மோடியின் ஆட்சி இன்னும் சில மாதங்களில் முடியப் போகின்றது. நரகத்தின் எண்ணெய் சட்டியில் இருந்து எழுந்து ஓட இந்தியர்கள் தயாராக இருக்கின்றார்கள். ஆனால் இந்த முறையும் மோடி பழைய பொய்களுக்குப் பதில் புதிய பொய்களைத் தூக்கிக் கொண்டு உங்களை சந்திக்க வருவார். இந்த முறை முன்பைவிட  கவர்ச்சியான அதிபயங்கரமான பொய்களை அவர் கட்டவிழ்த்து விடுவார். இறந்து போனவர்களை உயிர்ப்பிப்பேன் என்றோ, உயிரோடு இருப்பவர்களுக்கு மரணமற்ற பெருவாழ்வைத் தருவேன் என்றோ அவர் வாக்குறுதி தரலாம். பொய்யையும், உண்மையையும் பிரித்தறியத் திராணியற்ற, பார்ப்பனியத்தால் மூளை மழுங்கடிக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்களை மீண்டும் நம்ப வைக்க மோடி முயற்சி செய்யலாம். அதனால் மோடி என்ற ஊதி பெருக்கப்பட்ட பிம்பத்தை உடைக்க வேண்டிய கட்டாயம் நம் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது. மோடி ஆட்சி இந்திய வரலாற்றில் இருண்ட காலம் என்பதை நாம் மக்களுக்கு உணர்த்த வேண்டும். மோடியின் இந்த நான்காண்டு ஆட்சி எப்படி இருந்தது என்பதை ஒரு மீள்பார்வையாகப் பார்ப்போம்.

modi jaitley 640நாட்டில் உள்ள உழைப்போர் எண்ணிக்கையில் 93 சதவீதத் தொழிலாளர்கள் அமைப்புசாரா முறையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு எந்தவிதப் பணிப்பாதுகாப்போ, நிரந்தர தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் சலுகைகளோ கிடைப்பதில்லை. ஒவ்வொரு ஆண்டும் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் உழைப்புச் சந்தையில் கொட்டப்படுகின்றார்கள். ஏற்கெனவே இருக்கும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தொழிற்துறையில் நிரந்தர வேலைவாய்ப்பை உருவாக்குவதும், புதிதாக உழைப்புச் சந்தைக்கு வருபவர்களுக்கு பணிப் பாதுகாப்புடன் கூடிய வேலையை உத்திரவாதம் செய்வதும் தொழிலாளர்களின் நலன்களுக்காக இயங்கும் அரசின் கடமையாகும். 240 நாட்களுக்கு மேலாக, சில துறைகளில் 480 நாட்களுக்கு மேலாகப் பணிபுரிந்தால் அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது சட்டம். இதை சரியாக அமல்படுத்தினாலே இதைச் சாத்தியப்படுத்த முடியும். ஆனால் மோடி அரசு FTE (Fixed Term Employment) ஒப்பந்த கால வேலைவாய்ப்பு, NEEM (National Employment Enhancement Mission) பயிற்சியாளர் ஊக்குவிப்பு போன்ற திட்டங்களைக் கொண்டுவந்து  ஒப்பந்தப் பணியாளர்களையும், பயிற்சித் தொழிலாளர்களையும் கட்டுப்பாடுகளற்று சுரண்ட வழி  ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது.

இந்தத் திட்டங்கள் மூலம் இனி தொழிற்சாலைகள் தங்களிடம் பணிபுரியும் நிரந்தரத் தொழிலாளர்கள் எண்ணிக்கையை குறைத்து, ஒப்பந்தத் தொழிலாளர்களை அதிகப்படுத்திக் கொள்ள முடியும். அவர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டிய அவசிய‌மில்லை. அதேபோல புதிதாகப் படித்து முடித்துவிட்டு பயிற்சியாளராக (Trainee) ஆக பணியில் சேரும் தொழிலாளர்களுக்கு எந்தவிதமான சட்டப்பலன்களையும் தர வேண்டியதில்லை. குறைந்தபட்ச ஊதியம் கொடுத்தாலே போதுமானது. உழைத்து சோறு தின்னுவதை அவமானமாகக் கருதும் சித்தாந்தத்தை தனது குறிக்கோளாக ஏற்றுக் கொண்ட ஒரு வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி ஆட்சியில் இருந்தால், அது தொழிலாளர்களை எப்படி வஞ்சிக்குமோ, அப்படித்தான் மோடி அரசு இந்தியத் தொழிலாளர்களை வஞ்சித்து வருகின்றது.

வேலைவாய்ப்பு என்று எடுத்துக் கொண்டால் மோடி கொடுத்த வாக்குறுதிக்கும், நடப்பு நிலைமைக்கும் மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உள்ளது. பொருளாதார வளர்ச்சி  10 சதவீதம் இருந்தால்  வேலைவாய்ப்பு 1 சதவீதம் என்ற அளவிலேயே இருக்கின்றது. இந்தியாவில் 35 வயதுக்குக் குறைவாக உள்ளவர்கள்  65 சதவீதம் பேர். இவர்களில் 5 கோடி பேர் வேலை இன்றி உள்ளனர். இது தவிர ஆண்டு தோறும் லட்சக்கணக்கான இளைஞர்கள் கல்வியை முடித்துவிட்டு உழைப்புச் சந்தையில் குவிந்து வருகின்றார்கள். உலோகம், முதலீடு, கட்டுமானம், மின்சாரம், நுகர்வோர் பண்டங்கள், சில்லரை வணிகம் போன்ற துறைகளில் ஈடுபட்டுள்ள 120 நிறுவனங்கள் வேலைக்கு ஆளெடுப்பது பெருமளவு குறைந்திருக்கின்றது என இந்தியன் எக்ஸ்பிரசிஸ் நாளிதழின் ஆய்வு கூறுகின்றது.

2009 -2010 ஆம் ஆண்டில்  எட்டு லட்சத்து 70 ஆயிரம் புதிய வேலை வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் 2016 ஆண்டு அந்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 35 ஆயிரமாக குறைந்துள்ளது. மோடி பதவியேற்ற மூன்று ஆண்டுகளில் அவரால் உருவாக்கப்பட்ட மொத்த வேலைவாய்ப்புகள் வெறும் 11 லட்சம்தான். அவர் கொடுத்த வாக்குறுதிப்படி பார்த்தால்  மூன்று கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கி இருக்க வேண்டும். ஆனால் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றத் துப்பில்லாத மோடி அரசு, மீண்டும் 2020க்குள் 5 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என ஆட்டத்தை முதலில் இருந்தே தொடங்குகிறது.

மோடியின் ஆட்சி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும், மிகப் பெரிய அளவில்  வேலை இழப்பை உருவாக்கி இருக்கின்றது. லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் மட்டும் 2016 ஆண்டில் 14000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கி இருக்கின்றது. ஈ காமர்ஸ், புட்-டெக் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் துறையில் இருக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் மட்டும் 2016 ஆம் ஆண்டு 9000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என ‘எக்ஸ்லெர் 8’ (Exler8) ஆய்வு நிறுவனம் கூறுகின்றது.

உற்பத்தித் துறையில் கடந்த ஆண்டில் 40 சதவீத வேலை இழப்பு ஏற்பட்டிருக்கின்றது என்கின்றது புளூம்பெர்க் அறிக்கை. 2014 ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக குறைந்து வந்த வேலைவாய்ப்புகள் பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி போன்றவற்றால் மிகப் பெரிய அளவில் குறையத் தொடங்கி இருக்கின்றது. பல சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்ட‌தே இதற்குக் காரணமாகும். வேலை செய்ய அனைத்துத் தகுதிகளும் இருந்தும் 27 சதவீத பேருக்கு வேலை இல்லை என்கின்றது குளோபல் ஹூயுமன் கேபிடல் ஆய்வு.

ஒரு நாட்டில் வேலைவாய்ப்பு பெருக வேண்டும் என்றால் ஏற்றுமதி அதிகமாகவும், இறக்குமதி குறைவாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் பல புதிய தொழிற்நிறுவனங்கள் நிறுவப்பட்டு புதிய வேலைவாய்ப்புகளை வழங்க முடியும். ஆனால் மோடி அரசு பதவியேற்றதில் இருந்து ஏற்றுமதி குறைந்து, இறக்குமதி மிகப்பெரிய அளவில் அதிகரித்திருக்கின்றது. 2013 ஆம் ஆண்டு 314.4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு ஏற்றுமதி இருந்தது. இது 2017-2018 ஆண்டு 302.8 பில்லியன் டாலராக இருக்கும் என அதிகாரப்பூர்வமாக மதிப்பிடப்பட்டிருக்கின்றது.

அதே சமயம் இறக்குமதி 450.2  பில்லியனில் இருந்து  459.7 பில்லியன்களாக அதிகரித்திருக்கின்றது. இதனால் வர்த்தகப் பற்றாக்குறை 135.8 பில்லியன் டாலர்களில் இருந்து 156.8 பில்லியன் டாலர்களாக உயர்ந்திருக்கின்றது. எண்ணெய் சம்பந்தமான பாகங்கள் அல்லாத பொருட்களின் ஏற்றுமதி கடந்த நான்காண்டுகளில் 5.1 சதவீதமாகவும், அதே சமயம் இறக்குமதி 22.8 சதவீதமாகவும் உள்ளது. இதனால் வர்த்தகப் பற்றாக்குறை கடந்த நான்காண்டுகளில் 34.2 பில்லியன் டாலர்களிலிருந்து 86.6 பில்லியன் டாலர்களாக அதாவது இரண்டரை மடங்குக்கும் அதிகமாக உயர்ந்திருக்கின்றது.

இந்தியாவில் உற்பத்தி செய்வோம் என்ற மோடியின் முழக்கம் வெற்று முழக்கமாக மாறிப் போனதையே மேற்கண்ட புள்ளிவரங்கள் காட்டுகின்றன. குறைந்த பட்சம் உள்நாட்டு சந்தை சிறப்பாக இருந்தால் கூட இவ்வளவு மோசமான நெருக்கடி ஏற்பட்டிருக்காது. ஆனால் உள்நாட்டில் நிலவும் கடுமையான வேலையில்லாத் திண்டாட்டமும், ஏறக்குறைய 93 சதவீதம் பேர் அமைப்பு சாரா துறைகளில் அற்ப கூலிக்கு வேலை செய்பவர்களாகவும் இருப்பதால், உள்நாட்டு சந்தை மிகவும் குறுகிப் போய் உள்ளது. இதனால் மோடியின் பைத்தியக்காரத்தனமான பொருளாதார சீர்திருந்த நடவடிக்கைகள் முட்டுச்சந்தில் போய் மாட்டிக் கொண்டு விழி பிதுங்கி நிற்கின்றன‌. ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற மோடியின் முட்டாள்தனமான நடவடிக்கையால் மட்டும் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2 சதவீத அளவிற்குப் பின்னடைவை சந்தித்து இருக்கின்றது.

ஆனால் இவ்வளவு பொருளாதார நெருக்கடி நிலவியபோதும் இந்தியப் பணக்காரர் களின் சொத்து மதிப்பு மட்டும் பல மடங்கு அதிகரித்து இருக்கின்றது. பிரான்ஸைச் சேர்ந்த கேப்ஜெமினி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வின் படி இந்தியாவில் செல்வத்தின் பகிர்வு சமூக அளவில் சமமாக இல்லை. ஒரு சிலரிடத்தில் செல்வம் குவிந்து வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் செல்வந்தர்களின் எண்ணிக்கை 20.4 சதவீதமாக அதிகரித்து 1 லட்சம் கோடி டாலராக உள்ளது.

உலக அளவிலான வளர்ச்சியைவிட இது 12 சதவீதம் அதிகமாகும். ஏழைகளை பரம ஏழைகளாகவும், பரம ஏழைகளை பிச்சைக்காரர்களாகவும் மாற்றிய மோடியின் ஆட்சியில் எந்தவித  தொழிற்வளர்ச்சியும் ஏற்படாமல் எப்படி பணக்காரர்களால் மட்டும் பெருமளவு சொத்து சேர்க்க முடிந்தது என நீங்கள் குழப்பமடையலாம். இதில் குழப்பமடைவதற்கு எதுவுமில்லை. மோடியின் ஆட்சியில் வங்கிகளின் வாராக்கடன் மட்டும் 8.4 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கின்றது.

மேலும் 2012-2013 இருந்து 2016-2017 வரை 2.5 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றது. இந்தக் கடன்களின் பெரும்பகுதி தொழிற்துறை நிறுவனங்கள் பெற்ற கடன்களாகும். இதில் மோடி ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 1 லட்சத்து 88 ஆயிரத்து 286 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருகின்றது. இப்போது உங்களுக்குத் தெரிந்திருக்கும் எப்படி மோடி ஆட்சியில் பணக்காரர்கள் தங்கள் சொத்து மதிப்பை வளர்த்துக் கொண்டார்கள் என்று.

மோடி என்னதான் வெளிநாடுகளுக்குப் பறந்து பறந்து அந்நிய முதலீட்டை ஈர்க்க முயற்சி செய்தாலும் அதனால் எந்தப் பலனும் ஏற்படவில்லை. வேலை வாய்ப்பு பெருக வேண்டும் என்றால் அந்நிய முதலீடுகள் பெருமளவில் நேரடி உற்பத்தியில் ஈடுபட வேண்டும். ஆனால் அதற்கெல்லாம் உலக நிதி மூலதனத்திற்கு நேரமில்லை. அவை உடனடியான லாபத்தை எதிர்பார்க்கின்றன.

இந்தியாவிற்கு வந்த அந்நிய முதலீட்டில் 2016-2017 ஆம் ஆண்டு 62 சதவீதம் சேவைத் துறையிலும், 33 சதவீதம் உற்பத்தித் துறையிலும், 5 சதவீதம் எரிசக்தித் துறையிலும், வெறும் 0.30 சதவீதம் மட்டுமே விவசாயம், மீன்பிடி, சுரங்கம் போன்ற துறைகளில் முதலீடு செய்யப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் 50 சதவீதத்திற்கு மேற்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பைத் தரும் விவசாயத் துறையில் 0.30 சதவீதம் மட்டுமே அந்நிய முதலீடு செய்யப்பட்டிருப்பதில் இருந்து மோடி அழைத்து வந்த அந்நிய முதலீட்டின் யோக்கியதையை நாம் தெரிந்து கொள்ளலாம்.

இப்படி பங்குச்சந்தையில் முதலீடு செய்து கொள்ளையடிக்க வந்த அந்நிய மூலதனம் எப்போதுமே நிலையாக இருப்பதில்லை. அவை எங்கு லாபம் கிடைக்குமோ அங்கு வெட்டுக்கிளி கூட்டத்தைப் போல ஓடிக்கொண்டே இருக்கும். இந்தியாவில் இருந்து வெளியேறிய அந்நிய முதலீடுகள் 2010 ஆம் ஆண்டு 30 சதவீதமாகவும், 2016-2017 ஆம் ஆண்டு 36 சதவீதமாகவும், 2017-2018 (ஜனவரி வரை) 47 சதவீதமாகவும் உயர்ந்திருக்கின்றது.

அனைத்து வகையிலும் மோடியின் ஆட்சி படுதோல்வியடைந்து நிற்கின்றது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 74 ரூபாய்க்குக் கீழ் சரிந்திருக்கின்றது. மோடி ஆட்சிக்கு வந்த சமயத்தில் ரூபாயின் மதிப்பு 59 ரூபாயாக இருந்தது என்பதைப் பார்த்தால், மோடி இந்த நான்கரை ஆண்டுகளில் இந்தியாவில் வாழும் சாமானிய மக்களை மட்டும் மதிப்பற்றவர்களாக மாற்ற‌வில்லை, இந்திய நாணயத்தையும் சேர்த்தே மதிப்பற்றதாக மாற்ரியிருக்கிறார். தினம் தினம் பங்குச்சந்தைப் புள்ளிகள் பெரிய அளவிற்கு சரிவதும், பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்கள்  ஒரே நாளில் தங்கள் மொத்த சொத்தையும் இழந்து தெருவுக்குப் போவதும் நடந்து வருகின்றது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரிக்கும் என்று தெரிவதால், நிலைமை இன்னும் மோசமாகவே வாய்ப்புள்ளதாக பொருளாதார அறிஞர்கள் கணிக்கின்றார்கள்.

இந்திய மக்கள் வரும்காலங்களில் மிகப் பெரிய நெருக்கடியை சந்திக்க காத்துக் கொண்டு இருக்கின்றார்கள். அவர்களின் வாழ்க்கை அவர்களின் கண்முன்னாலேயே அழிந்து போவதை அவர்கள் பார்க்கப் போகிறார்கள். ஆனால் அவர்கள் எப்படி அழிந்து போனாலும் மோடிக்கு அதைப் பற்றி கவலை கிடையாது. அவர்களால் சாதியவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டிவிட்டு எளிதில் உங்களை வசப்படுத்த முடியும். பொய்யான கவர்ச்சியான வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை ஏமாற்றவும் முடியும். நீங்கள் இந்த முறை விழித்துக் கொள்ளவில்லை என்றால், இனி என்றுமே விழிக்க முடியாத நிரந்தரத் துயிலில் மோடி மக்களை ஆழ்த்திவிடுவார்.

கட்டுரைக்கு உதவியவை

1)   இந்து வணிக வீதி

2)   தீக்கதிர்

3)   Bbc.com      

4)   Tnlabour.in

5)   Goodsreturn.in

6)   Patrikai.com