பொதுப் புத்திக்காரனாய்
ஞாபகமறதியுடன்
போராடிக் கொண்டிருந்தேன்

பித்தளைப் பாத்திரத்தில்
பெயர் பொறிக்க வந்த
போது பழக்கம்

வீட்டின் பெயரை
கல் வில்லையில்
செதுக்கித் தந்து
காசு வாங்கிய கையோடு
வேற்றூர் சென்று விட்டவன்
பெயர் என்ன

அணை கட்டும் போது
இறந்த தொழிலாளிகளின்
அனைத்துப் பெயர்களையும்
பொறிக்க ஆரம்பித்த
தந்தையே காலமாக
முடித்துக் கொடுத்தவன் அவனாம்

பசு வலி கண்டரற்ற
வெளியேறும் பனிக்குடத்துள்
தெரியும் கன்றின் தலை போல்
கல்லுக்குள் அசாதாரணச் சிலை
காணும் சிறப்புப் புத்திக்காரன்தான்

துலங்கி வந்து கொண்டிருக்கும்
சிலைகளேனோ கடைசியில்
கொருவாய் விழுந்து போகுமென
நொம்பலப்பட்டுச் சொல்லிக்
கொண்டிருந்தான்

எந்தச் “சிற்பியின் நரகத்”தில்
எந்த மொழிக் காரர்களுக்காய்
என்ன வடித்துக் கொண்டிருக்கிறானோ
எழுதப் படிக்கத் தெரியாத அவன்
Pin It