"அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது; அதனினும் அரிது கூன் குருடு செவிடு பேடு இன்றி பிறத்தல் அரிது" எனும் ஔவையாரின் வாக்கிற்கிணங்க இவ்வுலகத்தில் பிறத்தலைக் காட்டிலும், உடல் உறுப்புகள் செயல்பாட்டுடன் பிறத்தல் என்பது மிக முக்கியமாக கருதப்படுகிறது. ஆனால் கால்களில் சக்கரங்களை கட்டிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் தற்போதைய நிலையில் "ஆட்டிசம்" என்று கூறப்படும் மன இறுக்க தன்மை குழந்தைகளிடத்தில் அதிகமாக காணப்பட்டு வருகிறது. அவ்வாறு ஆட்டிசத்தால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு மற்றவர்களுடன் தொடர்புகொண்டு பேசுவதிலும், பழகுவதிலும் சிக்கல்கள் உருவாகின்றன. அச்சிக்கல்களை தகற்பதற்காக பலவித விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் மாற்றுமுறைகளை கண்டுபிடித்து செயலாற்றி வருகின்றனர். அவ்வகை மாற்று முறைகளுள் "படங்களை பரிமாற்றம் செய்து தனது உரையாடலை வெளிப்படுத்தும் முறையான பெக்ஸும்" ஒன்று. இம்முறையில் தமிழை அறிமுகப்படுத்தி அக்குழந்தைகளுக்கு கற்பித்தால், தமிழ் மொழியில் பேசும் திறனை ஆட்டிசக் குழந்தைகளிடம் மேம்படுத்த முடியும்.

பெக்ஸ் ஓர் கண்ணோட்டம்

பெக்ஸ் என்பது படங்களைக் கொண்டு தகவலை பரிமாறும் ஒரு மாற்று முறையாகும். எவ்வாறு பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு பிரெய்லி முறை கற்றலில் ஒரு மாற்று முறையோ அதேபோல் ஆட்டிசக்குழந்தைகளுக்கான தகவல் பரிமாறிக் கொள்வதில் இதுவும் ஒரு மாற்று முறையாகும். இதை 1985 ஆம் ஆண்டு அமெரிக்காவில் முனைவர் ஆன்டிபான்டி மற்றும் பேச்சு பயிற்சியாளர் லாரி ஃப்ரோஸ்ட் போன்றபிரமிட் கல்வி இயல் ஆலோசகர்களால் உருவாக்கப்பட்டது (Bondy and Frost, 1998, 2011).

பெக்ஸ் பயிற்சி விளக்கங்கள்

இம்முறையானது 6 கட்டங்களாக குழந்தைகளுக்கு கற்பிக்கப்படுகிறது. முதற்கட்டமாக குழந்தை தனக்கு தேவையான பொருள் மற்றும் செயல்களுக்கான படங்களை எடுத்துக்கொடுத்து தனது தேவைகளை தெரிவிப்பது. இரண்டாம் கட்டமாக அந்தப் படங்களில் பயன்பாட்டை வேறு இடங்களில் பயன்படுத்தி பழகுவது. மூன்றாவதாக பெக்ஸ் புத்தகத்தில் இருக்கும் பல படங்களில் இருந்து தனக்கு தேவையான ஒன்று அல்லது 2 படங்களை மட்டும் எடுத்துக் கொடுப்பது. நான்காம் கட்டமாக எளிய வாக்கியம் அமைத்து வளர்ப்பது அதாவது வாக்கியங்கள் உடன் இணைப்பு வார்த்தைகள் உரிச்சொற்கள் சேர்த்து சொல்வது. அடுத்த கட்டமாக, கேட்கும் கேள்விக்கான பதிலை கூற வைப்பது. இறுதியாக ஆறாம் கட்டத்தில், கேள்வி வாக்கியத்திற்கான சரியான பதில் வாக்கியத்தை கூறுவது.

தமிழ் பெக்ஸ் முறையின் முக்கியத்துவம்

பெக்ஸ் முறையானது, ஆங்கிலம்,ஸ்பானியம், ஜெர்மன், பிரெஞ்சு,கிரேக்கம் மற்றும் ஜப்பானியம் போன்ற அந்நிய மொழிகளில் மட்டுமே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால் இந்திய மொழிகளில் இன்றளவும் மொழிபெயர்க்கப்படவில்லை. மேலும், இது தகவல் பரிமாறும் ஒரு கருவியாக மட்டுமே செயல்பட்டு வருகிறது. சில குழந்தைகள் மட்டுமே பேசும் திறனை வளர்த்துக் கொள்கின்றனர் என்று ஆராய்ச்சிகட்டுரைகள் கூறுகின்றன.இந்த ஆராய்ச்சிக் கட்டுரையானது,தமிழில் பெக்ஸ்முறையை ஆட்டிச குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தி, அதன் விளைவாக அவர்களுக்கு தமிழ் மொழித் திறனை வளர்க்க முடியும் என்பதை காட்டுகிறது.

தமிழில் பெக்ஸ் ஓர் அறிமுகம்

ஆங்கில பெக்ஸ் முறையை அடிப்படையாகக் கொண்டு தமிழில் மூன்றுவிதமான கருத்துருவாக்கங்களை கற்பிக்க ஒரு முதல் முயற்சி எடுக்கப்பட்டது. மூன்று விதமான கருத்து உருவாக்கங்கள் முறையே குடும்ப உறுப்பினர்கள், பொருட்கள், மற்றும் செயல்களை உள்ளடக்கியது. ஒவ்வொரு கருத்து உருவாக்கத்தின் கீழ் பத்து வார்த்தைகள் வீதம், மொத்தம் 30 வார்த்தைகள் கற்பிக்கப்பட்டது. முதற்கட்டமாக முப்பது வார்த்தைகளையும் அடையாளம் காண தெரிய வேண்டும் அதாவது குடும்ப உறுப்பினர்களில் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, அத்தை, மாமா, அண்ணா, அக்கா, தம்பி, மற்றும் தங்கை போன்ற வார்த்தைகளும், பொருட்களில் பூ,பந்து, ஐஸ்க்ரீம்,துணி, செருப்பு, பென்சில், சோப்பு, தண்ணி, ஆப்பிள், பிரஸ் போன்றவையும் செயல்களில் வா, தா, பார், சாப்பிடு, தூங்கு, ஓடு, நட, சிரி, அழு, மற்றும் பாடு போன்றவை கற்று தரப்படும். இவை அனைத்தையும் அடையாளம் காணச் செய்வதே முதற்கட்டத்தின் குறிக்கோள். அடுத்த கட்டமாக, அவைகளின்பெயர்களை வாய் வழியே கூறவேண்டும். மூன்றாவது கட்டமாக இரண்டு வார்த்தைகளை சேர்த்து எளிய வாக்கியம் உருவாக்க வேண்டும். உதாரணமாக," அம்மா தா","அப்பா பார்" "பூ பார்" "அண்ணா அழு" போன்ற இரண்டு வார்த்தைகளை கொண்ட வாக்கியங்கள் வாய் வழியே குழந்தை கூறவேண்டும். நான்காவது கட்டமாக மூன்று வார்த்தைகளை கொண்ட எளிய வாக்கியத்தில் பேசுவதாகும்." அம்மா பூ தா" "தாத்தாஆப்பிள் சாப்பிடு" இவ்வாறு ஆட்டிசக் குழந்தைகளின் தகவல் பரிமாறும் மற்றும் தமிழ் மொழியில் பேசும் திறனையும் வெளிக் கொணர்வது.

ஆராய்ச்சி மேற்கொண்ட முறை

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சாதாரண மற்றும் சிறப்பு பள்ளிகளில் பயிலும் மூன்று முதல் 10 வயதிற்கு உட்பட்ட 30 ஆட்டிசம் குழந்தைகள் இந்த ஆய்விற்காக எடுத்துக் கொள்ளப்பட்டனர். பரிசோதனை வடிவமைப்பு முறையை பயன்படுத்தி 30 எண்ணிக்கையுள்ள ஆட்டிசக் குழந்தைகளை ஒரே குழுவாக எடுத்துக்கொண்டு தமிழ் பெக்ஸ் முறையை கற்பிப்பதற்கு முன் ஒரு தேர்வு நடத்தப்பட்டு, தமிழ் பெக்ஸ் கற்பித்த பிறகு ஒரு தேர்வு நடத்தப்பட்டு, அதன் மதிப்பெண்களை தரவு பகுப்பாய்வு செய்தும் ஆராயப்பட்டது.

தமிழ் பெக்ஸ் இடையீட்டு பயிற்சி

நான்கு சிறப்பு பள்ளிகள் மற்றும் மூன்று சாதாரண பள்ளிகளில் பயிலும் ஆட்டிசக் குழந்தைகளின், தமிழ்மொழியின் திறனை முன் தேர்வு நடத்தப்பட்டு அதன் மதிப்பெண்கள் பெறப்பட்டன பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கான தமிழ் பேசும் முறையை பற்றிய விழிப்புணர்வு முகாம் ஒன்று நடத்தப்பட்டு, அதில் அவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டது. பயிற்சி அளித்த பிறகு வாரம் ஒருமுறை ஆராய்ச்சியாளர் ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று ஆட்டிசம் குழந்தைகளின் முன்னேற்ற பணிகளை கண்காணித்து, முன்னேற்றம் இல்லை எனில் அதற்கான கற்பித்தல் முறையை தெளிவுபடுத்தி, மீண்டும் பயிற்சி அளித்தும் வந்தார். ஆறுமாதங்களாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஆராய்ச்சி, பின் தேர்வு நடத்தப்பட்டு மதிப்பெண்களை பெற்று அதன் அடிப்படையில் ஆராய்வதன் மூலமாக நிறைவடைந்தது.

அவ்வாறாக கிடைத்த முன் -தேர்வு, பின்- தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் ஆராய்ச்சியாளர் தன் முடிவுகளை வெளிப்படுத்தியுள்ளார். இந்த முடிவுகளானது இரண்டு செயல்களுக்கு கீழ் ஆராயப்பட்டது. அவை யாதெனில் கருத்து உருவாக்கங்களை அடையாளம் காணும் திறன், வார்த்தைகளை இணைக்கும் திறன்.

கருத்து உருவாக்கங்களை அடையாளம் காணும் திறன் மற்றும் வார்த்தைகளை இணைக்கும் திறன் அடிப்படைகள் நடத்திய முன்- தேர்வு, பின்- தேர்வு ஒரு தர பகுப்பாய்வு

கருத்து உருவாக்கங்களை அடையாளம் காணும் திறன் முன் தேர்வு - பின் தேர்வு அட்டவணை - 1

தேர்வு

எண்ணிக்கை

df

சராசரி

திட்ட விளக்கம்

t மதிப்பு

முக்கியத்துவம்

முன் தேர்வு

30

29

4.17

2.77

-20.10

*0.000

பின்தேர்வு

30

22.57

4.30

மேற்கண்ட அட்டவணையின் படி கருத்துருவாக்கங்கள் அடையாளம் காணும் திறனில் முன்- தேர்வுக்கும், பின்- தேர்வுக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் காணப்படுகிறது என்பதை நம்மால் உணர முடிகிறது. ஆகவே பயிற்சிக்கு முன்பு ஆட்டிசக் குழந்தைகளுக்கு இருந்த கருத்து உருவாக்கங்களை அடையாளம் காணும் திறனில் இடையீட்டு பயிற்சிக்கு பிறகு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

வார்த்தைகளை இணைக்கும் திறன்

முன் தேர்வு - பின் தேர்வு அட்டவணை -2

தேர்வு

எண்ணிக்கை

df

சராசரி

திட்ட விளக்கம்

t மதிப்பு

முக்கியத்துவம்

முன் தேர்வு

30

29

7.20

9.89

-13.39

*0.000

பின் தேர்வு

30

23.33

14.12

அட்டவணை - 2ன் படி வார்த்தைகளை இணைக்கும் திறனில் முன்தேர்வுக்கும் பின் தேர்வுக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் காணப்படுகிறது.தீர்வுகளை ஒப்பிட்டு பார்க்கையில், தமிழில் பெக்ஸ் இடையீட்டு பயிற்சி துவங்குவதற்கு முன் இருந்த திறனை விட ஆட்டிசக் குழந்தைகளின் திறனில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

பரிந்துரைகள்

தரவு பகுப்பாய்வின்படி "பெக்ஸ்" ஆங்கில முறையினை தமிழ் மொழியில் கற்றுக் கொடுத்தால்,ஆட்டிசக் குழந்தைகள் தமிழ்மொழியில் திறன் பெறுவர்; ஆட்டிசக் குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெரும் உதவியாக இருப்பது மட்டுமில்லாமல் குழந்தைகளை தமிழில் திறம்பட பேச வைக்க முடியும் என்பதனையும் இவ்வறிக்கை விளக்குகிறது. மேலும் தமிழ் முறையானது பேசுவதில் குறைபாடுடையோர், மற்றும் காது கேளாதோருக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்றும் கூறலாம்.

முடிவுரை

ஆட்டிசக் குழந்தைகளின் தமிழ் மொழியில் பேசும் திறனை மேம்படுத்த, ஆங்கிலத்தில் உள்ள "பெக்ஸ்" முறை போல் தமிழிலும் ஒரு முறையை கொண்டு வந்தால், அது அவர்களின் வாழ்வாதாரத்திற்கு வித்திடும். மேலும் வாய்மொழி அல்லாத தொடர்பு கொள்ளும் திறனில் இருந்து வாய்மொழியுடன் தொடர்பு கொள்ளும் திறனை பெறுவதற்கான சூழ்நிலைகளை தமிழ் பெக்ஸ் போன்ற பயிற்சி முறைகள் ஏற்படுத்துகின்றன. நம்மை போல் அவர்களும் மற்றவர்களுடன் பேசுவதிலும் பழகுவதிலும் முன்னேற்றம் அடைவர்." ஓர் தனி மனிதன் முன்னேறினால் தான் ஒரு சமூகமே முன்னேறும்" எனும் கூற்றிற்கு ஏற்ப இவ்வகையான குழந்தைகளின் சமூகம் மேலும் முன்னேற பெக்ஸின் மாற்றுமுறை தமிழில் தேவைப்படுகிறது.

Reference:

- கி.மஞ்சுளா, ஆராய்ச்சி மாணவி, சிறப்புக்கல்வி துறை, அவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் உயர்கல்விக் கழகம்,கோயம்புத்தூர்-641043

& முனைவர் டி.கீதா,பேராசிரியர், சிறப்புக்கல்வி துறை, அவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் உயர்கல்விக் கழகம்,கோயம்புத்தூர்-641043