periyar maniammaya 4501919 மார்ச் மாதம் 10-ஆம் நாள் வேலூரில் வி. எஸ். கனகசபை - பத்மாவதி தம்பதியருக்கு மகளாய் பிறந்தார். உடன் பிறந்தவர்கள் சண்முகம், தியாகராஜன் ஆகிய இரண்டு சகோதரர்களும் கமலா என்ற ஒரு சகோதரியும் ஆவார்கள்.

வேலூரில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதி ஆண்டு (எஸ்.எஸ்.எல்.சி.,) வரை படித்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குலசேகரப் பட்டினம் சி.டி. நாயகம் தமிழ்க் கல்லூரியில் தமிழ்ப் புலவர் வகுப்பு படிக்கையில் கல்வி தடைப்பட்டுவிட்டது.

1936 வேலூருக்கு ஒரு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக வந்த பெரியாரிடம் அறிமுகம் செய்துவைக்கப்பட்டார். அப்போது நான்காவது பாரம் (9ஆம் வகுப்பு) படித்துக் கொண்டிருந்த போது பெரியாரைச் சந்தித்த காரணத்திற்காக, பள்ளி நிர்வாகம் இவரை வகுப்பிலிருந்து வெளி யேற்றியது.

1943 செப்டம்பர் மாதம் 11 -ஆம் நாள் தந்தை பெரியாரின் சுயமரியாதைக் கருத்துகளால் கவரப்பட்டு அய்யாவின் தொண்டராகப் பணியாற்ற வந்தவர்.

1944 சேலத்தில் ஜஸ்டிஸ்கட்சி 'திராவிடர் கழக' மாக மாறிய மாநாட்டில் (27-8-1944) கே. காந்திமதி என்ற பெயரை கே. அரசியல் மணி என்று மாற்றப் பட்டு மாநாட்டில் அறிமுகம் செய்து வைக்கப் பட்டார்.

1948 டிசம்பர் 20-ஆம் நாள் குடந்தையில் நடந்த மொழி உரிமைப்போரில் அரசு தடையை மீறியதற்காகக் கைது செய்யப்பட்டு, பாபநாசம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

விசாரணைக்குப் பின் இரண்டு மாதம் தண்டனை அளிக்கப்பட்டு வேலூர் சிறையில் காவலில் வைக்கப்பட்டார்.

1949 பிப்ரவரி மாதம் 23ஆம் நாள் வேலூர் சிறையிலிருந்து விடுதலை அடைந்த மணி யம்மையாரை பெரியார் வரவேற்றார்.

மார்ச் மாதம் 31ஆம் நாள் சென்னையில் மணியம்மையார் தலைமையில் இந்தி எதிர்ப்பு மறியல் போர் நடந்தது.

ஜூலை மாதம் 9ஆம் நாள் பெரியார்-மணியம்மையார் பதிவுத் திருமணம், திருமண பதிவாளர் முன்னிலையில் பதிவு செய்யப் பட்டது. திருமணத்திற்குப் பிறகு கே.ஏ.மணியம்மை

(கே. அரசியல் மணி) என்று இருந்து வந்த பெயரை ஈ.வெ.ரா. மணியம்மை என்று தமிழிலும் நு.ஏ.சு.மணியம்மை என்று ஆங்கிலத்திலும் அழைக்குமாறு பெரியார் வேண்டுகோள் விடுத்தார்.

1952இல் பதிவு செய்யப்பட்ட பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் ஆயுள் செயலாளராக பெரியாரால் நியமிக்கப்பட்டார்.

1958 மார்ச் மாதம் 8ஆம் நாள், ஜாதி ஒழிப்புப் போரில் ஈடுபட்டுத் திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட தோழர் பட்டுக்கோட்டை ராமசாமியும், 10ஆம் நாள் மணல்மேடு வெள்ளைச்சாமியும் மாண்டனர். இவர்களின் சடலத்தைத் தரச் சிறை அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

அந்த நேரத்தில் மணியம்மையார், முதலமைச்சர் காமராசர் அவர்களைச் சந்தித்து மறைந்த தோழர்களின் உடல்களைத் திரும்பப் பெற்றார். காவல்துறையின் தடையை மீறி மணியம்மையாரின் தலைமையில் சவ ஊர்வலம் நடந்தது.

19.1.1958 'விடுதலை'யில் வெளியான “இளந் தமிழா! புறப்படுபோருக்கு என்ற கட்டுரை சம்பந்தமாக அதன் ஆசிரியரும் வெளியிடு பவருமான ஈ.வெ.ரா. மணியம்மையார் மீது வழக்குத் தொடரப்பட்டது. மணியம்மை யாருக்கும், கட்டுரையை எழுதிய தோழருக்கும் ஒரு மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

1957-58 பெரியார் அவர்களும், கழக முன்னணியினரும் சிறையில் இருந்த முக்கியக் காலகட்டத்தில் கழகம் சோர்வடையாமலும், கழகப் பணி, நிர்வாகப் பணிகளைத் திறமையாகக் கவனித்துக் கொண்டதற்காகவும் அன்னை மணியம்மையாருக்குத் திருச்சியில் நடைபெற்ற - திராவிடர் கழக மத்திய நிர்வாகக்குழு கூட்டத்தில் (19.7.1959) பாராட்டுத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

1973 டிசம்பர் 24ஆம் நாள் ‘பகுத்தறிவு பகலவன்' பெரியார் அவர்கள் மறைவுற்றபின் அன்னை மணியம்மையார் அவர்கள் கழகத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கழகத்தை வழி நடத்திச் சென்றார்.

1974 திருச்சி பெரியார் மாளிகையில் 6.1.1974இல் கூடிய திராவிடர் கழக மத்திய நிர்வாகக்குழு, கழகத் தலைவராக ஒரு மனதாகத் தேர்ந்தெடுத்தது.

3.4.1974 அன்று அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வகை செய்ய மத்திய அரசை வற்புறுத்தி சென்னை தலைமை அஞ்சலகம் முன் மறியல் கிளர்ச்சி செய்தார்.

இப்போராட்டத்தின் 2ஆம் கட்டமாக 26.5.1974 அன்று சென்னை வந்த மத்திய அமைச்சர் ஒய்.பி.சவானுக்கு கருப்புக்கொடி காட்டினார்.

அன்னை மணியம்மையார் அவர்களின் எதிர்காலப் பாதுகாப்பைக் கருதி அன்னை மணியம்மையார் அவர்களுக்கே கூடத் தெரியாத நிலையில் தந்தை பெரியார் அவர்களால் ஏற்பாடு செய்து வைத்திருந்த சொத்துகளைத் தமக்காகப் பயன்படுத்திக் கொள்ளாமல் மக்களின் பொது நலனுக்கே அவை பயன்படவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் உடல் நலமின்றி, தாம் சென்னைப் பொது மருத்துவமனையில் இருந்த போது அன்னை மணியம்மையார் அவர்கள்

23.9.1974 அன்று பெரியார் மணியம்மை கல்வி அறக்கட்டளைக் கழகம் தொடங்கப்படஏற்பாடு செய்தார்கள். அந்த அமைப்பு 24.9.1974 அன்று சென்னையில் பதிவு செய்யப்பட்டது.

1974 டிசம்பர் 25ஆம் நாள் சென்னை - பெரியார் திடலில் ‘இராவண லீலா'வை நடத்தி வரலாற்றைப் படைத்துக் காட்டினார்.

சென்னை பெரியார் நூலகம் - ஆய்வகத்தை  நிறுவினார். பெரியார் மணியம்மை பெண்கள் உயர்நிலைப் பள்ளியைத் திருச்சியில் ஏற்படுத் தினார்.

1975 ஏப்ரல் 26இல் வைக்கத்தில் நடைபெற்ற வைக்கம் பொன்விழாவில் கலந்து கொண்டு பெண்கள் மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

சென்னை அண்ணாசாலையில் 21-9-1975 அன்று கலைஞர் சிலையை அமைத்தார்.

1975 செப்டம்பர் 9ஆம் நாள் 'இராவண லீலா'. வழக்கில் மணியம்மை மற்றும் தோழர்களுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. வழக்கை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது.

‘மிசா' காலத்தில் 16.9.1976 அன்று தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவிற்கு முதல் நாள் திடீரென்று கைது செய்யப்பட்டு இரண்டு நாள் கழித்து விடுதலை செய்யப்பட்டார்.

1977 ஏப்ரல் 25ஆம் நாள் 'இராவண லீலா' வழக்கில் மணியம்மையாரும் மற்றத் தோழர்களும் விடுதலை செய்யப்பட்டனர். அக்டோபர் மாதம் 30-ஆம் நாள் தமிழகம் வந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு, தமது உடல்நலம் பாதிக்கப் பட்டிருந்த நிலையிலும் கருப்புக் கொடி காட்டியதற்காகக் கைது செய்யப்பட்டார்.

பெரியார் திடல் முகப்பில் ‘பெரியார் பில்டிங்ஸ்' என்ற ஒரு பெரிய கட்டடத்தை உருவாக்கினார்.

1978 மார்ச் மாதம் 16ஆம் நாள் மாரடைப்பு ஏற்பட்டு சென்னை பொது மருத்துவமனையில் முடிவெய்தினார்.

பெரியார் காட்டிய பாதையில் பயணத்தைத் தொடர்ந்தார்!

பெரியாரால் அடையாளம் காட்டப்பட்ட அன்னை மணியம்மையார், - பெரியார் மறைவுக்குப் பிறகு, தலைவர் காட்டிய வழியில் பயணத்தைத் தொடங்கினார். பெரியார் விட்டுச் சென்ற பணிகளை எவ்வித சபலங்களுக்கும் ஆளாகாமல் பெரியார் போட்டுத் தந்த பாதையில் சென்று முடிப்போம் என்று உறுதியேற்று கருஞ்சட்டைத் தோழர்கள் அணி வகுத்தனர்.

பெரியார் மரணத்தைத் தொடர்ந்து அன்னை மணியம்மையார் ‘திரும்பி வருகிறேன்’ என்று ‘விடுதலை’ ஏட்டில் விடுத்த அறிக்கை இது:

என்ன செய்வது, எதை எழுதுவது, எப்படி நினைப்பது என்பதே புரியவில்லை. மனதை எவ்வளவுதான் திடப்படுத்தினாலும், என்னையும் மீறிச் சில சமயங்களில் தளர்ந்து-விடுகிறேன். உடனே அய்யாவின் அந்தப் புன்னகை முகம் என் கண்முன் தோன்றி,

“பைத்தியக்காரி, இவ்வளவுதானா நீ! இத்தனை ஆண்டுகள் என்னோடு பழகியும் நான் எடுத்து எடுத்துச் சொல்விவந்த கருத்துகளை உன்னிடத் திலேயே காணமுடியவில்லையே! நீ எப்படி மற்றவர்களுக்கு வழிகாட்டியாய் என் கொள்கையைக் கடைப்பிடிப்பவளாய் இருக்கப் போகிறாயோ! சாதாரணப் பெண்களைப் போலேயே பக்குவமடையாத மனநிலையிலேயே இருக்கிறாயே! என்றாவது ஒரு நாள் எனக்கு இந்த நிலை ஏற்படும். இயற்கையை வெல்ல முடியாது. அப்போது எப்படி நீ இருக்கவேண்டும் என்று எத்தனை முறை உனக்கு உன்மனம் நோகாத வண்ணம் வேடிக்கைப் பேச்சாகவே சொல்லிச் சொல்லிப் பக்குவப்படுத்தி வைத்தேன். என் எண்ணத்தைப் புரிந்துகொள்ளாமல், மற்றவர் களுக்கும், உனக்கும் ஒரு வித்தியாசமும் இல்லாமல் நடந்துகொண்டு என் மனத்திற்கு வேதனை தருகிறாயே!” என்று சொல்லுவதுபோல் தோற்றம் அளிக்கும்.

உடனே நான் “இல்லை - இல்லை - மன்னித்து விடுங்கள். உங்கள் வார்த்தையை மீறி இன்று அல்ல என்றுமே நடக்க மாட்டேன்” என்று மனதால் நினைத்துக் கொண்டு நானே ஒரு சிரிப்பும் சிரித்துக் கொண்டு என் உள்ளத்தை இரும்பைப் போல கடினமாக ஆக்கிவிடுவேன். அப்போதுதான் என் மனதில் அமைதியும் ஒரு நிறைவும் பெறும்.

அய்யாவைப் போலவே என் வாழ்நாள் முழுவதும் என் சக்திகளை இயன்ற அளவு உழைக்கவும், மக்களுக்கு அவர் செய்து வந்த உயிர்நாடிக் கொள்கையை இயன்ற அளவு பரப்பவும், மனிதத் தன்மையோடு, பண்போடு, உண்மையும், ஒழுக்கமும் உயர்வெனக் காட்டிய வழியிலேயே நாமும் இனி வாழ்நாளெல்லாம் வாழ வேண்டும் என்று ஒரு உறுதியான எண்ணத்துடன், இன்று முதல் செயல்படத் துவங்கிவிட்டேன். இனி எனக்கு என்று எந்தவிதமான சுயநலப் பற்றும், பாசமும், பந்தமும், இல்லாது மனநிறைவோடு, மனிதப் பற்றோடு, வாழ்வை நடத்த வேண்டும் என்ற ஒரு முடிவுக்கு என்னை ஆளாக்கிக் கொண்டேன்.

எனது இளம் வயதிலிருந்து அதாவது, எனக்குப் புத்தி தெரிந்த நாளிலிருந்து அவர் கொள்கையால் ஈர்க்கப்பட்டு அதே பைத்தியமாகிப் பள்ளிப் படிப்பையும் செம்மையுற முடிக்காமல் பாதியிலேயே விட்டுவிட்டு, என் தந்தை இறந்த சிறிது நாள்களுக்குள்ளாகவே அய்யா அவர் களிடம் என்னை ஒப்படைத்துக் கொண்டேன்.

அவர் தொண்டுக்கு முழுக்க முழுக்க ஆளாகி, அவர் நலத்தைக் கண் எனப் பாதுகாக்க, ஒரு தாயாக என்னைப் பாவித்துக் கொண்டு, அவரை ஒரு சிறு குழந்தையாகவே என் மனதில் இருத்தி, அக்குழந்தைக்கு ஊறு நேரா வண்ணம் பாதுகாப்பதிலேயே மகிழ்ச்சி கண்டேன்.

அவரும் என்னை ஒரு நாளும் பெயரிட்டு அழைக்காமல், அவர் உயிர் பிரியும்வரையிலும் அம்மா! அம்மா! என்று ஆயிரம் அம்மாக்களைத் தினமும் அழைத்தவண்ணமே இருப்பார். அந்த மழலை மொழியைத்தான் இனி நான் கேட்க முடியாதே தவிர, என் உள்ளம் மட்டும் மானசீகமாகக் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

நெகிழ வைத்த நிகழ்ச்சி

அவரோடு நான் 30 ஆண்டு, 3 மாதம், 13 நாள்கள் பிரியாது இருந்தேன். 1943 செப்டம்பர் 11 ஆம் நாள் வந்தடைந்த அன்றுமுதல் இன்றுவரை ஒரு நாளும் அவரை விட்டுப்பிரியாது மகிழ்ந்த நான், ஓர் ஆண்டாக இயற்கையின் கொடுமைக்கு ஆளாகி நடு நடுவே பிரிய நேர்ந்தது. 1972 செப்டம்பர் 17ஆம் நாள் ஈரோட்டிலே அவர் பிறந்து வாழ்ந்த ஊரிலே, என்றும் இல்லாத அளவுக்கு வெகு சிறப்புடன் அவருடைய பிறந்தநாளைக் கொண்டாடி, அவரது திரு உருவச் சிலையையும் திறந்து, கடலென மக்கள் திரண்டு வந்திருந்து மகிழ்ந்திருந்த வேளையிலே - நானும் அம் மகிழ்ச்சியில் பங்கு கொண்டு, அது முடிந்ததும், அம் மகிழ்ச்சியின் வேகத்தைத் தாங்கும் சக்தி இல்லாததனாலோ என்னவோ அன்று இரவு 11 மணியளவில் இருதயவலி முதன்முதலாக ஏற்பட்டுப் படாதபாடுபட்டு அவதியுற்ற வேளையில், அய்யா அவர்கள் பயந்து துடித்த துடிப்பு, என் துடிப்பைவிட அதிகமாய் இருந்ததாகவும், அன்று வந்திருந்த நமதியக்கத் தோழர்கள் பட்டபாட்டையும் பின்னர், உடல்நலம் தேறியவுடன் ஒவ்வொருவரும் சொல்வதைக் கேட்டு ஒருபுறம் வேதனையும், அதே நேரத்தில் பூரிப்பும் அடைந்து, அய்யா அவர்களிடம் சென்று நீங்கள் பயந்து விட்டீர்களாமே! நீங்கள் ஒன்றுக்கும் பயப்பட வேண்டாம். நான் பிழைத்தது ஏதோ காரணத்திற்காகத்தான். உங்களை விட்டுவிட்டு அவ்வளவு சீக்கிரம் போய்விட மாட்டேன். எத்தனையோ ஏளனப் பேச்சுகளையும், தூற்றுதலையும் கேட்டுத் தாங்கிய இந்த உள்ளம், உங்களுக்கு இன்று ஏற்பட்ட மகிழ்ச்சியைத் தாங்கமுடியாமல் போய் விட்டது. அவ்வளவுதான் வேறில்லை என்று கூறி அவரை மகிழ்வித்தேன்.

அய்யா அப்பொழுது சொன்னது இன்னமும் என் மனதில் அப்படியே இருக்கின்றது.

இயற்கையை வெல்வது கடினம் தான்! உனக்கு ஏதாவது இன்று நேர்ந்திருந்தால் அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால், என் எண்ணம் வீணாயிற்றே, வீண்பழிக்கும் பொல்லாப்புக்கும் (பலபேரின் அதிருப்திக்கும் வெறுப்புக்கும் ஆளாகி) எந்த ஏற்பாடுகள் செய்தேனோ அது நிறைவு பெறாமல் நீ போய்விடுவாயோ என்றுதான் கலங்கினேன், என்று கூறிக் கண்ணீரை உதிர்த்தார்.

அப்போது நான் அவரை ஊக்கப்படுத்து வதற்காகச் சொன்னேன், இதென்ன நீங்கள் இவ்வளவு பலவீனமானவரா, எல்லோருக்கும் மரணத்தைப் பற்றித் தத்துவம் பேசுவீர். இயற்கையின் நியதியைப்பற்றி வண்டி வண்டியாய்ச் சொல்வீர், கடைசியிலே நீங்களே இப்படி இருந்தால் மற்றவர்களுக்கு மட்டும் அப்படி இருக்க வேண்டும் என்று சொல்வதில் என்ன பொருள் இருக்கிறது? எனக்கு ஒன்றும் புரியவில்லையே உங்கள் பேச்சு என்று சற்றுப் பொய்க் கோபத்துடன் கடினமாகச் சொன்னேன். உடனே, தமக்கே உரிய சிரிப்புச் சிரித்து ஏதோ சமாதானம் செய்தார். உண்மையிலேயே அந்நிகழ்ச்சி எங்கள் இரு வரையும் மிகவும் நெகிழ வைத்த ஒன்றாகும்; மறக்க முடியாததும் கூட.

சில சமயங்களிலே, எனக்கும் அய்யா அவர்களுக்கும் சிறு சிறு சம்பவங்களுக்கெல்லாம் கூடச் சங்கடம் ஏற்படுவதுண்டு. அதுவும் அவர் நலத்தைப் பற்றிய அக்கறையினால் கடுமையாகக் கூட நடந்து கொள்வேன். அது தவிர அவர் மனது நோகும்படியாகவோ, துயரம் தரும்படியாகவோ ஒன்றும் பெரியதாக இருக்காது. ஒன்று, இரண்டு சம்பவங்கள் நேர்ந்ததுண்டு.

உடனே, சிறிது நேரத்தில் அய்யா அவர்களே முதலில் முந்திக்கொண்டு நான் கொண்டிருந்த வருத்தத்தைக் களைய முன்வந்து விடுவார். மற்றபடி, பெரும்பாலும் அவர் குறிப்பறிந்து நடந்துகொண்டு அவர்தம் வேலைகளுக்கு எந்தவிதமான இடையூறும் தொந்தரவும் இன்றிக் கவனித்துத் தான் வந்தேன். நான் வருத்தப் பட்டாலும், கோபித்துக் கொண்டாலும் அய்யா அவர்கள் மற்றவர்களிடம் கூறுவார்.

“இந்தம்மாவுக்கு இப்பொழுதெல்லாம் பொறுமையே இருப்பதில்லை. பாவம்! நோய் வந்த பிறகு என்னமோ மனதில் வைத்துக்கொண்டு இருக்கிறது; மிகவும் பலவீனமாகிவிட்டது. எல்லாத் தொல்லைகளையும் தன் தலைமேலேயே போட்டுக் கொண்டு துன்பப்படுகிறது. என்ன சொன்னாலும் கேட்ப தில்லை. இந்தப் பள்ளிக்கூடம் (அனாதைக் குழந்தைகள் இல்லம்) வந்த பிறகு இந்தப் பசங்களோடு போராடுவதே அதற்குக் கஷ்டம், இதுதான் காரணம்” என்று மற்ற நண்பர்கள், தமக்கு மிக நெருக்கமானவர்களிடம் மட்டும் சொல்லு வார்கள். என் மனச்சுமையைத் தீர்க்கத் தம் அறிவுரையினால், அன்பு மொழியால், வேடிக்கைப் பேச்சினால் பக்குவமாகப் பேசி என் உள்ளத்தில் ஏற்பட்டிருந்த பரிபக்குவமற்ற எண்ணத்தை மாற்ற அதை மறக்கும்படி செய்து உற்சாகப்படுத்தி, ஊக்கப்படுத்திவிடுவார்.

அப்படிப்பட்ட அருமை அய்யா அவர்கள் இன்று இல்லை என்ற ஒரு குறையைத் தவிர, அவர் நம்மைவிட்டு எங்கும் போகவில்லை. நம்மிடையே நம் செயலிலே கருத்திலே என்றென்றும் இருக்கிறார். அவர் கருத்தை கொள் கையை நாம் சிறிதும் வழுவாமல், அவர் வாழ்நாளெல்லாம் என்னென்ன நினைத்தாரோ, செய்தாரோ அதை மனதில் இருத்தி, தொடர்ந்து செய்து வந்த அவர் பணியை நாமும் மேற்கொண்டு உலகெல்லாம், நாடெல்லாம், பட்டிதொட்டி எல்லாம் அவர் சிந்தனைகள், கொள்கைகள், மக்கள் நலப்பணிகள் பரவும் வகையில் அவரது ஆயுதமான அயராத உழைப்பையும், பொறுமையையும் கைக்கொண்டு, பிரச்சாரப் பணியை செய்து, அவர் முடிக்காமல் விட்டுச் சென்றவைகளை முடித்து வெற்றி பெற்றால்தான் அவருக்காக நாம் காட்டிய அன்பு, நன்றி, மதிப்பு ஆகியவை என்றும் வீண் போகாது என்று நான் கருதுவதோடு, நமது அன்புத் தோழர்களையும், தமிழ் மக்களையும் மிக அன்புடன், பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன்.

தாய்மார்களுக்கு வேண்டுகோள்

ஒவ்வொருவரும் முக்கியமாகத் தாய்மார்களும், இனி ஏராளமாக இப்பணியினைச் செய்யத் தங்களைத் தாங்களே முழுமையாக ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். குடும்பப் பணிகளிலே இதுவும் ஒன்றாகக் கருதி, நாள்தோறும் சிறிது நேரமாகிலும், அவர்தம் செயலுக்கு ஒதுக்கி வரவேண்டும். இப்படிச் செய்வோமானால் வெகு சீக்கிரத்தில், அய்யா அவர்களது நூற்றாண்டு விழாவிற்குள் பெரும்பாலும் இன்று அவர் விட்டுச் சென்றதை முடித்துவிடலாம். அதன் பின்னரும் தலைமுறை தலைமுறையாக என்றென்றும் நிலைத்து நிற்கும்படியாகத் தொடர்ந்து செய்வதற்குரிய வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொள்ளலாம்.

அய்யா அவர்களைப் பார்க்க வரும் நண்பர்கள், கழக முக்கியஸ்தர்கள், தோழர்கள் அனைவரும், “ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் அய்யா. இப்படி இரவு பகலாக ஒரு நாள்கூட விடாமல் தொடர்ந்து கூட்டங்களுக்குச் செல்கிறீர்களே, உடம்பு என்ன ஆவது? இந்தக் கோடிக்கும் அந்தக் கோடிக்கு மாக 500, 300 மைல் நாளொன்றுக்குச் சென்றால் என்னாகும்” என்று மிகவும் கெஞ்சி உருக்கமாகச் சொல்வார்கள்.

உடனே அப்படிச் சொல்பவருக்கு அவர் சொல்லும் பதில் வேடிக்கையாகவும், அதே நேரத்தில் மீண்டும் இந்த யோசனையைச் சொல்லாதீர்கள் என்று அவர்கள் உணரும் வண்ணம் சொல்வார்.

“மனிதனாய்ப் பிறந்து விட்டேன், இருக்க வேண்டிய நாளுக்கு இரண்டு பங்கு அதிகமாக வாழ்ந்துவிட்டேன். இன்னும் கொஞ்ச நாள், அதை வீணாக்குவதா? உயிரோடு இருப்பதனால் செய்கிறேன். இதற்கு எதற்கு ஓய்வு? வீட்டில் தான் நான் என்னத்தைச் சாதிக்கப்போகிறேன். வாய்க்கு ருசியாகச் சாப்பிடுவதும்; தூங்குவதும் தான். இருக்கும் வரை மனிதன் தன்னால் ஆன தொண்டை, மக்களுக்கு ஆன தொண்டைச் செய்துகொண்டே இருக்கவேண்டும். அது தான் என் ஆசை; என் கொள்கையும் கூட.

பெருமைக்காகச் சொல்லவில்லை, அப்படி ஒரு எண்ணத்தை எப்படியோ என் மனத்தில் வளர்த்துக் கொண்டேன். இப்போது மாற்றிக் கொள் என்றால் முடிகிற காரியமா? நீங்களே சொல்லுங்கள். அதிலும், நம்நாட்டு மக்களுக்குச் செய்ய வேண்டியது; சொல்ல வேண்டியது எவ்வளவோ இருக்கிறது. பெரும்பாலும் நமக்குப் படிப்பு இல்லை; சிந்தனை இல்லை; பகுத்தறிவு இல்லை.

என்னடா? இப்படிப் பேசுகிறானே என்று கோபித்துக் கொள்ளாதீர்கள். உண்மையைச் சொல்கின்றேன். யார் என்ன சொன்னாலும் அப்படியே பின்பற்றும் குணம்தான் அதிகம். அதிலும் பழைய மூடநம்பிக்கையில், கடவுள் பக்தியில் ஊறிப்போனவர்கள். அவர்களைத் திருத்துவது என்றால் என் ஒருவனால் மட்டுமே போதுமா? நிறையப் பேர் தோன்ற வேண்டும். அப்படி யார் இத்தொண்டைச் செய்ய முன் வருகிறார்கள்? இதில் எவனுக்காவது லாபம் இருந்தாலும், தன் உழைப்பையும், முதலையும் போட்டுப் பாடுபட்டாலும் நல்ல பெயரும் வருவதில்லை. மக்களின் எதிர்ப்பைத்தான் வளர்த்துக் கொள்கிறோம் என்று பயப்படுகிறவர்களைத் தானே நான் பார்க்கிறேன் எவ்வளவோ இன்னும் எடுத்துச் சொல்ல வேண்டும்.

அதற்கு எல்லாம் நான் எங்கே? எனக்கோ வயது ஏறிக் கொண்டே போகிறது. எத்தனை நாள் இன்னும் இருக்கப் போகிறேன். ஒரு வருடமோ, இரண்டு வருடமோ, இன்றோ, நாளையோ யார் கண்டார்கள்? அதனால் ஒரு வழிக்காவது; சிந்திக்கும் அளவிற்காவது தயார்படுத்திவிட வேண்டும். பிறகு, சூடுபிடித்து விடும். இளைஞர் சமுதாயம் கவனித்துக் கொள்வார்கள்”

- என்று அன்பொழுகப் பேசி சொன்னவர்கள் வாயை மூடச் செய்துவிடுவார். அத்தகைய ஆற்றலை இனி நாம் எங்கு காணப் போகிறோம்? முடிந்துவிட்டது அய்யாவின் சகாப்தம், அவர் சொல்லி வந்தது போலவே திடீரெனத் தம் வாழ்வை உழைத்து உழைத்துக் கடைசி நாள் வரை உழைத்தே முடித்துக் கொண்டார்.

பெரும் பொறுப்பை, சுமையை நம் எல்லோர் தலையிலும் வைத்துவிட்டார். அதை நாம் சுமந்து கொண்டே இருப்பதா? என்பது தான் இப்போது நம் கண்முன் உள்ள பிரச்சினை. நம்மை எல்லாம் மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டு, அவர் நீண்ட துயில் பெற்று, நாம் எல்லோரும் கேட்டுக் கொண்டபடி அடிக்கடி ஓய்வு கொள்ளாமல் நிரந்தர ஓய்வுக்குப் போய் விட்டார். நம்மை எல்லாம் பார்த்து இனி நீங்களே செய்து கொள்ளுங்கள் என்னை அடக்கி அடக்கி வந்தீர்களே, இனி பார்க்கிறேன், நீங்கள் எப்படிச் செய்யப்போகிறீர்கள் என்று சொல்லா மல் சொல்லி அமைதியுடன் நாம் இனி எப்படி நடந்து கொள்கிறோம், கட்டுக்குலையாமல் என்றும் போல் கட்டுப்பாடு ஒழுக்கம்  உண்மையுடன் இருக்கிறோமா, இல்லையா? என்று பார்த்துக் கொண்டே இருப்பதற்காக அவரது இல்லத்திலேயே ஓய்வுடன் இருக்கிறார். வேறு ஒன்றும் இல்லை. நம்மை அவர் கவனித்துக் கொண்டுதான்; நமது செயலைப் பார்த்துக் கொண்டுதான் இருப்பார்.

அன்புள்ள தமிழ் மக்களே, தொடர்வோம் அவர் பணியை!

ஆகவே, அன்புள்ள தமிழ் மக்களே, தாய்மார்களே! உண்மையாகவே நாம் அய்யாவிடம் அன்பு செலுத்துபவர் களாய் இருந்தால் அவர் கொள்கையை; அவர் நினைவை; கருத்தைத் தொடர்ந்து செய்து கொண்டே நம்மை நாமே பக்குவப்படுத்த நல்ல உறுதியான மனங்களைப் பெற்றுத் தொடருவோம். நம் பணியை, அய்யாவின் பணியைக் குறைவில்லாமல் செய்து நிறைவு பெறுவோம், அவர் சிந்தனைக்கு வழி வகுப்போம்.

சென்ற மாதம் (டிசம்பர்) 3ஆம் தேதி இரவு, திருச்சியிலி ருந்து புறப்பட்டு அய்யா அவர்களுடனும், நண்பர்களுடனும் மாநாட்டு வேலைக்காகத் தட்டுமுட்டு சாமான்களுடன் 4ஆம் தேதி காலை சென்னைக்கு வந்த நான், இன்று 4ஆம் தேதி ஒரு மாதத்திற்குப் பிறகு, அவரைத் தினம், தினம் பார்த்து, அவர், கருத்துகளை அள்ளி, அள்ளி வீசிய அவரது இல்லத்தையே ஓய்வாக இனி அமைத்துக் கொள்ளுங்கள்; என்னுடன் வர வேண்டாம்; நான் தனித்தே செல்கிறேன், என்று சொல்லிவிட்டு அவர் நினைவிடத்தை நோக்கி விடைபெற்றுக் கொண்டு 6ஆம் தேதி உங்களைச் சந்திக்க, இன்று 4ஆம் தேதி மாலை சென்னையை விட்டுப் புறப்பட்டு, நண்பர்களுடன் திருச்சியை நோக்கி அவர் வாழ்வில் பெரும்பகுதியைச் செலவழித்த அவரது அருமை இல்லத்தை நோக்கி வருகிறேன்.

இனி என்றென்றும் எனக்குத் துணையாக அவர் அன்பு காட்டிய நம் கழக அன்பர்கள் இருக்கிறார்கள் என்ற தைரியத்தோடு எவ்விதக் கலக்கமும் இன்றித் துயர் அடங்கிய நெஞ்சுடன் வருகிறேன். வணக்கம்”

ஈ.வெ.ரா. மணியம்மையார், விடுதலை 4.1.1974