“மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு!”– தந்தை பெரியார் அவர்களுடைய ஒவ்வொரு எழுத்தும் பேச்சும் பொருள் பொதிந்தது, அழகானது, வியப்பிற்குரியது. பெரியாரைப் பற்றி படிப்பதென்றால், பேசுவதென்றால் அவ்வளவு சேதிகள் அடுக்கடுக்காக வந்து கொண்டேயிருக்கும். அத்தனையும் சுவையானவை, சுகமானவை. சில சோகமானவை.

நான் படித்தவரைக்குமான பெரியாரின் தத்துவங்களில் என்னை எப்போதும் கவர்ந்த ஒரு சொற்றொடர் என்றால், அது “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு!” என்கிற இந்த வாக்கியம்தான். இந்தத் தொடரின் ஆழத்தில் நான் லயித்துப் போய் மூழ்கிப் போவதுண்டு.

periyar and anna 481எங்கள் கிராமத்தில் 90-களின் இறுதியில் இயக்கம் கட்டத் தொடங்கியபோது எங்களுக்குப் பெரிதும் பயன் பட்டது சுவரெழுத்துதான். சுவர்களில் அய்யாவின் கருத்துகளை நாங்கள் எழுதி வந்த நேரத்தில் கடும் எதிர்ப்புகளும் இருக்கும். ஆனால், ஏதேனும் ஒரு வகையில் யாரேனும் ஒருவருக்கு அந்தக் கருத்து உடன்பாடானதாகிவிடும். அதனால், எங்கள் பணிகளுக்குப் பெண்கள், சாமானிய மக்கள், இளைஞர்கள் ஆகியோருடைய ஆதரவு எப்போதும் மறைமுகமாகவும், தேவைப்படும் நேரத்தில் வெளிப்படையாகவும் இருந்து கொண்டேயிருக்கும்.

அந்தளவிற்குப் பெரியாரின் கருத்துகள் இந்தச் சமூகத்தின் மீது பற்றோடு ஒட்டியிருக்கின்றன. உதாரணத்திற்கு ஒன்றிரண்டைச் சொல்லியாக வேண்டும். எல்லோரும் ஒழுக்கத்தை வலியுறுத்து வார்கள். ஒழுக்கம் ரொம்ப முக்கியம் என்று கண்களை உருட்டி மிரட்டுவார்கள். ஆனால், ஒழுக்கம் என்றால் என்ன? என்று யாருமே தெளிவாகச் சொன்னது இல்லை. ஒழுக்கம் என்பதற்குச் சரியான விளக்கத்தை யாருமே சொல்லவில்லை.

திருவள்ளுவர் ஒழுக்கம் குறித்து எழுதிய குறளுக்குத் தெளிவுரை எழுதிய அறிஞர் பெருமக்கள் கூட இன்னதுதான் ஒழுக்கம் என்று வரையறுக்க வில்லை. பெரியார் ஒருவர்தான் மிக மிக எளிமையாக யாரும் புரிந்துகொள்ளும் வண்ணம் சாதாரணமாகச் சொல்லிவிட்டுப் போனார்,

“சொல்லுகிறபடி நடப்பதும், நடக்கிறபடி சொல்வதும்தான் ஒழுக்கம்!”

இந்தக் கருத்தை நாங்கள் சுவர்களில் எழுதிய காலத்தில் எத்தனையெத்தனை பெண்மக்கள் பெரியாரின் விசிறிகளாகவே ஆனார்கள்… அப்பப்பா!

இதேபோல எங்கள் கிராமத்தின் முகப்பி லிருக்கிறது பயணிகள் நிழற்குடை. நிழற் குடையின் பக்கவாட்டில் பெரிய எழுத்துகளில் “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு” என்று எழுதியிருந்தோம். அதற்கு எதிரிலே ஒரு தேநீர் கடை. நாங்கள் வழக்கமாக தேநீர் குடித்துக் கொண்டே செய்தித்தாள் வாசித்தபடி எங்கள் அரசியல் களம் சூடுபிடிக்கிற இடம் அதுதான். அந்தத் தேநீர்க் கடைக்காரர் எங்களிடம், “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு” என்கிற செய்தியை சுட்டிக் காட்டிய படி, “தம்பி, இதை மட்டும் அழிச்சுடாதீங்க. ஏன்னா, கடன் தராதவங்க கிட்ட நான் அதைக் காட்டித்தான் வசூல் பண்றேன்” என்றார். இப்படி தந்தைபெரியாரின் தத்துவங்கள் கருத்துகள் எல்லாம் இந்த நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் சென்று சாமான்ய மக்களின் எண்ணங்களில் சிந்தனைகளில் வேரூன்றி நிற்பவை.

மானமும் அறிவும் மழுங்கிப் போகும்படி அடியாக்கப்பட்ட இனத்திற்காகத் தம் வாழ் நாளையே ஒப்புவித்துக் கொண்ட பெரியார் எந்தெந்த இடங்களில், எந்தெந்த வடிவங்களில் எல்லாம் நம் மக்கள் இழிவுபடுத்தப்பட்டார்களோ, எப்படி யெப்படி எல்லாம் நம் மக்கள் முட்டாள் களாக மூடர்களாக ஆக்கப்பட்டார்களோ அந்த இடங்களில் எல்லாம் நுழைந்து தயவு தாட்சண்ய மின்றித் தாக்குதலை நடத்தியவர் பெரியார்.

பகுத்தறிவின் வழிநின்று கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்கிற பெரியார்தான் கடவுளை வழிபட அனுமதி மறுக்கப்பட்ட மக்களின் பக்கத்தில் நின்று கொண்டு கோவில் நுழைவுப் போராட்டங்களை நடத்தினார். இங்கே பெரியாருக்கு கடவுளின் தேவையும் எழவில்லை. பகுத்தறிவின் கவலையும் எழவில்லை. அவருக்கு முன்நின்றது ஒன்றே ஒன்றுதான் ‘மறுக்கப்பட்ட உரிமையை மீட்பது’.

கடவுள் இல்லை, கடவுளை நம்பாதே! வணங்காதே! என்ற பெரியாருக்குத் தேவைப்பட்டது எதுவோ, அதுவேதான் கோவிலுக்குள் வருகிறவர்களைத் தடுக்காதே என்பதிலும், கருவறைக்குள் போக அனுமதி மறுக்காதே என்பதிலும் இருந்தது. அதனால்தான் பெரியார் அத்தனை இடங்களையும் கடந்து இன்னமும் தமிழ் மண்ணில் தலைநிமிர்ந்து நிற்கிறார்.

தான் வாழ்ந்த காலத்தில் கல்லடியும், சொல்லடியும், ஏன் செருப்படியும் வாங்கியதன் காரணம் எதுவாக இருந்ததோ அதுவேதான் அவர் மறைந்து 50 ஆண்டுகள் ஆகிற நிலையிலும் அவரது சிலை அவரைப் போலவே எதிர்ப்புகளை சந்திக்கும்படி செய்கிறது. பெரியார் ஒருவர்தான் சொன்னபடி நடந்தார் என்பதற்கு மறுக்க முடியாத சாட்சிகளாக அவரது எதிர்ப்பாளர்கள் இன்றும் பெரியாரை நிரூபிக்கிறார்கள்.

பெரியாரின் கவலையெல்லாம் இந்த மக்கள் மானமும் அறிவும் உள்ளவர்களாக வாழ வேண்டும் என்பதே! அதைத்தவிர அவருக்கு வேறு இலக்கே இல்லை என்பேன்! அந்த ஒற்றை இலக்குக்காகவே அவர் இந்த பூமியின் சுற்றளவைப்போல் 33 மடங்கு சுற்றுப் பயணத்தை நடத்தி, பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருபதாயிரம் மணிநேரங்களுக்கும் மேலாக உரையாற்றினார். தன் இறுதி சுவாசத்திற்கு நான்கு நாட்கள் வரை கொண்ட கொள்கையை முழங்கிய ஒரு புரட்சியாளரை, ஒரு தத்துவஞானியை பெரியாருக்கு முன்னும் பின்னும் இந்த மனித சமூகம் காணவில்லை.

திராவிட சமூதாய இன மக்களை வெறும் அதிகார மிரட்டலால் மட்டுமே சின்னஞ்சிறு பார்ப்பனக் கூட்டம் இத்தனையாண்டு காலமும் கட்டிவைத்திருக்க வில்லை. இந்த சமூகத்தின் மூளையில் ஒரு நம்பிக்கைக் கயிற்றைக் கட்டி அச்சம் என்கிற முடிச்சைப் போட்டு வைத்திருக்கிறது. அதனால்தான் கணினி அறிவியலைப் படித்துவிட்டு, அமெரிக்காவில் போய் அறிவியல் அறிவைக் கொண்டு காசு பார்த்து வயிறு வளர்க்கும் மகாமகா பட்டதாரிகள், படிப்பாளிகள் கூட திருமண வயது வந்ததும், ஜாதகத்தை வைத்துக் கொண்டு ஜாதிக்குள் பெண் தேடி, பொருத்தம் பார்த்து, நாள் குறித்து, சடங்கு, சம்பிரதாயங்களோடு திருமணம் செய்துகொள்ள கொஞ்சமும் வெட்கப்படுவதே இல்லை.

நோக்கியாவும் சாம்சங்கும் தயாரித்த ஆன்ட்ராய்டு ஃபோனில் யானைத் தலையும் மனித உருவமும் நான்கு கைகளும் கொண்ட உருவப்படத்தை முகப்புப்படமாக வைத்துக் கொள்ளவும், அழைப்பு மணியோசைக்கு பதிலாக, “தீராத வினையெல்லாம் தீர்த்து வைப்பான்..” என்ற பாடலையும் கூச்சமே இல்லாமல் ஒருவனால் வைத்துக் கொள்ள முடிகிறதென்றால் அவன் எவ்வளவு நுண்ணிய கட்டுப்பாடுகளுக்குள் சிக்குண்டு கிடப்பான் என்பதைக் கவனித்தால் புரியும், பெரியார் ஏன் “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு!” என்று வலியுறுத்தி அதற்காகவே தாம் உழைப்பதாகவும் சொன்னார் என்பது.

பார்ப்பனரல்லாத மக்களை எவ்வளவுக்கு எவ்வளவு அடிமைகளாக, முட்டாள்களாக, சிந்திக்கவே தெரியாத மூடர்களாக, இந்த விஞ்ஞான யுகத்திலும் அறிவியலை வெறும் வயிறு வளர்க்கவும், காட்டுமிராண்டிக் கால பழக்க வழக்கங்களை வாழ்வியல் கடமையாகவும் எண்ணும்படியும் அதை எவ்வகையிலும் நியாயப்படுத்தும்படியான, அயோக் கியர்களாகப் பார்ப்பனர் ஆக்கி வைத்துள்ளனர் என்பதற்கான மிகப்பெரும் சான்றுகள் நம் வீட்டு துக்க – மகிழ்ச்சி நிகழ்வுகளில் கடைபிடிக்கப்படும் சடங்குகளில் இருந்து தெரியும்.

திருமணம் என்பது ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதற்கான ஓர் ஏற்பாடு அவ்வளவுதான். இதிலே பார்ப்பனர்களால் புகுத்தப்பட்டுள்ள சடங்குகளும் சம்பிரதாயங்களும் எத்தனை யெத்தனை!

மணம் முடித்துக்கொள்ளும் ஆணும் பெண்ணும் ஒரே சாதியினராக இருப்பதும், இவர்கள் திருமணம் இவர்கள் இருவரின் குடும்பத்துப் பெரியோர்களால் மட்டுமே உறுதிசெய்யப்பட வேண்டும் என்பதும், அப்படி உறுதிசெய்யப்பட்டு நடத்தப்படும் திருமணத்தை பார்ப்பனர்களே அவர்களது பழக்க வழக்க விருப்பு வெறுப்பு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடத்தி வைக்க வேண்டும் என்றும் இந்தப்படி நடக்காத திருமணங்களை சட்டப்படி ஏற்க இயலாது என்றும் இந்த மண்ணில் ஒரு கண்டிப்பான கட்டுப்பாட்டை ஏற்படுத்தியிருந்தனர் பார்ப்பனர்கள்.

பெரியார் அவர்களின் சாதி ஒழிப்பு நடவடிக்கைகள் பற்பல வகையிலானவை. அவற்றில் ஆகப்பெரிய நடவடிக்கை சாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம். 1957-ஆம் ஆண்டில் நவம்பர் 26 அன்று மிகப்பெரிய இழப்புகளையும் வலிகளையும் எதிர்கொண்டு நடத்தப்பட்ட போராட்டம். ஆனால், இதற்கும் முப்பது ஆண்டுகளுக்கும் முன்பே பெரியார் நடத்திய பண்பாட்டுப் புரட்சிதான் சுயமரியாதைத் திருமணங்கள்!

திருமணத்தின் அடிப்படை அம்சங்களாக பார்ப்பன வேத மத சட்டங்கள் வலியுறுத்தும் ஜாதியை, தாலியை, சடங்கு – சம்பிரதாயங்களை மறுத்து ஒதுக்கியதோடு திருமணத்தை நடத்திட புதோகிதர் என்கிற புரோக்கருக்கும் இடமில்லை எனப் பார்ப்பனர்களின் அடிமடியிலேயே கையை வைத்தார் பெரியார்.

இந்த இடத்தில் அன்றொரு வரலாற்றை நாம் திரும்பிப் பார்த்துவிட்டு வருவதே இந்தக் கட்டுரையை முழுமையாக்கும். அது, ஆயிரத்து தொள்ளாயிரத்தின் தொடக்கத்தில் ஆங்கிலேய அரசு வெளியிட்ட ஒரு கணக்கீட்டில் இந்த நாட்டில் பெண் குழந்தைகள் ஒரு வயது முதலே விதவைகளாக அதாவது, திருமணமும் நடந்து கணவனையும் இழந்து இனி வாழும் காலம்வரை பார்ப்பனிய வேத சடங்குகளின் ஒடுக்கு முறையில் உப்புப் போட்டு கூட சோறு திங்க முடியாத அவலத்தில் வாழ்ந்து சாக வேண்டும் என்கிற சடங்கு விதிக்கு ஆட்படுத்தப்பட்டிருந்த கொடுமை களை இந்த சமுதாயம் நியாயப்படுத்தி வைத்திருந்த அந்தக் காலத்தில் பெரியாரின் சுயமரியாதைத் திருமணங்களில் பெரிதும் விதவை மறுமணங்களாக நடத்தப்பட்டன.

ஏன், பெரியாரால் 1928-ஆம் ஆண்டு அதாவது தொன்னூறு ஆண்டுகளுக்கும் முன்பு முதன்முதலாக நடத்தப்பட்ட சுயமரியாதைத் திருமணம், அருப்புக்கோட்டை சுக்கிலாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் - மஞ்சுளா இணையர் திருமணம் தான். இதிலே மணமகள் மஞ்சுளா ஒரு விதவைப் பெண்.

இன்றைக்குப் பல புரட்சிகரத் திருமணங்கள் வெகுஇயல்பாக நடத்தப்படுகிற, நாள்தோறும் சாதி மறுப்புத் திருமணங்கள் பதியப்படுகிற காலத்தில் கூட, பெண் ஏற்கனவே மணமானவர் எனில் சற்றே பின்வாங்குகிற, மனம் சறுக்குகிற பல சீர்திருத்தக்காரர்களை நாம் பார்க்கிறோம் எனில், தொன்னூறு ஆண்டுகளுக்கும் முன்பு சுயமரியாதைத் திருமணத்தை விதவை மறுமணமாக, சாதி, தாலி, சடங்கு, புரோகித மறுப்புத் திருமணமாக 100 விழுக்காடு சுயமரியாதைத் திருமணமாக நடத்திக் காட்டியவர் பெரியார். இங்கு தான் பெரியார் ‘பார்ப்பனியம்’ என்கிற ஒரு பண்பாட்டுக் கற்பனாவாதப் பிரமாண்டத்தின் அடிக்கட்டு மானத்திலேயே அணுகுண்டை வைத்தார்.

இன்றுவரை பார்ப்பனத் தகிடுதத்தங்களை பட்டையும் கொட்டையுமாகத் திரிகிற பக்திப் பைத்தியங்கள் கூட ஏற்க மறுத்து, விடாது விரட்டி விரட்டி அடிக்கிறது என்றால், தமிழ் மண்ணில் பார்ப்பனியம் தமது அதிகாரங்களை வைத்து மறுகட்டமைப்பு செய்திடும் முயற்சிகள் தொடர்ந்து சரிந்து வீழ்ந்து கொண்டே இருக்கிறது என்றால், இதன் அஸ்திவாரக் குழிக்குள் பெரியார் என்கிற வெடி குண்டின் கருமருந்து இன்னமும் காரம் போகாமல் இருக்கிறது என்பதைத்தவிர வேறு எதுவும் காரணமில்லை என்று நான் உரக்கச் சொல்வேன்.

விடுதலை பெற்ற இந்தியக் குடியரசில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பெரு முயற்சியால், இந்திய அரசியல் சட்டத்தில் பல மாற்றங்கள் புகுத்தப்பட்டன. இன்னல்கள், இழிவுகள், கொலை மிரட்டல்கள் அனைத்தையும் தாண்டிப் புரட்சியாளர் அம்பேத்கர் பல சட்டங்களை தீட்டினார். அதிலே குறிப்பிடத்தக்க ஒன்று, ஸ்பெஷல் திருமணச்சட்டம்.

1947 தொடங்கி அம்பேத்கரின் ஓயாத போராட்டத்தின் விளைவாக 1951-இல் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வந்தது. ஆனால், நூலாதிக்கம் அச்சட்டத்தை நிறைவேற்ற அனுமதிக்கவில்லை. இதுபோன்ற பல்வேறு சமூகநீதி மற்றும் மதச்சீர்திருத்தச் சட்டங்கள் புத்தகத்தில் எழுதப்பட்டு பின்னர் நாடாளுமன்ற விவாதங்களில் தலையும் காலும் கைகளும் வெட்டப்படுவதும், சில விவாதக் களத்திலேயே கதை முடிக்கப்படுவதுமான பார்ப்பனச் சூழ்ச்சியைக் கண்டு வெகுண்டெழுந்து, கேவலம் எனது கோரிக்கைகளைக் கூட நிறைவேற்றத் தகுதியில்லாத இந்த மந்திரி பதவி யாருக்கு வேண்டும் என்று கேட்டு இந்தியாவின் சட்டமந்திரி என்கிற பொறுப்பை பார்ப்பனர் களுக்கே பிச்சைப்போடுவது போல தூக்கி எறிந்துவிட்டு அம்பேத்கர் வெளியேறிய பின்னர், சமூகத்தில் புரட்சியாளர் அம்பேத்கரும் தந்தை பெரியாரும் ஏற்படுத்திய தாக்கங்களின் அழுத்தத்தால் ஸ்பெஷல் திருமணச்சட்டம் 1954ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதில் கூட வேற்று மதத்தவர்களின் கலப்புத் திருமணம் தான் (Inter Religion Marriage) சட்ட அங்கீகாரம் பெற்றது. இந்து மதத்திற்குள்ளேயே இருவேறு சாதியினர் செய்துகொள்ளும் சாதிக் (Inter Caste Marriage) கலப்புத் திருமணங்களை இச்சட்டம் அங்கீகரிக்கவில்லை. பின்னர் இந்துமதச் சீர்திருத்தச் சட்டம் 1955ஆம் ஆண்டு பண்டித நேருவின் தொடர் முயற்சியால் பலத்த பார்ப்பன எதிர்ப்புக்கிடையே நிறைவேறியது. ஆனாலும், இதில் எந்தச் சட்டமும் பார்ப்பனர்களின் அடிக்கட்டுமானத்தைத் தொட முடியவில்லை. காரணம் இந்து திருமணம் என்பது சாஸ்திர சம்பிரதாயங்கள் மற்றும் புரோகிதத் திருமணங்கள்தான் என்கிற அடிக்கட்டு மானம் பாதுகாப்பாகவே இருந்தது.

வாழ்க அறிஞர் அண்ணா

கெட்டித்தட்டி போயிருந்த பார்ப்பனச் சடங்குகளில் இச்சட்டங்கள் சில ஊசலாட்டங்களை ஏற்படுத்தின, சில உடைப்பு களை ஏற்படுத்தின என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால்,

“அய்யா இந்த ஆட்சி உங்களுடையது. என்னென்ன கொள்கைகளை உங்கள் லட்சிய முழக்கமாகக் கொண்டு நீங்கள் இந்த நாட்டில் பட்டிதொட்டியெங்கும் ஓய்வறியாத சூரியனாய் மூத்திரச் சட்டியைத் தூக்கிக்கொண்டு சுற்றிச்சுற்றி வருகிறீர்களோ அந்தக் கொள்கைகளை, லட்சியங்களை எல்லாம், இதோ உங்கள் பிள்ளைகள் நாங்கள் ஒற்றைக் கையெழுத்திலே நிறைவேற்றிடச் சித்தமாக இருக்கிறோம். நீங்கள் இனி கவலை கொள்ள வேண்டாம். நீங்கள் எண்ணுவதை செய்து முடித்துவிடும் ஆற்றல் வாய்ந்த அதிகாரம் படைத்த பிள்ளைகள் நாங்கள் இருக்கிறோம்”

என்று 1967ஆம் ஆண்டில் அடைமழை கொட்டும் ஒரு நள்ளிரவில் திருச்சி புத்தூர் மாளிகையில் 18 ஆண்டு பிரிவினைக்குப் பிறகு தந்தையைச் சந்தித்த முதல்வர் அண்ணா மானசீகமாகக் கும்பிட்ட கைகளோடு பெரியாரின் கைகளை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டு கண்ணீர் கோர்க்கச் சொன்னார். சொன்னபடி செய்தார்.

1967ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம் நாள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ‘சுயமரியாதைத் திருமணச் சட்டம்’ நிறைவேறியது. சாதாரண சீர்திருத்தச் சட்டங்களுக்கே டில்லிப் பார்ப்பனர்கள் வானத்துக்கும் பூமிக்கும் குதித்தார்கள். அய்யோ, எங்கள் பாரம்பரிய பண்பாடு போகிறதே என்றார்கள். ஆனால், சடங்கு, சம்பிரதாயம், சாஸ்திரம் மட்டுமல்ல பார்ப்பன புரோகிதரும் தாலியும் இல்லாமலே வெறும் மாலை மாற்றிக்கொண்டால் போதும் என்கிற மான மீட்பு– சுயமரியாதைத் திருமணச் சட்டம் சலனமே இல்லாமல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேறியது.

இதற்கும் முந்தைய 40 ஆண்டுகால பெரியாரின் பேருழைப்பே இச்சட்டத்தை நிறைவேற்ற வாய்ப்பான சூழலை உருவாக்கியது. காரணம் இந்திய நாடாளுமன்றத்தில் ஸ்பெஷல் திருமணச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கும் கால் நூற்றாண்டுக்கும் முன்பே பெரியார், பார்ப்பனர் மற்றும் பார்ப்பனச் சடங்குகள் - சட்ட திட்டங்கள் அல்லாத சட்டப்படி செல்லுபடியாகாத திருமணங்களை நூற்றுக்கணக்கில் நடத்தி ஒரு சடங்கு மறுப்பு சமூகத்தையே உருவாக்கிவிட்டார்.

சுயமரியாதை இயக்கம் - திராவிடர் கழகம் சார்பாக பெரியார் நடத்திய ஆயிரக்கணக்கான சுயமரியாதைத் திருமண இணையர்கள் தங்கள் உற்றார், உறவுகளை, குடும்பத்தில் தமக்குள்ள உரிமைகளை, சட்டப்படியான அங்கீகாரத்தை அனைத்தையும் துறந்துவிட்டு தன்மானம் - சுயமரியாதை பகுத்தறிவு என்கிற கொள்கை உறுதியில் தங்களை ஆணித்தரமாக நிலைநிறுத்திக் கொண்டனர்.

இவர்களில் பலபேருடைய திருமணங்களுக்கு 35, 40 ஆண்டுகள் ஆனபின்பு, பல இணையர்களின் வாரிசுகளே மணம் முடித்த பிறகு, பலபேர் பேரக் குழந்தைகளை கொஞ்சிக் கொண்டிருக்கும் நிலையில்தான் இவர்களுடைய திருமணங்கள் செல்லும் என்கிற சட்டமே வந்தது என்பதுதான் வேடிக்கை. தன்னுடைய கொள்கைக்கு எதையும் தாங்கும் இதயம் கொண்ட தொண்டர்களே கொண்டிருந்த ஒரே தலைவர் தந்தை பெரியார் தான் என்பதை ரத்த சாட்சியாக நிரூபிக்கிற நிகழ்வுதான் சுயமரியாதைத் திருமணங்கள். அந்த சுயமரியாதைத் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கியது தான் மகன் தந்தைக்காற்றிய உதவி.

இந்தச் சட்ட முன்வரைவு தயாரித்த பின் எதற்கும் இதை அய்யாவிடம் ஒருமுறை காட்டிவிடலாமே என்று அண்ணா முடிவெடுத்து சட்ட முன்வரைவின் பிரதி ஒன்றை பெரியாரின் பார்வைக்கு அனுப்பியுள்ளார்.

அதை முழுமையாக ஊன்றிப் படித்த பெரியார் தாலி அண்டு மாலை என்றிருந்ததை “தாலி அல்லது மாலை” என்று திருத்திவிட்டுச் சொன்னாராம், “தாலியும் மாலையும்” என்று மட்டும் பார்ப்பான் எதிர்காலத்திலே இதை மாற்றிவிடுவான். “தாலி அல்லது மாலை” என்று என்றிருந்தால் தான் தாலி இல்லாத சுயமரியாதைத் திருமணங்கள் அங்கீகரிக்கப்பட்டு நம் பெண்களின் அடிமைச் சங்கிலி அறுபடும்” என்று கூறினார்.

இந்தச் சட்டம் 50 ஆவது ஆண்டை நிறைவு செய்கிறது தமிழகத்தில். இங்கே பார்ப்பனப் பூண்டு முளை வரும் என்று யாரேனும் நம்புகிறீர்களா? இன்றும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் பெரியார் எனும் கருமருந்து புகைந்து கொண்டே இருக்கிற தமிழகம் பார்ப்பனியத்தின் புதைகுழி என்பதை இந்த நாளில் ஓங்கிச் சொல்வோம்!

வாழ்க பெரியார்! வாழ்க சுயமரியாதைத் திருமணங்கள்!! வாழ்க அறிஞர் அண்ணா!!!

கா.சு.நாகராசன், தமிழ்நாடு திராவிடர் கழகம்