ramaamma 3501925இல் அன்றைய மாயவரத்தில் (இன்றைய மயிலாடுதுறை) முதல் தேவதாசி ஒழிப்பு மாநாட்டைக் கூட்டியவர் இராமாமிர்தம்  அம்மையார். பெரியார் - திரு.வி.க. உள்ளிட்ட தலைவர்கள் அதில் பங்கேற்றனர்.

இராமாமிர்தம் அம்மையாரின் பொதுத் தொண்டு காங்கிரஸ், நீதிக்கட்சி, சுமயரியாதை இயக்கம், திராவிடர் கழகம், தி.மு.கழகம் ஆகிய அமைப்புகளின் மூலம் நிகழ்ந்தன. காங்கிரசில் அம்மையார் இருந்த போதே 1925இல் மயிலாடு துறையில் இசை வேளாளர் மாநாட்டினைப் பொறுப்பேற்று நடத்தியிருக்கிறார்.

இம்மாநாட்டிற்குப் பிறகுதான் காங்கிரசின் ‘புகழ்’ பெற்ற காஞ்சிபுரம் மாநாடு நடைபெறுகிறது. இவ்வம்மையாரின் செயற்பாடுகளைக் கவனிக்கிறபோது, தேவதாசி ஒழிப்புச் சட்டத்திற்கு டாக்டர் முத்துலட்சமி ரெட்டிக்கு இவர்தான் முன்மாதிரியாகத் தோன்றி இருக்கிறார். அவரது மயிலாடுதுறை மாநாடுதான் அதற்கு அடிப்படையாக அமைந்திருக்கிறது.

காங்கிரஸ் காலத்திலேயே இவ்வம்மையார் தந்தை பெரியார் பக்கம் நின்று பணியாற்றுவதில்தான் பெருவிருப்பம் கொண்டவராக இருந்திருக்கிறார். 1925இல் வகுப்புவாரித் தீர்மானம் காஞ்சிபுரம் மாநாட்டில் தோற்றுப் போகவே பெரியாரோடு வெளியேறிய முக்கியமானவர்களில் இராமாமிர்தம் அம்மையாரும் ஒருவர்.

மயிலாடுதுறையில் கூட்டிய இசை வேளாளர் மாநாடு, ஒரு திருப்பத்தை உண்டு பண்ணியிருந்தது. இம்மாநாடு குறித்து திரு.வி.க. விவரிப்பதைப் பார்ப்போம்.

“மாயவரத்திலே நாகபாசத்தார் சங்கம் என்றொன்று காணப்பட்டது. அது பின்னே இசை வேளாளர் சங்கம் என மாற்றப்பட்டது. இச் சங்கத் திற்குத் தூண் போன்றவராயிருந்தவர் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார். அவ்வம்மையாரை யான் முதன்முதலில் நவசக்தி நேயராகவே கண்டேன். நாளடைவில் அவர் நவசக்திப் பித்தரும் ஆனார். (‘நவசக்தி’ - திரு.வி.க.வை ஆசிரியராகக் கொண்டு வெளி வந்த நாளேடு)

இராமாமிர்தம் முன்னணி வேலை செய்வதில் வல்லவர். திறமை வாய்ந்தவர். அவர் எங்கே சென்றாலும் வழுக்கி விழுந்த சகோதரிமார் கூட்டம் அவரைச் சூழும். அச்சூழல் வாயிலாகக் குறைகள் வெளியாகும்; குறைகள் அம்மையாரால் தீர்க்கப்படும். பெண்ணுலகில் நேர்ந்த வழுக்கலைப் போக்க வந்த கற்பகம் இராமாமிர்தம் என்றே யான் நினைக்கிறேன். அக்கற்பகம் மாயவரத்தில் (1925) ஒரு மாநாடு கூட்ட முயன்றது.

இசை வேளாளர் மாநாடு கூட்டுதல் எளிதன்று. அதன் அருமைப்பாட்டை யான் நன்குணர்ந்தவன். இராமாமிர்தத்தின் முயற்சி அருiமையை எளிமையாக்கிற்று. மயூரமணி சின்னையா பிள்ளை, எஸ். இராமநாதன் முதலியோர் முயற்சிக்குத் துணை நின்றனர்.

முதலில் எனதுதலைமை விரும்பப்பட்ட தென்று தெரிய வந்தது. “இசை வேளாளருள் ஒருவர் தலைமை பூண்பதே சிறப்பு. மகாநாட்டை உடனிருந்து யான் நடத்துவேன். நவசக்தியில் முழு ஆதரவு தருவேன்” என்று மொழிந்து விடுத்தேன். வழுக்கி விழுந்தவர் முன்னேற்றத்திற்கென்று ‘யுவதி சரணாலயம்’ என்று பள்ளி அமைத்தது. அதை நன்முறையில் நடத்தி வந்த யமுனா பூரண திலகம்மா என்னும் ஓர் ஆந்திர அம்மையார் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரையும் தண்டபாணி பிள்ளையையும் எழும்பூரில் சந்தித்தேன். எல்லோரும் மாயவரம் சேர்ந்தோம். இராமசாமி நாயக்கரும் எங்களுடன் கலந்தனர். எங்களை வரவேற்க இசை வேளாளர் குழு திரண்டிருந்தது. அவர் முகங்களில் நிலவு பொழிந்தது.

இராமாமிர்தத்துக்கு ஆனந்தம். நம்முடைய எண்ணம் ஈடேறிற்று. தமிழ்நாட்டிற்கு ‘நல்ல காலம் பிறந்தது’ என்று இறுமாப்பு  அடைந்தேன். எல்லோரும் “கூறை நாட்டு”க்குப் (அன்றைய மாயவரம் இன்றைய மயிலாடு துறையில் ஒரு பகுதி) போந்தோம். மகாநாடு காலையில் முறைப்படி நடந்தது. பிற்பகல் மகாநாடு பேச்சுக்கென்று கூடியது. யான் முதலில் பேசினேன். நீண்டகாலம் என்னுள் அடங்கிக் கிடந்த ஆர்வம் பொங்கியது. எண்ணிய எண்ணங் களெல்லாம் மிடைந்து ‘குமுறிக் குமுறி’ வெளி வந்தன” என்று கூறிச் செல்லும் திரு.வி.க. பெரியாரின் இயக்கத்திற்கு மூளையாக விளங்கிய எஸ். இராமநாதனும், நுரையீரலாக மயூரமணி சின்னையாபிள்ளையும் விளங்கி இராமாமிர்தம் அம்மையாரை ஈர்த்தனர் என்று குறிப்பிட் டுள்ளார்.

காங்கிரசின் மீது அம்மையாருக்கு முழு நம்பிக்கை ஏற்படாமல் போனதன் விளைவாகத் தான் நீதிக் கட்சியையும், பெரியார் இயக்கத்தையும் ஆதரிக்கத் தொடங்கினார். அவர் ஆதரவு வீண் போகவில்லை. தேவதாசி ஒழிப்பைச் சட்ட மாக்கிய பெருமை நீதிக்கட்சிக்கே உண்டு. இது வரலாறு காட்டும் உண்மையாகும்.

இராமாமிர்தம் அம்மையார் திருவாரூரைச் சேர்ந்த கிருஷ்ணசாமி - சின்னம்மாள் இணை யினருக்கு 1883ஆம் ஆண்டில் பிறந்தார்.

அம்மையார் வளர்ந்து சமூகச் சீரழிவைத் தெரிந்து தெளிந்து காங்கிரசில்  சேர்ந்து தொண்டாற்றத் தொடங்கி, அதன் போக்கு அவருக்கு ஒத்துவராமல் நீதிக்கட்சியிற் சேர்ந்தது முதல் பொதுப் பணியை மீண்டும் தொடங்கித், தி.மு.கழகம் வரை தொடர்ந்து செயலாற்றி வரலானார்.

சுயமரியாதை இயக்க நாள்களில் - திருமண இல்லங்களில் அம்மையாரின் பேச்சு ஆழ்ந்த ஆராய்ச்சிப் பேச்சாக விளங்கி இருக்கிறது. இவர் தமிழும், வடமொழியும் கற்றவர். அதனால் திருமண விழாக்களில் சமற்கிருத மந்திரங்களை எல்லாம் அப்படியே உச்சரித்து அவற்றின் பொருளை எல்லாம் விளக்கிப் பேசித் தமிழ் மக்களிடையே விழிப்பை ஏற்படுத்தினார். இவர் இப்படிப் பேசியதின் விளைவாகச் சுயமரியாதைத் திருமணங்கள் எண்ணற்றவை நடைபெறலாயின. அம்மையார் அவர்கள் கைம்பெண்களுக்குத் திருமணங்களையும் நடத்தி வைத்திருக்கிறார்கள்.

பெரியார் ரஷியச் சுற்றுப் பயணம் முடிந்து 1933இல் சுயமரியாதை இயக்க வேலைத் திட்டம், இலட்சியம் ஆகியவற்றை வகுத்த கூட்டத்தில் அம்மையார் கலந்து கொண்டு பணியாற்றி யிருக்கிறார்.

1938ஆம் ஆண்டு முதல் இந்தி எதிர்ப்புப் போர் நடைபெற்றது. இவ்வெதிர்ப்புப் போரில் கலந்து கொண்டு அம்மையார் சிறப்புறப் பணியாற்றினார். திருச்சியிலிருந்து சென்னையை நோக்கிக் கிளம்பிய இந்தி எதிர்ப்பு நடைப் பட்டாளத்திற்குத் தலைமைதாங்கி நடத்திச் சென்றவர்களில் அம்மையாரும் ஒருவர். இப் படையுடன் சென்னையை அடைந்த பிறகு டாக்டர் எஸ்.தருமாம்பாள், நீலாம்பிகை அம்மையார், மலர்முகத்தம்மையார், தாமரைக் கண்ணியம்மையார் போன்ற வீராங்கனை களுடன் இந்தி எதிர்ப்பு மறியலில் ஈடுபட்டு வேலூர்ச் சிறையில் இருந்தார்.

1949ஆம் ஆண்டு தி.மு.க. தொடங்கப் பட்டவுடன் அதன் முன்னணித் தலைவர்களில் ஒருவராக அம்மையார் விளங்கினார். தி.மு.கழகத்தின் 2ஆம் மாநில மாநாட்டில் அறிஞர் அண்ணா அவர்கள் அம்மையாருக்குக் கேடயம் வழங்கிச் சிறப்பித்தார். தி.மு.கழகத்தில் முதன்முதலாகக் கேடயம் (விருது) பெற்றவர் மூவலூர் மூதாட்டியார்தான்!

இவரது பொதுப் பணிக்கு இன்றும் ஒரு சிறந்த சான்றாக விளங்கி வருவது இவர் எழுதிய ‘தாசிகள்  மோசவலை’ அல்லது ‘மதி பெற்ற மைனர்’ என்கிற நாவலாகும். 1936ஆம் ஆண்டு இதனை வெளியிட்டார். இது மக்களின் வரவேற்பைப் பெற்றது. இதுவன்றி ‘தமயந்தி’ எனும் சிறுகதையையும் இவர் எழுதினார்.

இந்நூலுக்குச் சிவகிரி ஜமீன் செ. வெள்ளைத்துரைச்சி நாச்சியார் முன்னுரை வழங்கியுள்ளார். இந்நூல் வெளி வரவும் அவரே உதவியுள்ளார். அவர் வழங்கிய முன்னுரையி லிருந்தும் நமக்குச் சில தகவல்கள் கிடைக்கின்றன. அம்முன்னுரையில் அவர், “இந்நாவல் தேவதாசி முறையையே அடியோடு ஒழிக்க எழுந்தது என்பது மிகையாகாது. சமூக முன்னேற்றத்தில் கண்ணுங் கருத்துமாயிருந்து அல்லும் பகலும் அரும்பாடுபட்டு வரும் இவ்வம்மையாரது மன உணர்ச்சியின் பிரதிபிம்பம் இந்நாவல். எனவே, இதில் காணப்படும் கதை அமைப்பும், சம்பாஷணைகளும், வாதப் பிரதிவாதங்களும், சொற்பொழிவுகளும், தாசிகள் மோசவலையில் வாலிபர்கள் சிக்கி அழியாதவாறு தடை செய்ய வல்லன என்பது எனது உறுதியான அபிப்பிராயம். இதைப் படித்தால் பரம்பரை தாசிகளும் தங்கள் இழிநிலையை உணர்ந்து திருந்துவார்கள் என்று நம்புகிறேன். ஸ்ரீமதி இராமாமிர்தம் அம்மையார் இதைப் போல் இன்னும் அநேக நாவல்களை வெளியிட்டுத் தமிழ்ச் சமுதாயத்தை முன்னேற்ற வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்” என்று எழுதியுள்ளார்.

இந்நூலுக்கு மதிப்புரை வழங்கிய நாவலர் எஸ். சோமசுந்தர பாரதியார், “மூவலூர் திரு. இராமாமிர்த்தம்மாள் எழுதி வெளியிட்ட ‘மதி பெற்ற மைனர்’ என்னும் நவீனத்தைப் படித்துப் பார்த்தேன்.

தமிழ்நாட்டில் இளைஞர்கள் ஒழுக்கத்தை யோம்பி நாட்டுத் தொண்டில் ஈடுபட்டு முன்னேற வேண்டும் என்ற நன்னோக்கத்தோடு இப்புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது என்பது அதைப் படிப்பவர்க்கு எளிதில் விளங்கும்.

இடையிடையே நீண்ட சுயமரியாதை உபந்யாசம் பெருகினும், அவையனைத்தும் தமிழ்ச் சமுதாய நலன் கருதியே வருதலால் அவை வெறுக்கத்தக்கனவும் அல்ல” என்று எழுதி யுள்ளார்.

இந்நூலுக்குப் புகழுரை வழங்கிய திருமதி குஞ்சிதம் குருசாமி, அம்மையாரைப் பற்றி பின்வருமாறு எழுதுகிறார்.

“இந்தக் கட்டை விழுவதற்குள் மனித சமூகத்திற்கு நம்மாலான சிறு உதவியைச் செய்துவிட்டுப் போவோம் என்ற ஒரு சிறந்த எண்ணத்தில் பொதுஜன ஊழியம் செய்பவர் களில் மூவலூர் தோழர் இராமமிர்தம்மாள் அவர்களும் ஒருவராவார்.

தமிழ்நாட்டில், முதன்முதல் பொது மேடையேறிச் சொற்பொழிவாற்றிய மங்கையர் ஒரு சிலருள் இவர் முக்கியமானவர் என்று சொல்லலாம்.

அம்மையாரின் பேச்சுத் திறனை அனுபவித்த மக்கள் இப்போது அவர்களது எழுத்துத் திறனையும் அறிய ஒரு சந்தர்ப்பத்தைப் பெற்றுள்ளார்கள்.

இந்நூலில் சோதிடம், மந்திரம், குறி சொல்லுதல் முதலிய குருட்டு நம்பிக்கைகளைப் பற்றியும் கடவுள், மோட்சம் இவைகளின் பெயரால் காலத்தையும் காசையும் விரயமாக்கும் அறிவீனத்தைப் பற்றியும், ஆசிரியர் விவாத ரூபமாக விளக்கி இருக்கிறார். இவற்றில் கருத்து வேறுபாடு உடையவர்களுடைய சிந்தனைச் சக்தியைக்கூடக் குத்திக் கிளறும் முறையில், சில கருத்துகள் வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடக் கூடியதாகும்.

பெண்களைக் கடவுளுக்குப் பொட்டுக் கட்டுதல், விபச்சாரம் முதலிய அநாகரிக முறைகளை ஒழிப்பதற்காக அல்லும், பகலும் உழைத்துவரும் டாக்டர் முத்துலட்சுமி அம்மாள் அவர்களுடைய அரும் பணிக்குத் தோழர் இராமாமிர்தத்தம்மாள் அவர்களின் இந்நூல் பெருந்துணையாகும் என்பது என் நம்பிக்கை.”

இப்புத்தகத்தின் பதிப்புரையை மூவலூர் மூதாட்டியார் எழுதியுள்ளார். இப்பதிப்புரை அவரது ஆராய்ச்சி அறிவினையும் ஆழத்தையும் தொண்டுள்ளத்தையும் குறிப்பதாக உள்ளது.

அப்பதிப்புரையை அப்படியே இங்கே தருகிறோம். இதிலிருந்து அம்மையாரின் அறிவு நுட்பத்தை அறிந்து கொள்ளலாம். பதிப்புரை வருமாறு:

“தேவதாஸி - தேவடியாள் (தேவ அடியாள்) ஆஹா! என்ன திவ்வியமான திருப்பெயர்கள்! தெய்வத்திற்குப் பக்தி சிரத்தையுடன் திருத் தொண்டு புரிபவளே தேவதாஸி - தேவடியாள். இந்தப் பெயர்கள் காதில் பட்ட மாத்திரத்தில், இக்காலத்தில் நாம் என்ன நினைக்கிறோம். குடிகெடுக்கும் வியபிச்சாரி என்ற நினைவைத் தவிரத் தெய்வத் திருத்தொண்டு புரியும் பக்த சிரோமணி என்ற நினைவு கனவிலும் வருவதில்லை.

தேவதாஸிகள் கோவில்களில் வசித்து, உலகியல் விவகாரங்களில் ஈடுபடாமல் - அகப்பற்றுப் புறப்பற்றுகளைத் துறந்து, தியாகமும் சீலமும் உடையவர்களாய் - சதா சர்வகாலமும் பகவத் கைங்கரியங்களையே மேற்கொண்டு - சத்காலnக்ஷபம் செய்யும் தவமணிகள் என்று வேதாகமங்கள் முழங்குவதாகச் சாஸ்திரிகள் சொல்லுகிறார்கள். இந்தக் காலத்தை விட்டுத் தள்ளுங்கள். எந்தக் காலத்திலாவது இப் ‘புண்ணிய’ பூமியில் தேவதாஸிகள் என்பவர்கள் மேற்சொன்ன இலக்கணத்திற்கு இலக்கியமாய் இருந்திருக்கிறார்களா என்னும் உண்மையை அந்தச் சாஸ்திரிகளும் பண்டிதர்களுமே நிரூபணம் செய்து ருஜூ கொடுக்க வேண்டும். எனது சிற்றறிவுக்குக் கடுகளவுகூட அந்தச் சங்கதி புலப்படவில்லை. இந்தக் காலத்தில் தேவதாஸிகளின் மகிமையைத் தெரிந்து கொள்ளச் சாஸ்திரங்களைப் புரட்டிப் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை.

யாரையாவது வைய வேண்டுமானால், ‘தேவடியாள் மகனே’ என்கிறார்களே - அது ஒன்றே தேவதாஸி - தேவடியாள் - கலைப் பெண்டு - விலைமகள் - பரத்தை முதலிய பெயர்கள் தாங்கிய ஒரு வியபிச்சாரப் பெண் சமூகம், இந்நாட்டில் தொன்றுதொட்டே இருந்து வருகிறது என்பதைக் காட்டுகிறது. ‘தேவதாஸி வேறு’ - மற்ற விலைமகளும் - பரத்தையும் வேறு என்று வாதிக்கின்றவர்களும் இங்கே இருக்கிறார்கள். ஆனால், பண்டைக்காலந்தொட்டே கோயில் குருக்கள்மாரும், அரசர்களும், செல்வர்களும், மற்றவர்களும் தெய்வத்தின் பெயரால், கலையின் பெயரால், யோகத்தின் பெயரால் குறிப்பிட்ட ஒரு பெண் சமூகத்தை வியபிச்சாரத்திற்கு உபயோகிக்க ஆக்கம் அளித்து வந்தார்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது என்பது எனது கெட்டியான அபிப்பிராயம். எனவே, அந்த வியபிச்சாரக் கூட்டத்தில் ஏற்றத் தாழ்வுகளைக் கற்பித்துக் கொண்டு வாதித்துப் பெருமை பேசிக் கொண்டிருப்பது வீண் வேலையாகும்.

தேவதாஸி முறையை ஒழிக்க வேண்டும். தெய்வமகளின் பெயரால் பொட்டுக் கட்டும் அநாகரிக வழக்கத்தை ஒழித்துவிட வேண்டும் என்று டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் போன்ற சீர்திருத்தவாதிகள் சொன்னால், இப்பொழுதும் முட்டுக்கட்டை போடு கின்றவர்கள் யார் என்பதைக் கவனியுங்கள். வைதீகக் கூச்சல் ஒருபுறமிருக்கட்டும் - பெரிய, பெரிய சட்ட நிபுணர்கள், அரசியல் தலைவர்கள், சமூகச் சீர்திருத்தத் தலைவர்கள் என்பவர்களே குறுக்கே விழுகிறார்கள். கும்பகோண சாஸ்திரிகளைக் காட்டிலும்  சத்தியமூர்த்தி சாஸ்திரிகள் “தேவதாஸிகள் இருக்க வேண்டும். தேவதாஸி முறையை ஒழிப்பது தெய்வ விரோதம் - சட்ட விரோதம்” என்று கூச்சல் போட்டுப் பிரச்சாரம் செய்யத் தொடங்குகின்றார்கள். கிருஷ்ணய்யர்களோ “தேவதாஸி முறையை ஒழிப்பது நமது புராதன நாட்டியக் கலை, இசைக் கலை பொக்கிஷங்களை ஒழிப்பதாகும்” என்று கூச்சல் கிளப்புகிறார்கள்.

சாஸ்திரிகளோ “தேவதாஸி முறையை ஒழித்தால் சாஸ்திரம் போச்சு - நாத்திகம் ஆச்சு” என்ற தலைகளில் அடித்துக் கொள்கிறார்கள். இனி ‘தாஸிகள்’ வீடுகளே மோட்சம் என்று கருதிக் கொண்டிருக்கும் ஜமீன்தார்கள் - பிரபுக்கள் முதலியவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை.

தேவதாஸி முறையை ஒழிப்பதற்கு எதிரிடையாகத் தங்களுடைய அதிகாரமும் - செல்வமும் எவ்வளவு தூரம் பாயுமோ அவ்வளவு தூரம் உபயோகிக்கத் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

“நமது நாட்டில் பெண்கள் தெய்வமாகப் போற்றப்படுகிறார்கள்” என்பது ஏமாற்றுப் பேச்சு. இந்நாட்டுப் பெண்கள் எல்லாத் துறையிலும் அழுத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள். இதற்குத் தெய்வங்களின் பெயராலும், சாஸ்திரங்களின் பெயராலும், ஒரு பெண் சமூகத்தை வியபிச்சாரத்திற்குத் தயாராக்கிக் கொலை பாதகம் செய்திருப்பதொன்றே போதிய சான்றாகும். 15 ஆண்டுகளுக்கு முன் தேவதாஸிகள் பிரச்சினை காந்தியடிகள் கவனத்தையும் ஈர்த்தது. பாரிஸால் என்னும் ஊரில் தேவதாஸிகளின் இழந்த வாழ்க்கையை அவர் நேரில் கண்ணுற்று வருந்தினார். “தேவதாஸி முறையையே அடியோடு அழித்து ஒழித்திட வேண்டும்” என்று எண்ணினார்.

அந்தக் காலத்தில் தமிழ்நாட்டில் காந்தியடிகள் சகாக்களாய் விளங்கிய தோழர்கள் சி.இராஜகோபாலாச்சாரியார், ஈ.வெ. ராமசாமியார், திரு.வி. கலியாண சுந்தர முதலியார், டாக்டர் வரதராஜூலு நாயுடு போன்ற பிரமுகர்கள், தேவதாஸி முறையை ஒழிப்பதில் ஒருவாறு அனுதாபம் காட்டினர். இந்தச் சமூகத்தில் பிறந்த படாதபாடெல்லாம்பட்டுத் தேர்ந்த எனக்கு, எவ்வழியிலேனும் இவ்வியபிச்சாரக் கூட்டத்தைத் தலையெடுக்க விடாமல் ஒழித்து விட வேண்டும் என்று கலைப்பட்டுக் கொண்டிருந்த எனக்கு, அந்தச் சந்தர்ப்பம் பெருந்துணையாக வந்து வாய்த்தது. ஆங்காங்கும் பொட்டறுப்புச் சங்கங்கள் கண்டு பிரச்சாரம் செய்யத் தொடங்கினேன்.

தேவதாஸி சமூகத்திலேயே பலமான எதிர்ப்பு கிளம்பியதோடு, நான் மேலே குறிப்பிட்ட பெரிய தலைவர்கள் - சாஸ்திரிகள் - ஜமீன்தார்கள் - பிரபுக்கள் - மாமாக்களின் எதிர்ப்புகளும் விரோதங்களும் வெளிப்படையாகவும் மறை முகமாகவும் கிளம்பத் தலைப்பட்டன. எனக்கும் என்னுடைய தோழர்களுக்கும் மிகுந்த மனச் சோர்வும் மலைப்பும் ஏற்பட்டன.

பிரிட்டானியத்தையும், பார்ப்பனியத்தை யும்கூட எளிதில் எதிர்க்கலாம் - இந்த தேவதாஸி முறையை எதிர்ப்பது சாமானிய முறை அன்று என்ற முடிவுக்கு வந்தோம்.

எனது சொந்த சமூகத்திலேயே ஏற்பட்ட பலமான எதிர்ப்புகளுக்கிடையே, யாரையும் இலட்சியம் செய்யாது எங்கள் சீர்திருத்த முயற்சிகளுக்கு மேன்மேலும் உற்சாகமூட்டி உதவி புரிந்த தோழர்களான திருவாவடுதுறை நாதசுரம் டி.என். ராஜரத்தினம் பிள்ளை, சீர்காழி சுப்பையா பிள்ளை போன்ற தன்மதிப்புணர்ச்சி மிக்க அன்பர்களை நான் என்றும் மறவேன்.”

இராமாமிர்தம்மையாரின் உள்ளக் கிடக்கையை இப்பதிப்புரை எடுத்து இயம்புகிறது. வாழ்வெல்லாம் உயர்ந்த ஒரு நோக்கத்திற்காக அர்ப்பணித்த அம்மையார் 27.6.1962இல் இயற்கை எய்தினார். நமது இயக்க இதழ்கள் அம்மையாரின் தொண்டுகளின் சிறப்பைப் பற்றியெல்லாம் செய்திகள் வெளியிட்டன.

இவ்வம்மையாரின் பெயரில் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் தமிழகத்தின் முதல்வராக (1989-91) மூன்றாவது முறையாக இருந்தபோது ஏழைப் பெண்களுக்கான திருமண உதவித் திட்டத்தினை அறிவித்து நடைமுறைப் படுத்தினார். எட்டாவது வரை படித்த திருமணமாகாத பெண்களுக்கு ரூ.5,000/- அவரின் சார்பாக திருமண உதவித் தொகையாக வழங்கப்பட்டது. இத்திட்டத்திற்கு ‘இராமாமிர்தம் அம்மையார் நினைவுத் திருமண உதவித் திட்டம்’ எனப் பெயர் சூட்டி அவரின் தொண்டு பாராட்டப்பட்டது.

கட்டுரையாளர் - திராவிட இயக்க ஆய்வாளர் அவர் தொகுத்த ‘திராவிட இயக்க வேர்கள்’ நூலில் இடம் பெற்ற கட்டுரை.