"நீங்க என்ன பாத்திரம் கழுவுற சோப் உபயோகிக்கிறீங்க? இப்படி பாத்திரம் பளபளப்பாக பிசுக்கில்லாமல் புத்தம் புது சில்க் துணிபோல இருக்கிறதே!''

"சோப்பா! சும்மா தண்ணீரிலே கழுவினாலே போதும் ஒரு சொட்டு எண்ணெய்ப் பிசுக்கு இல்லாமல் பாத்திரம் புத்தம் புதிதாகிவிடுகிறது... இது புதுவித பாத்திரம் எண்ணெயில் அப்பளம் பொரித்தாலும் பாத்திரத்தில் எண்ணெய் ஒட்டுவதில்லை'' என்று பதில் வந்தால் அதை நம்ப கஷ்டமாக இருக்கிறது அல்லவா!

உண்மைதான், இன்டியானா பல்கலைக்கழக பண்டவியல் துறை அறிஞர்கள் பிளாஸ்ட்டிக், உலோகம் போன்ற பொருள்களுக்கு மேலே, முடியைவிட 1000 மடங்கு மெலிதான ஒரு கெமிக்கல் பூச்சு கொடுக்கிறார்கள். அது எண்ணெயை பாத்திரத்தில் ஒட்ட விடாமல் பார்த்துக்கொள்கிறது.

வெறும் தண்ணீரில் கழுவினாலே போதும், சோப்பு அரப்புத் தூள் எதுவுமில்லாமல் எண்ணெய்ப்பிசுக்கு வழுக்கி ஓடிவிடுகிறது. பாத்திரத்தின் பரப்பில் பாலி எத்திலீன் கிளைக்கால் என்ற தண்ணீர் உறிஞ்சும் பொருள் பூசப்படுகிறது, அதற்கு மேலே டெஃப்ளான் போன்ற ஒரு பூச்சு கொடுக்கப்படுகிறது. இதனால் பாத்திரத்தின் பரப்பு தண்ணீருக்கு உறவாகவும் எண்ணெய்க்குப் பகையாகவும் மாறிவிடுகிறது. எண்ணெய் ஒட்டுவதேயில்லை. காந்தல், கரி, பிசுக்கு எது இருந்தாலும் குழாயில் காட்டினாலேபோதும் தேய்க்காமலே கழன்றோடிவிடுகிறது. இது வேலையை சுலபமாக்குவதுடன், சுற்றுச் சூழலை பாதிக்கும் சோப்பின் தேவையைக் குறைக்கிறது. இது போன்ற கண்டுபிடிப்புகள் வெகு சீக்கிரமே மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுவிடுகிறது.

- முனைவர். க. மணி, பயிரியல்துறை. பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரி. கோயம்புத்தூர்