28.12.1992 அன்று திருச்சி பெரியார் நினைவு நூற்றாண்டு கல்வி வளாகத்தில் நடைபெற்ற பெரியார் நினைவு நாள் - குழந்தைகள் காப்பகக் கட்டிடத் திறப்பு விழாவில் நிகழ்த்திய உரை:

VPsigh 350பெரியார் இறந்த பிறகும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று சொன்னால், அவருக்குப் பின்னாலே இருக்கின்ற மக்களின், வருகின்ற சந்ததியினரின் உள்ளங்களிலே, அவரது கருத்துகள் நிறைந்திருக்கின்றன என்றால், அவர் சாகவில்லை என்பதைக் காட்டுகிறது. மாறாக, அவர் என்றைக்கும் மக்கள் நெஞ்சில் நிறைந்து இருக்கிறார் என்றுதான் நான் சொல்வேன்.

மிகப் பெரிய தலைவர் பெரியார் வாழ்ந்த காலத்திலே, இந்த நாட்டிலே இருக்கக் கூடிய சமுதாயக் கொடுமைகளைக் கண்டு மனம் வெதும்பினார். அதன் காரணமாக இந்தச் சமூக அநீதியைக் கொடுமையைத் துடைத்தெறிய வேண்டும் என்று உள்ளத்தில் உறுதி பூண்டார்; அதற்காகவே உழைத்தார்.

ஒரு மனிதனுக்குச் சாவைவிட மிகக் கொடுமையானது, ‘அவமானம்’ என்றே நான் சொல்லுவேன். இந்த நாட்டிலே கோடிக்கணக்கான மக்கள் சமூக அநீதியால், அவமானத்தால் பாதிக்கப் பட்டார்கள். நெருப்பிலே வெந்து கொடுமைப் படுவதைவிடக் கொடுமையானதுதான் இந்த அவமானத்தால் ஏற்படுகின்ற கொடுமை. பசியால், வயிறு பற்றி எரிகிறது.

ஆனால், மனத்தில் அவமானம் என்ற நெருப்புப் பற்றி எரிந்தால், இந்த நாட்டில் புரட்சிதான் வெடித்துக் கிளம்பும் என்பதைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அதை உணர்ந்ததால் தான், பெரியார், சுயமரியாதை என்ற முழக்கத்தைத் தந்தார்கள். அந்தச் சுயமரியாதை என்ற முழக்கத்தைத் தந்ததால்தான், ஆயிரம் ஆயிரமாண்டு காலமாய், இந்த நாட்டிலே இருக்கக் கூடிய சமூக அநீதியை, நாம் புரிந்து கொள்ள முடியும் என்று நமக்குக் கற்றுக் கொடுத்தார்.

ஒரு மனிதனை அழிக்க வேண்டுமா? அப்படி அழிக்கவேண்டும் என்று சொன்னால், செல்வத்தை அழிப்பதால் அவன் அழிவதில்லை; ஆரோக்கியத்தை அழிப்பதால் அவன் அழிவதில்லை; ஆனால், அவனை முழுமையாக அழிக்க வேண்டுமானால், அவனுடைய மானத்தை அழித்து விட்டால், அவன் அழிந்து விடுவான் என்பதை, நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இதைத் தான் சாதி செய்து கொண்டிருக்கிறது.

சாதி என்ன செய்து கொண்டிருக்கிறது? என்று சொன்னால், அது உள்ளத்தை அடிமைப்படுத்தியிருக்கிறது. இந்த நாட்டிலே இருக்கக் கூடிய கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களை, சிந்தனையை அடிமைப்படுத்தி யிருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும். கை களிலே போடப்பட்ட இரும்புக் கைவிலங்கு களை நாம் உடைத்தெறிய முடியும். ஆனால், மனத்திலே, அறிவிலே பூட்டப்பட்டிருக்கின்ற விலங்கினை நாம் உடைத்தெறிய முடியாது. அந்த விலங்குகளை உடைத்தெறியத்தான், நமக்குச் சுயமரியாதை என்ற உணர்வு வேண்டும்.

‘ரோபோ’ என்று சொல்லக்கூடிய எந்திர மனிதன், அது மனிதனை விடத் திறமையாக, எல்லாச் செயல்களையும் செய்யக்கூடிய ஆற்றல் படைத்தது. ஆனால், அதற்கு மனிதனுக்கு இருக்கக்கூடிய ஒன்று  இல்லை. அதுதான் மனம் என்ற ஒன்று, உள்ளம் என்று ஒன்று அதற்கு இல்லை.

இந்த நாட்டிலே இருக்கக்கூடிய, தாழ்த்தப்பட்ட மக்களைச் சூத்திரன் என்று சொல்லப்படுகின்ற பிற்படுத்தப்பட்ட மக்களை, வருணம் என்று சொல்லக்கூடிய சாதி என்கிற அமைப்பு, அவர்களுடைய உள்ளங்களிலே விலங்கை மாட்டி, அடிமைப்படுத்தி வைத்திருக் கிறது. தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களை எந்திர மனிதர்களாக்கி இருக்கிறது. ஆகையால் தான் பெரியார், சுயமரியாதை என்ற ஆணியை மிகச் சரியாக அதனுடைய தலையில் அடித்தார்.

ஒரு தாழ்த்தப்பட்டவன், செல்வந்தன் ஆனால் இந்தச் சமுதாயம் எதிர்ப்பதில்லை. அதை ஏற்றுக் கொள்கிறது. அதே சமயம் அவன் சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்கு வந்தால், அவனுடைய தலை வெட்டப்படுகிறது. ஆக, இன்றைக்கு இருக்கக் கூடிய சிக்கல்களுக்கு அடித்தளம் என்ன? சமுதாயத்தில் இருக்கக்கூடிய தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களை உயர்த்துவது எப்படி என்பதுதான் அந்தச் சிக்கல். அந்தச் சிக்கலுக்குத் தீர்வு காணப் பாடுபட்டவர்கள் தான் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களும். பெரியார் அவர்களும். மனிதன் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும், வாழ வேண்டும் என்பதுதான், பெரியார் அவர்களுடைய கொள்கை; டாக்டர் அம்பேத்கர் அவர்களுடைய கொள்கை.

நாம் 400 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள வரலாற்றுக்குச் செல்வதைவிட, 4000 ஆண்டுகளுக்கு முன்னால் உள்ள வரலாற்றுக்குச் செல்வோம். 4000 ஆண்டுகளுக்கு முன்னாலே இந்தியாவிலே ஒரு படையெடுப்பு நடந்தது. அந்தப் படையெடுப்பிலே கைபர், போலன் கணவாய் வழியாக இந்த நாட்டுக்கு வந்தவர்கள், இங்கே இருந்த மக்களை அடிமைப்படுத்தி விட்டார்கள். அவர்களைத் தசுயூக்கள் என்று சொன்னார்கள். அந்தத் தசுயூக்கள் தான் இன்றைக்குப் பஞ்சமர்களாகச், சூத்திரர்களாக இருக்கிறார்கள். எனவே, அப்போது ஏற்பட்ட அடிமைத்தனம் ஒழிந்தாலொழியப் பிரச் சினைகள் தீராது.

இங்கே, அரசியலிலே ஈடுபட்டு, எம்.எல்.ஏ.க்களாக, எம்.பி.க்களாக வருகிறார்கள். ஏன்? அமைச்சர்களாகக்கூட வருகிறார்கள். ஆனால் மண்டல் அமுலாக்கம் என்பது வெறும் சம்பளத்திற்கான, வேலை வாய்ப்பு மட்டுமல்ல; அதிகாரவர்க்கத்தில் நமக்குப் பங்கு கிடைக்க வேண்டும் என்பதுதான். ஏனென்றால், சாதாரணமான ஏழை மக்களுக்கான ‘ரேசன் கார்டு’ கிடைப்பதைக்கூட முடிவெடுப்பது அதிகார வர்க்கம்தான். எனவேதான், மண்டல் அமுலாக்கம் என்பது, அதிகாரப் பங்கீடு என்கிறோம். திராவிடர் கழகத்தை எங்களோடு ஒப்பிட மாட்டேன். ஏனென்றால், அது அரசியலிலே ஈடுபடக் கூடிய இயக்கமல்ல. ஆனால், அரசியலில் ஈடுபடுகின்ற கட்சிகளில், எங்களுடைய சனதாதளம் தான் கட்சிப் பொறுப்புகளில் 60 சதவிகிதத்தைப் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கு ஒதுக்கீடு செய்திருக்கிறது. அதே போல், நாட்டின் அனைத்து அதிகார மட்டத்திலும் ஒதுக்கீடு செய்யப்பட்டா லொழிய, நாட்டில் முன்னேற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லை.

இந்த நிலையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்திய நாட்டிலுள்ள அரசியலாக இருந்தாலும், அதிகார வர்க்கமாக இருந்தாலும், அரசியல் கட்சித் தலைமையாக இருந்தாலும், தொழில் துறையாக இருந்தாலும், எல்லா வற்றிலும் முடிவெடுக்கின்ற இடத்தில், மேல்சாதிக்காரர்களே இடம் பெற்றிருக் கிறார்கள். பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களை, அந்த இடங்களில் காண முடியாத நிலை, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து கொண்டு இருக்கிறது. இதைப் பற்றி யாரும் பேசவில்லையே! ஏன்?

2000 ஆண்டுகளாகத் தங்களுடைய வாய்ப்புகளை இழந்தவர்களைப் பார்த்துத் தகுதி, திறமை இருந்தால், அவர்களுக்கு வேலை கிடைக்கும் என்கிறீர்கள். 3000 ஆண்டு காலமாகத் தகுதிகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள்; அந்த வாய்ப்பை 30 ஆண்டுகள் இவர்களுக்குக் கொடுத்தால், 30 ஆண்டுகளில் உங்களைவிட இவர்கள் முன்னேறிவிடுவார்கள்.

எடுத்துக் கொண்ட செய்தியைச் சொல்லப் போனால் நீண்டநேரம் பேசிக் கொண்டே இருக்கலாம். காலத்தின் அருமை கருதிக் கடைசியாகச் சில கருத்துகளைக் கூற விரும்புகிறேன். கல்வி வேறு, அறிவு வேறு. அறிவு என்று சொல்லக் கூடியது இருக்கிறதே, அந்த அறிவு மனிதனுக்கு அதிகாரத்தைத் தர இருக்கிறது. அப்படி அறிவு அதிகாரத்தைத் தருகிறது என்பதை ஈராயிரம், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே அவர்கள் உணர்ந்தார்கள். அதனால்தான் அதிகாரத்தைத் தங்கள் கையிலேயே வைத்துக் கொள்ள வேண்டும் என்று கருதி, ஒன்றைச் செய்தார்கள். மற்றவர்கள் படித்து அறிவு பெறக் கூடாது என்று நினைத்தார்கள். அப்படி நினைத்ததால்தான், சூத்திரர்கள் வேதத்தைப் படித்தால், அவர்கள் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என்று சொன்னார்கள். அந்த அளவிற்கு அறிவுத் துறையைத் தங்கள் கையிலே ஏகபோகமாக வைத்துக் கொண்டார்கள்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை, தொழில் நுணுக்கங்களைக் கொடுக்க மறுத்தார்கள். இருந்த போதிலும் தானாகவே முயன்று ஏகலைவன் (வில் வித்தையைக்) கற்றுக் கொண்டான். அவனது கட்டை விரலையே வெட்டி விட்டார்கள். முன்னேறிய நாடுகளிலிருந்து எதை வேண்டுமானாலும் தர இருக்கிறார்கள்; பணம் தரத் தயாராக இருக்கிறார்கள்; பொருள்களைத் தரத் தயாராக இருக்கிறார்கள். ஆனால், பொறியியற் கல்வியைத் தர மறுக்கிறார்கள்.

இந்த நாட்டிலே இருக்கக் கூடிய கல்வி முறைகூட, நாட்டில் இருக்கிற ஏற்றத் தாழ்வுகளை நிலை நிறுத்துகின்ற கல்வி முறையாகஇருக்கிறது. இந்த நாட்டிலே இருக்கக்கூடிய மிகப் பெரிய நிர்வாகங்களுக்கு எல்லாம் போகக் கூடியவர்களுக்கு, மிகப் பெரிய கல்வி தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட கல்வியைப் பெரும் வசதி படைத்தவர்கள்தான் பெற முடியும் என்ற நிலை இப்போது இருந்து கொண்டிருக்கிறது. எனவே, இன்றைக்கு இருக்கக்கூடிய கல்வி முறை ஒடுக்கப்பட்ட மக்ககளிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கக் கூடிய ஒன்றாகத்தான் இருக்கிறது.

புரட்சி என்பது வாளைத் தூக்கிக் கொண்டு மட்டும் செய்ய முடியாது. மக்கள் மனத்தில் எழுகின்ற மலர்ச்சியை வைத்துத் தான் செய்ய முடியும். அப்படிப்பட்ட பணியை நாங்களெல்லாம் செய்கின்ற பணியைவிட, உயர்ந்த பணியை, நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள். எனவே, உங்களைப் பாராட்டுகிறோம்.

அண்மையிலே விடுதலை பெற்ற நாடுகள் இந்தியா ஆயினும், வங்காள தேசம் ஆயினும், பாகிஸ்தான் ஆயினும், மூன்று இலக்குகளை வைத்திருக்கின்றன. ஒன்று நாட்டினுடைய ஒருமைப்பாட்டை முன்னேற்றுவது; இன்னொன்று மக்கள் நாயகத்தை நிலைநிறுத்துவது; மூன்றாவது நவீன மயமாக்குவது. இதிலே நான் முதலில் ஒன்றை எடுத்துக் கொள்கின்றேன். ஒருமைப்பாடு பேசுகிறவர்கள், ஒருவன் பிறக்கும்போது, சாதியின் அடிப்படையில் உயர்வு, தாழ்வு என்று சொல்கிறார்கள் என்றால், சமுதாய இணக்கம் இல்லை என்றால், சமுதாய ஒற்றுமை இல்லை என்றால், நாட்டு ஒற்றுமை எப்படி வரும் என்பதைக் கேட்க விரும்புகிறேன்.

இரண்டாவதாக, மக்கள் நாயகம் என்பது வெறும் வாக்குச் சீட்டிலே இல்லை; ஒருவனுடைய கால், இன்னொருவனுடைய தலையிலே இருக்கக்கூடிய இந்தச் சமுதாய அமைப்பில், சமூக நீதி இல்லாமல், சமுதாயச் சமத்துவம் என்பது இல்லை. சமுதாயச் சமத்துவம் இல்லை என்று சொன்னால், மக்கள் வாழ்வு இருக்க முடியாது. மக்கள் வாழ்வு இல்லையென்றால் மக்கள் நாயகம் எப்படி இருக்க முடியும்?

இப்படிச் சமுதாயத்திலே, சமூக அநீதி இருக்கும் போது, மூன்றாவதாக உள்ள நவீன மயமாக்குவதை எப்படிச் செய்ய முடியும்? இன்றைக்கு வகுப்பு வெறியானது இந்த நாட்டிலே பரவிக் கொண்டிருக்கிறது. அந்த வகுப்புவெறி மறைய வேண்டும் என்று சொன்னாலும்கூட அதன் மூலத்தைப் பார்க்க வேண்டும்.

வகுப்புவாதத்தின் மூல ஊற்று எங்கிருந்து புறப்படுகிறது என்பதை ஆராய வேண்டும். வகுப்புவாதத்துக்கு எதிராக நாம் மதச்சார்பின்மை வேண்டும் என்கிறோம். ஆனால் மதச்சார்பின்மை மட்டுமே வகுப்புவாதத்தை ஒழித்துவிடாது. அத்துடன் கட்டாயமாக சமூக நீதியும் இணைந்தாக வேண்டும்!

வி.பி. சிங் சொன்ன கதை

பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டு ஆணைக்கு பார்ப்பன உயர்ஜாதி சக்திகளிடமிருந்து கடும் எதிர்ப்புகள் உருவாகி நாடு முழுதும் கலவரங்களைக் கட்டவிழ்த்தபோது பாட்னாவில் லல்லுபிரசாத் ஏற்பாடு செய்த மாபெரும் கூட்டத்தில் பேசிய வி.பி.சிங் ஒரு குட்டிக்  கதையைக் கூறி, இடஒதுக்கீடு கொள்கையை விளக்கினார்.

ஒரு குடும்பத்தில் அண்ணன் தம்பிகளிடையே பாகப் பிரிவினை நடந்தது. வீட்டில் இருந்த ஒரே மாட்டையும் இரண்டாகப் பிரித்துவிட வேண்டும் என்றார்கள். மாட்டின் தலைப்பகுதி தம்பிக்கும் பின்பகுதி அண்ணனுக்கும் பிரிக்கப்பட்டது. தம்பியின் கடமை ஒவ்வொரு நாளும் தலைப் பகுதியிலுள்ள வாய்க்கு - மாட்டின் தீவனம் போட வேண்டும். அண்ணனோ ஒவ்வொரு நாளும், பின் பகுதியிலுள்ள மாட்டின் மடியிலிருந்து பால் கறந்து கொண்டே இருந்தார்.

எத்தனை காலத்துக்குத்தான் இந்த அநீதியை தம்பி சகித்துக் கொண்டிருப்பான்? ஒரு நாள் அண்ணன் பால் கறந்து  கொண்டிருக்கும்போது தம்பி, தலைப்பகுதியிலிருந்த கொம்பைப் பிடித்து ஆட்டி விட்டான். அவ்வளவுதான்; இத்தனை ஆண்டுகாலம் தீனி போடாமலேயே பாலை மட்டும் கறந்து கொண்டிருந்த அண்ணனை மாடு எட்டி உதைத்தது. அண்ணன் - இது அநீதி; அநியாயம் என்று அலறுகிறான். அந்தக் கொம்பைப் பிடித்து ஆட்டிய வேலையைத்தான் நான் செய்தேன். அதற்காக காலம் காலமாக அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள மறுத்தவர்கள் என்னை எதிர்க்கிறார்கள், என்றார் வி.பி.சிங்.