webmaker coming soon

கல்வித் திருவிழா, உணவுத் திருவிழா என்று திருவிழாக்கள் கொடி கட்டிப் பறக்கும் காலம் இது!  அந்தத் திருவிழாக்களோடு பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் இன்டர்நெட்டிற்கும் விழா கொண்டாடினால் எப்படி இருக்கும்?  

நாம் எல்லாம் இணையத்தில் உலாவப் பயன்படுத்தி வரும் பயர்பாக்ஸ் உலாவி(அதாங்க பிரெளசர்)யைப் பயன்படுத்துகிறோம் இல்லையா?  அந்த பயர்பாக்சை நமக்கு இலவசமாகக் கொடுத்துக் கொண்டிருக்கும் நிறுவனம் தான் மொசில்லா பவுண்டேஷன்.  'ஓப்பன் வெப்' எனப்படும் சுதந்திர இணைய வெளிக்குக் குரல் கொடுத்து வரும் நிறுவனம் இது!  

இணையம் எனப்படும் இன்டர்நெட் வந்த பிறகு தான், வெகுமக்களின் குரல் கொஞ்சமாவது வெளியே தெரிகிறது.  முன்பெல்லாம் பத்திரிக்கைகளில் எழுதுவோர் தான் எழுத்தாளர்கள், அவர்களுடைய எழுத்துகள் தான் மக்களின் கருத்துகள்!  இப்போதெல்லாம் அப்படியில்லை!  எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும் ஒரு கணினியும் இணையமும் இருந்தால் போதும்!  பிளாக், ஆடியோ, வீடியோ என்று அசத்தி விடுகிறார்கள் நெட்டிசன்கள்.  நம்மூர்க்காரர்கள் இங்கிருந்தே வெளிநாட்டு மொழி படிக்க வேண்டுமானாலும் சரி, வெளிநாட்டில் இருக்கும் நம்மவர்கள் அங்கிருந்தே தமிழ் படிக்க வேண்டுமானாலும் சரி!  அத்தனையும் சாத்தியம் - இணையம் வந்ததோ வந்தது – ‘அது போன வாரம், இது இந்த வாரம்’ என்றெல்லாம் தப்பிக்க முடியாது.  ஆதாரத்தோடு, பிரதமர் தொடங்கி உள்ளூர் கவுன்சிலர் வரை - அத்தனை பேரையும் லாடு கட்டி விடுகிறார்கள் இணையம் பயன்படுத்தும் இளைஞர்கள்.  

இத்தனை இருந்தும் இணையம் என்னவோ இளைஞர்களின் கைகளில் மட்டும் தான் இருந்து வருகிறது.  'இன்டர்நெட் பத்தி நமக்கு என்னப்பா தெரியும்?' என்பதே வயதானவர்களின் அங்கலாய்ப்பாக இருந்து வருகிறது.  கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் - எல்லாவற்றையுமே இலவசமாகக் கொடுக்கும் இணையத்தை, நாமும் பிறருக்கு இலவசமாகச் சொல்லிக் கொடுப்பது தானே முறை!  அப்படி ஒரு தளத்தை இளைஞர்களுக்கு (மட்டுமல்ல இணையம் தெரிந்த எல்லோருக்குமே) மொசில்லா ஏற்படுத்திக் கொடுக்கும் திருவிழா தான் ‘வெப் மேக்கர் பார்ட்டி’!

பிறந்த நாள் பார்ட்டி, வேலை கிடைத்ததற்கு பார்ட்டி, திருமணம் ஆனதற்குப் பார்ட்டி என்று மட்டுமே பார்த்துப் பழகியிருக்கும் நமக்கு இந்த பார்ட்டி கொஞ்சம் புதுசு தான்!    ஆனாலும் ஈசி தான்!  இந்த பார்ட்டியை யார் வேண்டுமானாலும் நடத்தலாம்.  இரண்டு பேர் இருந்தால் கூடப் போதும்.  இணையம் பற்றித் தெரிந்தவர், தெரியாதவரைச் சேர்த்துக் கொண்டு இணையத்தைச் சொல்லிக் கொடுக்க வேண்டும் அவ்வளவு தான்!  இதற்காகத் தனிப் பயிற்சியறைகள், கல்லூரிகள், தேவை என்பதெல்லாம் இல்லை.  உங்கள் வீட்டில் இருந்தபடியே கூட நீங்கள் சொல்லிக் கொடுக்கலாம்.  

எத்தனைப் பேருக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்?  என்ன சொல்லிக் கொடுக்க வேண்டும்?  எவ்வளவு மணி நேரம் பார்ட்டியை நடத்த வேண்டும்?  இவை எல்லாவற்றிற்கும் ஒரே பதில் - உங்கள் விருப்பம் போல் என்பது தான்!  'நான் பக்கத்து வீடுகளில் இருக்கும் 40, 50 வயதுப் பெண்களுக்கு ஈமெயில் எப்படி அனுப்புவது என்று சொல்லிக் கொடுக்க ஆசைப்படுகிறேன்', 'என் நண்பர் ஒருவருக்கு கிளவுட் கம்ப்யூட்டிங் பற்றி நிறைய தெரியும், அவரைக் கூப்பிட்டால் கல்லூரி மாணவர்களுக்கு அதைச் சொல்லிக் கொடுக்கலாம்', 'அரசு ஊழியர்களுக்கு எக்செல், பவர்பாயிண்ட் பாடம் நடத்துவது' என்று எல்லாமே உங்கள் விருப்பம் தான்!  

இதில் மொசில்லா பவுண்டேஷனின் பங்கு என்ன?  https://learning.mozilla.org/events தளத்திற்குப் போய் உங்கள் மின்னஞ்சல் முகவரியை வைத்து, கணக்கு ஒன்றைத் தொடங்கிக் கொள்ளுங்கள். திருவிழா என்று சொன்ன பிறகு வண்ணமயமாக இருக்க வேண்டாமா?  அதற்குத் தேவையான பல மென்பொருட்களை இலவசமாகவே மொசில்லா நமக்குத் தருகிறது.  இணையத்தை உருவாக்கும் மென்பொருட்களை எளிய விளையாட்டுகள் மூலம், பிளக் இன்கள் மூலம் மொசில்லா தருகிறது.  

இணையத் தளங்களை ரீமிக்ஸ் செய்ய உதவும் எக்ஸ்ரே காகிள்ஸ், இணையத்தளங்களை ஊடுருவும் ஹேக் தி மீடியா என்று விளையாட்டாகவே இணையத்தைப் படிக்க உதவும் எளிய மென்பொருட்களை இந்தத் தளத்தில் இருந்து எடுத்துக் கொள்ளலாம்.

நீங்கள் என்னென்னவோ சொல்கிறீர்கள். இணையம் என்றாலே எச்டிஎம்எல் தெரிந்திருக்க வேண்டும் என்று சொல்வார்களே!  எங்களைப் போன்ற கத்துக்குட்டிகளுக்கு அது தெரியாதே!  என்று யோசிக்க வேண்டிய தேவையேயில்லை.  எச்டிஎம்எல் மொழியை எளிதாக நமக்குப் பயன்படுத்தும் அளவுக்குத் தெரிந்து கொள்ள வசதியாக 'சீட் ஷீட்' எனப்படும் உதவிப்பக்கத்தை இணைத்திருக்கிறார்கள்.  

'கேட்பதற்கு இதெல்லாம் நன்றாகத் தான் இருக்கிறது.  ஆனால் இது போன்ற நிகழ்ச்சியை நான் இதுவரை நடத்தியதே இல்லை.  நிகழ்ச்சி நடத்த அடிப்படையாக என்னென்ன செய்ய வேண்டும்?  நிகழ்ச்சிக்கு முன் செய்ய வேண்டியவை என்னென்ன?  நிகழ்ச்சியின் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும்?  நிகழ்ச்சி முடிந்த பிறகு என்னென்ன செய்ய வேண்டும்?  வெப் மேக்கர் பார்ட்டியில் கலந்து கொள்வோருக்குச் சான்றிதழ் கொடுக்க வேண்டும் என்றால் டிசைனுக்கு எங்கே போவது?  ஒரு திருவிழா என்றால் போஸ்டர் இல்லாமலா?  அதை எப்படி வடிவமைப்பது?  என்று பல கேள்விகள் வருகின்றனவா?  கவலையே வேண்டாம், இவை எல்லாவற்றிற்கும் வரி விடாமல் மொசில்லாவின் https://learning.mozilla.org/events/resources பக்கத்தில் பதில் சொல்லியிருக்கிறார்கள்.  இது போதாதென்று நிகழ்ச்சியை நடத்துவதில் உதவி தேவை என்றால் தொடர்பு கொள்வதற்கு 'உதவிக்குழு'வின் இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.

இப்படி ஒரு வித்தியாசமான திருவிழாவை நடத்தி இணையச் சமநிலைக்கு விதை போட்டு வருகிறது மொசில்லா.  கூகுள், பேஸ்புக், என்று இணையத்தில் விடாமல் இயங்கும் நம்முடைய இளைஞர்கள் 'வேர் இஸ் த பார்ட்டி' என்று 'வெப் மேக்கர் பார்ட்டி'யை நடத்தத் தொடங்கினால் இணையத்திலும் நாம் முதலிடம் பெறும் நாள் வெகுதொலைவில் இல்லை.  

(கட்டுரை புதிய வாழ்வியல் மலர் ஆகஸ்ட் 1-15 இதழில் வெளியானது)

mages can be taken from : https://www.flickr.com/photos/mozilladrumbeat/sets/72157654235131834/with/19530785813/   

 - முத்துக்குட்டி