நமது உடலில் சிறு குடலும் பெருங்குடலும் இணையும் இடத்தில் குடல்வால் என்றொரு உறுப்பு உள்ளது. ஒரு புழுவின் வடிவத்திலான பை போன்ற இந்த உறுப்பு நான்கு அங்குல நீளமும் அரை அங்குல விட்டமும் உடையது. இந்த குடல்வால் உடலுக்கு தேவையில்லாத உறுப்பு என்றே கருதப்பட்டது. மூளை, இதயம், தோல் போன்ற உறுப்புகள் மனிதன் உயிர்வாழ அவசியமானவை. ஆனால் குடல்வால் இல்லாமல் மனிதனால் உயிர்வாழமுடியும். டான்ஸில், ஞானப்பல், உடல் ரோமம் போன்றவையும் உடலுக்கு தேவையற்ற உறுப்புகள் என்றே கருதப்படுகின்றன.

stomuch_350நகங்கள், கால் பெருவிரலின் ரோமங்கள், காதுகளின் தொங்கு தசை இவையெல்லாம் மனிதன் உயிர்வாழ அவசியம்தானா? இந்த தேவையற்ற உறுப்புகள் உடலின் ஒரு பகுதியை ஆக்கிரமித்துக்கொள்வது மட்டுமன்றி, நோய்த்தொற்றுகளுக்கு இலக்காகி நம்முடைய நிம்மதியைக் கெடுக்கின்றன. இதுபோன்ற தேவையற்ற உறுப்புகளை நாம் நம்முடைய உடலில் இருந்து ஏன் அப்புறப்படுத்தக்கூடாது என்பது போன்ற கேள்வியில் நியாயம் இருப்பதாகக் கருதலாம். 

ஆனால் உண்மை அதுவல்ல. நம்முடைய உடலில் தேவையற்ற உறுப்புகளாக கருதப்படுபவை நாம் எந்த இடத்தில் வாழ்கிறோம் என்பதையும், எந்தக்காலத்தில் வாழ்கிறோம் என்பதையும் பொறுத்து அவசியமான உறுப்புகளாக மாறிவிடுகின்றன. நவீன மருந்துகளை உற்பத்தி செய்வதில் இதுபற்றிய ஆய்வுகள் பயன்படுகின்றன. மேலும் நம்முடைய மூதாதையர்களைப்பற்றிய அறிவும் இந்த ஆய்வுகள் மூலம் நமக்கு கிடைக்கிறது. வில்லியம் பார்க்கர் என்னும் அறிஞர் உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலைக் குறித்து ஆராய்வதில் ஆர்வமுடையவர். ஆனால் அவருடைய ஆய்வு அவரையறியாமலேயே குடல்வால் பற்றிய ஆய்விற்கு இட்டுச்சென்றது. உணவை செரிக்கும் வேலையை சிறுகுடல் செய்யும்போது, குடல்வால் வெறுமனே அந்த இடத்தில் உட்கார்ந்திருப்பதாக அவர் நினைக்கவில்லை.

மனித உடலில் ஏராளமான பாக்டீரியாக்கள் உள்ளன. இவற்றுள் நன்மை செய்பவையும் தீமை செய்பவையும் உண்டு. நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உணவை செரிக்கவைப்பதோடு தீமை செய்யும் பாக்டீரியாக்களை விரட்டியடிக்கிறது. நன்மை செய்யும் பாக்டீரியாக்களை செழிக்கச்செய்வதுகூட நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிப்பதற்கு சமம். இவ்வாறு செழிப்படைந்த நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உயிர்ப்படலங்களாக குடல்வாலின் சுவர்களை ஆக்கிரமித்துக்கொண்டு தீமை செய்யும் பாக்டீரியாக்களை தடுக்கும் அரணாக செயல்படுகிறது. குடல்வால் எனும் உறுப்பு நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் கிடங்கு என்பதும், தீமைசெய்யும் பாக்டீரியாக்கள் உடலை தாக்கும்போது நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் வெளிப்பட்டு உடலுக்கு பாதுகாப்பளிக்கிறது என்பதும் வில்லியம் பார்க்கரின் கருத்தாகும். ஏழ்மையான, வளர்ச்சியடையாத நாடுகளில் பசி, போதுமான மருந்துகள் இன்மை, சுகாதாரமற்ற குடிநீர், வயிற்றுப்போக்கு இவையெல்லாம் சாதாரணம். இங்கு வாழும் மக்களுக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு இயற்கையான பாதுகாப்பு சாதனமாக குடல்வால் இருக்கிறது என்கிறார் வில்லியம் பார்க்கர்.

குடல்வால் அழற்சி நோய் பெரும்பாலும் வளர்ச்சியடைந்த நாட்டு மக்களைத்தான் பாதிக்கிறது. அதாவது சுத்தமான குடிநீர், கிருமிகள் அகற்றப்பட்ட மருத்துவமனைகள், தரமான மருத்துவ வசதி பெற்றுள்ள மக்களிடம் குடல்வால் அழற்சி நோய் அதிகமாக காணப்படுகிறது. இயற்கையின் படைப்பில் குடல்வால் ஆட்டிற்குத்தாடியைப்போல ஒரு அநாவசிய உறுப்பு அல்ல. வெகுகாலத்திற்கு முன்பாக காடுகளில் சுகாதாரமற்ற சூழலில் வாழ்ந்த நம்முடைய மூதாதையர்களுக்கு இந்த குடல்வால் ஒரு பாதுகாப்பு சாதனமாக இருந்தது என்பதே உண்மை.

தகவல்: மு.குருமூர்த்தி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

இன்னும் படிக்க: http://www.medicalnewstoday.com/articles/84937.php

Pin It