Tirumavalavan and Dalith panthers

பஞ்சமி நிலமீட்பு மாநாடு 10.10.2005 அன்று விடுதலைச் சிறுத்தைகள் சார்பில், மண்ணுரிமைப் போராளிகள் ஜான்தாமசு ஏழுமலை திடல், மாமல்லபுரத்தில் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு தேனிசை செல்லப்பா இசை நிகழ்ச்சியோடு மாநாடு தொடங்கியது. காஞ்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ந. இளஞ்செழியன் மாநாட்டுக்குத் தலைமை தாங்கினார். இணைப் பொதுச் செயலாளர்கள் பெ. ஆற்றலரசு மற்றும் கு. செல்வப் பெருந்தகை, இ. தலையாரி, ஏ.சி. பாவரசு, பொதினிவளவன், உஞ்சை அரசன், தீபன் சக்கரவர்த்தி, சு. நடராசன் உள்ளிட்ட பலர் சிறப்புரையாற்றினர்.

இறுதியில், பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் நிலவுரிமை மற்றும் ஆட்சியுரிமை ஆகியவற்றை வென்றெடுப்பதற்கான தேவையை வலியுறுத்தி எழுச்சி உரையாற்றினார். தொடக்கத்திலே, மாநாட்டுத் தீர்மானங்களை மக்களின் ஆரவார வரவேற்புக்கிடையில் பொதுச் செயலாளர் முன்மொழிந்தார். நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் சில :

சுமார் இரண்டரை லட்சம் ஏக்கர் நிலங்கள் பிறரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்ற போதிலும் 16,704 ஏக்கர் மட்டும்தான் பிறரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு ஒப்புக் கொண்டுள்ளது. அதில் இதுவரை சுமார் 687 ஏக்கர் நிலம் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆகவே, தமிழ் நாடெங்கும் உள்ள பஞ்சமி நிலங்களைக் கண்டறியவும், அவற்றின் சட்டப்பூர்வமான உரிமையாளர்கள் யாரென்பதைக் கண்டறியவும் ‘சிறப்பு ஆணையம்' ஒன்றைத் தமிழக அரசு உடனே அமைக்க வேண்டும். அவ்வாணையம் குறிப்பிட்ட கால எல்லைக்குள் அத்தகைய பஞ்சமி நிலங்களைக் கண்டறிய வேண்டுமென பணிக்கப்பட வேண்டும்.

தமிழக அரசு நடைமுறைப்படுத்திவரும் தரிசுநில மேம்பாட்டுத் திட்டத்தில், தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அவர்களுக்கு வழங்க வாய்ப்பில்லாத இடங்களில் மட்டுமே தொழில்துறையினர் உள்ளிட்ட பிறருக்கு தரிசு நிலங்களைத் தரலாம் என்ற நிலையை மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

‘தாட்கோ' மூலம் தாழ்த்தப்பட்ட பெண்கள் விவசாய நிலங்களை வாங்குவதற்குக் கடனுதவி வழங்கப்படுகிறது. தற்போது நிலவும் நிலத்தின் ‘சந்தை விலை'யோடு ஒப்பிடும்போது, வழங்கப்படும் கடன் தொகை போதுமானதாக இல்லை. எனவே, அந்தக் கடன் தொகையை உயர்த்த வேண்டும். அது மட்டுமின்றி, அதற்கென தமிழக அரசு ஒதுக்கியுள்ள நிதி ஒதுக்கீடு மிகவும் குறைவாக இருப்பதால், இத்திட்டத்தின் கீழ் அதிகமான பேர் பயன்பெற முடியாத நிலையுள்ளது. எனவே, பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் நிதிஒதுக்கீட்டை இருமடங்காக உயர்த்திட வேண்டுமென தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

நிலங்கள், மரங்கள், ஏரி, குளங்கள் உள்ளிட்ட அரசுக்குச் சொந்தமான பொதுச் சொத்துகளை அரசு ஆண்டுதோறும் ஏலம் அல்லது குத்தகைக்கு விட்டுவருகிறது. ஆனால், அப்படி குத்தகை எடுப்பவர்களில் தலித் மக்கள் ஒரு சதவிகிதம்கூட இல்லையென்பது வேதனைக்குரியது. சாதி ஆதிக்கம் காரணமாக அவர்கள் ஏலம் கேட்க முடியாத நிலை உள்ளது. அதையும் மீறி ஏலம் கேட்டால், தலித் மக்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். சென்னகரம்பட்டி சம்பவம் அதற்கு ஒரு சான்றாகும். எனவே, அரசு சொத்துகள், பொதுச் சொத்துகள் ஆகியவை தொடர்பான குத்தகையில் மக்கள் தொகைக்கிணையான விழுக்காட்டை தலித் மக்களுக்கென ஒதுக்கீடு செய்யும் வகையில் சட்டமியற்ற வேண்டுமென தமிழக அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

சிறப்புக் கூறுகள் திட்டத்தின்படி, மாநில அரசு தனது நிதிநிலை அறிக்கையில் ஆண்டுதோறும் செலவிடும் தொகையில் மக்கள் தொகை சதவிகிதத்திற்கிணையான தொகையை, தலித் மக்களுக்கு ஒதுக்க வேண்டும் என சட்டம் இருந்தாலும், அதனை எந்தவொரு மாநிலமும் நடைமுறைப்படுத்துவதில்லை. தலித் மக்களுக்குச் சேரவேண்டிய பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதி, பிறதிட்டங்களுக்காக மாநில அரசால் திருப்பிவிடப்படுகிறது. இந்த மோசடியை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். அந்த நிதியில் கால்பகுதியை தலித் மக்களுக்குக் கூட்டுப் பண்ணைகள் அமைத்திடப் பயன்படுத்த வேண்டும்.

Pin It