வன்னியில் போர் மிக உக்கிரமாக நடந்து கொண்டிருந்த நாட்கள் அவை. தினமும் சாவு. நூற்றுக்கணக்கானவர்கள் காயம். இரத்தம் பெருக்கெடுத்தோடிய நாட்கள். அவலம் பெரும் நாடகமாடியது. மனிதர்கள் செயற்றுப் போனார்கள். செயலற்றுப் போகும்போது எதுவும் வெறும் சடம் என்ற நிலை உருவாகிறது. அப்படித்தான் மனிதர்கள் அப்போது அங்கே இருந்தார்கள். காற்றில் எற்றுண்டு போகும் சருகுகளாக, ஆற்றில் அள்ளுண்டு போகும் துரும்பாக. அங்கே எவரிடமும் கனவுகளில்லை. எதிர்காலம் பற்றிய எந்த எண்ணங்களுமில்லை. நினைவுகள் மங்கிக் கொண்டிருந்தன. கண்ணீர் நிரம்பி, அந்தப் பாரம் தாங்க முடியாமல்; கால்கள் புதைய மணலில் தள்ளாடி நடக்கும் மனிதர்களே அந்தச் சிறிய, ஒடுங்கிய கடற்கரையில் நிறைந்து கிடந்தார்கள். போரில் கிழிபடும் மனிதர்கள். குருதியொழுக ஒழுக கிழிபடும் மனிதர்களைக் காப்பாற்ற எந்தத் தமிழர்களாலும் முடியவில்லை. யுத்தத்தை நிறுத்தவும் முடியவில்லை. அதாவது வன்னிக்கு வெளியே இருந்த மக்களால். அது புலம் பெயர் தமிழர்களாக இருந்தாலும் சரி, தமிழகத்துத் தமிழர்களாலும் சரி எவராலும் எதையும் செய்ய முடியவில்லை. தமிழ் அரசியலாளர்களாலும் இயலவில்லை. மட்டுமல்ல தமிழ் ஊடகங்கள், அமைப்புகள் எதனாலும் அந்த நெருக்கடியில் ஒரு சிறு இடைவெளியைக் கூட ஏற்படுத்த முடியவில்லை. இது ஏன்?

இவ்வளவுக்கும் வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் கட்சி பேதங்களின்றி, குழு பேதங்களின்றி, எல்லாத்தரப்பினரும் ஈழத்தமிழர்களுக்காக தெருவிலிறங்கிப் போராடினார்கள். மக்கள் பெரும் எழுச்சியோடு தங்களின் உணர்வை வெளிப்படுத்தினர். சட்டமன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மத்திய அரசிலும் கவனப்படுத்தப்பட்டது. ஊடகங்கள் எல்லாம் ஈழத்தமிழர்களின் நிலை குறித்த செய்திகளுக்கு முன்னுரிமை அளித்திருந்தன. அதைப்போல புலத்திலும் பெரும் போராட்டங்கள் நடந்தன. சனங்கள் கொட்டும் பனியில், கடுங்குளிரில் எல்லாம் நின்று போராடினார்கள். வன்னிப் போரை நிறுத்துவதற்காக, அங்கே சிக்கியிருந்த மக்களைக் காப்பாற்றுவதற்காக என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்தார்கள். உண்ணாவிரதங்கள், தீக்குளிப்புகள் என்றுகூட பெரும் முயற்சிகள் நடந்தன. வல்லரசு நாடுகளிடம் சில தமிழ்ப் பிரமுகர்கள் தொடர்பு கொண்டு ஏதொவெல்லாம் பேசிப்பார்த்தார்கள். தொலைபேசிகள் இரவு பகலாக வேலை செய்து கொண்டேயிருந்தன. ஆயிரம் வரையான இணையங்கள் பல செய்திகளையும் கோரிக்கைகளையும் வெளிப்படுத்தியபடியிருந்தன. ஆனால், வன்னியில் போரில் சிக்கிக் கிழிபட்டுக் கொண்டிருந்த மக்களை யாராலும் பாதுகாக்க முடியவில்லை. போரையும் நிறுத்த முடியவில்லை. இது ஏன்?

அப்போது நாங்கள் வன்னியிலிருந்தோம். எங்களுக்குத் தெரிந்திருந்தது, எவராலும் போரை நிறுத்த முடியாது என்று. அந்தப் போரின் பின்னாலிருந்த தரப்புகளின் அரசியல் நோக்கங்கள் அந்தளவுக்குப் பலமாக இருந்தன. மட்டுமல்ல, தமிழ் மக்களும் ஊடகங்களும் என்னதான் போராட்டங்களை நடத்தினாலும் அவற்றினால் எந்த விளைவுகளையும் ஏற்படுத்த முடியாது என்பதும் எங்களுக்குத் தெரிந்திருந்தது. காரணம், தமிழர்களின் போராட்ட முறைமையும் ஊடகங்களும் அவற்றின் அணுகுமுறைகளும் மிகப் பலவீனமாக – ஒற்றைப்படைத்தன்மையானவையாக இருந்தன. குறிப்பாக அவற்றில் எப்போதும் பன்மைத்தன்மை, ஜனநாயகம், பக்கஞ்சாராமை என்பவை இருக்கவில்லை. அதாவது அந்த நடவடிக்கைகள் எல்லாவற்றிலும் எப்போதும் ‘ஒரு பக்கம்’ தானிருந்தது.

‘ஒரு பக்கம்’ மட்டும் என்பது பக்கச் சார்புடையது. இன்னொரு பக்கத்தை மறைப்பது. அப்படிப் பக்கச் சார்புடையது என்பதை யாரும் அதிகம் ஏற்றுக் கொள்வதில்லை. இன்னொரு பக்கம் மறைக்கப்படுவதை யாரும் விரும்புவதில்லை. அதுவும் மேற்குலகம் தனக்கு உவப்பில்லாத ‘ஒரு பக்கத்’தை என்றுமே விரும்புவதில்லை. இந்த ‘ஒரு பக்கம்’ என்பது மற்றவரை – பிறரை – எதிர்த்தரப்பை எப்போதும் குறை சொல்வதிலும் குற்றஞ்சாட்டுவதிலுமே குறியாக இருக்கும். அப்படித்தான் அது இருந்ததும்கூட. போராட்டத்தை நடத்தியவர்களோ மேற்குலகத்திடமே தங்களின் கோரிக்கைகளை முன்வைத்தனர். அவர்களிடமே நியாயத்தைக் கேட்டனர். எனவே, மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை நியாயமான முறையில் வெளிப்படுத்தக் கூடிய ஒரு பொது அமைப்பையோ ஒரு சூழலையோ உருவாக்க வேண்டும் என்று வன்னியில் நாங்கள் பொதுவாகப் பலரிடமும் சொன்னோம். அதாவது வெளிச்சமூகம் நம்பிக்கை வைக்கக்கூடிய ‘மக்கள் அமைப்பொன்று’ மூன்றாந்தரப்பாக இருக்க வேண்டும் எனக் கூறினோம். (இங்கே ‘நாங்கள்’ என்பது அங்கே இருந்து போரில் பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்த, யதார்த்த நிலைமைகளைக் கணக்கிலெடுத்துக் கொண்ட, உண்மையில் போரைத் தணிக்க வேண்டும் என்று விரும்பிய ஒரு அணியினர். அவ்வளவு பேரும் பொதுமக்களே).

ஆனால், அந்தக் குரல், அந்தக் கோரிக்கை கவனிக்கப்படவில்லை. அல்லது செயல் முனைப்படையவில்லை. தவறுகளை ஒப்புக் கொள்ளுதல், உண்மைகளை வெளிப்படுத்துதல், களத்தில் என்ன நிலைமை என்பதை விருப்பு வெறுப்புகளுக்கப்பால் வெளிப்படுத்துதல் அல்லது பகிரங்கப்படுத்துதல் அவசியம் என்பதே எங்கள் நிலைப்பாடு. அப்படி எதுவும் நடக்கவில்லை என்றால், எந்தப் பெரிய அர்ப்பணிப்பான போராட்டத்தினாலும் எதையும் சாதிக்க முடியாது என்று வலியுறுத்தினோம். எப்படி வலியுறுத்தியபோதும் அந்தக் கோரிக்கை, அந்தக் குரல் செயல்வடிவம் பெற அனுமதிக்கப்படவில்லை. இறுதியில் நடந்தது முழுத்தோல்வி ‍ முழு அழிவுதான்.

இங்கேதான் நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும். இவ்வளவு பெருங்காரியங்களை எல்லாம் செய்து விட்டும் எதுவும் கிடைக்காமல் இன்று தோற்றுப்போய், பின்னடைந்து நொந்து போயிருக்கிறோம் என்றால் அதற்கு என்ன காரணம்? இப்போதாவது இதற்கான காரணங்களை நாம் காணத்தவறினால், எதிர்காலமும் எங்களுக்கு தோல்வி நிரம்பியதாகவும் சோதனைகளுக்குட்பட்டதாகவும்தானிருக்கும். எனவே நாம் எல்லாவற்றையும் மீளாய்வுக்குட்படுத்த வேண்டியுள்ளது. ஏனென்றால், அப்போதுதான் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் சரியான முறையில் ஒழுங்குபடுத்த முடியும். சிதைவுகளிலிருந்து மீண்டெழக் கூடியதாக இருக்கும். அறுபது ஆண்டுகளாகப் போராடிவிட்டு, பல ஆயிரம் உயிர்களைப் பலிகொடுத்துவிட்டு, பல தலைமுறைகளின் வாழ்வை இழந்து விட்டு, சொத்துக்கை, வாழ்க்கையை இழந்த பின், இன்னும் பின்னடைவுகளிலும் தோல்விகளிலும் வாழமுடியாது. ஆகவே பிரச்சினைகளின் மையத்திலிருந்தவர்களின் அபிப்பிராயங்கள், அனுபவங்கள் கவனப்படுத்தப்பட வேணும். பாதிக்கப்பட்டவர்கள், அந்தப் பாதிப்புகளிலிருந்து மீண்டெழுவதற்காக இன்னும் கஷ்ட‌ப்பட்டுக் கொண்டிருப்பவர்களின் நிலைகளையும் கவனத்திலெடுத்து எதையும் சிந்திப்பது அவசியம்.

ஈழத்தமிழர்களின் தோல்விகளுக்கும் பின்னடைவுகளுக்கும் காரணங்கள் பலவுண்டு. அதில் முதன்மையானது ஜனநாயகமின்மையாகும். ஜனநாயக துஸ்பிரயோகம் இன்னொன்று. இந்தக் குறைபாட்டைப் பற்றி ஏற்கனவே பலரும் எழுதியும் விவாதித்தும் விட்டனர். ஆனால், அவ்வாறு இந்தக் குறைபாட்டைச் சுட்டிக் காட்டியோர் புறக்கணிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டனரே தவிர, இதைக் கவனத்திலெடுத்து நிலைமைகளைச் சீர்செய்யவில்லை. இதனால், வன்னியில் நடந்த பல விசயங்களைப் பற்றி வெளியே வந்த செய்திகளை எல்லாம் வெளியுலகம் நிராகரித்தது. (மறுபக்கத்தில் இப்போதும் வன்னி மக்கள் சொல்லும்பல செய்திகளை தமிழர்களில் பெரும்பான்மையானோரும் நிராகரிக்கின்றனர். தமிழ்ப் பத்திரிகைகள் சில வன்னியில் நடந்த ‘உயிர்வலிக்கும் கணங்களை’ப் பற்றி ‘ஒரு பக்கச் செய்தி’களையே வெளியிட்டு தமது ‘தேசியக் கடமையை?’ செய்துவருகின்றன). இதுதான் மிகவும் கவலைக்குரிய சங்கதி.

வெளியுலகத்தின் கணிப்பின்படி அந்தச் செய்திகள் புலிகளின் செய்திகள். அல்லது புலிகளுக்குச் சார்பான செய்திகள் என்பதாகும். ‘புலிகளின் பகுதியில் புலிகள் சம்மந்தமில்லாமல் எதுவுமே இல்லை’ என்ற அனுபவம் இத்தகைய ஒரு நிலைப்பாட்டை வெளியுலகம் எடுப்பதற்குக் காரணமாகியது. அத்துடன் ஜனநாயக நடவடிக்கைகளில் புலிகளின் நிலைப்பாடும் அணுகுமுறையும் பாதகமானது என்பதும் வெளியுலகம் அறிந்த விசயங்கள். இதை ஈடு செய்திருக்க வேண்டியது ஊடகங்களும் புலம்பெயர் சமூகமுமே. ஆனால் அவை அதைச் செய்யவில்லை. அதனால் வன்னி அவலத்தைத் தடுப்பதற்காக எடுக்கப்பட்ட அத்தனை முயற்சிகளும் நடத்தப்பட்ட அவ்வளவு போராட்டங்களும் பயனற்றுப் போயின. அவ்வளவு செய்திகளும் இணையத்தகவல்களும் ஒரு பக்கச் சார்புடையவை, நம்பத்தன்மையற்றவை என்று இலகுவில் புறக்கணிக்கப்பட்டன. இத்தனை பெரிய முயற்சிகளைச் செய்தும் அந்தப் பெரிய அழிவிலிருந்து மக்களைக் காப்பாற்ற முடியவில்லை என்றால், அதற்கான காரணங்கள் என்ன என்று நாம் சிந்திக்க வேண்டாமா?

ஆனால், இதற்குப்பின்னரும் தமிழ்த்தரப்பின் போக்கில் எந்த மாற்றங்களையும் காணவில்லை. குறிப்பாக பல இணையத்தளங்கள் மற்றும் ஊடகங்களிலும் தமிழ்த் தேசிய அரசியலிலும் இந்த ஜனநாயகமின்மையும் ஜனநாயக துஷ்பிரயோகமும் இன்னும் கோலோச்சுகின்றது. ‘புலிகளிடம் கையில் துவக்கிருந்தது. இவர்களிடம் அது வாயிலும் பேனாவிலும் இருக்கிறது. பொதுவாக இன்னும் ஆயுதக் கலாசாரத்தை விட்டு தமிழ்ச் சமூகம் விலகவில்லை. அதன் மனதில் அது அத்தனை துப்பாக்கிகளையும் காவிக்கொண்டே திரிகிறது. எனவேதான் அது ஜனநாயகத்துக்கு தயாராகவில்லை’ என்று ஒரு நண்பர் சொல்வது மிகச் சரியானதே. இதைச் சொல்பவர் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் என்பது இன்னும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியதாகும்.

ஜனநாயகத்துக்குத் தயாராகாதவரையில் எந்தக் கதவுகளையும் நாம் திறப்பதற்குத் தயாராகவில்லை என்றே அர்த்தமாகும். அத்துடன் சகிப்புத்தன்மைக்கும் விட்டுக்கொடுப்புக்கும் ஏற்றுக் கொள்ளல்களுக்கும் ஆயத்தமில்லை. மாற்றுக் கருத்துகள், அபிப்பிராயங்கள், மாற்றுச் செயற்பாடுகள் என எதற்கும் இடமில்லை என்றுமாகும். இது உலகத்தின் பொதுப் போக்கிலிருந்து எம்மைத் தனிமைப்படுத்தி விடும். அத்துடன் வெளியுலகத்திலிருந்தும் அக நிலையிலும் நம் சமூகத்தையும் சுருக்கி விடும். இதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

அதாவது ஜனநாயகத்தை மறுப்பது, அதைத் துஷ்பிரயோகம் செய்வது என்ற நிலை வளர்ந்து கொண்டே போகிறது. இதை இந்தமுறை ஜனாதிபதித் தேர்தலின்போதும் வன்னி நிலவரங்களைப் பற்றி மே 17க்குப்பின்னர் வரும் பலவிதமான செய்திகள், தகவல்களை தமிழ்த் தரப்பு அணுகுவதிலும் அவதானிக்கலாம். மற்றையவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பதில்லை, இடமளிப்பதில்லை என்பதிலேயே ஜனநாயகமின்மையை வளர்த்தெடுக்கும் நிகழ்ச்சிகள் வளரத் தொடங்குகின்றன. ஒரு தரப்புச் செய்திகள் - கருத்துகள் - நிலைப்பாடுகளுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்தல், அந்தத் தரப்பை நியாயப்படுத்துதல், தருக்கங்களற்ற விளக்கங்கள், ஊகநிலைத் தகவல்களை வழங்குதல், தனிப்பட்ட விருப்பங்களைப் பொது அபிப்பிராயமாக்குதல் போன்றவை ஒருபக்கத்தை மட்டும் மக்களுக்குக் காட்டும் முயற்சியாகும். இதன் மூலம் மக்கள் ஏனைய பக்கங்களைப்பற்றி அறிய முடியாத நிலைக்குள்ளாக்கப்படுகின்றனர். இது அவர்களுடைய அரசியல் அறிவையும் பொதுப்புத்தியையும் பாதிக்கிறது. உலக அனுபவங்கள், சர்வதேச விவகாரங்களைப் பற்றி அறியவோ, அவற்றைப் பகுத்தாராயவோ முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர். இதனால், எளிதில் அவர்கள் பிறரால் ஏமாற்றப்படவும் அவர்களுடைய உழைப்பும் நம்பிக்கையும் வீணடிக்கப்படவும் ஏதுவாகிறது. குறிப்பாக ஜனநாயகம் பராமரிக்கப்படவில்லை என்றால், அங்கே மக்கள் மந்தைகளாக்கப்படுகின்றனர். மந்தைகளை இலகுவாக விரும்பிய பக்கம் சாய்த்து விடலாம். அப்படித் தாம் விரும்பிய பக்கம் சாய்த்துக் கொள்வதற்காகவே இப்படி மந்தைத்தனத்தைப் பராமரிக்கின்றனர் இந்தத் ‘தமிழ்த் தேசியர்கள்’.

என்னதான் வேசமிட்டாலும் அடிமனதில் இருக்கும் சரக்கு எப்படியோ வெளியே தெரிந்து விடும் என்பார்கள். அதுமாதிரி, தமிழ்ச் சூழலின் ‘ஜனநாயக வேசங்கள்’ சிரிப்புக்கிடமாக உள்ளன. துலாம்பரமான ஜனநாயக மறுப்பை அவை தாராளமாகச் செய்கின்றன. இந்த ஜனநாயக மறுப்பு ஒற்றைப்படைத்தன்மையான ஒரு கருத்துலகத்தை மீண்டும் மிக வேகமாக வளர்க்கின்றன. இது மீண்டும் ஒரு அபாயப்பிரந்தியத்தை உருவாக்கப் போகிறது. ஏற்கவே இந்தப் போக்குகளால் பாதிக்கப்பட்டது போதாதென்று இன்னும் அதே தவறான வழியையே இவை பின்பற்றுவது எவ்வளவு கொடுமையானது, எவ்வளவு முட்டாள்தனமானது? இந்த மன வன்மத்தை என்னவென்று சொல்வது? ஏதற்காக இப்படிப் பிடிவாத குணத்துடன் இந்த அரசியலாளர்களும் ஊடகர்களும் நடந்து கொள்கிறார்கள்?

இப்போது தமிழர்கள் அடைந்து கொண்டிருக்கும் பின்னடைவையும் தோல்வியையும் ஒப்பிடும்போது, ஏற்கனவே அடைந்த பின்னடைவுகளும் தோல்வியும் உண்மையில் பெரிதல்ல. ஆனால், இதுவரையில் தமிழர்கள் அடைந்திருக்கும் தோல்வியையும் பின்னடைவையும் பிறர் பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள். ஒரு சிறிய இனம் தன் வல்லமைக்கு ஏற்றவரையில், தனக்குத் தெரிந்த வழிமுறைகளில் சரியோ பிழையோ போராடியிருக்கிறது. அதில் தோல்விகள், பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன. ஆனால், அந்தத் தோல்விகளிலிருந்தும் பின்னடைவுகளிலிருந்தும் அது எதைக் கற்றுக் கொண்டது, அந்தப் பாடங்களிலிருந்து அது தனது போராட்டப்பாதையை எப்படி மாற்றி வடிவமைத்துள்ளது என்றே எல்லோரும் பார்ப்பார்கள். அதுவே மற்றவர்களின் அங்கீகாரத்துக்கும் ஆதரவுக்கும் வழிதரும்.

ஆனால், ஏற்பட்ட பின்னடைவுகளிலிருந்தும் தவறுகள், தோல்விகளிலிருந்தும் தமிழ்த்தரப்பு அரசியலாளர்களும் ஊடகர்களும் எந்த வழிமுறைகளையும் மாற்றிக் கொள்ளவில்லை. குறிப்பாக ஜனநாயகச் சூழலை எப்படி புத்தாக்கமாக வளர்த்தெடுக்க வேண்டும், அதன் மூலம் திறந்த உரையாடல்களின் வழியே பல கருத்தியர்களையும் ஒருங்கிணைத்து முன்னே செல்வதற்கான உபாயங்களை வகுத்துக் கொள்ள வேண்டும் என இவர்கள் சிந்திப்பதாக இல்லை. ஒரு முன்வைப்பை, ஒரு கருத்தை நிராகரிப்பது, அந்தத் தரப்பை மறுப்பது, அதற்கெதிராக வசைபாடுவது, பழிசுமத்திப் புறக்கணிப்பது என்ற வகையிலேயே அனைத்துக் காரியங்களும் நடக்கின்றன. எனவே, முன்னரே குறிப்பிட்டிருப்பதைப்போல, தமிழ்மக்களைச் சுற்றி ஒரு அபாயப்பிராந்தியம் மீண்டும் உருவாக்கப்படுகிறது, இந்தத் தமிழ்த் தேசியர்களால்.

இந்த அபாயப்பிராந்தியம் இரண்டு வகையில் அமையும். ஒன்று, மீண்டும் நாட்டில் ஒரு ஜனநாயக மறுப்புச் சூழல் உருவாக இது வழியேற்படுத்தும். அடுத்தது மறுபடியும் தமிழர்கள் அரசியல் அநாதைகளாக, அகதிகளாக, தோற்றுப் போனவர்களாக ஆகப்போகிறார்கள்.

எனவே கிடைத்திருக்கின்ற சூழலை உரிய முறையில் பயன்படுத்தி வெற்றியடைவதற்கான வழிகளைக் காணவேண்டும். மீண்டும் மீண்டும் சிங்கள இனவாதம் வெற்றி பெற தமிழர்கள் உதவக்கூடாது. சர்வதேச வலைப் பொறியமைப்பில் குருட்டுத்தனமாக தமிழர்கள் விழுந்து கொண்டிருக்கவும் முடியாது. இதில் புலம் பெயர்ந்தோரின் பங்களிப்பு அதிகமாக இருப்பது அவசியம். அவர்கள் செழிப்பான ஜனநாயகச் சூழலில் வாழ்ந்து அனுபவம் பெற்றவர்கள். ஒரு ஜனநாயகச் சூழலின் அவசியம் ஏன் என்று தெரியும் அவர்களுக்கு. ஜனநாயகத்தின் சிறப்புகளால் என்ன பலன்களை அடையலாம், எப்படி ஒரு ஜனநாயகச் சூழல் இருக்கவேண்டும், அதை எப்படி உருவாக்குவது, அதை எப்படிப் பராமரிப்பது என்றெல்லாம் தெரிந்தவர்கள் அவர்கள். இலங்கையில் தமிழர்களுக்கு ஜனநாயகத்தை அறிமுகப்படுத்த வேண்டும். அவர்களை அந்த ஜனநாயகச் சூழலுக்குப் பழக்கப்படுத்த வேண்டும். இதுவொரு கடினமான பணிதான். ஆனாலும் இதையெல்லாம் இப்போதே அவசியமாக நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லையெனில் கிடைத்திருக்கும் ஜனநாயகம் துஷ்பிரயோகமே செய்யப்படும். ஜனநாயக துஷ்பிரயோகம் என்பது எல்லாவற்றையும் எதிர் நிலைக்கே கொண்டு செல்லும்.

- கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்

Pin It