இனப்பற்றில்லா அரசியல் தலைமைகளால் தமிழகம் ஒவ்வொரு உரிமையாக இழந்து வருகிறது. தமிழக மக்களை எப்படி வேண்டுமானாலும் தன்பக்கம் திருப்பிக் கொள்ளலாம் என்று தி.மு.க.வும் அ.இ.அ.தி.மு.க.வும் உறுதியாக நம்புகின்றன. எனவே, மற்ற மாநிலங்களில் அரசியல் தலைவர்களுக்கு, மக்கள் பற்றிய அச்சம் இருப்பது போல் தமிழ்நாட்டில் மக்களைப் பற்றிய அச்சம் அக்கட்சிகளுக்குக் கிடையாது.

        தமிழர் என்ற உள்ளார்ந்த இனஉணர்வற்று - ஆதாய நோக்கில் அவ்வப்போது தமிழர் என்று உச்சரித்துக் கொள்ளும் தலைவர், அ.இ.அ.தி.மு.க. தலைவி ஆகியோரை நன்கு புரிந்து கொண்ட இந்திய அரசு, உச்சநீதிமன்றம் ஆகியவை தமிழர்களின் உரிமைகளைப் பறிப்பதிலும், தமிழர்களை ஏமாற்றுவதிலும் துளிகூடத் தயக்கமின்றி ஈடுபடுகின்றன.

        இப்பொழுது முல்லைப் பெரியாறு அணை வழக்கில் உச்சநீதிமன்ற அரசமைப்பு ஆயம் தந்துள்ள ஆணையே இதற்குச் சான்று.

        17.2.2010 அன்று கூறிய முடிவில், முல்லைப் பெரியாறு அணையின் வலுத்தன்மை குறித்தும் எத்தனை அடிதண்ணீர் தேக்கலாம் என்பது குறித்தும் ஆராய்ந்து ஆறுமாதத்திற்குள் பரிந்துரை வழங்க ஐவர் குழு ஒன்றை அமைக்கப்போவதாக அறிவித்தது, உச்சநீதிமன்றம்.

        மறுநாள் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஆனந்த் அவர்களை அக்குழுவின் தலைவராக அமர்த்தியது. முல்லைப் பெரியாறு சிக்கலில் தொடர்பில்லாத இரு வல்லுநர்களை நடுவண் அரசு அமர்த்த வேண்டும். கேரளமும் தமிழகமும் தலா ஒரு வல்லுநரை அல்லது ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியை குழுவில் இணைக்க வேண்டும்.

        இந்த ஆணையை உச்சநீதிமன்ற நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையிலான நீதிபதிகள் பி.சுதர்சன ரெட்டி, முகுந்தம் சர்மா, ஆர்.எம்.லோதா, தீபக் ஆகிய ஐவர் அடங்கிய அரசமைப்பு ஆயம் வழங்கியது. அரசமைப்புச்சட்ட விதி 131-இன் கீழ் இக்குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த முடிவு தமிழகத்திற்கு மிகவும் பாதகமானது.

        ஆனால் இந்த முடிவைத் தமிழகத்தின் ஆளுங்கட்சியும் முதன்மை எதிர்க்கட்சியும் எப்படி எதிர்கொண்டன? இதோ கலைஞர் கருணாநிதி கூறுகிறார்:

        “இந்த நிலையில் உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் முடிவெடுப்பதற்கு வசதியாக அரசியல் சாசனம் 131-வது பிரிவின் கீழ் ஐந்து பேர் கொண்ட குழுவை நீதிபதி ஆனந்த் தலைமையில் அமைத்துள்ளது.

        “இந்தக் குழு அணை பாதுகாப்பு மற்றும் நீர் மட்ட உயரம் முதலியவற்றை பரிசீலனை செய்து அதன் அறிக்கையை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வுக்கு ஆறுமாதத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டுமென உச்சநீதிமன்றம் தான் தெரிவித்திருக்கிறது.

        “இந்த நிலையில் தமிழக அரசு எதையும் விட்டுக் கொடுத்து விடவில்லை. அதற்குள் சிலர் ஏதோ தமிழக அரசு ஏமாந்து விட்டது, விட்டுக் கொடுத்துவிட்டது என்றெல்லாம் கூறுவது அரசியல் பிரச்சாரம் தவிர வேறல்ல” - தினமணி 20.2.2010.

        உச்சநீதிமன்ற ஆணையைக் கருணாநிதி ஏற்றுக் கொண்டுள்ளார். அதனால் தான் 17.02.2010 அன்று இந்த ஆணைக்கான கருத்தை வெளியிட்ட போது அதைத் தமிழக அரசு வழக்குரைஞர் பராசரன் மறுக்கவில்லை. 18.02.2010 அன்று உச்சநீதிமன்றம் முறைப்படி ஆணை பிறப்பித்து குழுத்தலைவரை அமர்த்தியது.

        ஆனால், தமிழக முதல்வர் கருணாநிதி திடீர்க் குட்டிக்கரணம் போட்டு 20.2.2010 தி.மு.க. பொதுக்குழுவில், உச்சநீதிமன்றம் அமைக்கும் குழுவில் தமிழக அரசு தனது பிரதிநிதியை அனுப்பக் கூடாது என்று தீர்மானம் போடச் செய்தார்.

        பொதுக்குழுவில் பேசும் போது, “உச்சநீதிமன்ற ஆணைக்கு எதிரான கேரள அரசின் சட்டத்தைச் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அதுபற்றி தனது முடிவை அறிவிக்காமல் அணை வலுவாக உள்ளதா என்பது போன்ற அம்சங்களை மீண்டும் ஆய்வு செய்வதற்கு ஐவர் குழு அமைக்கப்படும் என்றும் அதற்கு ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைவராக இருப்பார் என்றும் அறிவித்திருக்கிறது. இந்த முடிவை தி.மு.க. ஏற்கவில்லை” என்று பேசியுள்ளார்.

        இவ்வாறு முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதால் கருணாநிதிக்கு ஏதோ குழப்பம் வந்துவிட்டது என்று கருத வேண்டியதில்லை. மக்களைக் குழப்ப அவர் செய்யும் முயற்சி இது.

        உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஐவர் குழு பற்றி கருத்தறிவித்தப் போது - 17.02.2010 அன்றே தமிழக அரசு வழக்குரைஞர் பராசரன் எதிர்த்திருக்க வேண்டும். தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடித்த கதையாக, இப்பொழுது ஐவர் குழுவில் தமிழகம் இடம் பெறாது என்று கருணாநிதி கூறுகிறார். இதையாவது உறுதியாகக் கருணாநிதி செயல்படுத்த வேண்டும்.

        ஆனால் செயலலிதா ஐவர் குழுவில் தமிழகம் இடம் பெற வேண்டும் என்கிறார். செயலலிதாவின் இந்த நிலைபாடு தவறானது.

        ஐவர் குழுவில் மூன்று பேர் அதாவது, நடுவண் அரசு அமர்த்தும் இருவர், கேரளம் அமர்த்தும் ஒருவர் ஆக மூன்று பேர் தமிழகத்திற்கு எதிரானவர்களாக இருப்பார்கள் என்பதை உறுதியாக நம்பலாம். உச்சநீதிமன்றம் அமர்த்தியுள்ள நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் எப்படிச் செயல்படுவார் என்று சொல்ல முடியாது.

        ஏனெனில் இப்பொழுது நடைபெறும் முல்லைப் பெரியாறு வழக்கில் உச்சநீதிமன்றம் தமிழ்நாட்டிற்கு எதிராகவே செயல்படுகிறது. அதற்குப்பல காரணங்கள் இருக்கின்றன. நடுவண் அரசில் மலையாளிகள் முகாமையான துறைகளில் அதிகாரிகளாக இருக்கிறார்கள். தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் மலையாளி ஆவார்.

        உச்சநீதிமன்றத்தின் தமிழர் எதிர்ப்புச் செயல்பாடு குறித்து 2009 திசம்பர் தமிழர் கண்ணோட்டம் ஆசிரியவுரையில் நாம் பின்வருமாறு எழுதியிருந்தோம்.

உச்சநீதிமன்றம் ஒரு சார்பாகச் செயல்பட்டபின், வேறு எங்கு வாதாடி நீதி பெறுவது?

27.2.2006-இல், 142 அடி உயரத்திற்குத் தண்ணீர் தேக்கலாம் என்று மூன்று நீதிபதிகள் கொண்ட ஆயம் தீர்ப்பளித்தது. அதை முறியடிக்க 15.3.2006 அன்று கேரள அரசு, “கேரளப் பாசன மற்றும் நீர்ப்பாதுகாப்பு” சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வந்து சட்டப் பேரவையில் நிறைவேற்றியது. இச்சட்டம் முல்லைப் பெரியாறு அணையில் 136 அடிக்கு மேல் நீர்த் தேக்கக் கூடாது என்றும் அவ்வணையின் முழுக்கட்டுப்பாடும் கேரள அரசுக்கு வந்துவிட்டது என்றும் கூறியது.

அப்போது கேரளத்தின் முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உம்மன்சாண்டி இருந்தார். ஆட்சி நடத்திய காங்கிரஸ் கூட்டணியும், எதிர்க்கட்சியாயிருந்த சி.பி.எம். கூட்டணியும் ஒருமித்து இந்தச் சட்ட முன் வரைவை நிறைவேற்றின. பின்னர் ஆளுநர் கையொப்பமிட்டு அதைச் சட்டமாக்கினார்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பை முறியடித்த இந்தக் கலகத்தை காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், கேரள அரசு, நடுவண் அரசின் முகவரான ஆளுநர் ஆகிய அனைவரும் சேர்ந்து நடத்தியுள்ளனர்.

இவ்வாறான அரசமைப்புச் சட்டக் கவிழ்ப்பு நடவடிக்கையை இந்திய அரசின் மறைமுக ஒப்புதல் இல்லாமல், செய்து விட முடியாது. அவ்வாறு தனது தீர்ப்பை முறியடித்ததை உச்சநீதிமன்றம் மனமுவந்து அங்கீகரித்தது. இவ்வாறு நாம் கூறுவதற்கு உச்சநீதிமன்றத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகளே காரணம்.

கேரளத்தின் மேற்கண்ட கலகச் சட்டத்தை எதிர்த்த தமிழக அரசு 31.3.2006 அன்று நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுத்தது. அத்துடன் கேரளச் சட்டம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் அறிவிக்கும்படி கோரியது. அதற்கு உச்சநீதிமன்றம் என்ன நடவடிக்கை எடுத்தது?

இரு மாநில முதல்வர்களும் சுமுகமாகப் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள் என்று உச்சநீதிமன்றம் கூறியது. அதன்படி 29.11.2006 அன்று இந்திய நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சைபுதீன்சோஸ் தலைமையில் புதுதில்லியில் தமிழக, கேரள முதலமைச்சர்கள் மற்றும் இரு மாநில அதிகாரிகள் பேச்சு நடத்தினர். பலனில்லை.

தனது தீர்ப்பை அவமதித்த கேரளத்தின் மீது உச்சநீதிமன்றத்திற்குச் சினமில்லை.

        ஐவர் குழுவில் தமிழகம் இடம் பெறமறுத்தால் அந்தக்கழு அமைக்கப்பட முடியாது. அத்தோடு தமிழர்கள் தெருவில் இறங்கிப் போராடி இந்தியாவிற்கும் உச்சநீதிமன்றத்திற்கும் நெருக்குதல் தரவேண்டும்.

        இப்பொழுது வந்துள்ள உச்சநீதிமன்ற ஆணை 2006 பிப்ரவரி 27-இல் வந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பைச் செல்லாததாக்கிவிட்டது. அப்போது இரண்டு வல்லுநர் குழுக்களின் அறிக்கை அடிப்படையில் அணையின் வலுத்தன்மையை ஏற்று முதல் கட்டமாக 142 அடி தண்ணீர் தேக்க அத்தீர்ப்பு ஆணையிட்டது.

        அந்த அணையை இடிக்கக் கேரளம் செய்யும் முயற்சியை உச்சநீதிமன்றம் தடை செய்யவில்லை. புதிய அணை கட்டும் முயற்சியையும் தடை செய்யவில்லை.

        2006 உச்சநீதிமன்றத் தீர்ப்பை முறியடிக்கும் வகையில் கேரள அரசு இயற்றிய அணை பாதுகாப்புச் சட்டத்தையும் உச்சநீதிமன்றம் நீக்கவில்லை.

        இவ்வாறு எல்லாவகையிலும் ஒருசார்பாகக் கேரளத்தின் அடாவடித்தனங்களைத் தாங்கிப் பிடிக்கிறது உச்சநீதிமன்றம்.

        எனவே, தெருவில் இறங்கிப் போராடுவதைத் தவிர தமிழர்களுக்கு வேறு வழியில்லை.

        முல்லைப் பெரியாறு உரிமையை மறுக்கும் கேரளத்திற்குப் பாடம் புகட்ட தமிழ்நாட்டிலுள்ள மலையாளிகளையும் அவர்களின் நிறுவனங்களையும் வெளியேற்றுவோம்!

        தமிழகத்திலிருந்து கேரளத்துக்குச் செல்லும் அனைத்துப் பொருள்களையும் செல்லவிடாமல் தடுப்போம்!

 - தமிழ்த்தேசியன்

Pin It