற்கான அனைத்துக் காரணிகளும் தமிழகம் உள்ளிட்ட இந்தியாவில் தடையின்றித் தென்படுகின்றன என்பதுதான் வேதனைக்குரியது.

கடந்த ஏப்ரல் மாதம் திருவொற்றியூர் கத்திவாக்கத்தில் இயங்கி வந்த உரம் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் வெளியேறிய புகையால் 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டது அண்மைச் சான்று. இதனால், அப்பகுதி மக்களுக்கு மூச்சு திணறல், கண் எரிச்சல், மயக்கம் ஏற்பட்டது. சுவாச கோளாறு, ஆஸ்துமா போன்ற நோய்களால் தொடர்ந்து மக்கள் பாதிக்கப்பட்டனர். குழந்தைகளுக்கு தோல் நோய்கள் ஏற்படுகிறது. சுற்றுப்புற சுகாதாரமும் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது போன்ற பல்வேறு தொழிற்சாலைகளும், பேட்டரி உள்ளிட்ட வேதிப் பொருட்கள் சார்ந்த தொழிற்சாலைகளும் தமிழகமெங்கும் நிறைந்து காணப்படுகின்றன. அவ்வப்போது இத்தொழிற்கூடங்களிலிருந்து வெளியாகும் புகையால் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதும், அதனால் ஆங்காங்கே போராட்டம் நடைபெறுவதும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது.

மாசுக் காற்றால் வருடத்திற்கு 2.4 மில்லியன் மக்கள் இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் 1.5 மில்லியன் மக்கள் தூசுகளால் இறந்துள்ளனர். இது உலகில் வாகன விபத்திற்கு அடுத்த இடத்தில் உள்ளது. உலகம் முழுவதும் நிகழ்ந்து வரும் தொழில் நுட்பப் புரட்சி வருமாண்டுகளில் இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கச் செய்யும். இதற்கு உலக நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து திட்டமிடுவது மிகவும் அவசியம். இந்தியா போன்ற வளரும் நாடுகள் காற்று மாசு விசயத்தில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். அதற்குரிய செயல்பாடுகளை இடையறாது செய்வதுடன், அரசு, தனியார், பொதுத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து பசுமைச் சூழலுக்கு உரிய நடவடிக்கைகளைத் தொடங்குவது காலத்தின் கட்டாயம்.

காற்றில் உருவாக்கப்படும் மாசுக்கேட்டை எவ்வாறு கணக்கிடுவது?

பலவிதமான இடங்களில் இருந்து வரும் மாசுக்கள் அனைத்தும் சேர்ந்து காற்றில் மாசின் அளவு கூடுகிறது. எடுத்துக்காட்டாக, கரி அடுப்பில் இருந்து வரும் தூசி, வாகனங்களில் இருந்து வரும் புகை, தொழிற்சாலைகளில் இருந்து வரும் புகை, வீட்டில் இருந்து வரும் தூசி இவை அனைத்தும் சேர்ந்துதான் மொத்த மாசு அதிகரிக்கிறது. இந்த வகை மாசு தோன்றுமிடம் (Pollution Source) ஒவ்வொன்றிலிருந்தும் எவ்வளவு மாசு ஓரிடத்தில் சேர்கிறது என்பதை நாம் கணிக்கலாம்.

அதைத்தவிர, எவ்வளவு மாசு இருக்கிறது என்பதையும் அளவிடலாம். இப்படி அளவிட்ட மாசை நன்கு ஆராய்ந்தால், அது எங்கிருந்து வந்திருக்கிறது என்பதையும் கண்டு பிடிக்கலாம். அதாவது, ”இந்த மாசில் சுமார் 25% வாகனங்களில் இருந்தும், 30% புழுதியில் இருந்தும், 20% தொழிற்சாலைகளில் இருந்தும் வருகின்றன. மீதி எங்கிருந்து என்று அறுதியிட்டு சொல்ல முடியவில்லை” என்ற அளவில் கண்டுபிடிக்கலாம். இது எப்படி என்பதை சில உதாரணங்களின் மூலம் பார்க்கலாம்.

எடுத்துக்காட்டு 1: ஓர் இடத்தில் தொழிற்சாலையில் இருந்து வரும் தூசியில் 25% சோடியமும், 50% இரும்பும் , மீதி 25% மற்ற பொருள்களும் இருக்கலாம். தெருவில் இருக்கும் புழுதியில் 25% அலுமினியமும், 10% இரும்பும் (சிலிக்கன் போல மற்றவை மீதி 65% என்றும்) இருக்கலாம். இங்கு இதர தனிமங்கள் என்பதில் சோடியம், அலுமினியம், இரும்பு ஆகியவை இல்லாமல் மற்ற பொருள்கள் என்று புரிந்து கொள்வோம்.

இப்போது, நாம் அந்த பகுதியில் சென்று அங்குள்ள காற்றில் இருக்கும் தூசிகளை சேகரிப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். ஒரு கிராம் தூசி சேர்ந்ததும் அதை ஆராய்ச்சிக்கு அனுப்பி, அதில் இருக்கும் சோடியம், அலுமினியம் மற்றும் இரும்பின் அளவைக் கண்டுபிடித்து விடுகிறோம். இதில் ஒரு கிராமில், அலுமினியம் 0.25 கிராம், இரும்பு 0.1 கிராம், இதர பொருள்கள் 0.65 கிராம் என்று வந்தால், தூசி முழுவதும் புழுதிதான் என்று சொல்ல முடியும். ஒருவேளை தொழிற்சாலை அன்று வேலை செய்யாமல் இருக்கலாம். அல்லது தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் புகையில் தூசிகள் வடிகட்டப்பட்டு இருக்கலாம். மொத்தத்தில், தொழிற்சாலையால் காற்றில் தூசிகள் சேர்வதில்லை என்று சொல்ல முடியும்.

இன்னொரு நாள் ஒரு கிராம் தூசியில் ஆராய்ச்சி செய்தால், அதில் 0.5 கிராம் இரும்பு, 0.25 கிராம் சோடியம், இதர பொருள்கள் 0.25 கிராம் என்று வந்தால், அங்கு தூசி முழுவதும் தொழிற்சாலையில் இருந்துதான் வந்துள்ளது என்று சொல்லலாம். ஒருவேளை போக்குவரத்து குறைவாக இருப்பதால், காற்று வேகமாக அடிக்காததால், புழுதியானது காற்றில் கலக்காமல் இருக்கலாம். மொத்தத்தில் தொழிற்சாலைதான் காற்றில் மாசு சேர்க்கிறது என்று சொல்லலாம்.

ஒரு பேச்சுக்கு, 0.4 கிராம் தொழிற்சாலை தூசியும், 0.6 கிராம் புழுதியும் சேர்ந்து நமது Sample வருவதாக வைத்துக்கொள்வோம். அப்பொழுது, சோடியத்தின் அளவு 0.4 * 0.25 = 0.1 கிராம் ஆகும். இரும்பின் அள்வு: தொழிற்சாலை தூசியில் இருந்து, 0.4 * 0.5 = 0.2 கிராம். புழுதியில் இருந்து, 0.6 * 0.1 = 0.06 கிராம். மொத்தத்தில், 0.2 + 0.06 = 0.26 கிராம். அலுமினியத்தின் அளவு: 0.6 * 0.25 = 0.15 கிராம். இதர பொருள்கள்: தொழிற்சாலையில் இருந்து, 0.4 * 0.25 = 0.2கிராம். புழுதியில் இருந்து, 0.6 * 0.65 = 0.39 கிராம், மொத்தம் 0.2 + 0.39 = 0.59 கிராம்.

ஆக மொத்தம் தூசியில், 0.1 கிராம் சோடியம், 0. 26 கிராம் இரும்பு, 015 கிராம் அலுமினியம், இதர பொருள்கள் 0.59 கிராம் என்று இருக்கும். நமக்கு இந்த தூசியில் தொழிற்சாலையின் பங்களிப்பு எவ்வளவு, புழுதியின் பங்களிப்பு எவ்வளவு என்று கணிக்க முடியுமா? முடியும். உதாரணமாக, அலுமினியம், தொழிற்சாலை தூசியில் இருந்து வராது. எனவே, 0.15 கிராம் அலுமினியம், புழுதியில் இருந்துதான் வரும். ஒரு கிராம் புழுதியில் இருந்து 0.25 கிராம் அலுமினியம் வரும். எனவே, 0.15 கிராம் அலுமினியம் இருக்கிறது என்றால், 0.6 கிராம் புழுதியில் இருந்துதான் வந்திருக்க வேண்டும்.

அதைப்போலவே, சோடியம், தொழிற்சாலை தூசியில் இருந்துதான் வரும். புழுதியில் இருந்து வர முடியாது. அதையும் கணக்கிட்டால், 0.4 கிராம் தொழிற்சாலை தூசியாக இருக்கும் என்று கணிக்கலாம். இந்த எடுத்துக்காட்டில் சுலபமாக சொன்னாலும், பல விதமான தனிமங்களை ஆராய்வதன் மூலம், ஓரளவு சரியாக எந்த இடத்திலிருந்து தூசி எவ்வளவு வருகின்றது என்பதை கணிக்க முடியும். இன்னொருநாள் ஆராய்ச்சி செய்தால் ஒரு கிராம் தூசியில் சோடியம் 0.5 கிராம் வருகிறது. இரும்பு சுத்தமாக கிடையாது. அலுமினியமும் இல்லை. இப்பொழுது என்ன முடிவுக்கு வர முடியும்? ஒன்று நாம் செய்த ஆராய்ச்சி தவறு. சோடியம் இருக்கும் பொழுது இரும்பும் இருக்க வேண்டும். இரும்பு கணக்கிடும்பொழுது, ஆராய்ச்சியில் தவறு நடந்து இப்படி வந்திருக்கலாம். அல்லது சோடியம் கணக்கில் தவறு இருக்கலாம். இரண்டாவது, நாம் நினைத்தது, இந்த பகுதியில் தொழிற்சாலை மற்றும் புழுதி மட்டுமே தூசிக்கு காரணம் என்று. ஆனால், வேறு வகை தூசிகளும் இந்த பகுதியில் சேர்ந்து இருக்கலாம். அந்த தூசிகளில் சோடியம் இருந்து, இரும்பு இல்லாவிட்டால், ஆராய்ச்சி சரியாக இருக்கிறது, நம் நினைப்புதான் தவறு, நாம் மறுபடி அந்த பகுதிக்கு சென்று, வேறு என்ன வகையில் தூசிகள் சேரலாம் என்று அறிய வேண்டும்.

மேற்கண்ட கணக்கிற்கு Chemical Mass Balance அல்லது சுருக்கமாக சி.எம்.பி. (CMB) என்று பெயர். இது reverse calculation மூலம் ஒவ்வொரு மாசு மூலமும் (pollution source) எவ்வளவு பங்களிக்கிறது என கணக்கிட உதவும். (நன்றி: http://fuelcellintamil.blogspot.com/2008/06/7.html)