பெரியாரியலுக்கு வலிமை சேர்க்கும் அண்மைக்கால வரவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றிருப்பது, பெரியாரிய ஆய்வாளர் வீ.எம்.எஸ். சுபகுணராஜன் தொகுத்து வெளியிட்டள்ள ‘நமக்கு ஏன் இந்த இழிநிலை’ நூலாகும். ஜாதி மாநாடுகளிலும் ஜாதி ஒழிப்பு மாநாடுகளிலும் பெரியார் நிகழ்த்திய உரைகளைத் தொகுத்து சுமார் 400 பக்கங்களோடு இந்த நூல் வெளி வந்திருக்கிறது. இந்த நூலுக்கு தொகுப்பாசிரியர் 60 பக்கங்களுக்கு அய்ந்து அத்தியாயங்களைக் கொண்ட ஆழமான முன்னுரை எழுதியிருக்கிறார். இதில் ஜாதி சங்க மாநாடுகளில் பெரியார் எனும் தலைப்பில் எழுதியுள்ள பகுதியை இங்கு வெளியிடுகிறோம். ஜாதி சங்கங்களில் ஜாதியைக் கடுமையாக விமர்சித்துப் பேசக்கூடிய நேர்மையும் துணிவும் கொண்ட தலைவராக பெரியார் இருந்திருக்கிறார் என்பதை இதைப் படிக்கும்போது உணர முடியும். இப்போதும் ஜாதி ஒழிப்புக்கான கருத்தாயுதங்களாக இவை திகழ்கின்றன.

பெரியார் சாதி சங்க மாநாடுகளில் நிகழ்த்திய உரைகள் ஏறத்தாழ நாற்பது ஆண்டுகாலம் நீடித்தது. அந்த மாநாடுகளில் அவரது உரைகளின் பிரதான கூறானது இன்றும் பெரும் ஆச்சர்யத்திற்குரியது. சாதி அபிமானம், விருத்தி என்ற இரட்டை நோக்கங்களுக்காக நடத்தப்பட்ட அம்மகாநாடுகளில் இவ்வளவு கறாரான இடித்துரைக்கும் வாதங்களை, விமர்சனங்களை, சீர்திருத்தக் கருத்துகளை அவரால் பேச முடிந்திருக்கிறது என்பதுதான் ஆச்சர்யம். இந்த இடித்துரைப்புகளை அவர் தாட்சண்யமின்றி செய்திருக்கிறார். அடித்தட்டு ஆதிதிராவிட மக்கள் துவங்கி இடைச்சாதியினர் மற்றும் பார்ப்பனரல்லாத மேல்சாதியினர் வரை அனைத்துத் தரப்போடும் உரையாடி இருக்கிறார். இந்தத் தொகுப்பில் அத்தனை உரைகளும் இடம் பெற்றுவிடவில்லை. பல உரைகள் பற்றி ‘குடிஅரசு’ இதழில் வெளியான குறிப்புகள் மட்டுமே கிடைத்துள்ளன. ஆகவே சாதி மகாநாடுகளிலும் சாதி ஒழிப்பு மகாநாடுகளிலும் பெரியார் என்ற இத்தொகுப்பு நிறைவு பெற்ற ஒன்றன்று. வருங்காலத்தில் விரிவுபெறக் கூடியது.

periyar 351பெரியார் சாதி மாநாட்டு உரைகள் நிகழ்த்தப்பட்ட சங்கங்களின் பட்டியலே தமிழ் நாட்டு சாதி அடுக்கில், அந்த காலவெளியில், தங்களை சாதி எனும் இழிவிலிருந்து மீட்டுக் கொள்ள இடையறாது போராடியவர்களின் பட்டியலாகவே இருப்பதைக் காண முடிகிறது. பல்வேறு சாதிச் சங்கங்களில் அவர் உரையாடியிருந்தபோதும், தொகுக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையிலும் அவற்றில் சாதி ரீதியாக பெரும்பான்மையாக இருப்பது கொண்டும், கீழ்க்கண்ட பிரிவுகளில் அவற்றை அவதானிப்பது பயனுள்ளதாய் இருக்கும்.

  1. ஆதி திராவிடர் மாநாடுகள் (பறையர், பள்ளர் உள்ளிட்ட சாதிகளின் மாநாடுகள்)
  2. நாடார் சங்க மாநாடுகள்
  3. செங்குந்தர் மாநாடுகள்
  4. வன்னியர் சங்க மாநாடுகள்
  5. பிற பார்ப்பனரல்லாத சாதிகளின் மாநாடுகள்

ஆதி திராவிடர் சாதி சங்க மகாநாடுகள்

பெரியார் பங்கேற்ற சாதி சங்க மகாநாடுகளில் சரிபாதி ஆதி திராவிடர் மகாநாடுகளே. 1926இல் தொடங்கி 1948 வரையில் நிகழ்கிறது இந்த மகாநாடுகள். அதன் பின்னர் அவை திராவிடர் கழகம் மற்றும் பொது அமைப்புகளின் சாதி ஒழிப்பு மாநாடு என்ற வகையில் 1973 வரை தொடர்கிறது. இந்த மகாநாடுகளில் பெரியார் உரைகள் தெளிவாகப் பின்வரும் சில பார்வைகளை முன் வைக்கிறது.

தாழ்த்தப்பட்ட அடித்தட்டு மக்கள் விடுதலை என்பதை அவர்களே வலியுறுத்திப் பெற வேண்டுமென்கிறார். பார்ப்பனரோ, பார்ப்பனரல்லாதோரோ அதற்கு ஒருபோதும் அதற்கு உதவ மாட்டார்கள் என்பதைத் தெளிவாக்குகிறார்.

“நீங்கள் துணிவு கொண்டு புரட்சிக்குத் தயாராகுங்கள். நீங்கள் ஏன் கீழ் ஜாதி? என்று உங்களையே கேள்வி கேளுங்கள். கடவுள் காரணம் என்று தோன்றினால் உடனே அந்தக் கடவுளைத் தூள்தூளாக உடைத்தெறியுங்கள். மதக் கட்டளை என்று தோன்றினால் அம்மதத்தை சின்னா பின்னமாக்குங்கள் அல்லது அரசாட்சி முறை என்று கண்டால் அதை அழித்திடுங்கள். அல்லது மனிதர்களுடைய சூழ்ச்சி சுயநலப் பித்து என்று தோன்றினால் தைரியமாய் அவர்களிடம் இனிமேல் இந்தப் புரட்டு நடக்காது என்று சொல்லுங்கள்.” (ஈரோடு ஆதி திராவிட வாலிபர்கள் வரவேற்பு : ‘குடிஅரசு’ 04.12.1932)

பார்ப்பனரல்லாதோர், ஆதிதிராவிடர் எனும் இருமை வழியாக, அவர்களை ‘மற்றமை’யாக்கியே உரையாடுகிறார். ‘நாங்கள்’, ‘நீங்கள்’ என்ற பிரிவை மறைத்து இணைவின் வழி அவர்களது பிரச்னைகளின் தீர்க்கத்தைக் (கடுமையை) குறைக்கும் நோக்கம் அவரிட மில்லை. சொல்லப் போனால், ‘பஞ்சமர்’ பட்டம், ‘சூத்திரன்’ பட்டத்தைவிட உயர்வே என வாதிடுகிறார். என்னிடம் கேட்டால் ‘சூத்திரன்’ என்று சொல்வதைவிட பள்ளர், பறையர், சக்கிலியர் என்று என் சாதியைச் சொல்லவே விரும்புகிறேன் என்கிறார். சாஸ்திரத்தில் நான்கு வர்ணங்களில் இல்லாத பஞ்சமருக்காவது அசலான, மரியாதைக்குரிய தாய், தகப்பன் வழியான பிறப்பு இருக்கிறது. ‘சூத்திரருக்கோ’ வேசி மகன் என்ற இழி அடையாளமே மிஞ்சும் என்கிறார். எனவே மநுதர்ம சாஸ்திர இந்து மதத்தையும், அதன் வர்ண அமைப்பையும் விட்டு விலகுவதே சாதி இழிவிலிருந்து வெளியேறுவதற்கான வழி என்கிறார். சாதி ஒழிப்பு பற்றி வாய்கிழியப் பேசும் மேல்சாதி மற்றும் இடைச்சாதியினர் தங்கள் வீட்டில் சாதி ஆசாரம் காக்கத் தவறுவதில்லை. எனவே அவர்கள் இந்த சாதி ஒழிப்பில் உதவுவார்கள் என எண்ண வேண்டாம். உங்கள் சாதி இழிவை நீக்க நீங்களே களமிறங்குங்கள் என்கிறார்.

“உங்களுடைய நற்காலத்துக்கே இந்த நாட்டில் பார்ப்பனர் பார்ப்பனரல் லாதோர் என்கிற உணர்ச்சி ஏற்படவும், அதில் சர்க்கார் பார்ப்பனர்களுக்கு முன்போல் அனுகூலமில்லாமல் அவர்கள் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் ஆகிய இரு சமூகத்தையும் ஆதரிக்க ஆரம்பித்ததும், அதன் பலனாகப் பார்ப்பனர்கள் தங்கள் பழைய முறைப்படி அராசங்கத்தின்மீது விஷமப் பிரச்சாரம் செய்யத் தொடங்கினதும் இதற்குத் தாக்குப் பிடிப்பதற்காக அரசாங்கத்தாரும் பார்ப்பனரல்லாதாரும் உங்கள் உதவியை நாடவும், இதில் பார்ப்பனர்களும் போட்டி போடவும், இத்தியாதி காரணங்கால் உங்களுடைய நிலை உங்களது முயற்சி இல்லாமலே உயர்ந்து வருகிறது. ஆகவே இன்றைய பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் சண்டையும், சர்க்கார் பார்ப்பனர் சண்டையும் உங்களுக்கு நல்ல பலனைக் கொடுத்து வருகிறது. இந்தச் சண்டை இல்லா விட்டால் உங்க நிலை மிகவும் மோசமாகவே இருந்திருக்கும்.”

“ஏனெனில் இன்று உங்களை ஒவ்வொருவரும் அரசியல் காரியங்களுக்கு உபயோகித்துக் கொள்ளத்தான் உங்களை நாடுகிறார்களே ஒழிய உண்மையான உங்கள் குறைகளைத் தீர்க்க அல்ல. முக்கியமாகப் பார்ப்பனர்கள் உங்களை மோசம் செய்யவே உங்களை ஏய்க்கவே உங்களை நாடுவார்கள். அவர்களை நம்பாதீர்கள். அரசாங்கத்துக்கும் எனக்கும் எவ்வளவு மாறுபாடான அபிப்பிராயம் இருந்தாலும், அதனிடம் எவ்வளவு எதிர்ப்பு இருந்தாலும் நீங்கள் அரசாங்கத்துடன் பிணக்குச் செய்யாமல் அதை எதிர்க்காமல் இருந்து உங்கள் சமூக நன்மையைப் பெற வேண்டும் என்று கூறுவேன்.” (திருச்செங்கோடு தாலுகா சமுத்திரத்தில் நடைபெற்ற ஆதி திராவிடர் மாநாட்டில், ‘குடிஅரசு’ 15.03.1936)

‘ஆதி திராவிடர்’, ‘தேவேந்திர குலத்தார்’, அருந்ததியர், நீலகண்டனார் என்று பெயர் சூட்டிக் கொள்வதால் ‘சப்தம்’ மாத்திரம் உயர்வாகத் தோன்றினாலும், அச்சொற்களின் உட்பொருளில் தாழ்மையே குடி கொண் டுள்ளது. ஆதி திராவிடர் என்று சொன்ன மாத்திரத்தில் இழிவு நீங்கியா விடுகிறது. இன்னும் அதை வலியுறுத்திச் சொல்வதாகவே ஆகிறது. உங்களை ‘தேவேந்திரகுல வேளாளர்’ எனக் குறிப்பிட விரும்புகிறீர்கள். தேவேந்திர குலம் என்பது இன்னும் இழிவானதாகத் தெரிகிறது. தேவேந்திரனைப் பற்றிய புராணங்கள் அவனை அவ்வளவு இழிவாகக் கூறுகிறது. பிறந்த சாதியை இழிவாக மதித்து இன்னொரு சாதியை உயர்வாக மதித்து அதனிடம் அடைக்கலம் புகுவதைவிட இழிவு வேறொன்றுமில்லை. இதற்கு மாறாக, “நீங்கள் உங்களை யார் தாழ்ந்தவர்கள் என்று சொல்லு கிறார்களோ, யார் கொடுமைப்படுத்து கிறார்களோ, யார் அதற்கு ஆதாரமாய் இருக்கிறார்களோ அவர்கள் பெயரை வைத்து ‘அவர்கள் அல்லாதோர்’ என்று வைத்துக் கொண்டால், அந்தக் கொடுமையும் ஞாபகத்தில் இருப்பதோடு அதிலிருந்து விலகுவதற்கான அறிவும் சக்தியும் அதிலிருந்து ஏற்படும். சிலர் ‘ஒடுக்கப்பட்டோர்’ என்று வைத்துக் கொள்ள லாமென்கிறார்கள், அதைவிட ‘ஒடுக்கினவர் அல்லாதோர்’, ‘கொடுமைக்காரர்கள் அல்லாதோர்’, ‘அயோக்கியர் அல்லாதோர்’ என வைப்பது இன்னும் பொருத்தமாய் இருக்கும் என்கிறார்.

ஆதி திராவிடர்களுக்கு என்று தனியாகக் கிணறு, கோவில், பள்ளிக்கூடம் முதலியவை ஏற்படுத்துவதைக் கடுமையாக ஆட்சேபிக்கிறார். அதை முற்றிலுமாக வெறுக்கிறேன் என்கிறார். இதுபோல அவர்களுக்குத் தனி சௌகர்யம் செய்து கொடுக்கிறேன் என்ற பெயரில், அவர்களைத் தனிமைப்படுத்தி, நம்மோடு கலக்கவிடாமல் செய்து நிரந்தரமாய் அவர்கள் இழிந்தவர்கள் என நிலைநிறுத்தி அவர்களை மீளவிடாமல் செய்யும் செயல் அது என்கிறார். மறுபுறம் பார்ப்பனர்க்கென்று இதேபோல் இருப்பிடம், கிணறு போன்ற தனி வசதிகள் செய்து அவர்களை ‘உயர்ந்தவர்கள்’ ஆக்கி வைப்பதும் தவறு என்கிறார். ஆதி திராவிடர்களுக்கு யாராவது நன்மை செய்ய வேண்டுமென நினைத்தால், பொதுக் கிணறு, கோவில், பள்ளிக்கூடம் ஆகியவற்றில் நம்மோடு கலந்து வாழ்வதற்கு அனுமதிப்பதுதான் எனச் சொல்கிறார்.

முதலில் சாதி வித்தியாசம் என்கிற கொடுமைத் தன்மை என்பது, இந்த நாட்டை விட்டு ஒழிய வேண்டும். இரண்டாவதாக, ஒரு மனிதனுக்குக் கீழே, மேலோ சாதி என்பது ஒன்றுமில்லை என்ற முடிவுக்கு வந்தாக வேண்டும். அதற்குமேல் சாதி வித்தியாசத்திற்கு ஆதாரமாயுள்ளதை அடியோடு அழிக்க முயல வேண்டும். சாதியை உருவாக்கி அதனைத் தாங்கி நிற்கும் ஆதாரமாய் இருப்பது பார்ப்பன இந்து மதமே. பார்ப்பனர்களை இந்து மதத்தின் ‘உச்சாணியாய்’ ஆக்கி, வர்ண அடுக்கில் மேலே நிறுத்தி வைத்திருப்பது வேதங்களும், ஸ்மிருதிகளும், சாஸ்திரங்களுமே. சாதியும், மதமும் ஒன்றொடொன்று பின்னிக் கொண்டுள்ளதால் அவற்றை ஒரு சேர அழித்தொழிக்க வேண்டும். மதமும், வேதமும், கடவுளும் அழிந்தால்தான் சாதி ஒழியும். எனவே சாதி, மதம், வேதம், கடவுள் என அனைத்தையும் ஒன்றாகக் கொளுத்திவிட வேண்டும்.

ஆதி திராவிடர் கிறித்தவர்கள் மகாநாடு

ஆதி திராவிட கிறித்தவர்கள் மாநாடுகளில் பேசிய பெரியாரின் உரைகள், அவரது தெளிவான பார்வையைக் காட்டுகின்றன. தனது மதம் குறித்த விமர்சனத்தை இந்து மதத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் கிறித்துவத்தின் போதாமைகளைப் பேசி மதவிமர்சனத் தளத்தை விரிக்கிறார். இங்கு மிக முக்கியமானதும் கவனத்திற்குரியதுமான ஒரு கூறு இயல்பாகச் சாதி இருப்பினை பார்ப்பனியத்தோடு பிணைத்துப் பேசுவதைத் தவிர்க்கிறார். இந்து மதம் மற்றும் அதன் சாதி இழிவிலிருந்து தப்பி கிறித்துவத்திற்கு மாறியவர்கள், அங்கும் சாதி இழிவு தொடர்வதைச் சந்திக்க நேர்ந்தால், அது கிறித்துவத்தின் தோல்வியேயன்றி வேறில்லை என்கிறார். இங்கும் தொடரும் சாதி இழிவை இந்து மதம் சார்ந்து விளக்குவதையும், பழி சொல்லுவதையும் தவிர்க்கிறார். இன்னும் சொல்வதானால் ‘மதமாற்றம்’ சாதியை ஒழித்து விடக்கூடுமா என்ற அவரது அடிப்படையான அய்யப்பாட்டை இந்தப் புள்ளிகளில் இருந்தே அவர் பெற்றிருக்கக்கூடும்.

“கீழான ஜாதியாய் கருதப்பட்டு நீங்கள் அடைந்து வந்த இழிவைப் போக்கிக் கொள்வதற்காக வேறு மதத்தில் வந்து சேர்ந்தும் அங்கும் அந்த இழிவு இருந்து, உங்களைப் பழைய கருப்பனாகவே நடத்தி வந்தால் எப்படியாவது அந்த இழிவை போக்கிக் கொள்ள வேண்டுமென்ற உணர்ச்சியின் மீது இந்த மகாநாட்டைக் கூட்டி நீங்கள் எல்லோரும் இங்கு வந்து சேர்ந்திருக் கிறீர்கள். இம்மகாநாட்டில் பலர் ஆவேசமாய்ப் பேசிவிடுவதாலும், பலர் அதி தீவிரமான தீர்மானங்கள் செய்து விடுவதினாலும் உங்களுக்கு ஏதாவது பலன் கிடைத்து விடுமா?... இந்த மாதிரி தீர்மானங்களும், ஆவேசப் பேச்சுக்களும் வெகுகாலம் நடந்து கொண்டேதான் வருகிறது. ஆனால் இவையெல்லாம் மேல்ஜாதிக்காரர்கள் என்பவர்களால் அலட்சியமாகக் கருதி அசட்டை செய்யப்பட்டுதான் வருகிறது. உங்களுக்கு மதப்பித்தின் பயனாகச் சுய மரியாதை உணர்ச்சி இல்லையென்பதை பாதிரி மார்கள் நன்றாய் உணர்ந்திருக்கிறார்கள்...

நீங்களும் மதத்திற்காகவும், கடவுளுக்காகவும் எவ்வளவு கஷ்டங் களையும், இழிவுகளையும் பொறுத்துக் கொண்டு வெறும் வாயிலே மாத்திரம் ஏதாவது பேசிக் கொண்டிருப்பீர்களே யொழிய கட்டுப்பாடுகளை மீறவோ உங்கள் இழிவுக்கு காரணமானவற்றை உதறித் தள்ளவோ அதை அழிக்க முயற்சிக்கவோ ஒரு நாளும் சம்மதிக்க மாட்டீர்கள்...

மதக்கட்டளையை மதிப்பவன், பாதிரிகளின் சொல்லுக்கு கீழ்ப்படிந்து தான் ஆக வேண்டும். கடவுள் நம்பிக்கை கொண்டவன் அவனவன் தற்கால நிலைமைக்குக் காரணம் ‘கடவுள் சித்தம்’ என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். மதக் கட்டளையையும், கடவுள் நம்பிக்கையையும் கொண்ட அடிமை ஒரு தாழ்ந்த ஜாதிக்காரன் ஒரு நாளும் விடுதலை அடையவோ, முன்னேற்ற மடையவோ முடியவே முடியாது.”

கிறித்துவத்தின் ‘பரலோக இராஜ்யம்’ எனும் கோட்பாட்டைச் சுட்டி, கடுமையாகச் சாடுகிறார். இகவாழ்வில் ‘பொறுமையையும்’, ‘காத்திருப்பையும்’ போதித்து, இந்த வாழ்வின் இழிவை நீக்குவதற்கான மார்க்கத்தை மறைத்து, மரணத்திற்குப் பின்னான வாழ்வு குறித்த மாயவலையை அடையாளப்படுத்துகிறார். “நீ செத்த பிறகு கடவுள் நல்ல சன்மானம் கொடுப்பார்” எனக் கிண்டலடிக்கிறார். கிறித்துவர்கள் போன்ற ‘விசுவாசிகள்’ கூட்டத்திலும், அதிலும் பாதிரிகளை விமர்சித்து, தான் நினைத்ததைத் தாட்சண்யமின்றி சொல்லி விடுவது பெரியாருக்கு மட்டுமே சாத்தியமான ஒன்று. இதில் அதைச் சொல்வதற்கான ‘அறநிலைப்பாட்டை’ தனது ‘இருப்பு’ ஆக்கிக் கொண்ட தந்தை பெரியார் போன்ற பேராளுமைக்கு மட்டுமே இது சாத்தியமாகும். அந்தக் கிறித்துவர்களுக்கு இரஷ்யப் புரட்சியைக் காட்டி நீங்களும் அவர்களைப் போல (இரஷ்யக் கிறித்துவர்களைப்போல), தேவாலயங்களையும், பாதிரிகளையும் ஒழித்துவிட்டு, பொருளாதார சமதர்மம் பெறுங்கள் என்கிறார். இழிவு நீக்குவதற்கு ஒரே விதமான தீர்வை அவரால், ‘அந்தந்த மதத்தின் கோட்பாட்டு அடிப்படை முரணைத் தகர்ப்பது’ என்பதாக முன் வைக்க முடிகிறது. அவரவர் மதக் கோட்பாடுகளைச் சுட்டி, அதை மீறி, ‘கடவுளிடம்’ இருந்து தப்பி விடுதலை பெற ஆலோசனை சொல்கிறார்.

கிரேநகர் ஆதி திராவிடர் ஆண்டு விழாவில் ‘சமரச சன்மார்க்கம்’ குறித்த பேச்சு மிக முக்கியமானது. கிறித்துவ சமரச சன்மார்க்கத்தின் மீதான அவரது விமர்சனம் சாதி ஒழிப்பையும், பொருளாதார சமதர்மத்தை யும் இணைத்து எளிமையான சொற்களால் கோட்பாட்டாக்கம் செய்கிறது. இன்றளவும் கவனத்திற்குரிய பேச்சு எனவே கருத வாய்ப்புள்ளது.

“முதலாவது கடவுள், மதம், விதி, ராஜா, ஜாதி, பணம், தொழில் முதலியவைகள் இயற்கைக்கு மாத்திரமான சமரச சன்மார்க்கத்திற்கும் விரோதமாய் அமைக்கப்பட்டிருக்கிறது. அவை ஒன்றுக் கொன்று முரண்பட்ட தத்துவத்தில் அமைக்கப்பட்டிருப்பவைகளாகும். அதோடு சமரசமும் சன்மார்க்கமும் கூடாது என்னும் தத்துவத்தின் மீதே அமைக்கப்பட்டவைகளாகும்.

ஆகையால் நான் சமர சன்மார்க்கத்தைப் பற்றி பேச வேண்டுமானால் அவைகள் சம்பந்தமான கட்டுப்பாடுகளையெல்லாம் அடியோடு அழிப்பதுதான் சமரச சன்மார்க்கம் என்று சொல்ல வேண்டியதாயிருக்கின்றது. இது உங்களில் பலருக்கும் உங்கள் பாதிரிமார்கள், எஜமானர்கள், அக்கம் பக்க ஜாதியார், சாமிகள், மதக்காரர்கள் ஆகியவர்களுக்கு வருத்தமாயும் விரோதமானவைகளாயுமிருக்கும் என்று கருதுகிறேன். நான் உண்மையான சமரச சன்மார்க்கம் அடைந்த தேசத்தார், அடைந்த சமூகத்தார், அடைந்த தனி மனிதர்கள் என்று யார் யாரைக் கருதுகின்றேனோ அவர்கள் எல்லாம் மேற்கண்ட இடையூறானவைகளைத் தகர்ந்தெறிந்துதான் சமரச சன்மார்க்கம் அடைந்தார்கள் - அடைகிறார்கள் - அடைய முயற்சிக்கின்றார்கள். இவைக ளில் சிறிது தாட்சண்யப்பட்டவர்கள்கூட தோல்வியே அடைந்து விட்டார்கள்.

உதாரணமாக கடவுளையும், மதத்தையும், பணக்காரனையும் வைத்து சமரச சன்மார்க்கம் செய்ய முடியா தென்று கருதித்தான் ருஷியர்கள், பாதிரிமார்கள் தொல்லைகளையும் சர்ச்சுகளையும் பணக்காரத் தன்மை களையும் அழித்துதான் சமரசம் பெற்றார்கள்.” (‘குடிஅரசு’ 08.02.1931)

...............................................

நாடார் சாதி சங்கங்களுடனான உரையாடல்

இந்தத் தொகுப்பிற்கான தேடலில் நமக்கு கிடைத்திருக்கும் சாதி சங்க மாநாட்டு உரைகளில் காலத்தால் முன்னானவை பல நாடார் சங்க மாநாடுகளில் அவர் நிகழ்த்திய உரைகள்தான். 16.05.1926ஆம் ஆண்டு “ஏழாயிரம் பண்ணை பாலிய நாடார் சங்கத்தின் இரண்டாவதாண்டு கொண்டாட்டம்” நிகழ்வில் பெரியார் ஆற்றிய உரை, 23.05.1926 ‘குடிஅரசு’ இதழில் வெளியாகியுள்ளது. அய்யா ஆனைமுத்து அவர்கள் தொகுப்பில் காணக் கிடைக்கும் பெரியாரது பொதுக் கூட்ட நிகழ்வுகள் குறித்த 1923ஆம் ஆண்டு முதலான பதிவுகள் “நாடார்குல மித்ரன்” இதழில் வெளி வந்தவையே. அவற்றில் காலத்தால் முந்தியது 1923ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக பெரியார் இருந்தபோது, அருப்புக்கோட்டையில் நாடார் சங்கப் பிரதிநிதிகள் அவரைச் சந்தித்து செய்த கோரிக்கை தொடர்பானது. அதைக் கோரிக்கை என்பதைவிட பிராது என்றே சொல்ல வேண்டும். அந்தச் சந்திப்பின் போது நாடார் சங்கப் பிரதிநிதிகள் சில மாதங்களுக்கு முன்னர் மதுரையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் தங்களது கோவில் நுழைவு குறித்த தீர்மானத்தை ஸ்ரீநிவாச அய்யங்கார் கொண்டு வராமல் தவிர்த்துவிட்டது தொடர்பானது. இங்கு இந்தத் தகவல் மிக முக்கியமானது. நாடார் சங்கங்களின் சாதி இழிவிற்கு எதிரான தொடர் போராட்டங்கள் பெரியாரின் காங்கிரஸ் இருப்பு காலத்திலேயே அவரது கவனத்திற்கு வந்த ஒன்று என்பதும், அதற்கு அவர் அப்போதே முகங்கொடுப்பவராய் இருந்தார் என்பதையும் வலியுறுத்தவே மட்டுமில்லை. அவரது காங்கிரஸ் பார்ப்பனியத்திற்கெதிரான முரண் பாடுகளை கட்டமைத்த காரணிகளிலொன்றாய் நாடார்களின் வெகுகாலப் போராட்டத்தையும் கருத வாய்ப்புள்ளது.பெரியாரும் தனக்கும் விருதுபட்டிக்குமான வியாபாரத் தொடர்பு நெருக்கம் குறித்தும் பல பதிவுகள் செய்துள்ளார்.

ஏழாயிரம் பண்ணை பாலிய நாடார் சங்க உரை பல வகைகளில் முக்கியமானது. சாதி சங்கங்களுடன் அவர் நிகழ்த்திய உரைகளின் மூலவடிவமாக கருதத்தக்கது அந்த உரை. அந்த உரையில் பெரியார் பாலிய நாடார் சங்கத்தின் நோக்கங்களாக அவர்கள் குறிப்பிடும் விடயங் களின் அடிப்படையில் அவரது வாதத்தை / எதிர்வாதத்தை கட்டமைக்கிறார். அந்தச் சங்கத்தின் நோக்கங்கள் ஒவ்வொன்றிற்கும் இவரளவிலான விளக்கங்களையும், ஆமோ திப்பையும், ஆலோனைகளையும் வழங்குகிறார்.

முதலாவது தீர்மானம் நாடார் சமூக அபிவிருத்தி பற்றி பெரியார்

‘நல்லாண்மை என்பது ஒருவருக்குத் தான் பிறந்த இல்லாண்மையாக்கிக் கொளல்’ என்று நாயனார் சொல்லி யிருப்பதின் தத்துவம் இதுதான். ஒவ்வொரு சமூகமும் தன் சமூக முன்னேற்றத்தை சீர்திருத்திக் கொண்டு பிறகு எல்லாச் சமூகத்தின் நன்மையையும் பொது நன்மையையும் கவனித்தால்தான் அது முறையாகவும் பயனளிக்கக் கூடியதாகவும் இருக்கும். அஃதில்லாமல் தங்கள் சமூகம் சுயமரியாதை அற்றதாகவும், தீண்டாத சமூகமாகவும் இருப்பதை லக்ஷியம் செய்யாமலும், அதைப் பற்றி உணர்ச்சியில்லாமலும், நான் தேசபக்தன், பொது ஜனசேவை செய்பவன் என்று சொல்லிக் கொண்டு பொது உரிமை, பொது சுதந்திரம் என்று பேசுவதெல்லாம் பொருளற்றதும் அறியாமையும் தனது சுயநலத்திற்கும் சுயகீர்த்திக்கும் பாடுபடுவதுமே ஒழிய வேறல்ல...

இந்த நாடார் சமூகமும் தங்களுக்கென ஒரு சமூகத்தை வைத்துக் கொண்டு சமீபகாலமாய் அதற்கென்று உழைக்காமலிருந்து, வெறும் தேசபக்தியையும் சுதந்திரத்தையும் பேசிக் கொண்டு பொருளற்ற ‘தேச பக்தர்களாய்’, ‘காங்கிரஸ்காரர்களாய்’ இருந்திருந்தால் உங்கள் நிலை என்ன மாயிருந்திருக்கும். வழிநடை பாத்தியம்கூட அடைந்திருக்க மாட்டீர்கள். தீண்டாதவர் கூட்டத் திலேயே இன்னும் இருந்திருப்பீர்கள்.

உங்கள் பெரியவர்கள் முயற்சியில் கொஞ்சம் சுயமரியாதை கிடைக்கப் பெற்றதானால், இப்பொழுது உங்களில் பலர் ‘தேச பக்தர்களாய்’ வந்து விட்டார்கள். “தனி சமூக முன்னேற்றத் திற்கு ஸ்தாபனமில்லாத, உழைப்பாளிகள் இல்லாத பல சமூகங்களின் கதி இப்போது என்னமாயிருக்கிறது? ‘சக்கிலி’, ‘பறையர்’, ‘பள்ளர்’ என்கிற பல பரம்பரையாய் பொதுஜன உழைப்பாளிகளாய் இருந்து வரும் சமூகங்களின் கதி எப்படி இருக்கிறது? இந்திய சமூகத்திற்கு அரசாங்கத்தாராலும் காலக் கிரமத்தாலும் பல ‘சீர்திருத்தங்கள்’ வந்தும் இந்தக் கூட்டத்தாருக்கு என்ன நன்மை கிடைத் திருக்கிறது. சர்க்கார் தயவிருந்தால்தானே தெருவில் நடக்கலாம்.”

சமூகங்கள் சமத்துவமின்றி இருப்புக் கொள்ளும் சூழலில் சுயசமூக அபிவிருத்திக்கான உழைப்பின்றி எந்தச் சமூகமும் தனது இழிநிலையிலிருந்து மீள முடியாது என்பதை இதைவிடச் சிறப்பாக எப்படிச் சொல்வது. அதிலும் பரம்பரையாய் பொதுஜன உழைப் பாளிகளாய் இருக்கும் சமூகங்களை குறிப்பிட்டு முன் வைக்கப்படும் வாதம் பொருள் நிறைந்தது.

இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது தீர்மானங்களான ‘நாடார் ஜனசங்கத்தின் நோக்கங்களை அமலுக்குக் கொண்டு வரல்’, ‘நாடார்களுக்கும் இதர வகுப்பாருக்கும் ஐக்கிய உணர்ச்சியை உண்டு பண்ணுவது’, ‘வாசக சாலை ஆரம்பித்தல்’ ஆகியவற்றை ஆமோதித்து வரவேற்று விட்டு முக்கியமான ஐந்தாவது தீர்மானமான “மத பரிபாலனங்களை ஒழுங்காக நடைபெறச் செய்தல்” என்பது குறித்து விரிவாகப் பேசுகிறார். முதலில் கடவுள் என்பது என்ன என்பதையும், தர்மம் என்பது என்ன என்பiயும் இந்துக்களில் ஆயிரத்தில் ஒருவர்கூட அறிய மாட்டார்கள். மதச் சின்னங்களை அணிந்து கொள்வதையும், ஒருவரை ஒருவர் தாழ்ந்த ஜாதி உயர்ந்த ஜாதி என்று சொல்வதைத்தான் இந்து மதம் என்கிறார்கள் என்கிறார். கோவில், மடம், சத்திரம் கட்டுவதையும், சாப்பாடு போடுவதையும் தர்மம் என்று நினைக்கிறார்கள் என்கிறார். ‘கடவுள் செயல்’ என்பது மனிதனின் செயைல நடக்க விடாமல் தடுப்பது. கடவுள் கட்டளை என்பது மதங்கள் ஒவ்வொரு விதமாக சொல்லும்போது, எதை அசலான கட்டளை என்பது? அதேபோல எது பாவம் என்பதை எப்படி யார் தீர்மானிப்பது. இதையெல்லாம் ஆராயப் புகுந்தவனை ‘நாஸ்தீகன்’ என்பது சரியா? இவற்றை தீர்மானிக்கும் பெரியவர்கள், அவர்கள் எதன் அடிப்படையில் இதைச் சொல்கிறார்களோ அதை ஆராய்ந்து பார்க்க அனுமதிப்பார்களா? சொன்னதை நம்புவதுதான் கடவுள் நம்பிக்கை என்றால் சரியா? “இம்மாதிரி மூடுமந்திரமானதும் இயற்கைக்கும் அனுபவத்திற்கும் நாணயத்திற்கும் விரோதமானதுமான கொள்கைகள் நமது நாட்டில் இந்துமதத்தின் பெயரால் இருந்துகொண்டு ஒரு பெருஞ் சமூகத்தையே தேய்ந்து போகும்படி செய்வதோடு இதன் பரிபாலனம் என்னும் பெயரால் தேசத்தின் நேரமும் அறிவும் பொருளும் அளவற்று அநாவசியமாய்ச் செலவாகியும் வருகிறது” எனச் சொல்லி தர்ம பரிபாலனம் என்பதை கடுமையாக விமர்சனம் செய்கிறார்.

பெரியாரின் இந்த உரை நிகழ்த்தப்பட்ட காலவெளியில் நாடார் சமூகம் ‘இந்து’ எனும் தொகுதியில் தங்களுக்கான இருப்பை கோரி கடுமையாகப் போராடி வந்த காலம். அவர்களிடம் கடவுள் விமர்சனத்தையும், நம்பிக்கை அரசியலையும் பேசி அவர்களுடன் உரையாடுவது எண்ணிப் பார்க்கவே முடியாத ஒன்று. பார்ப்பன மேலாண்மை பற்றிய விவரணைகளைக்கூட அவரது விமர்சனத்தில் காண முடியவில்லை. ஏனெனில் அந்தத் தொகுதி எளிதாக பார்ப்பனரல்லாத சமூகங்களால் ஏற்றுக் கொள்ளப்படும் சாத்தியம் கொண்டது. ஆனால் இந்து எனும் மதம் மீதும், அவற்றின் கடவுள் தன்மை மீதும் வைக்கப்படும் விமர்சனம், தனது சாதி சங்க மாநாட்டு பங்கேற்பிற்கான நோக்கமும் தெளிவும் கொண்ட சிந்தனையாளரால் / கலகக்காரரால் மட்டுமே செயல்படுத்த இயலும். அவர் பெரியார் ஒருவர் மட்டுமே. இதைவிட 30.04.1929இல் பொறையாரில் நடந்த மூன்றாவது நாடார் வாலிபர் சங்க மாநாட்டில் அவரது உரை அந்தக் காலவெளியில் அதுவும் ஒரு சாதி சங்க மாநாட்டில் செய்துவிட முடியுமென்பதே நம்பக் கூடாததாய் இருக்கிறது. அதுவும் பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டுமெனத் தீர்மானம் கொண்டு வந்திருந்த சாதி சங்கத்தாரிடம், பெண்களுக்கான சம உரிமை என்பது குறித்து இப்படிச் சொல்கிறார் பெரியார். “இது சுயமரியாதை இயக்கத்தின் ஜீவாதாரமான கொள்கையாகும். செங்கற்பட்டு மகாநாட்டுப் பெண்கள் சம்பந்தமான தீர்மானம் இதுதான். புருஷன் தாசி வீட்டுக்குப் போவது குற்றமில்லையானால் ஸ்திரிகள் ஆசை நாயகன் வீட்டுக்குப் போவது குற்றமில்லை. புருஷன் பல பெண்களை மணந்தால் ஸ்திரிகள் பல புருஷர்களை மணப்பது குற்றமில்லை என்பதுதான் சமவுரிமை என்பதில் அடங்கியது. எனவே நாடார் மகாநாட்டுத் தீர்மானங்கள் சுயமரியாதை மகாநாட்டுத் தீர்மானங்கட்குச் சற்றும் இளைத்தவையல்லவென்றே சொல்லு வேன்” என்கிறார். இன்றும் சுயமரியாதை திராவிட இயக்கத்தார் அல்லாத பொது அரங்கில் ஒருவர் இதைத் தன் கருத்தாகச் சொல்லிவிட முடியுமா? பெரியார் இப்படிச் சொல்லி இருக்கிறார் என்றுதான் இன்றும் சொல்ல முடியும். பெரியார் சாதி சங்க மாநாடுகளைக் கையாண்ட விதம் அரிதாகும். இதை அனைத்துத் தரப்பு சாதியினரிடமும் அவர் பேசினார்.

(தொடரும்)

வெளியீடு : கயல் கவின்

தொடர்புக்கு : 9962233382