உலகக் காடுகளைக் காப்பதில் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் மூலம் பெரிதும் உதவிய ஜெடி மீண்டும் உயிர் பெறுகிறது என்று நாசா கூறியுள்ளது. காடுகளை அழிவில் இருந்து காப்பதில் பெரும் பங்கு ஆற்றிய ஜெடி திட்டத்தை நாசா முடித்துக் கொள்ள இருந்தது. ஜெடி பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும்போது அதை எரித்து சாம்பலாக்குவதாக இருந்த தன் முடிவை நாசா கடைசி நிமிடத்தில் மாற்றிக் கொண்டுள்ளது.

பூமியில் காலநிலை மாற்றத்தின் போக்கு மற்றும் தற்போதைய காடுகளின் நிலை பற்றி விண்ணில் இருந்து முக்கிய தரவுகளை நாசாவின் உலக சூழல் மண்டலங்கள் பற்றிய ஆய்விற்கான உணரி என்ற இந்த ஜெடி (Global Ecosystem Dynamics Investigation GEDI) அளித்து வந்தது. இது லேசர்களைப் பயன்படுத்தி தகவல்களை சேகரித்தது. இந்த தகவல்கள் புவி வெப்ப உயர்வினால் நிகழும் உயிர்ப் பன்மயத்தன்மை அழிவு மற்றும் காலநிலை மாற்றத்தினால் தோன்றும் பாதிப்புகளைப் பற்றி அறிய உதவியது.

புகழ்பெற்ற ஸ்டார் வார்ஸ் என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் வரும் ஜெடை (Jedi) கதாபாத்திரம் உச்சரிக்கப்படுவது போல நாசாவின் இந்த உணரி உலகம் முழுவதும் உள்ள வன ஆய்வாளர்கள் இடையில் பிரபலமாக இருந்தது.gediஉலகக் காடுகளின் முதல் முப்பரிமாணப் படங்கள்

2018 டிசம்பரில் ப்ளோரிடா கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) இது ஏவப்பட்டது. இது உலகக் காடுகளின் முப்பரிமாணப் படங்களை முதல்முதலாக பூமிக்கு அனுப்பியது.

100 மில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த உணரி லேசர் தொழில்நுட்ப உதவியுடன் காடுகளின் அமைப்பு மற்றும் ஆரோக்கியம் பற்றிய தரவுகளை அனுப்பி வந்தது. இந்த தரவுகள் காலநிலை மாற்றத்தால் காடுகளுக்கு ஏற்படும் அழிவு பற்றி அறிய விஞ்ஞானிகளுக்கு உதவியது.

ஜெடி திட்டத்தை நீட்டிக்கவேண்டும் என்று உலகம் முழுவதிலும் இருந்து வன நிபுணர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் நாசா தன் மனதை மாற்றிக்கொண்டு ஜெடியின் ஆயுளை நீட்டிக்க முடிவு செய்தது. 2023 மார்ச் இறுதியில் ஒரு குளிர்சாதனப்பெட்டியின் அளவுள்ள இந்த உணரியின் இயக்கம் பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்தப்பட்டது. இது போன்ற மற்றொரு நாசா திட்டம் வரும் 18 மாதங்களில் நிறைவு பெறவுள்ளது.

இயக்கம் நிறுத்தப்பட்டாலும் ஜெடியின் முக்கிய பாகங்கள் குளிரினால் பழுதடையாமல் இருக்க இன்றியமையாத சூடுபடுத்திகள் (survival heaters) இதனுடன் பொருத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டன. 2031ல் சர்வதேச விண்வெளி நிலையம் கைவிடப்படும்வரை ஜெடி மீண்டும் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மரங்கள் எந்த அளவு கார்பனை சேகரிக்கின்றன என்பது பற்றியும், காட்டுத்தீயால் வளிமண்டலத்தில் ஏற்படும் சூழல் தாக்கங்கள் பற்றியும் விஞ்ஞானிகளால் தொடர்ந்தும் தரவுகளைப் பெற முடியும்.

நாசாவின் இந்த முடிவினால் இந்நூற்றாண்டில் செலுத்தப்படும் மற்ற செயற்கைக்கோள்களுடன் இணைந்து ஜெடி பூமியின் சூழலைக் காக்க பணியாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது என்று இத்திட்டத்தை கண்காணித்து வரும் மேரிலாந்து பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

ஜெடியின் ஆயுட்காலத்தை நீட்டிக்கவேண்டும் என்று உலகம் முழுவதிலும் இருந்து வந்த விஞ்ஞானிகளின் வலுவான கோரிக்கை தங்களைப் பிரமிப்பூட்டியது என்று ஜெடி திட்டத்தின் தலைமை விஞ்ஞானி பேராசிரியர் ரால்ஃப் டூபய (Prof Ralph Dubayah) கூறியுள்ளார். இதுவரை ஜெடி உலகின் வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டலக் காடுகளில் 20 பில்லியன் உற்றுநோக்கல்களை செய்துள்ளது.

ஜெடியின் சாதனைகள்

இதன் மூலம் கிடைக்கப்பெற்ற தரவுகள் கார்பன் சுழற்சியில் காடுகளின் பங்கு, வன அழிவு மற்றும் அவற்றின் தரம் குறைவதால் வளிமண்டல கார்பன் டை ஆக்சைடு அடர்வில் ஏற்படும் பாதிப்புகள் பற்றி அறிய விஞ்ஞானிகளுக்கு உதவியது. 2025ம் ஆண்டிற்குள் இத்திட்டத்தை நிறைவு செய்வது பாரிஸ் உடன்படிக்கையின்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று.

ருவாண்டாவில் (Rwanda) உள்ள நியுன்வி (Nyungwe) பகுதியில் குடை போல் படர்ந்து நிழல் பரப்பும் மரங்கள் காடுகளின் எல்லைப்பகுதியில் உயரமாக வளர்கின்றன போன்ற பல பயனுள்ள தகவல்களை ஜெடி கண்டுபிடித்து விஞ்ஞானிகளுக்கு வழங்கியுள்ளது. காலநிலை மாற்றத்தினால் சூழல் மண்டலங்களுக்கு ஏற்படும் மாற்றங்கள் பற்றி தெளிவாகப் புரிந்து கொள்ளவும் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட உகந்த திட்டங்களை வகுக்கவும் ஜெடி தரும் தரவுகள் முக்கியமானவை.

ஜெடியின் இயக்கம் நிறுத்தப்பட்டிருந்தால் உலக உயிர்ப் பன்மயத்தன்மை மற்றும் சூழல் பற்றிய பல அரிய தகவல்கள் விஞ்ஞானிகளுக்குக் கிடைக்காமல் போயிருக்கும் என்று சுவிட்சர்லாந்து சூரிச் இ டி ஹெச் (ETH) கழகத்தின் சூழலியல் பேராசிரியர் தாமஸ் க்ரோதர் (Prof Thomas Crowther) கூறியுள்ளார்.

மீட்பிற்கு உதவும் ஜெடி

புவி வெப்பத்தினால் பாதிக்கப்பட்டுள்ள காடுகளை சீரமைத்து மீட்டெடுக்கும் மனித முயற்சிகளுக்கு இது பேருதவியாக இருக்கும் என்று ஜெடி திட்டத்தின் ஆய்வு விஞ்ஞானி லோரா டங்கன்சன் (Laura Duncanson) கூறியுள்ளார். இதன் மூலம் இருக்கும் காடுகள் அழியாமல் பாதுகாக்கப்படுவதுடன் அவை அழிக்கப்படும் வேகமும் குறையும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

ஜெடியின் ஆயுள் நீட்டிப்பு உலகின் காடுகளைக் காக்கக் கிடைத்த ஓர் அரிய வாய்ப்பு என்று விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேற்கோள்: https://www.theguardian.com/environment/2023/mar/28/return-of-gedi-space-mission-maps-earths-forests-saved-from-destruction-aoe?

- சிதம்பரம் இரவிச்சந்திரன்