எனக்கு 40ஆவது வயதில் நாக்கில் புற்று வந்தது. நண்பர் டாக்டர் திரு. முத்துசாமி அவர்கள் என்னிடம் உண்மையினைச் சொல்லாமல் ஏதோ மருந்தினை தடவி துடைத்தே வந்தார்.

அவரின் ஆலோசனைப்படி சென்னை சென்று டாக்டர் சுந்தரவதனத்திடம் சென்றேன். அவர் பார்த்துவிட்டு, ‘அடச் சனியனே, உங்களுக்கா இது வரவேண்டும்?’ என்றார். ‘என்ன அய்யா நோய்?’ என்றேன். நான் பயந்து கொள்ளுவேன் என்று கருதி, ‘ஒன்றுமில்லை’ என்று கூறி வேறு ஒரு டாக்டருக்குக் கடிதம் கொடுத்தார். அவர் பார்த்துவிட்டு, ‘எத்தனை நாளாய் இப்படி இருக்கின்றது?’ என்று கேட்டார். ‘அது ஒரு மாதத்துக்கு மேலாகவே இருக்கிறது’ என்றேன்.

‘என்ன அய்யா இப்படி விஷயம் தெரிந்தவர்கள் எல்லாம் இப்படிப் பேசாமலே இருக்கலாமா?’ என்று கோபித்துக் கொண்டார்.

‘மன்னிக்கணும். என்ன நோய் என்கிறீர்கள்?’ என்றேன். அவர் அதற்குள்ளாக தம்மை சரிப்படுத்திக் கொண்டு, ‘ஒன்றும் இல்லை, புற்றுநோய், என்றாலும் சரியாகிவிடும்’ என்று கூறி சிகிச்சை செய்தார். பிறகு சரியாகி விட்டது.

நான் கவலைப்பட்டது நாக்கில் புற்று வந்ததினால் சாகப் போகின்றோம் என்றல்ல. “இந்தப் பாவி கடவுளை, மதத்தைத் திட்டினான்; அதனால்தான் அவன் நாக்கில் புற்று வந்து செத்தான்” என்று மதவாதிகளும், பார்ப்பனர்களும் மக்களிடத்தில் அவதூறு பரப்பிவிடுவார்களே; அதனால் நமக்குப் பின்னும் இந்த வேலைக்கு எவனும் துணிந்து வரமாட்டானே” என்ற கவலையினால்தான் ஆகும்.

(ஈரோடு பொதுக் கூட்டத்தில் பெரியார், ‘விடுதலை’ 23.10.1964, பக்கம் 3)