இதுவரை அணுக்கரு ஆற்றல் பற்றியும், அந்த ஆற்றல் பிற ஆற்றல்களிலிருந்து எவ்வாறு வேறுபட்டது என்பது பற்றியும், அணுக்கருப் பிளவின்போது அளவு கடந்த வெப்பம் மட்டுமல்ல, அபாயகரமான கதிர் வீச்சும் எவ்வாறு ஏற்படுகிறது, அது பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் வரை எவ்வாறு நீடிக்கிறது என்பது பற்றியும் பார்த்தோம்.

தற்போது இதுகுறித்து முடிவான சில கருத்துகளுக்கு வருவது பற்றி யோசிப்போம்.

அணுசக்தியை ஆக்கப் பணிகளுக்கும் பயன்படுத்தலாம், அழிவு வேலைகளுக்கும் பயன்படுத்தலாம். இதில் அணுவை அழிவு வேலைகளுக்குப் பயன்படுத்துவதை எதிர்ப்போம். ஆக்க வேலைகளுக்குப் பயன்படுத்துவதை ஆதரிப்போம் என்று சிலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.

அதாவது ஒரு கத்தி இருக்கிறது. அந்தக் கத்தியைக் கொண்டு ஒரு பழத்தை வெட்டலாம். நறுக்கலாம். துண்டு போடலாம். அதேபோல அந்தக் கத்தியைக் கொண்டு ஒரு மனிதனின் கழுத்தையும் வெட்டலாம், அவனைக் குத்தலாம், கொலை செய்யலாம். இல்லையா...?

அதேபோலத்தான் அணுசக்தியும். அதை ஆக்க வேலைகளுக்கும் பயன்படுத்தலாம். அழிவு வேலைகளுக்கும் பயன்படுத்தலாம் என்கிறார்கள்.

அதாவது இவர்கள் கூற்றுப்படி, கத்தி என்பது எப்போதும் கத்தியாகவேதான் இருக்கிறது என்றாலும் அந்த ஒரே கத்திதான் இரண்டுவித வேலைகளையும் செய்கிறது. இதில் பழம் நறுக்குவது ஆக்க வேலை, கழுத்தை அறுப்பது அழிவு வேலை.

எனவே, அணுசக்தியைப் பயன்படுத்தி அணுகுண்டு தயாரித்து இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானில் 1945 ஆகஸ்டு 6இல் ஹிரோஷிமாவிலும், 9இல் நாகசாகியிலும் போட்டார்கள் அல்லவா? அதேபோல அணுகுண்டு தயாரித்து வைத்துக் கொண்டு எந்த நாட்டின் மீது வீசலாம்? யார் தலையில் போடலாம்? என்று நினைத்துக் கொண்டிருப்பது அழிவு வேலை.

இப்படியெல்லாம் அல்லாமல், அதாவது அணு சக்தியைப் பயன்படுத்தி இம்மாதிரி அழிவு வேலைகளிலெல்லாம் ஈடுபடாமல், இந்தச் சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்வது, அதைக் கொண்டு யந்திரங்களை இயக்குவது, வாழ்க்கைப் பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்துவது இது போன்ற நடவடிக்கைகள் எல்லாம் ஆக்க வேலை.

ஆகவே, அணுசக்தியை இம்மாதிரி ஆக்கப் பணிகளுக்குப் பயன்படுத்தலாம், பயன்படுத்த வேண்டும். இதில் எந்தவிதத் தவறும் இல்லை, ஆபத்தும் இல்லை என்று சொல்கிறார்கள் இவர்கள்.

சரி. இவர்கள் சொல்கிற கத்தி உதாரணம் மாதிரியே அணுசக்தி விஷயமும் இருந்துவிடுமானால், அதாவது கத்தி மாதிரியே அணுசக்தியும் அதைக் கைக்கொண்டுள்ள மனிதன் எதைச் செய்ய விரும்புகிறானே அதை மட்டும் செய்து, அவன் விருப்பத்துக்குட்பட்டு இயங்குமானால், இவர்கள் சொல்லுகிற கருத்தை நாமும் ஏற்றுக் கொள்ளலாம்.

இதில் யாருக்கும் எந்தவித விவாதத்துக்கும் இடமிருக்கப் போவதில்லை. ஆனால் கத்தி விஷயம் மாதிரியேவா இருக்கிறது இந்த அணுசக்தி விஷயம்?

அப்படிச் சொல்ல முடியாது. காரணம், பழம் நறுக்கும் போதும், கொலை செய்யும் போதும் கத்தி கத்தியாகவேதான் இருக்கிறது. கத்தியின் பண்பில் எவ்வித மாற்றமுமில்லை. ஆனால் அதைப் பயன்படுத்தும் நபரின் விருப்பு வெறுப்பு நோக்கம் மட்டுமே மாறுபடுகிறது. எனவே இந்த விருப்பு வெறுப்பு நோக்கங்களுக்கேற்ப கத்தியின் செயல்பாட்டுத் தனம் மாறுபடுகிறது. எனவே கத்தியின் பயனும் விளைவும்தான் மாறுபடுகின்றதேயொழிய, கத்தியில் , அதன் பண்பில் எந்தவித வேறுபாடுமில்லாமல், கத்தி கத்தியாகவேதான் இருந்து செயல்படுகிறது. என்றாலும், இங்கே ஒரு முக்கிய விஷயம் கத்தி அதைப் பயன்படுத்தும் நபரின் குறிக்கோளுக்கிணங்க அவனது கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு அவன் விருப்பப்படி செயல்படுகிற ஒரு பொருளாகவே இருக்கிறது என்பது விசேஷமாய்க் கவனிக்கத்தக்கது.

ஆனால், கத்தியின் செயல்பாடு அதைப் பயன்படுத்தும் நபரின் விருப்பு வெறுப்பு சார்ந்து அவன் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு, அவனது குறிக்கோளை மட்டுமே நிறைவேற்றப் பயன்படுவது போல... அணுசக்தியின் செயல்பாடும், அதை உருவாக்கும் அல்லது வெளிப்படுத்தும் நபரின் விருப்பு வெறுப்பு சார்ந்து அவனது கட்டுப்பாட்டுக்குள் அடங்கி, அவனது குறிக்கோள்களை மட்டுமே நிறைவேற்றும் வகையில் இயங்க முடியுமா என்றால்... முடியாது என்பதே நமது பதில்.

இன்னும் தெளிவாகச் சொல்வதானால் கத்தியைக் கொண்டு பழம் நறுக்கும்போது, அது பழத்தை மட்டுமே நறுக்குகிறதே தவிர, அது தானாகவே போய் யார் கழுத்தையும் அறுப்பதில்லை. அதாவது பழம் நறுக்க விரும்பும் மனிதனின் கட்டுப்பாட்டை மீறி, அவனது விருப்பத்துக்கு மாறாக வேறு எந்தப் புற விளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை.

ஆனால், அணுசக்தியை ஆக்க வேலைகளுக்கு மட்டுமே பயன்படுத்துவது தவறு அல்ல என்று அதை வெளிப்படுத்தும் போது, அந்த அணுசக்தி, அதைப் பயன்படுத்த விரும்பும் மனிதனின் கட்டுப்பாட்டுக்குள் அடங்கி, அவனது குறிக் கோளை மட்டுமே நிறைவேற்றக் கூடியதாக, அதாவது குறிப் பிட்ட அந்த ஆக்கப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுவதாக வெளிப்படுவதில்லை. அது வேறு எந்த அழிவு வேலை களையும் செய்யாததாகவும் இருப்பதில்லை.

அல்லது, அப்படிப்பட்ட அழிவு வேலைகளைச் செய்வதற் கான வேறு எந்தவித பொருளையுமே அது உற்பத்தி செய்யாமல் இருப்பதில்லை. அப்படி எந்தவித பொருளையும் உற்பத்தி செய்யாத அளவுக்கு அந்த அணுசக்தியைக் கட்டுப்படுத்தியோ, அல்லது அப்படியே அது எதாவது உற்பத்தி செய்தாலும் அந்தச் சக்தி வேறு எந்த அழிவு வேலைகளையும் செய்துவிட முடியாமல் தடுத்து நிறுத்தி, வெறும் ஆக்கப் பணிகளுக்கு மட்டுமே பயன்படக் கூடிய வகையில் அதை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவோ முடிவதில்லை. அதாவது அப்படிப்பட்ட ஒரு கட்டுப்பாடான, வரையறுக்கப்பட்ட எல்லைக் கோட்டுக்குள் அதைக் கையாள முடிவதில்லை.

அணுசக்தியை ஆக்கப் பணிகளுக்குப் பயன்படுத்து கிறோம் என்று சொல்லி, அணு மின்சாரம் தயாரிக்க, அணு உலை அதாவது அணுசக்தி நிலையம் நிறுவிய நாடுகளெல்லாம் தம் நிலையங்களில் தொடர்ந்து பல்வேறு அபாயகரமான விபத்து களைச் சந்தித்து வந்துள்ளன. இது பிற விபத்துகளைப் போலச் சாதாரணமானதாகக் கருதத் தக்கதல்ல. பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் நின்று நிலைத்து மனிதனைச் சிறுகச் சிறுகக் கொல்லும் விபத்து இது. இந்தியா உள்ளிட்டுப் பல்வேறு நாடுகளில் நடந்துள்ள இப்படிப்பட்ட விபத்துகள் குறித்து ஏற்கெனவே பார்த்தோம். இவற்றுள் மிகவும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய விபத்துக்கள் இரண்டு.

ஒன்று அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள “மூன்று மைல் தீவு” என்னுமிடத்தில் 1979ஆம் ஆண்டில் நடைபெற்ற விபத்து. மற்றொன்று சோவியத் ஒன்றியத்தின் செர்னோபில் என்னுமிடத்தில் 1986 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு கோர விபத்து என்பதை ஏற்கெனவே பார்த்தோம்.

உலகில் இதற்கு முன் எத்தனையோ அணு உலை விபத்துகள் நேர்ந்திருந்தாலும் அணுசக்தியின் ஆபத்து குறித்து உலகம் முழுவதற்கும் புரியவைத்த பெருமை இந்த இரண்டாவது விபத்திற்கே சாரும் என்பதையும் நாம் அறிவோம்

இந்நிலையில் இந்த அணு உலைகள் அணு மின்சாரம் தேவைதானா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்

எனில், இவையனைத்தும் அணுக்கருப் பிளவின் மூலம் பெறப்படும் ஆற்றல் மற்றும் அது சார்ந்த தொழில் நுட்பம் பற்றியவை மட்டுமே. ஆனால், இதற்கு அப்பால் அணுக்கருப் பிணைவு மூலம் பெறப்படும் ஆற்றலும் ஒரு வகை உள்ளது. எனவே, அது பற்றியும் நாம் தெரிந்திருக்க வேண்டுவது முக்கியம்.

அணுக்கருப் பிணைப்பு

அணுக்கரு ஆற்றல் என்பது இரு வகைத் தொழில் நுட்பத்தின் வழி பெறப்படுகிறது. ஒன்று, அணுக்கருவைப் பிளந்து அதன் வழி பெறப்படும் ஆற்றல். இது NUCLEAR Fission எனப்படுகிறது. மற்றொன்று, இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட அணுக் கருக்களைச் சேர்த்து அதாவது பிணைத்து அதன்வழி பெறப்படும் ஆற்றல். இது NUCLEAR குரளiடிn எனப்படுகிறது. இதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியதன் நோக்கம், அணுவியல் அறிவியலாளர்களில் சிலர் அணுக்கரு ஆற்றலில் அணுக்கருப் பிளப்பின் மூலம் பெறப்படும் ஆற்றல் மட்டும்தான் ஆபத்தானதே தவிர, அணுக்கருப் பிணைப்பின் மூலம் பெறப்படும் ஆற்றலால் ஆபத்து ஏதும் இல்லை என்கின்றனர். ஆகவே அது பற்றியும் சிறிது பார்ப்போம்.

அணுக்கருப் பிணைப்பு ஆற்றல் என்பது இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட அணுக்கருக்களை ஒன்றாகச் சேர்ப்பதன் மூலம் பெறப்படும் ஆற்றல் என்று குறிப்பிட்டோமில்லையா. இதில் அணுக்கருப் பிளப்பிற்கும், அணுக்கருப் பிணைப்பிற்கும் தொழில் நுட்ப ரீதியில் உள்ள வேறுபாடு என்ன, எந்த இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட அணுக்கருக்களை ஒன்று சேர்ப்பதன் மூலம் இது நிகழ்த்தப்படுகிறது, அதிலிருந்து எவ்வாறு ஆற்றல் பெறப்படுகிறது என்பது மிகவும் முக்கியம்.

இதில் முதலாவதாக நாம் தெரிந்து கொள்ளவேண்டியது. அணுக்கருப் பிளப்பிற்கு அணு நிறை அதிகம் உள்ள தனிமங்களின், அதாவது யுரேனியம், புளூட்டோனியம் அணுக் கருக்களைப் பயன்படுத்துகிறார்கள் என்றால், அணுக்கருப் பிணைப்பிற்கு அணு நிறை எண் குறைவாக உள்ள ஹைட்ரஜன், ஹீலியம் ஆகியவற்றின் அணுக்கருக்களைப் பயன்படுத்துகிறார்கள்.

இப்படிப்பட்ட அணுப்பிணைப்பிற்கு இதுவரை நான்கு வகையான சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதைப் புரிந்துகொள்ள ஏற்கெனவே ஐசோடோப்புகள் பற்றிப் படித்ததை சற்று நினைவு கூர்வோம். அதில் ஹைட்ரஜன் அணுவில் ப்ரோட்டியம்,  டியூட்ரியம், டிரைட்டியம் ஐசோடோப்புகள் குறித்து பார்த்தோ மில்லiயா. இப்படிப்பட்ட ஐசோடோப்புகளைத் தான் அணுக்கருப் பிணைப்புத் தொழில் நுட்பத்திற்குப் பயன்படுத்து கிறார்கள்.

Deutrium அணுக்கருவுடன் Tritium அணுக்கருவைப் பிணைப்பது DT எனவும், DEUTRIUM அணுக்கரு இரண்டைப் பிணைப்பது DD எனவும், Deutrium அணுக்கருவையும், ஹீலியம் அணுக் கருவையும் பிணைப்பது D3-He எனவும், ஹைட்ரஜன் புரோட்டான், பாரோன் அணுக்கருக்களின் சேர்க்கை P11- B எனவும் நால்வகைப்படுகிறது.

இத்தொழில் நுட்பங்கள் 1997ஆம் ஆண்டு வாக்கில் ஐரோப்பியக் கூட்டு வலயம் (Joint European Torus) சார்பில் மேற்கொள்ளப்பட்டு 2005 வாக்கில் International Thermol Nuclear  Experimental Reactor-ITER என்னும் சோதனை அணுஉலை நிறுவப்பட்டது.

இதையடுத்து 2010 வாக்கில் High Power Laser Energy Research   (HIPER) மேற்கொள்வதென முடிவு செய்யப்பட்டது. எனினும் இம்முயற்சி முற்றாக கைகூடவில்லை. சோதனைகள் தொடர்கின்றன.

ஆபத்தான அணுப்பிளப்புத் தொழில் நுட்பத்திற்கு மாற்றாகவே அணுப் பிணைப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எனில் இதிலும் அதே ஆபத்துகள் வேறு வகையில் தொடர்ந்தன. காட்டாக, அணுக்கருப் பிளப்பின்போது வெளிப் பட்டது போலவே ஆபத்தான கதிரியக்கம் அணுக்கருச் சேர்க்கையின் போதும் வெளிப்பட்டது.

ஆக அணு உலைக்கான தொழில் நுட்பத்தில் எரிபொருளும் அதன் இயக்கமும் மட்டும்தான் இதில் மாறி யுள்ளதே தவிர மற்றபடி அணு உலைக் கட்டமைப்பில், வடிவமைப்பில், அணுக் கருப் பிளப்பிற்கான அதே முறையே இதிலும் பின்பற்றப்பட வேண்டியிருப்பதால், அணுப்பிளப்பு உலையில் உள்ள அனைத்து ஆபத்துகளும் இதிலும் நிறைந்திருக்கின்றன.

அணுப்பிளப்பு முறைக் கழிவுகளைப் பொறுத்தமட்டில் யுரேனியம் கழிவு தன் கதிரியக்கத்தில் பாதியை இழக்க 24,000 ஆண்டுகள் ஆகும் என்றால் அணுச் சேர்க்கை முறைக் கழிவுகள் 50 ஆண்டுகள் முதல் 100 ஆண்டுகள் வரை மட்டுமே கதிரியக்கத் தன்மை கொண்டதாக இருக்கும் எனப்படுகிறது. என்றாலும் 24,000 ஆண்டுகள் வெளியேற்றத்தை 100 ஆண்டுகளுக்குள்ளேயே இவை வெளிப்படுத்தவேண்டி இருப்பதால் இது, அணுப் பிளப்புக் கழிவைவிட பல மடங்கு வீரியம் மிக்கதாக இருக்கும் எனப்படுகிறது.

அணுப் பிணைப்பு உலைகளிலிருந்து பெறப்படும் கழிவுகளின் அரை ஆயுள் காலம் சொற்பமாகவே இருக்கும் என்கிற அதே வேளை, இதுவே உலகம் முழுக்கப் பரவலாகும் போது அது எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதும் கேள்வியாக இருக்கிறது.

இதில் இப்படிப்பட்ட பல பின்னடைவுகள் இருந்தும் அறிவியல் ஆய்வாளர்கள் ஆபத்தில்லாத தொழில் நுட்பத்தை நோக்கித் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

காரணம், மனித குலத்தின் நவீன வாழ்க்கை வசதிகளுக்கு, தொழில் வளர்ச்சிக்கு, முன்னேற்றத்திற்கு ஆற்றலின் தேவை மிகமிக இன்றியமையாததாக இருக்கிறது. அதைப் பெற மேற்கொண்ட அணுக்கருப் பிளப்புத் தொழில்நுட்பம் பேராபத்தை விளைவிப்பதாக இருப்பதை உலகம் உணர்ந்து கொண்டது. இந்நிலையிலேயே மாற்றுத் தொழில் நுட்பம், தேடிஅணுக் கருப் பிணைப்புச் சார்ந்த முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

மட்டுமின்றி, அணுக் கருப் பிணைப்பிற்குப் பயன்படுத்தப் படும் ஹைட்ரஜன், ஹீலியம், லித்தியம் முதலான மூலப் பொருள்கள் பல இலட்சக்கணக்கான ஆண்டுகள் கிடைக்கக் கூடிய வகையில் இயற்கையில் மலிந்துள்ளதால், மனித குலத்தை இந்த ஆற்றல் நெருக்கடியிலிருந்து மீட்க இந்த வற்றாத வளத்தைப் பயன்படுத்துவது பற்றி அறிவிய லாளர்கள்ஆராய்ந்து வருகிறார்கள்.

அணுக்கருப் பிளப்புத் தொழில்நுட்பம் பல்வேறு பேரபாயங் களையும், பேரழிவுகளையும் ஏற்படுத்தி மனித குலத்தை கிலி கொள்ளச் செய்துள்ள நிலையில் இதற்கு மாற்றாக அணுக்கருச் சேர்க்கை தொழில் நுட்பமாவது கை கொடுக்காதா, மனித குலத்தை வாழ வைக்க உதவாதா என்கிற அவா எழுகிறது. ஆனால் இதுவரை கண்டு வந்துள்ள தொழில் நுட்பம் அணுக்கருப் பிளப்பு போலவே, அணுக்கருப் பிணைப்பும் ஆபத்தானதுதான் என்பதையே மெய்ப்பித்து வருகிறது.

இந்நிலையல் இப்படிப்பட்ட ஆபத்துகளற்ற ஆற்றல் உற்பத்தித் தொழில் நுட்பத்தை மனித குலம் பெற வேண்டும் என்பதே அனைவரது அவாவும்.

இந்த நோக்கில், ஒன்று அணுக்கரு சார்ந்து வெற்றிகரமானதொரு தொழில் நுட்பத்தை அறிவியல் உலகம் காண வேண்டும். இல்லையென்றால் இதை விட்டு மாற்றுத் தேடல்களில், மாற்று ஆற்றல்கள் பற்றி சிந்திக்கவேண்டும். அதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள முயல வேண்டும். இதுவே மனித குலத்தை ஆற்றல் நெருக்கடியிலிருந்து மீட்கவும் வாழ வைக்கவும் வழி வகுக்கும்.

- இராசேந்திர சோழன்