வைட்டமின் டி துணைப்பொருட்கள் மாரடைப்பைத் தடுக்க உதவும் என்று புதிய ஆய்வுகள் கூறுகின்றன. இது பற்றி முதல்முறையாக மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆய்வில் வைட்டமின் டி எடுத்துக் கொள்வதற்கும், மாரடைப்பு போன்ற இதயநலக் கோளாறுகளுக்கும் (Cardio vascular diseases CVD) இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதயக்கோளாறுகள் உலகளவில் அதிக மரணங்களை ஏற்படுத்துகின்றன. மக்கட்தொகை அதிகரிப்பால் உலகளவில் முதியவர்களின் எண்ணிக்கையில் ஏற்படும் உயர்வு, நாட்பட்ட நோய்கள் அதிகரிப்பு போன்றவற்றால் மாரடைப்பு உள்ளிட்ட பாதிப்புகள், வரும் ஆண்டுகளில் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. பரிசோதனை முயற்சிகளில் பலதரப்பட்ட முறைகள் பின்பற்றப்பட்டதால் இது குறித்து முன்பு நடத்தப்பட்ட ஆய்வுகள் இத்தொடர்பை உறுதிப்படுத்தவில்லை.man heart attackஆனால் சமீபத்தில் அறுபது வயதிற்கும் மேற்பட்ட இருபதாயிரத்திற்கும் கூடுதலானவர்களிடம் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலம் வைட்டமின் டி இதய நலத்தைப் பாதுகாக்க உதவுகிறது என்று அறியப்பட்டுள்ளது. பி.எம்.ஜே (BMJ) என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வுக்கட்டுரை வைட்டமின் டி முழுமையாக இதய நலக் கோளாறுகளைத் தடுக்க உதவவில்லை என்றாலும், மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது என்று கூறுகிறது.

இதுவரை நடந்ததில் இதுவே மிகப் பெரிய ஆய்வு. இதனால் வருங்காலத்தில் இன்னும் விரிவான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 2014-2020 ஆண்டு காலத்தில் அறுபது வயதிற்கும் எண்பது வயதிற்கும் இடைப்பட்ட 21,315 ஆஸ்திரேலிய மக்களிடம் இந்த ஆய்வுகள் நடந்தன.

மாதம் ஒரு குளிகை

அங்கு வழக்கமாக நடைபெறும் பொது சுகாதாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஆய்வுகள் க்வீன்ஸ்லாந்து க்யூ.எம்.ஐ.ஆர் பெர்கோஃபர் (QIMR Berghofer) மருத்துவ ஆய்வுக்கழக நிபுணர்களால் நடத்தப்பட்டன. ஐந்தாண்டுகளுக்கு ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு வாய் மூலம் எடுத்துக் கொள்ளும் ஒரு வைட்டமின் குளிகை அல்லது மருந்துப்போலி/மருந்தற்ற குளிகை (placebo) வழங்கப்பட்டது.

ஆய்வின்போது 1336 பேர்கள் ஒரு மாரடைப்பு நிகழ்வால் பாதிக்கப்பட்டனர். இது மருந்தற்ற குளிகை எடுத்துக் கொண்டவர்களிடம் 6.6 சதவிகிதமாகவும், குளிகை எடுத்துக் கொண்டவர்களிடம் 6 சதவிகிதமாகவும் இருந்தது. ஆயிரம் பேரில் குளிகை எடுத்துக் கொண்டவர்களில் 5.8% பேருக்கு மாரடைப்பு சம்பவங்கள் குறைவாக ஏற்பட்டது. மருந்தற்ற குளிகை எடுத்துக் கொண்டவர்களுடன் ஒப்பிடும்போது குளிகை சாப்பிட்டவர்களிடம் மாரடைப்பு 9% குறைவாக காணப்பட்டது.

பக்கவாதத்தைக் குறைக்க உதவாத வைட்டமின் டி

ஒட்டுமொத்தமாக வைட்டமின் சாப்பிட்டவர்களில் மாரடைப்பு 19% குறைவாக இருந்தது. ஆனால் மருந்து சாப்பிட்ட மற்றும் சாப்பிடாதவர்களின் குழுக்களில் பக்கவாதம் ஏற்படுவதை வைட்டமின் டி குறைக்கவில்லை. ஆய்வின் முடிவில் பங்கு பெற்றவர்களில் ஒரு முறை மாரடைப்பு ஏற்படுவதைத் தடுக்க 172 பேர் வைட்டமின் டி துணைப்பொருளை ஒவ்வொரு மாதமும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.

இந்த பரிசோதனைகள் ஒரு தொடக்கம் மட்டுமே. இந்த முடிவுகள் உலக நாடுகள் பலவற்றிலும் நடக்க வேண்டும்.

வைட்டமின் டி உடலில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பேட் சத்துக்களை ஒழுங்குபடுத்துகிறது. இந்த சத்துகள் எலும்புகள், பற்கள், திசுக்களின் ஆரோக்கியத்திற்கு அவசியமானவை. இங்கிலாந்தில் இலையுதிர் மற்றும் குளிர்காலங்களில் எல்லோரும் வைட்டமின் டி மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அந்த நாட்டின் சுகாதாரத்துறை வலியுறுத்தி வருகிறது.

இதுபோலவே பல உலக நாடுகளும் வைட்டமின் டி சத்தின் அவசியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில் வைட்டமின் டி மருந்துகள் இதயநலக் கோளாறுகளுக்கு ஒரு தீர்வாக அமையும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

மேற்கோள்: https://www.theguardian.com/science/2023/jun/28/vitamin-d-supplements-may-cut-risk-of-heart-attacks-trial-suggests?CMP=Share_AndroidApp_Other