மருத்துவ துறையில் ஒவ்வொரு நாளும் புதுப்புது தொழில் நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனாலும், மருத்துவ வசதி இல்லாத காலத்தோடு ஒப்பிடும் போது, இன்றைய காலத்தில் சுகப்பிரசவம் குறைந்து வருகிறது. இதுதவிர, குறை பிரசவம், எடை குறைவாக குழந்தை பிறத்தல் என பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. சரியான உணவு முறையை கடைபிடிப்பதன் மூலம் பல்வேறு சிக்கல்களை தவிர்க்க முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இதுபற்றி பார்ப்போம். 

                   பெண்கள் கருவுற்றது முதல் குழந்தையை பெற்றெடுக்கும் வரை தங்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கர்ப்ப காலத்தில் 10 கிலோ வரை எடை அதிகரிக்க வேண்டும். அதற்கு காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள், பால், முட்டை உள்ளிட்ட ஊட்டச்சத்துள்ள பொருட்களை வழக்கத்தைவிட சற்று கூடுதலாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கர்ப்பிணிகள் ஊட்டச் சத்துள்ள உணவை உட்கொண்டால்தான் குழந்தை ஆரோக்கியமுடன் வளரும். 

                   அத்துடன் சுகப்பிரசவத்துக்கும், குழந்தைக்கு தேவையான அளவு தாய்ப்பால் சுரப்ப தற்கும் ஊட்டச்சத்துள்ள உணவுப் பொருட்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்கிறார்கள் மருத்துவர்கள். பால், முட்டை, பருப்பு வகைகள், கீரை வகைகள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றில் உடல் வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள், வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் ஆகியவை அதிக அளவில் உள்ளன. கர்ப்பிணிகள் இதுபோன்ற சத்துள்ள உணவுப்பொருட்களை கூடுதலாக எடுத்துக் கொண்டால் அவர்களது உடல்நிலை ஆரோக்கியமாக இருப்பதுடன், கருவில் வளரும் குழந்தையும் ஆரோக்கியமாக வளரும். 

                   அதே நேரம் உடல் எடையை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும். 10 கிலோவுக்கு மேல் எடை கூடினால் அதுவும் ஆபத்தானது. பிரசவத்தின் போது சிக்கல் ஏற்படும். குறிப்பாக, உடல் பருமனான கர்ப்பிணிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதுபோல், நெய், வெண்ணெய், பாலா டை, ஐஸ்கிரீம், முந்திரி, பிஸ்தா, முட்டையின் மஞ்சள் கரு, தேங்காய், இறைச்சி, வனஸ்பதி ஆகிய கொழுப்புச் சத்து நிறைந்த உணவு வகைகளை அதிக அளவில் உட்கொள்ளக் கூடாது. குறைந்த அளவில் எடுத்துக் கொள்வதில் தவறில்லை. 

                        குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரை சந்தித்து பரிசோதித்துக் கொண்டு அவர்களது ஆலோசனையைப் பெற்று அதன்படி நடந்து கொள்வது நல்லது. இதன்மூலம் சுகப் பிரசவம் ஏற்படுவதுடன், குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும்.

(மாற்று மருத்துவம் ஏப்ரல் 2012 இதழில் வெளியானது)