ஏகாதிபத்திய-எதிர்ப்பும் சாதி ஒழிப்பும்

ஆனந்த் டெல்டும்ப்டெ

(தமிழாக்கம் : எஸ்.வி.ராஜதுரை)

புத்தா வெளீட்டகம்

வீடியல் பதிப்பகம்

கோவை – 641 015

விலை: ரூ.135

இந்த நூல் ஒரு சுமுகமற்ற சூழலில் உருவாகியது. ‘மும்பை எதிர்ப்பு 2004’ என்னும் மாநாட்டில் நடந்த விவாதங்கள், முடிவுகள் ஆகியவற்றைத் தொடர்ந்து மேற்கொள்வதற்காகக் கூடியிருந்த செயலாளர்களிடையே சாதி பற்றிய உணர்ச்சிகரமான விவாதம் நடைபெற்றதை நான் அறிந்தேன். இந்த மாநாட்டிற்குப் பின் நடத்தப்பட முடிவு செய்யப்பட்ட வெகுமக்கள் இயக்கம் ஏகாதிபத்திய-எதிர்ப்புப் போராட்ட்த்தைக் குவிமையப்படுத்த வேண்டும் என்ச் சிலர் வாதிட்டனர். வேறு சிலரோ, குறிப்பாக மேற்சொன்ன மாநாட்டில் கலந்து கொண்ட தலித் அமைப்புகளின் பிரதிநிதிகளோ, சாதி என்பது இந்திய சமுதாயத்தின் அடிப்படைப் பிரச்சனையாக இருப்பதால், மும்பை எதிர்ப்புப் போராட்ட மாநாட்டிற்குப்பின் நடத்தப்படவிருக்கும் வெகுமக்கள் போராட்டத்தில் அதற்குரிய முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

ஒரு வகையில் இந்த விவாதத்தில் புதிதாக ஏதுமில்லை என்பது தெளிவாயிற்று. ஏற்கனவே இந்த விவாதத்தில் கலந்து கொண்டது போன்ற உணர்வே எனக்கு ஏற்பட்டது. இந்திய தேசிய காங்கிரசுடனும் கம்யூனிஸ்டுகளுடனும் அம்பேத்கர் நடத்திய விவாதங்கள் அனைத்தும் சாதியின் முக்கியத்துவம் என்னும் பிரச்சனைப் பற்றியவை தான். காங்கிரஸ் குறிப்பாக அது ‘தீவிரவாதிகளி’ன் கட்டுப்பாட்டிற்குள் வந்த பிறகு சாதிகள் உள்நாட்டு பிரச்சனை என்றும், காலனியாட்சியிலிருந்து நாம் விடுதலை பெற்ற பிறகு  அப்பிரச்சனைத் தீர்க்கப்படும் என்றும் கூறியது. தங்களது கருத்துநிலை வலிமை,  வெகுமக்களை துன்புறுத்தும் பல்வேறு முரண்பாடுகளில் முதன்மை முரண்பாட்டைக் கண்டறியத் தங்கள் வசம் இருந்த மேம்பட்ட மார்க்ஸியக் கருவிகள் ஆகியவற்றால் பெருமிதம் கொண்டிருந்த கம்யூனிஸ்டுகளோ, சாதிகளை ஒரு பிரச்சனையாக பார்க்க மறுத்தனர். கடந்த ஆண்டுகளில் சாதி பற்றிய புரிதல் படிப்படியாக வளர்ச்சியடைந்து வந்திருப்பதால், அது பற்றிய மருட்சி இந்த நாட்டில் எங்குமே காணப்படுவதில்லை. அனைத்து வகைக் கருத்து நிலைகளையும் சார்ந்தவர்கள், இன்று சாதி ஒரு பிரச்சனைதான் என்பதை எளிதாக ஏற்றுக் கொள்கிறார்கள்; அவற்றின் முக்கியத்துவத்தை அவர்களில் யாருமே மறுப்பதில்லை.

எனவே, மேற்சொன்ன விவாதத்தில் கவனத்தை ஈர்ப்பதாக இருந்தது, சாதி பற்றிய விவாதத்தை எதிர்த்தவர்கள் காட்டிய தீவிரம் மட்டுமல்ல; சாதி பற்றிய புரிதலில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை முற்றாக புறக்கணித்துவிட்டு, தொடக்ககாலக் கம்யூனிஸ்டுகளும் மக்களிடையே இருந்த பிளவைப் பொருட்படுத்தாமல் சுதந்திரப் போராட்டத்தின் போது ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடுவாதாக பாசாங்கு செய்துவந்த போலி தேசியவாதிகளும் அன்று கொண்டிருந்த கருத்துக்களை இந்த விவாதம் மறு வடிவத்தில் வெளிப்படுத்தியது என்பதுதான்.

‘மும்பாய் எதிர்ப்பு’ மாநாட்டிற்குப் பிந்திய கருத்தரங்கு கோல்கத்தாவில் நடந்தது. சாதிப் பிரச்சனை பற்றிய ஒரு கட்டுரையை எழுதி அந்தக் கருத்தரங்கில் படிக்குமாறு எனக்கு அழைப்பு வந்தபோது, சாதிகளுக்கும் ஏகாதிபத்தியத்திற்குமுள்ள உள்ளார்ந்த பிணைப்புகளை ஆராய உத்தேசித்திருந்தேன். இத்தகைய கருத்தரங்குகளில் சாதிப் பிரச்சனை என்பது எப்போதுமே மற்ற பிரச்சனைகளில் தொடர்பற்ற முறையில், மேலோட்டமாகவே விவாதிக்கப்படுகிறது என்னும் உணர்வு எனக்கு எப்பொதுமே இருந்து வந்த்து. ஒடுக்கப்பட்ட சாதிகள் மீதான அக்கறையை வெளிப்படுத்த வேண்டும் என்னும் விநோதமான நிர்பந்தத்தின் காரணமாகவேயன்றி, இந்தியாவின் அடிப்படையான மாற்றம் எதனையும் கொண்டு வருவதற்கான நம்பிக்கை வைப்பதற்கு முன்வேரோடு பிடுங்கி எறியப்பட வேண்டிய ஒரு அடிப்படையான தீமையே சாதி என்னும் ஆழ்ந்த நம்பிக்கையின் காரணமாக இப்பிரச்சனை விவாதிக்கப்படுவதில்லை.

இன்றைய ஏகாதிபத்திய-எதிர்ப்புப் போராட்டச் - சூழலில், சாதிப் பிரச்சனை விவாதிக்கப்படுமேயானால், அப்பிரச்சனைக்கும் ஏகாதிபத்தியத்திற்கும் உள்ளார்ந்த பிணைப்புகள் உள்ளன என்பதையும் அது எவ்வாறு ஏகாதிபத்திய-எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதாரவாகவோ இடையூராகவோ இருக்கும் என்பதையும் அம்பலப்படுத்துவது ஒரு கட்டாயத் தேவை. ஒரு கட்டுரையில் இதைத்தான் சொல்ல விரும்பினேன். அந்தக் கட்டுரைக்கு ‘சாதியை ஒழித்துக் கட்டுதல்: ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தின் பிரிக்கமுடியாத பகுதி’ எனப் பேரார்வத்துடன் தலைப்பிட்டேன். சாதிப் பிரச்சனைக்கும் இந்தியாவிலுள்ள எந்தவொரு புரட்சிக்கரத் திட்டத்திற்கும் உள்ளார்ந்த உறவு இருப்பதை எடுத்துக்காட்டுவது தான் எனது நோக்கமாக இருந்தது. எனது கட்டுரையில், ‘இதுவா அதுவா’, ‘முதலில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனை இதுவா அதுவா’ என்னும் கேள்வியே எழுதப்படவிலை.

மார்க்ஸிய இயங்கில் முறையியலில் ‘இதுவா அதுவா’ என்ற பேச்சுக்கே இடமில்லை. எனது கருத்து கோல்கத்தா கருத்தரங்கின் அமைப்பாளர்களுக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டது. ஆனால் என்ன காரணத்தாலோ, கருத்தரங்கிற்கான தலைப்பு ‘ஏகாதிபத்தியத்தை தோற்கடிப்பதற்கு சாதி ஒழிப்பு’ என்றே திரும்பத் திரும்ப அறிவிக்கப்பட்டு வந்தது. என்னுடைய நிலைப்பாடிற்கும் கோல்கத்தாக் கருத்தரங்கை ஏற்பாடு செய்தவர்களின் நிலைப்பாடிற்குமுள்ள வேறுபாட்டை எவராலும் புரிந்துகொள்ள முடியும்.

சாதியை ‘முடிவுக்குக் கொண்டுவருதல்’ என்பதற்கும், சாதியை ஒழித்துக்கட்டுதல் என்பதற்குமிடையே நுட்பமான வேறுபாடு இருக்கிறது. சாதியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு நம்மிடம் அதிகாரம் இருக்க வேண்டும்; இதற்கு மாறாக நம்மிடம் அதிகாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சாதியை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற உறுதிப்பாட்டை நாம் மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் ‘ஒழித்துக்கட்டுதல்’ என்பதன் பொருளாகும். ஏகாதிபத்தியத்தைத் தோற்கடிக்க சாதியைமுடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற கூற்று,  சாதி-எதிர்ப்புப் போராட்டத்திலேயே ஏகாதிபத்திய-எதிர்ப்புப் போராட்டத்திற்கான வழிமுறைகளிலொன்றாக சாதியை முடிவுக்குக் கொண்டு வருவதைப் பார்க்கிறது. சாதியை ஒழித்துக்கட்டுதல் போராட்ட்த்தில் ஏகாதிபத்திய-எதிர்ப்பு உள்ளடக்கம் இருப்பதைப் பார்ப்பதில்லை. இக்கூற்று, தலித் அல்லாத  பார்வை மேலொங்கியிருப்பதைக் காட்டுகிறது. அதற்கு என்ன நியாயம் கூறினாலும், தலித்துக்கள் மட்டுமன்றி அவர்கள் நடத்தும் சாதி - எதிர்ப்புப் போராட்டங்களையும் இடதுசாரிகள் தங்களது அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என தலித்துக்களிடையே நிலவுகிற வெறுப்புணர்வுக்குத் தீனிப் போடுவதாக அமைந்துவிடும்.

ஏகாதிபத்திய-எதிர்ப்புப் போராட்ட்த்தின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடுகிறவன் என்றோ, சாதி ஒழிப்புப் போராட்டத்தையும் ஏகாதிபத்திய-எதிர்ப்புப் போராட்டத்தையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்கிறவன் என்றோ என்னைப் பற்றிய ஒரு எண்ணம் யாருக்கேனும் ஏற்படுமேயானால், இப்படிப்பட்டவன் நானல்ல என்பதை அவர்களுக்கு தெளிவுப்படுத்த விரும்புகிறேன். உலகம்  முழுவதிலும் முதன்மையாக அச்சுறுத்தலாக இருப்பது ஏகாதிபத்தியம்தான் என்பதும் இதுவரை கருதப்பட்டதுபோல் மக்களுக்கான ஜனநாயகம், சுதந்திரம் ஆகியவற்றுக்கான பாதையைத் திறந்துவிட அதனைத் தோற்கடிக்க வேண்டும் என்பதும் உண்மைதானென்றாலும் அதைவிட முக்கியமான உண்மை  இந்தப் புவிக் கோளத்தை அதனுடைய மிருகத்தனமான பிடியிலிருந்து காப்பாற்ற அதைத் தோற்கடிப்பது முற்றிலும் அவசியம் என்பதாகும் என்பதே எனது கருத்து.

இங்குள்ள பிரச்சனை ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தை நடத்துவதா இல்லையா என்பதல்ல; மாறாக, அதை எப்படி நடத்துவது என்பதுதான். ‘எதை’ச் செய்வது என்பதுதான் பிரச்சனை. வல்லரசு அதிகாரம் ஒரே ஒரு முனையில் மட்டுமே இருப்பதாகச் சொல்லப்படும் உலகில், ஒரே ஒரு ஏகாதிபத்தியம் மட்டுமே உள்ளது. அது அருவமானது அல்ல. உள்நாட்டு சமூக, அரசியல் செயலிக்கங்கள் இங்கு ஏகாதிபத்தியம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியாமல் குழப்பமடையச் செய்கின்றன.

Pin It