“மனிதர்கள் தங்களுக்குள் சண்டைபோடுவதை விட்டுவிட்டு நோய்க்கிருமிகளுடன் சண்டையிட வேண்டும்” என்கிறார் ஓர் அறிஞர்.

நுண்கிருமிகள்...

கண்ணுக்கு புலப்படாத கிருமிகள், தூணிலும், துரும்பிலும் எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கும் கிருமிகள் எவ்வாறு நம் உடலில் நுழைகின்றன?

நாம் உண்ணும் உணவு, சுவாசிக்கும் காற்று, அருந்தும் நீர் வழியாக உடலில் நுழைகின்றன.

அவை நம் உடலில் நுழைந்தாலும் நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகவும் மற்றும் சமச்சீர் நிலையில் இருக்கும் சமயம் அவைகளால் நமக்கு தீங்கு ஏற்படுவதில்லை. நம்முடன் சேர்ந்து வாழ்கின்றன.

சில நுண்கிருமிகள் நம்முடைய உடலில் வாழ்ந்து உயிர்ச்சத்துகளை உண்டு, நமக்கு தேவையான உயிர்ச்சத்துக்களை குடலில் உற்பத்தி செய்கின்றன. நம் சருமத்திலும், தொண்டையிலும், மூக்கிலும் நுண்கிருமிகள் வாழ்கின்றன. வைரஸ் என்ற நுண் கிருமிகள் மிகவும் சக்தி வாய்ந்தவை.

நம் உடலில் எதிர்ப்பு சக்தி குறையும் பொழுது நுண் கிருமிகள் தம் கைவரிசையை காட்டுகின்றன. நம் உடல் கிருமிகளின் ஆதிக்கத்தில் இருக்கும் நிலையை infection என்கிறோம்.

‘உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட வெறுக்கும்’ என்கிறார் ஒரு கவிஞர். அது போல நம் உடலில் சமச்சீர் நிலையில் தடங்கல் ஏற்படுகிறபோது அதுவரை வாளாவிருந்த கிருமிகள் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு துரோகியாக மாறி நம்முடைய திசுக்களுடன் சண்டையிடுகின்றன. நம் உடலில் தற்காப்பு கவசங்கள் சும்மா இருக்குமா? நம்முடைய உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கும் நுண் கிருமிகளுக்கு இடையில் தொடர்கிற யுத்தம் கீழ்க்கண்டவாறு முடிய வாய்ப்பிருக்கிறது.

1. நாம் வெற்றி பெறுகிறோம். நோயிலிருந்து விடுபட்டு ஆரோக்கிய நிலைக்கு திரும்புகிறோம்.

2. ஐயோ! துரதிருஷ்டம், நுண்கிருமிகள் வெற்றி பெற்று நோயாளி இறக்க நேரிடுகிறது.

3. தொடர்யுத்தம், விளையாட்டுக்கள் யாருக்கும் வெற்றி தோல்வியின்றி நடப்பது போல நமக்கும், நுண்கிருமிகளுக்கும் சம பலம் இருக்கும் சமயங்களில் நோயுற்று நிலை தொடர்கிறது, திசுக்கள் சேதமடைகின்றன. இந்த நிலையையும், மேற்குறிப்பிட்ட இரண்டாவது நிலையையும் தடுக்க நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும்.

4. மேலே நம்முடனேயே நண்பர்களாக இருந்து துரோகிகளாக மாறிய நுண்கிருமிகளைப் பற்றி அறிந்து கொண்டோம். ஆரம்பத்திலேயே ஊறு விளைவிக்கக் கூடிய நுண் கிருமிகளைப் பற்றி தற்சமயம் ஆராய்வோம்.

ஒரு நோயை எந்தக் கிருமி ஏற்படுத்துகிறதோ அந்த கிருமியின் பெயர் நோய்க்கு இடப்படுகிறது. உதாரணமாக காலரா என்ற கிருமியினால் ஏற்படும் நோய்க்கு காலரா என்ற பெயரும், நியூமோகாக்கஸ் என்ற கிருமியினால் ஏற்படும் நோய்க்கு நிமோனியா என்ற பெயரும், டைஃபை என்ற கிருமியினால் ஏற்படும் நோய்க்கு டைஃபாய்டு என்று பெயரிடப்பட்டு அழைக்கப்படுகின்றன.

முன்னமே குறிப்பிட்டுள்ளபடி வைரஸ் என்ற வகை நுண்கிருமிகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. நோய்க்கிருமி எதிர்ப்பு மருந்துகளால் தாக்கப்படாதவை. நம்முடைய உடலில் தோன்றும் நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டுதான் போராட வேண்டும்.

ஜலதோஷம், புளூ காய்ச்சல், அம்மை நோய்கள் மற்றும் மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் வைரஸ் நுண் கிருமிகளால் உண்டாகக்கூடியவை. மிகுந்த சக்தி வாய்ந்த கிருமிகளுடன் சண்டையிடும் பொழுது மிகவும் சோர்வடைகிறோம். உண்வு, ஓய்வு, உயிர்ச்சத்துகளில் கவனம் செலுத்துகிறோம்.

உடலில் குறிப்பிட்ட நுண் கிருமிகளுக்கு எதிரான உயிர்ச்சத்துக்கள் இரத்தத்தில் உண்டாகும்போது நுண்கிருமி தீவிரமாக தாக்கப்பட்டு நோயிலிருந்து விடுபடுகிறோம். வைரஸ் கிருமிகள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவை என்று தெரிவதால் மிகுந்த கவனத்துடன் இருக்கிறோம்.

மற்ற கிருமிகளினால் பாதிக்கப்படும்பொழுது நாம் குறிப்பிட்ட அளவு கவனம் செலுத்துவதில்லை. நாம் மெத்தனமாக இருக்கிறோம். உணவு முறைகளிலும் ஓய்விலும் மருத்துவரிடம் அறிவுரையை சரிவரவும் முழுமையாகவும் கடைப்பிடிப்பதில்லை. இதன் விளைவாக நாள்பட்ட நோய்க்கு ஆளாகக் கூடிய வாய்ப்பு உண்டு என்பதை அறிந்து கொள்ளவேண்டும்.

சுருக்கம்:

1. நோய்களை உண்டாக்குவதில் நுண் கிருமிகள் பெரும்பங்கு வகிக்கின்றன.

2. நோய் கிருமி எதிர்ப்பு மருந்துகள் நுண்கிருமிகளை அழிக்கின்றன.

3. வைரஸ் கிருமிகள் நோய் கிருமி எதிர்ப்பு மருந்துகளால் தாக்கப்படுவதில்லை.

4. நோயிலிருந்து விடுபட உணவில் மாறுதல்கள், ஓய்வு மற்றும் மருந்துகளும் அவசியமானவை.

5. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாக குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்படுகிறது. ஒவ்வொரு நோய்க்கும் இந்த கால அவகாசம் வேறுபடுகிறது. எல்லா நோயாளிகளுக்கும் இந்த கால அவகாசம் பல காரணங்களை முன்னிட்ட ஒரே வகை இருப்பதில்லை.

6. நவீன மருத்துவத்தின் கோட்பாடுகளின் படி ஒரு குறிப்பிட்ட நோய் கிருமியால் நாம் நோயுறும் பொழுது உடலில் அந்த கிருமிக்கு நோய் எதிர்ப்பு சக்தி தோன்றுவதால் அந்த குறிப்பிட்ட கிருமியால் மீண்டும் நோய் வருவதற்கு பல காலங்கள் ஆகலாம்.

“ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகளாகலாம்”

இருபதாம் நூற்றாண்டில் சுமார் ஐம்பது நுண்கிருமியியல் விஞ்ஞானிகளுக்கு, மனித சுகாதாரத்திற்கு அவர்கள் ஆற்றிய பணிகளுக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: மீனாட்சி மருத்துவ மலர்