டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர். இவரை அறியாதவர்கள் இங்கு யாரும் இல்லை. ஆனால் அவரின் கொள்கைளைகளையும், போராட்டங்களையும், செயல்பாடுகளையும் மறைத்து, அவரின் கொள்கைகளைத் திரிபுவாதம் செய்து ஒரு குறிப்பிட்ட சாதியில் அடக்கி, அச்சாதியின் தலைவராகவே முத்திரை குத்தப்பட்டு தவறாகவே அவர் அறியப்படுகின்றார்.

அவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு மட்டும்தான் போராடினாரா? அவரது போராட்டத்தின் விளைவாய் அந்தச் சமுதாயத்தினர் மட்டும்தான் பயன்பெறுகின்றனரா? இல்லவே இல்லை! அவர் உரிமைகள் மறுக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் உரிமை மீட்டுத்தரும் பிரதிநிதியாகத்தான் பணியாற்றினாரே தவிர, ஒருபோதும் குறுகிய சாதிய நோக்கம் கொண்டவர் அல்லர்.

அண்ணல் அம்பேத்கரின் வாழ்வில் மிகவும் முதன்மையான மூன்று நிகழ்வுகளை இதற்கு உதாரணமாகக் கூறலாம். ஒன்று 1927 டிசம்பர் 21 அன்று சாதியத்தை நிலைநாட்டும் மநுஸ்மிருதியை அவர் தீயிட்டுக் கொளுத்தினார். இரண்டாவது 1935 அக்டோபர் 13 அன்று அவர் ஆற்றிய உரையில் “நான் யாருக்கும் அடிமை இல்லை, எனக்கு யாரும் அடிமை இல்லை, ஏனென்றால் நான் இந்து இல்லை. நான் ஒரு இந்துவாகப் பிறந்துவிட்டேன். ஆனால் ஒருபோதும் ஓர் இந்துவாகச் சாக மாட்டேன்” என்று முழங்கினார். மூன்றாவது, 1956 அக்டோபர் 14 அன்று இந்து மதத்தையும், சாதியத்தையும் தூக்கி எறிந்துவிடடு அம்பேத்கர் பவுத்தத்தைத் தழுவி, “நான் ஒரு பவுத்தன்” என்று தன்னை அறிவித்தார். இவரையா ஒரு குறிப்பிட்ட சாதிக்குள் அடக்குவது?.

அவரது கொள்கைகளும், போராட்டங்களும், செயல்பாடுகளும் தீண்டாமைக்கு எதிரானவை, அடிமை முறைக்கு எதிரானவை. எங்கெல்லாம் உரிமை மறுக்கப்படுகின்றதோ, அங்கெல்லாம் அதை மீட்டெடுக்கும் ஆயுதங்களாக அவை அமைந்தன. இத்தகைய கொடுமைக்கு அடிப்படைக் காரணம் சாதியம். இது ஒழிய வேண்டும் என்று முழங்கினார். இந்தச் சாதியம் ஒழிய அதன் ஆணிவேரான இந்து மதம் ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறியவர் புரட்சியாளர் அம்பேத்கர்.

தீண்டாமையும், சாதிப் பாகுபாடும் உள்ள வருணப்பிரிவு ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறினாரே தவிர, மேல் சாதி ஒழிய வேண்டும், கீழ்ச் சாதி காப்பாற்றப்படவேண்டும் என்று அவர் ஒருபோதும் கூறியது கிடையாது. அம்பேத்கர் - பெரியார் என்றாலே சாதியத்திற்கும், மதத்திற்கும் எதிரானவர்கள் எனறு பொருள். அவர்களைத் தனிப்பட்ட முறையில் உரிமை கொண்டாட யாருக்கும் இங்கே உரிமை இல்லை.

புரட்சியாளர் அம்பேத்கர் இத்தகைய கொடுமையான சாதியம் பற்றிப் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டவர். அதன் விளைவாய்த் தோன்றியதுதான் (ஜெனிஸிஸ் மெக்கானிசம் & டெவலப்மென்ட் ஆப் கேஸ்டிசம் இன் இந்தியா ) இந்தியாவில் சாதி தோன்றியது எப்படி? வளர்ந்தது எப்படி? இயங்குவது எப்படி? என்ற நூல். இதில் சாதியம் எவ்வளவு காட்டுமிராண்டித் தனமானது என்பதையும், அதை ஒழிக்கும் வழியையும் தெளிவாகக் கூறுகின்றார்.

 ஒரு பகைக்குழு இன்னொரு பகைக்குழுவிற்குள் திருமண உறவு கொள்ளாமல் தடுப்பதற்காகவும், உழைக்காதவன் தன்னை மேம்படுத்திக் கொள்வதற்காகவும் வந்ததுதான் சாதியம். இந்த அடிமைநிலை தோன்றியது சாதியத்திலே. ஆனால், இது நிலைநிறுத்தப்பட்டிருப்பது பொருளாதாரத்திலே என்று கண்டறிந்து சொன்னவர் மாமேதை அம்பேத்கர். இந்தக் கொடுமையான சாதியம் ஒழிய வேண்டுமானால், அனைத்துப் பிரிவினரும் தங்களுக்குள் உள்ள சாதியத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, ஒன்றாக இணைந்து போராட வேண்டும் என்பதைத் தெளிவாக விளக்குகின்றார். இதை அறிந்தால்தான் அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர் இல்லை என்பதும், அவர் உலகப்பெரும் தலைவர் என்பதும், மாபெரும் மனித நேயப் பற்றாளர் என்பதும் விளங்கும்.

ஆனால் இங்கே இந்தச் சமுதாயம் எப்படி இருக்கின்றது? அடிமைத்தனத்தில் ருசிகாணும் சமுதாயமாக இருக்கின்றது. சாதியத்தில் ஒருவர் மற்றொருவருக்கு அடிமையாக இருக்கின்றார். இங்கு தனக்குக் கீழே ஓர் அடிமை வேண்டும் என்று நினைக்கின்றனர். இதில் என்ன பெருமை கொள்ள வேண்டியிருக்கிறது? இதை எண்ணி வெட்கப்படவேண்டாமா? அதுவும் அம்பேத்கரையும் அவர் மூலம் கிடைத்த பலனையும் இவர்கள் எப்படிப் பார்க்கின்றனர்? வீட்டில் அம்பேத்கரின் படத்தை மாட்டிக்கொண்டு அருகில் சிவன், விஷ்ணு போன்ற இந்துக் கடவுள்களின் படங்களையும் மாட்டி வைக்கும் அம்பேத்கர் பற்றாளர்களும், அம்பேத்கரின் பிறந்த நாளிலும் நினைவு நாளிலும் காலையில் அவர் சிலைக்கு மாலை போட்டுவிட்டு, மாலையில் மாரியம்மன் கோயிலுக்குச் செல்லும் அறிவாளர்களும், புரட்சியாளர்களும் இங்கும் ஏராளம். இதைவிட அம்பேத்கரை அவமானப்படும்தும் செயலும், அவருக்குச் செய்யும் துரோகமும் வேறு இருக்க முடியுமா?

உலகில் எந்த நாட்டிலும், எந்த மதத்திலும், நம் நாட்டில் உள்ளபடி சாதிகளோ, சாதிக் கொடுமைகளோ இலலை. எனவே, இந்த சாதிக் கொடுமைகள் ஒழிய வேண்டுமானால் முதலில் நாம் சாதிய அடையாளங்களில் இருந்தும், சாதியத்தை நிலைநிறுத்தும் மத அடையாளங்களில் இருந்தும் வெளிவந்து, சாதியத்தின் மூலக்கூறுகளை ஒழிக்க வேண்டும். இதற்கிடையில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களிடையே மோதலை உருவாக்கி அவர்களின் கோபம் இந்தச் சாதியை நிறுவிய பார்ப்பனர்கள் மீது வராத அளவிற்கு இந்தப் பார்ப்பனர்கள் தந்திரமாக நடந்து கொள்வதை உணர்ந்து, பார்ப்பனத் தந்திரங்களை முறியடித்து ஒற்றுமையாக இணைந்து சாதியத்தைத் தகர்த்தெறியும் பணியில் நம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வ வேண்டும்.

அம்பேத்கரின் படத்திற்கும், சிலைக்கும் மாலை அணிவிப்பது அவரது கொள்கைளை முழுமையாக ஏற்றுக்கொண்டு அதைப் பரப்பும் பிரச்சாரமே அன்றிச் சடங்கன்று என்பதையும், சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை என்பதையும் உணர்ந்து ஒவ்வொருவரும் நாங்கள் இந்துக்கள் இல்லை என்று புறக்கணிப்பதுதான் நாம் அவருக்குச் செய்யும் மரியாதையும், நன்றியும் ஆகும்.

எனவே, அம்பேத்கரின் பொன்மொழியான கற்பி, புரட்சி செய், ஒன்றுசேர் என்பதை மனத்திற்கொண்டு அம்பேத்கரின் கொள்கைகளைக் கற்போம், பட்டிதொட்டியயல்லாம் பரப்புவோம், மக்களை ஒன்று திரட்டி ஒரு புரட்சியின் மூலம் இந்தப் பார்ப்பன மத அடிமை விலங்கை உடைத்தெறிவோம் என்று இந்நாளில் உறுதி ஏற்போம்.

அம்பேத்கர் நமக்குப் படமல்ல , பாடம்,

வாழ்க புரட்சியாளர் அம்பேத்கர்.

Pin It