உலகில் பல்லாயிரக்கணக்கான மக்களை கொள்ளை கொண்ட கொடிய நோய் அம்மை நோயாகும். இக்கொடிய கொள்ளை நோய் உலகிலிருந்து ஒழிவதற்கு மூலகாரணமாக இருந்தவர் ‘எட்வர்ட் ஜென்னர்’ ஆவார். இவர் இங்கிலாந்து நாட்டில் குளூ செஸ்டர்ஷயர் என்னும் ஊரில் 17.05.1749-ஆம் நாள் பிறந்தார். தொடக்கக் கல்வியை தமது ஊரிலேயே பயின்றார். இளம் வயதிலேயே உடற்கூறு இயலைப்பற்றி அறிந்துகொள்ள ஆர்வம் காட்டினார். ‘டேனியல் லட்லோ’ என்ற அறுவை சிகிச்சை நிபுணரிடம் உடற்கூறு இயல் குறித்து பயிற்சி பெற்றார். பின்னர் லண்டனில் உள்ள ‘செயின்ட் ஜார்ஜ்’ மருத்துவமனையில் பயிற்சி பெறுவதற்காக அனுப்பப்பட்டார்.

jenner 400அம்மை நோய்க்கு அக்காலத்தில் எந்தவித மருந்துகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. அம்மை நோய் என்று தெரிந்தால், நாட்டு மருந்துகள் பயன்படுத்தப்பட்டன. ஆனால், முறையான சிகிச்சை அளிக்கப்படாததால் அம்மை நோய் பலரின் உயிரைப் பறித்தது. இப்பூவுலகில் பதினெட்டாம் நூற்றாண்டில் அம்மை நோயினால் சுமார் ஆறு கோடிபேர் பாதிக்கப்பட்டனர். மக்கள் கூட்டம், கூட்டமாகச் செத்து மடிவதைக் கண்டு ‘எட்வர்ட்ஜென்னரின்’ உள்ளம் கசிந்தது. எப்பாடுபட்டாவது கொடுமையான அம்மை நோய்க்கு மருந்து கண்டுபிடித்துவிட வேண்டும் என துடிப்புடன் செயல்பட்டார். அம்மை நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உடல்நிலைப்பற்றி மிகவும் நுணுக்கமாகவும், தெளிவாகவும் குறிப்புகள் தயார் செய்தார்.

மாடுகளைக் கோமாரி என்ற நோய் தாக்கியது. இந்த நோய் மனிதர்களையும் தாக்கியது. கோமாரி நோயினால் பாதிக்கப்பட்டவர்களை அம்மை நோய் தாக்கவில்லை என்பதைக் கண்டறிந்தார்.

‘எட்வர்ட் ஜென்னர்’ தமது சோதனைக்கு எட்டுவயது நிரம்பிய ‘ஜிம்மிபப்ஸ்’ என்ற சிறுவனைத் தேர்ந்தெடுத்தார். ஆரோக்கியமான உடலைப் பெற்ற அச்சிறுவனுக்கு கோமாரி நோய் உண்டாகும் கிருமிகளைச் செலுத்தனார். கோமாரி நோயினால் தாக்கப்பட்டபின் அவனுக்கு குணமாகக்கூடிய தக்க மருந்துகளை வழங்கி, அவனை நோயிலிருந்து விடுபடச் செய்தார். அச்சிறுவன் நன்கு குணமடைந்த பிறகு அம்மை நோய்க்கிருமிகளை அவனுடைய உடலில் செலுத்தினார். அம்மை நோய்க்கிருமிகள் அவனைத் தாக்கவில்லை. இது ‘எட்வர்ட்ஜென்னர்’ அடைந்த முதல் வெற்றி!.

அடுத்து வேறு ஒரு சிறுவனைத் தேர்ந்தெடுத்து, அவனது உடலில் அம்மை நோய்க்கிருமிகளை செலுத்தி சோதனை செய்தார். அச்சிறுவன் அம்மை நோயினால் தாக்கப்பட்டான். அவர் கண்டறிந்த உண்மைகளை மக்களுக்கு எடுத்துரைத்தார். இதையறிந்த உலகம் பெரும் கண்டனக் குரலை எழுப்பிற்று “கடவுளால் அனுப்பப்பட்ட அம்மை நோயை எதிர்ப்பது பாவம், மனிதர்களின் பாவத்திற்காக, இறைவனிட்ட சாபமே அம்மை” என்று கூக்குரலிட்டனர். நாடெங்கும் எதிர்ப்புக்குரல் கிளம்பியது.

அம்மை நோய்க்கு அம்மைப்பால் ஊசியைத் தடுப்பூசியாக எப்படிப் போடுவது என்று கண்டறிந்தார். உலக அறிவியல் அறிஞர்களும், மேதைகளும் எட்வர்ட்ஜென்னரின் கண்டுபிடிப்பை பரிசீலித்து ஏற்றுக்கொண்டனர்.

எட்வர்ட்ஜென்னரின் கண்டுபிடிப்பைப் பாராட்டி, இங்கிலாந்து அரசு அவருக்கு ‘லார்ட்’ (Lord) பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. அத்துடன் அவருக்கு இருபதாயிரம் பவுன் பரிசையும் அளித்தது.

மேலும், அப்போதைய ரஷ்யாவை ஆண்டுவந்த ஜார்ஜ் மன்னர், எட்வர்ட் ஜென்னருக்கு விலையுயர்ந்த மோதிரம் ஒன்றை வழங்கிப் பாராட்டினார். பிரான்ஸ் நாட்டு சக்கரவர்த்தி நெப்போலியன் அவரைப் பாராட்டி சன்மானங்களை அளித்தார்.

எட்வர்ட் ஜென்னர் அன்று அரும்பாடுபட்டுக் கண்டுபிடித்த அம்மைப்பால் மூலமாக, இன்று உலகில் அம்மைநோய் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டது.

                நோய்க்குக் காரணமான கிருமிகளையே நோய் ஒழிப்புக்கு மருந்தாகப் பயன்படுத்தி வெற்றிகண்டார். மருத்துவ உலகில் எட்வர்ட்ஜென்னரின் பெயரும், புகழும் மனித உயிர்கள் வாழும் காலம்வரை நிலைத்து நிற்கும்!

- பி.தயாளன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)