corona virusகொரோனா நோயின் தாக்கத்தால் உலகம் நிலைகுலைந்து போயிருக்கிறது. 2019 டிசம்பர் இறுதியில் சீனாவில் துவங்கிய நோய் ஏறக்குறைய அனைத்து நாடுகளிலும் பரவியிருக்கிறது. இக்கட்டுரை எழுதும் நேரத்தில் (10 ஜூலை 2020) 1.22 கோடி மக்கள் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப் பட்டிருக்கின்றனர். இது வரை 5.55 இலட்சம் உயிர்களை கொரோனா பலி கொண்டிருக்கிறது.

மருத்துவ உலகம் இந்த நோய்த் தொற்றுக்கு எதிராக கடுமையாகப் போராடி வருகிறது. ஆயிரக்கணக்கான மருத்துவர்களும், செவிலியர்களும் இந்தப் பணியில் உயிர்த் தியாகம் செய்திருக்கின்றனர். எனினும் அவர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய பணி தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

தொடர்ச்சியான ஊரடங்கு காரணமாக உற்பத்தி மற்றும் சேவைத் துறைகள், முடமாக்கப்பட்டு, வெகு மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப் பட்டிருக்கிறது. 

மனித இனம் களைப்படைந்து விட்டது. இப்போது அனைவரின் முன்னுள்ள கேள்வி இதுதான். இந்த கொரோனா எப்போது முடிவுக்கு வரும்? எப்படி முடிவுக்கு வரும்?

பின்புல போராளிகள்:

அர்ப்பணிப்பு மிக்க மருத்துவப் பணியாளர்களின் பின்புலத்தில், அமைதியாக ஆனால் அழுத்தமாக ஒரு கூட்டம் வேலை செய்து கொண்டிருக்கிறது. நோய் பரவலியலாளர்கள், (Epidemiologist) புள்ளிவிவர ஆய்வாளர்கள், கணித மேதைகள், தரவு அறிவியலாளர்கள் (Data scientists) போன்றவர்களை உள்ளடக்கிய கூட்டமே அது. நோய் பரவும் வேகத்தை, முறையினை ஆய்வு செய்வது, புவிப்பரப்பின் பல பகுதிகளுக்கிடையேயான பரவல் வீதங்களை கணக்கிடுவது, பரவலைப் பற்றிய பல்வேறு கணித மாதிரிகளை உருவாக்கி ஆய்வு செய்வது, நோய் பரவல் பற்றிய அனைத்து தரவுகளையும் தொகுத்து ஆய்வு செய்வது என தொடர்ந்த செயல்பாடுகளின் மூலம் மருத்துவ உலகிற்கு ஒரு வழிகாட்டும் விளக்காக அவர்கள் இருக்கிறார்கள். 

பரவுதல் வேகம்:

தொற்று நோயின் பரவுதல் வேகத்தை அளவிடுவதன் மூலமே அதன் இயங்கு தன்மையை கணிக்க முடியும். ஒரு நோயின் பரவல் வேகம் R0 என்ற குறியீட்டினால் அழைக்கப்படுகிறது. நோயாளர் ஒருவர் தன்னைச் சுற்றியுள்ளவர்களிடம் அந்த நோயை எத்தனை பேருக்கு பரப்புகிறார் என்ற எண்தான் அது. அடிப்படை பரவல் எண் (Basic Reproduction number) எனப்படுகிறது. கொரோனாவிற்கு அது 2-இலிருந்து, 3-க்குள் இருக்கும் என கணக்கிடப்படுகிறது.

இந்தப் பரவல் எண் SARS க்கு 3 ஆகவும், எபோலாவிற்கு 2 ஆகவும், பெரியம்மைக்கு 6 ஆகவும், சின்னம்மைக்கு 10 ஆகவும், தட்டம்மைக்கு 15 ஆகவும் இருந்திருக்கிறது.

கணித மாதிரிகள் (Mathematical models):  

கொரோனா உருவாகி பரவ ஆரம்பித்த போதே அதன் விளைவுகளை கணிக்க பல கணித மாதிரிகளை உருவாக்கி வருகின்றனர் கணிதவியலாளர்கள். கொரோனா பற்றிய முன் கணிப்புகள் மருத்துவ மனைகளை வசதியாக்கிக்கொள்வது, மனித நகர்தலை தடுத்திருப்பது, ஆலைகளை மூடுவது போன்றவற்றை தீர்மானிக்கின்றன.

பொதுவாக நான்கு விதமான கணித மாதிரிகள் முன்வைக்கப் படுகின்றன. SIR மாதிரி (SIR model) என அழைக்கப்படும் கணித மாதிரி மூன்று விஷயங்களை கணக்கில் எடுத்துக் கொள்கிறது. பாதிக்கப்பட வாய்ப்புள்ளவர்கள் (Susceptible), தொற்றுக்கு ஆளானவர்கள் (Infectious), குணமடைந்தவர்கள் (Recovered). இந்த மாதிரியின் முக்கிய காரணி Rt என்னும் செயல்படும் பரவல் எண் (effective reproduction number).

முன்கணிப்பினை பொறுத்தவரை, இந்த SIR மாதிரி மிகச் சிறந்தது என சொல்ல முடியாது. Rt இல் ஏற்படும் சிறு மாறுபாடும் நோயின் போக்கில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்தி தவறான முன்கணிப்பிற்கு வழி வகுத்து விடும்.

இரண்டாவது, லண்டன் இம்பீரியல் கல்லூரி உருவாக்கியது போன்ற தனிநபர் பரவல் மாதிரி (Individual spread model). பரந்த நிலப்பரப்புகளுக்கு இடையே மக்கள் பயணம் செய்யும் போது ஏற்படும் பரவலைக் கணிக்கிறது. துல்லியத்தைப் பொறுத்தவரை இதுவும் முந்தையதைப் போன்றதே. 

மூன்றாவது வலைப்பின்னல் மாதிரி (network model). சிலர் மட்டும், அதிகம் பேருடன் பழக வாய்ப்பிருப்பதால், அதீத பரப்பாளராக (super spreaders) இருப்பார்கள் என்ற அடிப்படையில் கணக்கிடுவது. முன்னணி பணியாளர்களான செவிலியர்கள், அரசியல் வாதிகள் ஆகியோரை அவர்கள் அதிகம் பேரை சந்திக்க வேண்டியதிருப்பதால் இவ்வாறு கணிக்கலாம். நோய்த்தடுப்பூசி பற்றாக்குறையாக இருக்கும் போது யாருக்கு முதலில் போடுவது என்பதை கணிப்பதற்கு உதவும் மாதிரி இது. 

இறுதியாக வளைவுப் பொருத்துதல் மாதிரி (curve fitting). இதுவரை நடந்த நோயின் போக்கினை அடிப்படையாக வைத்துக் கொண்டு அதன் நீட்சியாகவே எதிர்காலத்தில் நடப்பதைப் பார்ப்பது. இது பெரும்பாலும் உபயோகரமானதாக இருப்பதில்லை. நாம் நடை முறையில் பார்ப்பது போல், பல நேரங்களில் தவறான கணிப்புகளையே இவை தருகின்றன.

அனைத்து மாதிரிகளிலும் Rt எண் பொதுவானதாக இருப்பது கவனிக்கத் தக்கது.

மந்தை நோய் தடுப்பாற்றல் (Herd Immunity):

தொற்று முடிவதற்கான ஒரே வழியாக பொது வெளியில் அனைவராலும் பேசப்படும் ஒன்று மந்தை நோய் தடுப்பாற்றல்.

தொற்றுப் பரவல் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் ஏற்பட்டபின், அதற்கு மேலும் பரவுவதற்கு வாய்ப்புகள் இல்லாத போது - ஒரு வேளை அது தடுப்பூசியினால் ஏற்பட்டிருக்கலாம் அல்லது ஏற்கெனவே தொற்றுக்கு ஆளாகி குணமடைந்தவர்களும், தடுப்பூசி போட்டவர்களும் ஒரு அரணாக இருந்து, மீதி இருப்பவர்களை காப்பாற்றி விடுவதாக இருக்கலாம். அத்தகைய ஒரு நிலையை அடையும் போது சமூகம் மந்தை நோய் தடுப்பாற்றலை பெற்று விட்டது எனலாம்.

எத்தனை சதவீதம் பேருக்கு நோய்த்தடுப்பாற்றல் கிடைத்தால், மந்தை தடுப்பாற்றல் வந்து விட்டது என்பது ஒரு விவாதத்திற்குரிய விஷயம். அது மேலே குறிப்பிட்ட R0 எண்ணைப் பொருத்திருக்கிறது. கொரொனாவின் R0, 2.5 என எடுத்துக் கொண்டால். மந்தை தடுப்பாற்றல் அளவு 60% என இருக்கும். அதாவது 60% பேருக்கு நோய் தடுப்பாற்றல் ஏற்பட்டால் அதற்கு மேல் மற்றவர்களுக்கு பரவ வாய்ப்பில்லை

ஆனாலும் சரியாக 60% பேருக்கு மேல் பரவாது என்று சொல்வதற்கில்லை. அதற்கு மேல் அதன் வேகம் குறிப்பிடத்தக்க அளவு குறைந்து போகும் என்று மட்டுமே சொல்ல முடியும். அது முழுக்க அழிந்து போவதற்கு இன்னும் கூடுதலாக 20% பேர் வரை பாதிக்கப்படக் கூட வாய்ப்பிருக்கிறது.

மக்களின் நகர்தல் தன்மையைப் பொறுத்து, R0 வும் வேறுபட வாய்ப்பிருப்பதால், மந்தை தடுப்பாற்றலும் ஊருக்கு ஊர், நாட்டுக்கு நாடு வேறுபடும். மேலும் சமூக நடவடிக்கையாலும் இது மாறுபடும். எனினும் பெரும்பாலான நோய் பரவலியளாளர்கள் அது 50 சதவீதம் வரை இருக்கலாம் என மதிப்பிடுகின்றனர். இது டிப்தீரியாவிற்கு 75 சதவீதமும், தட்டம்மைக்கு 91 சதவீதமுமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

முந்தைய பெருந்தொற்றுக்கள் எப்படி முடிவுக்கு வந்தன?

உலகம் இது போன்ற பல பெருந்தொற்றுக்களை இதற்கு முன்னரும் சந்தித்திருக்கின்றது.

எந்த பெருந்தொற்றும் இதுவரை மனித குலத்தை ஒட்டு மொத்தமாக அழித்தது இல்லை. கொரொனாவைப் பொருத்தவரை அது புதிதான ஒன்று என்பதால் நம்மை கவலை கொள்ள வைக்கின்றது.

வைரஸ் அல்லது பாக்டீரியாக்களுக்கு மனித இனமும், விலங்கினமும் மட்டுமே வசிப்பதற்கு உகந்த தங்குமிடம். இந்த தங்குமிடத்தை விரிவுபடுத்திக் கொள்ள விழையும் அதன் எந்தவொரு மரபணு பிறழ்வும் (genetic mutation) அது உயிர் வாழ்வதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும் உதவுகின்றன. வைரஸும் பாக்டீரியாவும், மனிதர்கள் மற்றும் விலங்குகளிடையே பரஸ்பரம் இடம் பெயர்ந்திருக்கின்றன. இனிமேலும் இடம் பெயரும். 

இது வரை மனித இனம் சந்தித்த பெருந்தொற்றுக்கள் நான்கு வழிகளில் முடிவுக்கு வந்திருக்கின்றன.

தொற்று பரவுவதற்கு மனிதர்களே கிடைக்காத சூழ்நிலை. தொற்றின் இறப்பு விகிதம் அதிகமாக இருந்து, மக்கள் தொகையின் எண்ணிக்கையே சிறுத்துப் போய் விடும்போது. அல்லது அந்த நுண்ணுயிரி எதிர்ப்பு சக்தியுள்ள ஒரு சிறிய குழுவை விடுத்து மற்ற அனைவரையும் அழித்து விடுவது. 14ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் பரவிய கருப்பு மரணம் (Black Death) என்னும் பிளேக் நோய் இவ்வாறுதான் முடிவுக்கு வந்தது. அதன் இறப்பு விகிதம், நிணநீர் முடிச்சு பாதிக்கும் வகைப்பட்ட பிளேக்கினால் 80 சதவீதமும், நுரையீரல் பாதிக்கும் வகைப்பட்ட பிளேக்கினால் 100 சதவீதமும் இருந்தன. ஏறக்குதைய 30 இலிருந்து 60 சதவீத ஐரோப்பிய மக்கள் தொகையினை பலி கொண்டு விட்டது. 

சில வேளை அந்த நுண்ணுயிரி அதனால் உயிர்பிழைத்திருக்க முடியாத தடுப்பாற்றலுடன் மக்கள் நோயிலிருந்து மீண்ட பொழுது தொற்று நோய் முடிவுக்கு வந்திருக்கின்றன. இங்கிலாந்தில் தோன்றிய வேர்வை நோய் (sweating sickness) இப்படித்தான் முடிவுக்கு வந்தது. 

இரண்டாவது வகையான முடிவு நுண்ணுயிரி பரவ முடியாத சூழலியல் மாற்றங்களினால் ஏற்படுவது. உதாரணமாக ஐரோப்பாவில் பிளேக் நோய், எலிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தியதால் குறைந்தது. அதேபோல் பாதுகாப்பான பாலியல் முறைகள், பாதுகாப்பான ஊசிகள் மூலம் மருந்து செலுத்தும் முறைகளால் HIV நோய் கட்டுக்குள் வந்தது.

மூன்றாவது வகையான முடிவு நுண்ணுயிரி தானே மரபுப் பிறழ்விற்கு (genetic mutation) உட்பட்டு வீரியம் குறைந்ததாக மாறிக்கொள்வது. எவ்வாறு சிலவகை கொரொனாவைரஸ்கள் உருமாறி தற்போதைய சாதாரண தடுமலாக உருவாகியிருக்கிறதோ அதைப்போல. பரிணாம வளர்ச்சி கொள்கையின்படி, அந்த நுண்ணுயிரிகள், அதிகமான மனிதர்களிடம் பரவி, தனது இருத்தலை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, பாதிப்பு குறைந்த வடிவங்களையே தேர்ந்தெடுக்கிறது. ஏற்கெனவே மனிதரிடத்தில் பாதிப்பில்லாத நான்கு வகையான கொரோனா வைரஸ்கள் சுழன்று கொண்டிருப்பது போல் ஐந்தாவதாக இது இணைந்து கொள்ளலாம்.

நான்காவது வகை முடிவு ஒரு சரியான தடுப்பூசி அல்லது சிகிச்சை முறையினால் ஏற்படுவது. இது அந்த நுண்ணுயிரி தன்னை மரபணு பிறழ்வு செய்து கொண்டு தப்பிப்பதை தடுத்து விடுகிறது. மேலும் அதற்கு விலங்கு இருப்பிடம் (animal host) கிடைக்காத போது முற்றிலும் அழிந்து விடுகிறது. பெரியம்மையும், போலியோவும் இதற்கு சிறந்த உதாரணங்கள். HIV கூட தடுப்பூசியின்றி, சிகிச்சை முறையினால் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டது. 

கொரோனாவைப் பொருத்தவரை இறப்பு விகிதம் மிகக் குறைவாக இருப்பதால் முதலாவது வழிக்கான வாய்ப்பு இல்லை. ஆனாலும் குணமடைந்தவர்களின் தெரிவுநிலை இனப்பெருக்கத்தால் (selective reproduction) சந்ததியினருக்கு எதிர்ப்பு சக்திவரும் அளவிற்கு மரபியல் பாதிப்பு இருக்கின்றதா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. 

முகக் கவசம் அணிவதும், சமூக இடை வெளி கடைப்பிடிப்பதும் ஒரளவிற்கு பயன் தரும் இரண்டாவது வழி. ஆனாலும் வைரஸை அழிக்கும் அளவிற்கு அவ்வளவு செயல்திறனுள்ள வழி என்று சொல்வதற்கில்லை.

மரபணு பிறழ்வு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன. இப்போதே பல கொரொனா வைரஸ் ஸ்ட்ரெயின்கள் (strains) இருப்பதாக கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதன் வீரியம் குறைவதையோ அதிகமாவதையோ பற்றி ஆய்வுகள் இன்னும் உறுதி செய்யவில்லை.

நோய்த் தடுப்பூசியைப் பொறுத்தவரை பல்வேறு நாடுகளில், பல ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆய்வில் ஈடுபட்டுள்ளன. எனினும் பல கட்ட சோதனைகளையும் கடந்து சாதாரண குடிமக்கள் அனைவருக்கும் கிடைப்பதற்கு 1 முதல் 2 வருடங்கள் ஆகலாம் என்றுதான் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

எப்போது முடியும், எப்படி முடியும்:

கொரோனா எப்போது, எப்படி முடியும் என்பது பல காரணிகளைப் பொறுத்திருக்கிறது. வைரஸைப் பற்றிய நிச்சயமற்ற தன்மைகள் ஒருபுறமிருக்க, நீண்ட நாள் ஊரடங்கின் பலாபலன்கள், அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நாடுகள் எடுக்கும் முடிவுகளைப் பொருத்தும் இருக்கின்றது.

மனித குலம் இதுவரை எதிர்கொண்ட நோய்த்தொற்றுக்கள் முடிவுக்கு வந்த காரணிகளின் ஒரு கலவையாகத்தான் கொரோனா வைரஸின் எதிர்காலமும் இருக்கும்.

sciencemag.org என்ற இணைய தளத்தில் வெளியான கணித மாதிரிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரை கொரோனா பரவுதலின் இயக்கத்தினை 2025 ஆம் ஆண்டு வரை ஆய்வு செய்திருக்கின்றது.

அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில் கொரோனா நோயின் தாக்கம் எப்படி இருக்கும்? ஆரம்பக் கட்ட தொற்று அலை ஏற்பட்டதற்குப் பின், மனித வாழ்க்கையின் மறு சுழற்சியில் (re-circulation) அது கலந்து விடுகிறதா என்பதைப் பொருத்து இருக்கிறது. மேலும் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டு குணமடைந்தவர்களின் நோயெதிர்ப்புத் தன்மையின் (immunity) காலம் எவ்வளவு என்பதைப் பொருத்தும் அமையும். 

தற்போதைய பெருந்தொற்று சூழ்நிலையிலும், பெருந்தொற்றுக்குப் பிந்தைய கால கட்டத்திலும் ஏற்படும் தொற்று அபாயத்தின் அளவையும், காலத்தையும் இப்படி சொல்கிறது: சிறு அளவிற்கு பருவநிலை சார்ந்தும் இருக்கலாம். மனிதர்களிடத்து மற்ற பீட்டா கொரோனா வைரஸ்களுக்கெதிரான நோயெதிர்ப்பு, கொரோனா வைரஸின் நோயெதிர்ப்பாக அமையும் வாய்ப்பினைப் பொருத்தும் இருக்கலாம். 

சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது மட்டுமே, மருத்துவ வசதிகளின் தேவையின் நெருக்கடியை குறைக்கும். இன்னும் தீவிர நடவடிக்கைகளான தொடர்புகளை கண்டறிதல், தனிமைப்படுத்தல் ஆகியவை கொரோனா பரவுதல் வேகம் குறைய உதவும். 

சரியான சிகிச்சை முறையோ, தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படாத பட்சத்தில், 2022 ஆம் ஆண்டு வரை விட்டு விட்டு இத்தகைய தீவிர நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டியிருக்கும்.

கொரோனாவின் தீவிர நோய் பரவல் வருடம் முழுவதும் இருக்கும். கோடை காலத்தில் சற்று மிதமாகவும், குளிர்காலத்தில் தீவிரமாகவும் இருக்கும்.

கொரோனா பாதிப்புக்குள்ளானவரின் நோயெதிர்ப்பு தன்மை நிரந்தரமானதாக இல்லாவிடில், அது வழக்கமான மற்ற பீட்டா கொரோனா வைரஸ்கள் (HKU1 மற்றும் OC43) போல மனித நோய் சுழற்சியில் கலந்து விடும். குறைந்த நோயெதிர்ப்பு (40 வாரங்கள்) இருந்தால் வருடமொரு முறையும், நீண்ட நோயெதிர்ப்பு இருந்தால் (2 வருடங்கள்) இரண்டாண்டுக்கு ஒரு முறையும் மீண்டும் வெளிப்படும்.

நோயெதிர்ப்பு நிரந்தரமானதாக இருந்தால் மட்டுமே, இந்த தீவிர தொற்றுக்குப் பின், 5 அல்லது அதற்கு மேலான வருடங்களுக்கு அது மறைந்து போய்விடும். 

மொத்தத்தில் மனித இனம் தனது சாதாரண வாழ்க்கைக்குத் மீண்டும் திரும்ப குறைந்தது இரண்டு வருடங்களும், வைரஸிலிருந்து முழுவதும் விடுபட ஐந்து வருடங்களும் ஆகலாம்.

(நன்றி: quantamagazine.org, national geographic, the guardian.com, the print.in, social science space.com, sciencemag.com இணைய தளங்கள்)

இரா.ஆறுமுகம்

உதவிப் பொது மேலாளர்,

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம்,

மணப்பாறை