உலக மக்கள் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தம் நாடுகளை பாதுகாக்க தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். COVID-19 தாக்கத்தைத் தொடர்ந்து கண்காணித்து வரும் உலக சுகாதார நிறுவனம் மார்ச் 12-ஆம் தேதி இதை 'This is a controllable pandemic' என்றார்கள். 

சீனாவுக்கு அடுத்தபடியாக இந்த வைரஸின் தாக்குதல் அதிகம் இருக்கும் நாடு இத்தாலி. இது சீனாவில் இருந்து பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கிறது. இதுவரை 41,305 மக்களுக்கு (மார்ச் 17 கணக்குப்படி) வைரஸ் தொற்று பாதிப்பு (tested positive) இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதில் 3,405 மக்கள் வைரஸ் பாதிப்பினால் இறந்துள்ளனர் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது உலக சுகாதார நிறுவனம். இந்த எண்ணிக்கை சீனாவை விட அதிகமாகும் என்பது அதிர்ச்சி அளிக்கும் செய்தி.

south korea on corona testingசீனாவின் நிலப்பரப்போடு ஒட்டியிருக்கும், (வட கொரியாவின் நிலைமை அவர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது) 50 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டுள்ள தென் கொரியாவில் 8,320 மக்களுக்கு மட்டுமே வைரஸ் தொற்று (tested positive) இருக்கிறது. அதிலும் இதுவரை 81 மக்கள் மட்டுமே இறந்துள்ளனர் என்கிறது அந்நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தி.

எப்படி தென் கொரிய நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதை நிறுத்தினார்கள்? அவர்களின் வெற்றியின் இரகசியம் என்ன? இதை விளக்கினார் கொரிய பல்கலைக்கழக நோய் தடுப்புப் பிரிவின் வல்லுநர் Kim Woo-Joo. "மக்களை தனிமைப்படுத்தி (quarantine) அவர்களுக்கு மிகவும் திட்டமிடப்பட்ட பரிசோதனைகள் மேற்கொண்டது தான் எங்கள் வெற்றியின் இரகசியம்" என்றார் அவர். தென் கொரியாவின் 'Korea Centers for Disease Control and Prevention (KCDC)' 270,000 மக்களுக்கு தாமாகவே முன்வந்து சோதனைகள் செய்துள்ளது. இது ஒரு மில்லியனில் 5,200 மக்களுக்கு சோதனைகள் என்ற அடிப்படையில் நிகழ்த்தினார்கள். உலகில் வேறு எந்த நாடும் செய்யாத நடவடிக்கை இது. அமெரிக்காவில் ஒரு மில்லியன் மக்களில் 74 பேருக்கு மட்டுமே இதுவரை சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்கிறு CDC (Centers for Disease Control and Prevention). தென் கொரியாவின் இந்த நடைமுறையை உலக நாடுகள் பின்பற்றலாம்.

சீனாவில் இந்த நோயின் தாக்கம் அதிகரித்துக் கொண்டிருந்த சமயத்தில் தென் கொரியாவில், அரசாங்கம் நோய் கண்டறியும் சோதனைக் கருவிகளை (testing equipments) அதிகமாக உற்பத்தி செய்யத் தொடங்கியிருந்தனர். பிப்ரவரி 7-ஆம் தேதி இந்தக் கருவிகளை பயன்படுத்த அரசாங்கம் ஒப்புதல் அளித்தது. அதனைத் தொடரந்து நோயின் அறிகுறிகள் தென்படும் மக்களுக்கு சோதனை நடத்தியதில், பிப்ரவரி 18-ஆம் நாள் அந்நாட்டில் 61 வயது மதிக்கத்தக்க முதல் பெண் நோயாளி 'test positive' எனக் கண்டறியப்பட்டார். அவர் பிப்ரவரி 9 மற்றும் 16-ஆம் தேதிகளில் 'Shincheonji megachurch in Daegu' தேவாலயத்தில் நடைபெற்ற ஞாயிறு ஆராதனைக் கூட்டத்தில் கலந்து கொண்டவர் ஆவார். பின்னர் அந்தப் பகுதியில் மட்டும் 2,900 பேருக்கு நோயின் தாக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இந்தப் பகுதி மக்கள் அனைவருக்கும் வைரஸ் சோதனைகள் நடத்த அவசர கால நடவடிக்கைகள் எடுத்தார்கள்.

MERS நோயிலிருந்து கற்றுக் கொண்ட பாடம்

2015ல் தென் கொரிய தொழிலதிபர் ஒருவர் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து திரும்பிய போது அவருக்கு MERS (Middle East respiratory syndrome) நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. மேலும் அவரை மருத்துவமனையில் சோதனையிட்டு தனிமைப் படுத்தினார்கள். அவரைத் தொடர்ந்து அவருடன் தொடர்புடைய 186 பேருக்கு இந்த நோய் பரவியது. அதில், 36 பேர் மரணத்தைத் தழுவினார்கள்.

நோயின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கிய போது அரசு தாமாகவே முன் வந்து மக்களுக்கு சோதனைகள் மேற்கொண்டது. கிட்டத்தட்ட 17,000 ஆயிரம் பேருக்கு நோய்த் தொற்று இருப்பதைக் கண்டுபிடித்து அவர்களை இரண்டு மாத காலத்திற்கு தனிமைப்படுத்தினார்கள். அன்றைய காலத்தில் தென் கொரிய நாடு முழுவதும் இது பரவலாக காணப்பட்டது. மேலும் இந்த நோயின் (epidemic) தாக்கம் அவர்கள் பொருளாதாரத்தையும் சிதைத்து.

MERS நோயிலிருந்து கற்றுக் கொண்ட பாடமாக மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்துவதிலும், சோதனைகள் செய்ய உபகரணங்களை (testing equipment's) அதிகரிக்கும் திட்டத்தை மேற்கொண்டார்கள். இந்த படிப்பினை, கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து எப்படி தம்மைப் பாதுகாக்க வேண்டும் என்பதை அவர்களுக்கு கற்றுத் தந்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கிய நபர்களை (Positive cases) தீவிர கண்காணிப்பில் கொண்டு வந்தது அரசாங்கம். அதாவது அந்த நபர்கள் பயன்படுத்திய வங்கிக் கடன் அட்டை, செல்போன் மற்றும் பிற தகவல்கள் மூலம் அவர்களின் சமீபத்திய நடவடிக்கைளைக் கண்டறிந்தார்கள். மேலும் அவர்கள் சென்றுள்ள இடங்களைக் கண்டறிந்து அங்கு விழிப்புணர்வுப் பிரச்சாரம் அதிகம் ஏற்படுத்துவது, அந்தப் பகுதிகளை சுத்தப்படுத்துவது (sanitization) போன்ற நடவடிக்கைகள் மேற்கொண்டார்கள். இது ஒரு வகையில் தனிநபர் சுதந்திர வாழ்கையில் தலையிடுவது போல் தெரியும். ஆனால், இது அந்நாட்டில் நோயின் தாக்கத்தைக் குறைப்பதில் பங்களிப்பு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதே வேளையில் வைரஸ் பாதிப்புக்குள்ளான நபர்களை (high risk patient) முதன்மைப் படுத்தி அவர்களை மருத்துவமனைகளில் தொடர்ந்து சோதித்து வந்தார்கள். மேலும் அவர்களை தனியாக ஓர் இடத்தில் தங்க வைத்து அவர்களுக்கு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் பிற தேவைகளை செய்து கொடுத்தார்கள். வைரஸ் சோதனை செய்து கொண்ட நபர்களுக்கு 'test negative' என வந்தால், அவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை அரசாங்கம் அறிவுறுத்தியது. அதாவது, தம்முடைய உடம்பின் வெப்பநிலையைத் தொடர்ந்து கண்காணிப்பு செய்வது. இரண்டு வாரங்களுக்கு வெளியுலகில் எந்தத் தொடர்பிலும் இல்லாமல் இருத்தல் (self quarantine) போன்ற செய்முறைகளை அரசாங்கம் மக்களுக்குத் தெரிவித்தது. அதோடு உள்ளூர் அரசாங்க அலுவலக ஊழியர்கள் அவர்களைத் தொடர்ந்து அலைபேசியில் அழைத்து தற்போதைய நிலைமையைத் தெரிந்து கொண்டார்கள். இந்த விதிமுறைகளை மீறும் நபர்களுக்கு 3 மில்லியன் வோன் (2,500 டாலர்கள்) அபராதம் விதிக்கப்படும் என்றது அரசாங்கம்.

நாடு முழுவதும் ஒரு நாளைக்கு 15,000 சோதனைகள் என்ற வீதத்தில் நம்ப முடியாத அளவுக்கு அரசாங்கம் இறங்கியது. இதில் வாகனத்தில் இருந்தபடியே சோதனைகள் மேற்கொள்வது ('drive through test centers') போன்ற நிலையங்கள் ஏற்படுத்திக் கொடுத்தார்கள். கல்வி நிலையங்கள், வணிக வளாகங்கள், விளையாட்டுக் கூடங்கள் போன்றவைகளை முறையான அறிவிப்போடு நிறுத்தி விட்டார்கள். மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒருவருக்கொருவர் ஆறு அடி இடைவெளி விட்டு நிற்க வேண்டும் (Social distancing) என அறிவித்தார்கள். இந்த முறையை அமெரிக்கா, கனடா, மற்றும் பிற ஐரோப்பிய நாடுகள் கடைபிடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

(மூலம்: https://www.sciencemag.org/news/2020/03/coronavirus-cases-have-dropped-sharply-south-korea-whats-secret-its-success)

- பாண்டி