15ஆவது நிதிக் குழுவின் கொள்கைகளால் தமிழகம் உள்ளிட்ட வளர்ச்சியடைந்த மாநிலங்களை நடுவண் ஆட்சி வஞ்சிக்கப்படுவதை சான்றுகளுடன் நிறுவுகிறது இந்த ஆய்வு.

15ஆவது நிதிக் குழுவின் விவகாரங்கள் இப்போது மிகவும் சர்ச்சைக்குள்ளாகியிருப்பது ஏன் என்று பார்ப்போம்...

இந்த நிதிக்குழுவுக்கு இடப்பட்ட பணிகள் அல்லது வழிகாட்டுதல்கள்தான் இப்போது சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இந்த நிதிக் குழுவின் வழிகாட்டுதல்கள் பற்றி வன்மையாகக் கண்டிக்காத தலைவர்களே இல்லை.

இவ்வளவு பெரிய எதிர்ப்புக் குரல் கிளம்பியது ஆச்சர்யமான ஒன்றுதான். இது ஒருபுறமிருக்க, இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு இதனால் தனது பெயர் இன்னும் மோசமாகி வருவதை உணர்ந்ததாலோ என்னவோ தெரியவில்லை; மார்ச் 28ஆம் தேதியன்று அக்கட்சியின் முக்கியமான தலைவரான ராம்தேவ் நிதிக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள என் .கே.சிங்கைச் சந்தித்துத் தென்மாநிலங்களில் எழும்பும் கவலைக் குரல்கள் பற்றி விவாதித்தாக ஒரு செய்தியை இந்து பத்திரிகை வெளியிட் டுள்ளது. அந்தச் செய்திக்குறிப்பில் மற்றுமொரு தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, ‘தென்மாநிலங்கள் இதுகுறித்து கவலை கொள்ளத் தேவையில்லை. அவர்களது நலனைக் கணக்கில்கொள்ளும் வழிகாட்டுதல்களும் இந்த நிதிக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது’ என்று அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால், அந்த அறிவிப்பு உண்மைதானா அல்லது கண் துடைப்பா என்று பார்த்தோமேயானால், அது முழுக்க முழுக்க கண்துடைப்பு என்பதுதான் நமக்குப் புலப்படுகிறது. அது பற்றி ஏன் அச்சம் கொள்கிறோம் என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. இந்த நிதிக்குழு அமைக்கப்படும்போது ஒன்றிய அரசு நிதிக்குழுவுக்கு அளித்துள்ள வழிகாட்டுதல்கள் அதிர்ச்சியளிக்கக் கூடிய பல தகவல்களை நமக்கு அளிக்கிறது.

மாநிலங்களுக்கான வருவாய் பற்றாக் குறையை நிவர்த்தி செய்வதற்காக ஒவ்வொரு வருடமும், ஒன்றிய அரசு குறிப்பிட்ட நிதியைத் தரும். அந்த நிதியை எப்படி ஒழிப்பது என்பதற்காக ஒரு தந்திரமான முறையை ஆராயுமாறு ஒன்றிய அரசு சொல்லியிருக்கிறது. இதற்கு முன்பிருந்த நிதிக்குழுக்கள் எல்லாம் போதிய வரி வருவாய் இல்லாத மாநிலங்கள், போதிய வரி வருவாய் உள்ள மாநிலங்கள் என இரண்டாகப் பிரிக்கும். போதிய வரி வருவாய் இல்லாத மாநிலங்கள் வருவாய் பற்றாக்குறையில் தான் தங்களுக்கான செலவுகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இத்தகைய மாநிலங்களை உதவி தேவைப்படும் மாநிலங்கள் என்று வகைப்படுத்துவார்கள். ஒரு மாநிலத்துக்கு உதவி தேவையா என்பதை முதலில் கணக்கிட்டு, பிறகு எவ்வளவு தொகை தேவை என்பதையும் கணக்கிடுவார்கள்.

பல மாநிலங்கள் தங்களது வருவாய் பற்றாக்குறையைத் தொடர்ந்து குறைத்து வருவாய் பற்றாக்குறையே இல்லாத மாநிலமாக மாறிவிட வேண்டும் என்று உறுதிகொண்டு அதற்குண்டான சட்டத் திட்டங்களை ஏற்கெனவே உருவாக்கியுள்ளன. அதற்குப் பெயர் எஃப்.ஆர்.பி.எம் சட்டம். இந்தச் சட்டத்தை அனைத்து மாநிலங்களும் நிறைவேற்றியுள்ளன. ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள் தங்களது வருவாய் பற்றாக்குறையை பூஜ்யத்துக்குக் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம். ஆனால், எந்த மாநிலத்தாலும் வருவாய் பற்றாக்குறையே இல்லை என்ற இலக்கை அடைய இயலவில்லை.

எடுத்துக்காட்டாகத் தமிழகத்தை எடுத்துக் கொண்டால், எஃப்.ஆர்.பி.எம் சட்டத்தையே இதுவரை ஐந்து - ஆறு முறை திருத்திவிட்டது. 2004, 2005, 2010, 2016 எனப் பலமுறை திருத்தியுள்ளார்கள். ஒவ்வொரு முறையும் பூஜ்ய வருவாய் பற்றாக்குறையை அடைவதற்கான இலக்கை தள்ளிப்போட்டுக் கொண்டே வந்துள்ளார்கள். இப்போதைய எதிர்பார்ப்பின்படி 2019-20ஆம் நிதியாண்டில் அந்த நிலையை அடைந்து விடலாம் என்று மதிப்பிட்டுள்ளார்கள். மீண்டும் ஒருமுறை இந்தச் சட்டத்தை திருத்துவதற்கும் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. தமிழ்நாடாவது சட்டத்தைத் திருத்தி அந்தச் சட்டத்துக்குள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஆனால், பல மாநிலங்கள் அந்தச் சட்டத்தை திருத்தாமலேயே காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கின்றன. அதை உற்றுக் கவனித்து அதற்குண்டான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய ஒன்றிய அரசோ, எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்பதுதான் உண்மை. இப்படியொரு சட்டம் இருக்கும் சூழலில் நிதிக்குழு எதற்காக வருவாய் பற்றாக்குறை நிதியை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் 15ஆவது நிதிக்குழுவை இதுகுறித்து ஆராய ஒன்றிய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இது நியாயம்தானே என்பது போல் நமக்குத் தெரியலாம்.

ஆனால், கடந்த 15 முதல் 20 வருட கால வரலாற்றை எடுத்துப் பார்த்தோமேயானால் எந்த மாநிலமும் சொன்னது போன்று வருவாய் பற்றாக்குறையைக் குறைத்துக்கொள்ள இயல வில்லை என்பதே நிதர்சனம். அதுமட்டுமல்ல, இதற்கு முந்தைய 14ஆவது நிதிக்குழு ஒவ்வொரு மாநிலமும் எந்த அளவுக்கு நிதிப்பற்றாக் குறையை எதிர்கொள்கிறது என்று மதிப்பீடு செய்து அதற்குத் தகுந்தாற்போல் நிதியளிக்கவும் பரிந்துரைத்திருந்தது. ஆனால், அந்தப் பரிந்துரையிலும் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் விடுபட்டுப் போயின. அடுத்ததாக, மாநிலங்களுக்கான உரிமையின் பேரில் வந்து சேரக்கூடிய பணத்தை மாநில அரசுகள் எந்த வகையில் வேண்டுமானாலும் செலவு செய்து கொள்ளலாம். இதற்கான ஒதுக்கீடு 35 விழுக் காட்டிலிருந்து 45 விழுக்காடாக உயர்த்தப் பட்டது. அதேபோல, மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயலாற்றும் திட்டங்களுக்கான செலவில் எவ்வளவு நிதியை அளிக்க ஒன்றிய அரசு பொறுப்பேற்றுக் கொண்டதோ அந்த விகிதத்தில் நிதியை மாநிலங்களுக்கு அளித்து விட வேண்டும்.

ஆனால், 14ஆவது நிதிக்குழுவின் பரிந்துரையின்படி மாநில உரிமைகளுக்கான நிதி 45 விழுக்காடாக உயர்த்தப்பட்ட அதே வேளையில், மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயலாற்றும் திட்டங்களுக்கான நிதியைக் குறைத்துவிட்டது. எடுத்துக்காட்டாக, பள்ளிகளில் செயல்படுத்தப்படும் சர்வ சிக்ஷா அபியான் (அனைவருக்கும் கல்வி) திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு ஒன்றிய அரசு 90 விழுக்காடும், மாநில அரசு 10 விழுக்காடும் செலவிடப் பொறுப்பேற்றன. ஆனால், இப்போது இதற்கான ஒன்றிய அரசின் ஒதுக்கீடு 70 விழுக்காடாகக் குறைந்துபோனது. கூடுதலாக வழங்கப்பட்ட மாநில உரிமைகளுக்கான நிதியிலிருந்து செலவு செய்துகொள்ளுங்கள் என்று கூறுகிறது ஒன்றிய அரசு. அந்தவகையில் இதன்மூலம் வருவாய் இழப்பு மற்றும் லாபம் ஆகிய இரண்டையும் கணக்கிட்டுப் பார்த்தால், மாநிலங்களுக்கான வருவாய் குறைந்துள்ளது என்பது தெரியவருகிறது. இதைப் புதிதாக வெளி வந்துள்ள புள்ளி விவரங்களும், ஆய்வுகளும் உறுதிப்படுத்துகின்றன.

14ஆவது நிதிக்குழு பரிந்துரைத்த 42 விழுக்காட்டுப் பங்கை மாநிலங்களுக்கு வழங்கியதால் ஒன்றிய அரசின் நிதி எவ்வாறு பாதிக்கப்பட்டது என்பதைக் கணக்கில்கொள்ள வேண்டும் எனவும் ஒன்றிய அரசு 15ஆவது நிதிக்குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளது. ஒன்றிய அரசின் வரி வருவாய் எவ்வளவு, அதன் செலவு எவ்வளவு, அதுபோக மாநிலங்களுக்கு பிரித்தளிக்க வேண்டிய தொகை எவ்வளவு, என்பதையெல்லாம் தீர்மானிப்பது நிதிக்குழு தான். இவற்றையெல்லாம் ஒன்றிய அரசு உத்தரவாகச் சொல்ல வேண்டியதற்கு எந்த அவசியமும் கிடையாது. அதேபோல மாநிலங் களுக்கு எதன் அடிப்படையில் எவ்வளவு பிரித்தளிப்பது என்பதையும் நிதிக்குழுதான் தீர்மானிக்கும். ஒன்றிய அரசோ, மாநில அரசோ இதைத் தீர்மானிக்க இயலாது என்பதுதான் இதன் சட்ட திட்டத்துக்குள் அடங்கும் ஒன்றாகும். ஆனால், இப்போது ஒன்றிய பாஜக அரசு எதன் அடிப்படையில் நிதிக்குழுவுக்கு உத்தரவிட்டிருக்கிறது என்பது புரியவில்லை.

நிதிக்குழு மாநில உரிமைகளுக்கு 42 விழுக்காடு வழங்கியிருப்பதால் ஒன்றிய அரசுக்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கணக்கிடச் சொல்லியிருப்பதன் மூலம் அடுத்த நிதிக்குழுவில் மாநில அரசுகளுக்கான நிதியை மேலும் குறைக்க ஒன்றிய அரசு திட்டமிடுகிறதா, என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது மாநிலங்களுக்கான வரி வருவாய் பங்கீட்டைக் குறைக்க ஒன்றிய அரசு கையிலெடுத்திருக்கும் மற்றுமொரு தந்திரமோ என்றும் மாநில அரசுகள் அச்சம் கொண்டுள்ளன. நிதிக் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல் களில் ‘நியூ இந்தியா 2022' என்ற திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு ஆகும் செலவுகளையும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்றும் ஒன்றிய அரசு கூறியுள்ளது.

நியூ இந்தியா 2022 என்ற திட்டம் பல துறைகளில் பரந்து விரிந்த திட்டமாகும். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டிய துறைகள் பலவும் மாநிலங்கள் வசம்தான் உள்ளதே தவிர ஒன்றிய அரசிடம் இல்லை. அவ்வாறான சூழலில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம் ஒன்றிய அரசின் நிதி நிலைமை என்னவாகிறது என்பதைக் கணக்கில் கொள்ள வேண்டும் என்று ஒன்றிய அரசு கூறியுள்ளது ஏன், என்பதும் மாநில அரசுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளது. அதனை ஏன் நிதிக்குழு ஆராய வேண்டும்? நியாயமாக இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினால் மாநில அரசின் நிதி என்னவாகும் என்றுதான் கேட்டிருக்க வேண்டும். ஆனால் ஒன்றிய அரசின் இத்தகைய வழிகாட்டுதலால் ‘இந்தத் திட்டத்தை செயல் படுத்துவதற்கு ஒன்றிய அரசுக்கு பெரும் நிதி தேவைப்படுகிறது. ஆகவே இந்த நிதியை ஒன்றிய அரசே வைத்துக்கொள்ளும்' என்ற முடிவை அடுத்த நிதிக்குழு எடுக்கக்கூடும் என்ற அச்சமே மாநில அரசுகளை மேலும் கவலையுறச் செய்திருக்கிறது.

ஜிஎஸ்டியை செயல்படுத்தியால் ஏற்பட்ட தாக்கம் என்ன என்பதையும் 15ஆவது நிதிக் குழுவை ஆராயச் சொல்லியிருக்கிறது ஒன்றிய அரசு. ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டபோது இந்தத் திட்டத்தால் வரி விகிதத்தில்தான் மாறுபாடு இருக்குமே தவிர ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் வரி வருவாயில் எந்த மாற்றமும் இருக்காது என்றுதான் கூறினார்கள். இதுபோன்ற ஒரு திட்டத்தைச் செயல்படுத்தும் போது சில மாநிலங்களுக்கு வரி வருவாயில் இழப்பும், சில மாநிலங்களுக்கு லாபமும் ஏற்படலாம். இதில் வரி வருவாய் இழந்த மாநிலங்களுக்கு அடுத்து வரும் ஐந்தாண்டு களுக்கு எவ்வளவு வரி வருவாயை அவர்கள் இழந்தார்களோ, அந்த வரி வருவாயை ஒரு சிறப்பு வரி விதித்து பிரித்தளிக்கப்படும் என்றும் ஒன்றிய அரசு உறுதியளித்துள்ளது. அந்தச் சிறப்பு வரி வருவாய் போதவில்லை என்றால் அதனை ஜிஎஸ்டி வழியாகத்தான் சரி செய்ய வேண்டுமே தவிர, அதை நிதிக்குழுவை ஆராயச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன வந்தது? இது மாநில அரசுகளுக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு அச்சம்.

அதேபோல, எதற்கெல்லாம் ஊக்கம் கொடுக்க வேண்டுமென்றும் ஒன்றிய அரசு நிதிக் குழுவிடம் கேட்டுள்ளது. ஊக்கம் கொடுப்பது என்றால், நன்றாகச் செயல்பட்டுக் கொண் டிருக்கிற மாநிலத்தை மேலும் ஊக்கப்படுத்த ஒரு சிறப்பு நிதியை ஏற்பாடு செய்து அளிப்பதாகும். எடுத்துக்காட்டாக, 30 விழுக்காடாக இருந்த கல்வி அறிவை 85 விழுக்காடாக ஒரு மாநிலம் உயர்த்தியுள்ளது என்றால் அதை 100 விழுக்காடாக உயர்த்த ஒரு சிறப்பு நிதியை வழங்குவது நியாயமான ஒன்றாகும். இது போன்ற நிதிப் பகிர்வை தீர்மானிக்கும்போது எதற்கெல்லாம் ஊக்கம் கொடுக்க வேண்டும் என்று தீர்மானிப்பது நிதிக்குழுவின் வழக்கம். அந்த வகையில் இந்த 15ஆவது நிதிகுழு எதற்கெல்லாம் ஊக்கம் அளிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு வழிகாட்டியுள்ளது என்பதுதான் தென் மாநில மக்கள் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.

மக்கள் தொகை கணக்கை அடிப் படையாகக் கொண்டுதான் நிதிப்பகிர்வு பெரும் பாலும் கணக்கிடப்படுகிறது. மாநிலத்தின் வரி வருவாய்க்கான சாத்தியம் எவ்வளவு உள்ளது, அதே சமயத்தில் இந்தியா முழுவதும் அந்தந்த மாநில மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளுக்கு எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதையும் கணக்கிட்டு, இந்தத் தத்துவத்தின் அடிப்படை யில்தான் ஒன்றிய நிதிப் பகிர்விலிருந்து மாநிலங்களுக்கு நிதி பகிர்ந்தளிக்கப்படுகிறது. அந்த வகையில் பார்த்தால் மக்கள் தொகையைக் கணக்கில் கொண்டுதான் இதைச் செயல்படுத்த வேண்டும் என்பது உண்மையே. ஆனால் தென் மாநிலங்களில் இப்போது மக்கள் தொகை பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. ஒரு வருடத்திற்கு எத்தனைப் பேர் இறக்கிறார்களோ, அத்தகைய எண்ணிக்கையில் தான் பிறப்பு விகிதமும் இங்கு இருக்கிறது. ஆனால் வட மாநிலங்களில் இறப்பு விகிதத்தை விடக் கூடுதலாக பிறப்பு விகிதம் இருக்கிறது. தென் மாநிலங்களை ஒப்பிடுகையில் வட மாநிலங்களின் மக்கள் தொகை மேலும் மேலும் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கிறது.

பல ஆண்டுகள் முயற்சி செய்து சிறப்பாகச் செயல்பட்டு மக்கள் தொகையைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ள தென் மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வில் ஊக்கம் அளிக்க வேண்டுமா அல்லது எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் மக்கள் தொகையை அதிகரித்துக்கொண்டே போகும் வட மாநிலங்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டுமா? ஒன்றிய அரசு, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த எடுக்கப்படும் முயற்சிகளுக்கும், அதில் காணப்படும் முன்னேற்றங்களுக்கும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று வழி காட்டியுள்ளது. ஏற்கெனவே மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி, முன்னேற்றம் கண்டுள்ள மாநிலங்கள் பற்றி எதுவும் இதில் குறிப்பிடப்படவில்லை. வட மாநிலங்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தால் அவர்கள் மக்கள் தொகையைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளுவார்கள் என்பதற்காக இந்த வழிகாட்டுதல் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. இந்த ஒரு வழிகாட்டுதலின்படி பீகார், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள்தான் கூடுதல் வருவாய் பகிர்வை பெறப் போகின்றன.

ஒன்றிய அரசு வரி வருவாய் பகிர்வில் தென் மாநிலங்களுக்குச் செய்திருக்கும் மாபெரும் துரோகம் 2011 மக்கள் தொகையைக் கணக்கில் எடுத்துக்கொண்டது. இதுவரையில் எல்லா நிதிக்குழுவும் 1971 மக்கள் தொகையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, ஒன்றிய நிதித் தொகுப்பிலிருந்து வரி வருவாயைப் பகிர்ந்து வந்தன. 1971ஆம் ஆண்டுக்குப் பிறகு கேரளா, தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் எனத் தென் மாநிலங்கள் மக்கள் தொகையைப் பெரியளவில் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டன. இந்த மாநிலங்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்திய போது நிதிக்குழு வருவாயைப் பகிர்ந்தளிக்கும் போதும், நாடாளுமன்றத் தொகுதிகளைப் பிரிக்கும்போதும் 1971 மக்கள் தொகையை மட்டுமே கணக்கில் கொள்வோம் என்று ஒன்றிய அரசு பலமுறை உறுதியளித்துள்ளது.

பலமுறை வழங்கப்பட்ட அந்த உறுதியை இப்போது காற்றில் பறக்கவிட்டு 2011 மக்கள் தொகை அடிப்படையில்தான் நிதியைப் பகிர்ந்தளிப்போம் என்றால் அது யாருக்குப் பயனளிக்கும்? மேலே கூறிய ஐந்து வட மாநிலங்கள்தான் பெருமளவில் பயன்பெறும். 2011 மக்கள் தொகை அடிப்படையில் 14ஆவது நிதிக்குழு பரிந்துரைத்ததால் தென் மாநிலங்கள் அனைத்தும் மிகப்பெரும் அளவில் நிதிப் பங்கீட்டை இழந்துள்ளன. இந்த அடிப்படையில் 15ஆவது நிதிக்குழுவும் 2011 மக்கள் தொகையைப் பரிந்துரைத்தால் இழப்பு மேலும் அதிகரிக்கும். இதனால்தான் தென் மாநில அரசுகளும், கட்சிகளும் தங்களது கவலையையும், எச்சரிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளன.

மேலும், மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தும் மாநிலங்களுக்கு நிதியைக் குறைக்க வேண்டும் அல்லது நிதி அதிகமாகச் செல்வதைத் தடுக்க வேண்டுமென்றும் வழிகாட்டப்பட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசு எந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று முடிவு செய்வதற்கு நிதிக்குழு யார்? எது மக்கள் நலத்திட்டம், எது மக்கள் நலத்திட்டம் இல்லை என்று தீர்மானிப்பதற்கு நிதிக்குழு யார்? நாம் எந்தப் பாதையில் செல்ல வேண்டும் என்று தீர்மானிக்க நிதிக்குழு யார்? நிதிக்குழுவிற்கு வழிகாட்டும் ஒன்றிய அரசு யார்? பாஜக மிகப்பெரும் அளவில் வெற்றிபெற்ற ஐந்து வட மாநிலங்களுக்கும் நிதியை மடைமாற்றம் செய்ய நிதிக்குழுவை கருவியாகப் பயன்படுத்துகிறது என்பது நமக்கு இதிலிருந்து தெளிவாகப் புலப்படுகிறது. மக்கள் நலத் திட்டங்களைப் பெருமளவில் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ள தென் மாநிலங்களைச் சீரழித்து அவர்கள் நினைக்கும் பாதையில் நம்மையும் பயணிக்க வைக்க நினைக்கிறார்கள். நிதிக்குழு என்ற அமைப்பை அரசியலுக்காக இதுபோன்று மிகவும் வெளிப்படையாகப் பயன்படுத்துவதால் ஏற்படப்போகின்ற சாதக பாதகங்களைத் தெரிந்துதான் செய்கிறார்களா? அல்லது அதற்கெல்லாம் இவர்கள் அஞ்சாதவர்களா என்ற கேள்விதான் நம்முன் எழுகிறது.

நன்றி : ‘மின்னம்பலம்’

கட்டுரையாளர் : பொருளாதார ஆய்வாளர்