ஏலக்காய் என்பது இஞ்சி செடி வகையைச் சேர்ந்தது. பச்சை நிறக் காய்களைக் கொண்டது. ஏலக்காய் பச்சை நிறத்திலும், அடர் பழுப்பு நிறத்திலும் இருக்கும். ஏலக்காய் நறுமணப் பொருளாக மட்டும் இல்லாமல், பல மருத்துவக் குணங்களைக் கொண்டதாகும். மன இறுக்கத்தைக் குறைத்து உடல் புத்துணர்ச்சி பெற ஏலக்காய் பயன்படுகிறது. பல் மற்றும் வாய் தொடர்பான பல பிரச்சினைகளுக்கு ஏலக்காய் நல்ல தீர்வாக அமையும். செரிமானத்திற்கு உதவும். இதனால்தான் நெய் சேர்த்து செய்யப்படும் இனிப்புகளில் அவசியமாக ஏலக்காயை சேர்ப்பார்கள். குரல் வளை மற்றும் தோல் தொடர்பான நோய்களைத் தீர்க்கும் ஆற்றல் ஏலக்காய்க்கு உண்டு. மலட்டுத் தன்மையைப் போக்குவதற்கும் ஏலக்காய் பயன்படுத்தப்படுகிறது.

பசியே ஏற்படுவதில்லை, சாப்பிட பிடிக்கவில்லை என்று கூறுபவர்கள், தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டுமென்றால், பசி எடுக்கும். ஜீரண உறுப்புகள் சீராக இயங்கும். நெஞ்சில் சளி கட்டிக் கொண்டு மூச்சு விட சிரமப்படுபவர்களும், சளியால் இருமல் வந்து, அடிக்கடி இருமி வயிற்றுவலி வந்தவர்களுக்கும் கூட ஏலக்காய் நல்ல மருந்தாக அமையும். ஏலக்காயை மென்று சாப்பிட்டாலே, குத்திரும்பல், தொடர் இருமல் குறையும். வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கும் ஜீரண உறுப்புகளில் ஏற்படும் பிரச்சினை தான் காரணம். எனவே வாய் துர்நாற்றத்தைப் போக்க ஏலக்காயை மென்று சாப்பிட்டு வரலாம். சாப்பிடும் உணவு வகைகளில் சிறிது ஏலக்காயை சேர்த்துக் கொள்வது நல்லது. அதிகமாக சேர்த்துக் கொள்ளக் கூடாது.

ஏலக்காயில் உள்ள சத்துக்கள் :

இனிப்பு பண்டங்கள் செய்யும் போது வாசனைக்காக ஏலக்காயை சேர்ப்பார்கள் என்று தான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஏலக்காயில் பல்வேறு அரிய குணங்கள் உள்ளன. புரதம், நார்ச்சத்து மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற முக்கிய தாது உப்புகளும் ஏலக்காயில் கலந்துள்ளன. அடித்தொண்டை அழற்சி, தொண்டைக்கட்டு, உள்நாக்கில் வலி, குளிர்காய்ச்சலால் ஏற்படும் தொண்டைக்கட்டு முதலியவற்றைக் குணப்படுத்த ஏலக்காய் பெரிதும் உதவும். ஏலக்காயும் இலவங்கப்பட்டையும் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரால் கொப்பளித்தால் தொண்டைக்கு இதமாக இருக்கும்.

பாலில் ஏலக்காய் சேர்த்து சுடவைத்து இத்துடன் ஒரு தேக்கரண்டித்தேனும் சேர்த்து அருந்தி வந்தால் குழந்தைப் பேறில் ஏற்படும் குறைபாடுகள் நீங்கும். இதனை இருபாலரும் அருந்தலாம். இருவருக்குமே பலன் தரும். அதே நேரத்தில் பாலில் அதிகமாக ஏலக்காய்த்தூளைச் சேர்த்தால் மலட்டுத்தன்மை, ஆண்மைக்குறைவு அதிகரிக்கும். எனவே ஒரு சிட்டிகை ஏலக்காய்த்தூள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

(மாற்று மருத்துவம் ஏப்ரல் 2011 இதழில் வெளியானது)