தாயே....
உன் முலைப்பாலில்
உயிர் பிழைக்கிறோம்
உனது சமையலில்
உடல் வளர்க்கிறோம்
பிறகு
தாரத்தின்
தட்சணையால்
தலை நிமிர்கிறோம்
வாய்க்குமெனில்
அவளது
மாதச் சம்பளத்தில்
ஏப்பம் விடுகிறோம்
இவ்வளவுக்கும் பிறகு
உன்னையே இப்படிச்
சொல்ல வைக்கிறோம்...
“பொட்டக் கோழி கூவி
பொழுது விடியாது!”

பெண்ணே.....
உன்
பேச்சுரிமையை மறித்து
அணை கட்டியிருக்கும்
நாங்கள்,
உன் பல் தெரியக்
கூடாதென்றும்
பழமொழியால் பலகை
போட்டிருக்கிறோம்...
“பொம்பள
சிரிச்சா போச்சு
புகையிலை
விரிச்சா போச்சு!”

சகோதரியே....
உழைப்பதைப் போலவே
உறங்குவதும் உன் உரிமை
உன்னுடைய
உரிமைகள் அனைத்தையும்
ஒவ்வொன்றாகப்
பறித்துவிட்ட நாங்கள்,
உறங்கும் உரிமையை மட்டும்
வேறு மாதிரியாக
வரையறை செய்திருக்கிறோம்
அதாவது,
“பின் தூங்கி
முன் எழுவாள் பத்தினி!”

மகளே...
உன் கல்வி
உரிமையின் மீது
எங்களது கைகள்
கல்லெறிந்து சோர்ந்த
வேளைகளில்
சும்மா இருக்க முடியாமல்
சொல்லெறிந்தும்
போர்த் தொடுப்போம்...
“அடுப்பூதும் பெண்ணுக்கு
படிப்பெதற்கு?”

ஆண்புத்தி
முன்புத்தி என்பதற்கு
ஆதாரம் எதுவும்
தென்படவேயில்லை
தேடிப்
பார்த்து விட்டோம்
இருந்தாலும் கூட
என்னருமைத் தோழியே
நீ ஒப்புக் கொண்டே
ஆக வேண்டும்...
“பெண் புத்தி
பின்புத்தி!”

- ஜெயபாஸ்கரன்

நன்றி: ‘மல்லிகை மகள்’

Pin It