இலங்கையின் தேசிய இனச்சிக்கல், போரின் விபரீதங்களால் தகர்ந்து கொண்டிருக்கும் தமிழர்களின் சாதாரண வாழ்க்கைக் கனவுகளுக்கு மத்தியில் அப்பிரச்சனைகள் பற்றிய சுவடின்றி திரைப்படங்கள் இலங்கையிலிருந்து வெளிவருவது அங்கு நிலவும் அரசியல் சூழலின் இறுக்கத்தையும் கலைஞர்களின் இயலாமையையும் காட்டுகிறது என்று புரிந்துகொள்ள முடிகிறது.

பிரசன்னா ஜெயக் கொடியின் 'சங்கரா' என்ற இலங்கை படத்தில் இவ்வகைச் சிக்கல் முழுதும் புறக்கணிக்கணிப்பட்டு அல்லது தேவையில்லாதாக்கப்பட்டு ஒரு திரைக்கதை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு கோவிலில் வரையப்பட்டிருக்கிற 'தெலபதா ஜாதகயா' கதைகளை மையமாகக் கொண்டு வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள் சிதிலமடைந்திருப்பதை சரி செய்ய ஒரு புத்தத்துறவு வருகிறார். அக்கதைகளில் புத்தரின் உபதேசங்கள் வலியுறுத்தப்பட்டிருக்கின்றன. உயர்ந்த லட்சியங்களை மனதில் கொண்டிருப்பவன் பெண் போன்ற மாயைகளால் கவரப்படக்கூடாது என்பது அதன் மூலம் வலியுறுத்தப்படுகிறது.

கிராமிய சூழல், வழிபாட்டிற்கென்று வந்து போகும் சிங்களவர்கள், தனித்து விடப்பட்ட சூழலில் புத்தத் துறவி தன் வேலையைத் தொடர்கிறான். இளம்பெண் ஒருத்தியின் தலை 'ஹேர்பின்'னை ஒருநாள் எதேச்சையாக கோவிலில் கண்டெடுக்கிறான். அந்த இளம்பெண்ணை அவன் அறிவான். அதை அவளுக்கு தருவது என்ற முடிவில் அலைவுறுகிறான்.சாதாரண மனிதனின் சபலமும் ஊசலாட்டமும் அவனின் துறவைக் கேள்விக்குறியாக்குகிறது. பௌத்த வாழ்க்கையின் சாரங்களும், ஓவியங்களின் மையமும் இருவேறு உலகங்களாகின்றன. இரண்டிற்குள்ளும் அலையும் மனமும் புனைவுகளும் வெவ்வேறாகின்றன.

ஓர் இரவில் அந்த ஓவியங்கள் சிதைக்கப்படுகின்றன. அந்த ஓவியங்களின் மறு žரமைப்பு என்பது அவனுக்கு கேள்விக்குறியாகிறது. தான் மாட்டிக் கொண்டிருக்கும் மோகவலையை பிய்த்தெறிவதா அல்லது அதனுள் மாட்டி அலைவுறுவதா என்பது அவனுள் விசுவரூபிக்கிறது. கோவிலைத் தாண்டிய புறச்சூழலை தவிர்த்து விட்டு இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருப்பதில் பல கேள்விகள் தேவையில்லாததாக்கப்படுகின்றன. தேசிய இனச் சிக்கலில் பௌத்தமும், அது சார்ந்த அமைப்புகளின் சமரச உணர்வும் ஒரு புறம் இப்படத்தை மையமாக்கி ஒப்பீடு நிகழ்த்தப்படும்போது இப்படத்திற்கு இன்னுமொரு பரிமாணம் கிடைக்கலாம். அது வலிந்து கொள்ளப்படும் படிமமாகத்தான் இருக்கும்.

ஈழத்தமிழ்ச் சூழலை பின்னணியாகக் கொண்டு ஒளிப்பதிவாளர் சி.கே.ராஜ்குமார், இயக்குனர் புதியவனின் உருவாக்கத்தில் வெளிவந்திருக்கும் 'மண்' திரைப்படம் இலங்கைச் சூழலில் ஜாதீய இறுக்கத்தை வெளிப்படுத்துகிறது. இலங்கையின் சாதீய பிரச்சனைகள், தீண்டாமைக் கொடுமைகள் தமிழர்கள் மத்தியில் நீறு பூத்த நெருப்பாக இருந்து வருகிறது. இப்பிரச்சனைகள் முதன்மைப்படுத்திப் பேசுவது ஈழத்தமிழர்களுக்கு எதிராக முனைப்படுத்தும் போக்குகளால் பல சந்தர்ப்பங்களில் பின்னோக்கித் தள்ளப்பட்டிருக்கிறது. இந்திய வம்சாவளியின் மலையகத் தமிழர்களும் தீண்டாதவர்களாகவே நடத்தப்படுகிற அவலத்தையும் இப்படம் சொல்கிறது.

'தோட்டக்கார நாய்' என்ற வசவுடன் வாழும் மலையகத் தமிழர் குடும்பம் ஒன்று கலவரமொன்றில் மகனை இழந்ததால் வவுனியா பிரதேசத்தில் கனகராயன் கிராமத்தில் இடம்பெயர்ந்து வ'ழ்ந்து வரும் சூழலில் அக்குடும்பத்து பெண் பண்ணையாரின் மகனைக் காதலித்து கர்ப்பமுறுகிறாள். பண்ணையார் மகன் இப்பிரச்சனையிலிருந்து தப்பிக்க லண்டன் சென்று விடுகிறான். இருபதாண்டுகள் கழித்து அவன் போரில் சிதைந்த தன் கிராமத்தைப் பற்றி ஒர் ஆவணப்படம் எடுக்க வருகிறான். ஏமாற்றப்பட்ட பெண்ணின் மகன் தன் தந்தையை அடையாளம் கண்டு சுட்டுக் கொல்கிறான். சாதீய கொடுமைகளின் காரணமாக 'கும்பிட மட்டுமே உயர்ந்த கைகள் இப்போது கொடுமைக்கு எதிராகத் துப்பாக்கியைத் தூக்கவும் உயர்வதை' இயக்குனர் சுட்டுகிறார்.

கிராமிய சாதீய உணர்வின் ஆழமும், சிறுவயதினரின் பாலியல் குறித்த விவாதங்களும் பாலியல் அலைக்களிப்புகளும் நுணுக்கமாக படம் முழுவதும் விரவிக் கிடக்கின்றன. ராஜ்குமாரின் தேர்ந்த ஒளிப்பதிவு இலங்கையின் வனப்பை ஏக்கம் கொள்ளும் வகையில் படமாக்கியிருக்கிறது. வனப்பின் பின்னணியில் கேட்கும் துவக்குகளின் சப்தங்கள் முழுமையாகத் தவிர்க்கப்பட்டிருக்கிறது. இவ்வளவு வனப்பான பூமி போரால் சிதைவுறுகிற கொடுமை மனதை துன்புறுத்துகிறது. அந்தப் போரின் நியாயங்கள், விவாத தர்க்கங்களோ இப்படத்தில் இடம்பெறவில்லை. ஆனால் அங்கு நிலவும் சாதீயக் கொடுமையின் அழுத்தம் சரியாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறது. வவுனியா பகுதியில் இப்படப்பிடிப்பு நடத்த போராளிகளின் அனுமதி , தமிழ்ப்படத்தின் தேவை ஆகியவை குறித்து பல சங்கடங்களும் மனதில் எழும். யுத்த பூமியிலிருந்து யுத்தம் தவிர்த்த விடயங்களைச் சொல்ல புதியவனுக்கு இருக்கும் உறுத்தலும் எளிதாக விளங்கக் கூடியதுதான்.

- சுப்ரபாரதிமணியன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It