விக்ரம் பிரபு லயோலா யூனிவர்சிட்டி ஹாஸ்ப்பிட்டலின் தலைமை நரம்பியல் மருத்துவர். இவர் நோயாளியின் மண்டையைத் திறந்து மூளையில் உள்ள கட்டிகளை வெட்டி எடுக்க முயலும் முன்பு அவர்களை மயக்க நிலையிருந்து எழுப்பி பேசுகிறார். கட்டியின் பக்கத்தில் இருக்கும் மூளைத் திசுக்களை தொட்டபடி பேச்சுக் கொடுப்பார். தொடும்போது அதன் காரணமாக அவர்களது பேச்சில் அல்லது உடல் அங்க அசைவுகளில் ஏதேனும் பங்கம் ஏற்பட்டால் அந்த இடத்தை சிதைக்காமல் கட்டியை அறுக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்கிறார். இப்படி நோயளரின் மூளையை மேப் செய்து சாதக பாதகங்களை தீர்மானித்துக்கொண்ட பிறகு கட்டியில் கத்தியை வைக்கிறார். கேட்பதற்கே வியப்பாக இருக்கிறது அல்லவா!

உடலின் எல்லா பாகங்களின் வலி முதலான உணர்வுகளை அறியும் மூளைக்கு தனது வலியை அறிய முடியாது என்பதால் பிரபு இப்படி துணிச்சலாக  காரியம் ஆற்றுகிறார்.

மூளை ஆப்பரேஷன் நடுவில் பேச்சுக் கொடுக்கும்போது நோயாளிகள் தெளிவாகவே பேசுகிறார்கள். வீடு, வேலை, பொழுதுபோக்கு, அரசியல் என்று சகல விஷயங்களையும் அவர்கள் சர்வ சாதாரணமாகப் பேசுகிறார்கள். அவர்களிடம் பேசி விபரீதம் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிந்து கொண்டபிறகே கத்தியை வீசுகிறார்.

இந்த சாகசமான வேலைக்கு மயக்க மருந்தாளரின் உதவி மிகவும் அவசியம். பூசணிக்காயில் உண்டியல் ஓட்டை போடுவது போல மண்டையை  வெட்டித் திறந்து மூளையை அடையும் வரை ஒருவருக்கு மயக்க மருந்து தேவை. அதன் பிறகு மூளையை வெட்டும்போது மயக்கம் அவசியமில்லை!

-     முனைவர் .மணி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It