காக்கா வலிப்பு நோய், சுத்தமாக சொல்ல வேண்டுமானால் கால் கை வலிப்பு நோய்களில் தீவிர, அதிதீவிர, மெத்தனம் என்று மூன்று வகைகள் இருக்கின்றன. மாதம் இரண்டு முதல் ஐந்து முறைவரை வலிப்பு வரும் ரகம் தீவிர ரகம். வலிப்பு வருவதற்கு முன் வினோதமான சப்தங்கள் அல்லது வண்ணங்கள் தெரியும். இதற்கான காரணம் இடது காதுப்பகுதி மூளைக் கார்ட்டெக்சில் நரம்புச்செல்களில் புயல்போல மின் தூண்டல்கள் நடைபெறுவதே. இது தணிந்த பிறகுதான் நோயாளி மறுபடி நல்ல நிலைக்கு வருவார். கைகளில் இரும்பைக் கொடுத்தால் வலிப்பு குறையும் என்று நம்பப்படுகிறது. உண்மையில் அதனால் ஏதாவது பலனிருக்கிறதா என்பது இன்னமும் தெரியவில்லை. கொடுப்பதால் கெடுதியும் இல்லை.

காக்கா வலிப்புக்குக் காரணம் அதிக அளவில் நரம்பு செல்களுக்கிடையே சினாப்ஸ் தொடர்புகள் நீக்கப்படாமல் இருப்பது என்கிறார்கள். பிறந்த முதல் ஆண்டுமுதல் ஐந்தாம் ஆண்டுவரை கார்ட்டெக்ஸ் பகுதியில் தேவைக்கு அதிகமாக இணைக்கப்பட்டிருக்கும் நரம்பு இணைப்புகள் களைந்து நீக்கப்படும் வேலை நடைபெறுகிறது. இது வழக்கமான மூளை ‘வளரும்' நிகழ்ச்சியில் ஒன்றுதான். காக்காய் வலிப்பு உடையவர்களில் இந்த நிகழ்ச்சி தடைபெறுகிறது.

லியூசின் ரிச் கிளையோமா இனாக்டிவேட்டட் 1 (LGI 1) என்ற ஜீனில் ஏற்படும் பிழை இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று பெத் இசரேல் மெடிக்கல் கழகம் கண்டுபிடித்திருக்கிறது. இந்த ஜீனில் ஏற்படும் பிழைக்கும் நரம்பு செல்கள் களைபிடுங்கப்படாமல் இருப்பதற்கும் ஒரு தொடர்பு இருப்பது தெரிய வந்திருக்கிறது. காரணம் தெரிந்துவிட்டதால், இதற்கான நிவாரணமும் தெரிந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.

- முனைவர். க. மணி, பயிரியல்துறை. பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரி. கோயம்புத்தூர்