மனித இனத்தின் வளர்ச்சியானது தான் தோன்றிய காலத்தின் நிலையில் இல்லை. மாற்றங்கள் இயல்பாகவும் புதிய வழிகளாலும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. ஆனாலும் சமுதாய நன்மை கருதி மாற்றங்கள் நிகழ்த்த முற்படும்போது, மாற்றத்தை விரும்பாத, பழமையால் மட்டுமே பயன்பெற்று வாழ்கின்ற தன்னலவாதிகளால் வேறு வகையாக எதிர்வினைகள் உருவாக்கப்படுகின்றன. ஆனாலும் தேவைகளுக்கு மாற்றங்கள் நிகழ்ந்தே முடிகின்றன.

இந்தியாவை ஆட்சி புரிந்த வெள்ளைக்கார ஆங்கில அரசாங்கம், இந்நாட்டின் பொருளா தாரத்தைச் சுரண்டினாலும் மக்கள் நலம் கருதி சமுதாயத்தில் நிலவும் அறிவுக்கும், கால முன்னேற்றத்திற்கும் பொருந்தாத பலவற்றை மாற்றிட விரும்பினர். அதை அமுல்படுத்திடச் சட்டங்களை இயற்றினர். இதை விரும்பாத தன்னல வாதிகளான மதவாதிகள் வேறுவகையான காரணங்களைக் கையில் எடுத்து, அரசின் திட்டங்களைத் தடுத்திடப் போராட்டங்களை உருவாக்கினர்.

hindu terrorism1857-ல் வெள்ளைக்கார ஆங்கிலேய அரசானது சமுதாய மாற்றத்திற்கான பல பணிகளை நிகழ்த்தத் தொடங்கியது. அந்த மாற்றங்கள் மத தர்மத்திற்கு (மனுதர்மம்) எதிரானது என்று அதர்மத்தை ஆரியம் தூண்டிவிட்டது. அரசின் சமுதாயப் புரட்சியால் பார்ப்பன உயர்வுக்கும், பார்ப்பன உயர் வாழ்விற்கும், பார்ப்பன மந்திரிகள், அதிகாரிகள் ஆகியோரின் தன்னலம் மிகவும் பாதிக்கப்படும் என்று கருதி கொலை, கொள்ளை, நாசம்செய்தல் போன்ற காரியங்களைத் தூண்டி விட்டனர். விளைவு ‘சிப்பாய்கலகமாக’ அது உருவாக்கப்பட்டது. இது சமுதாய சீர்திருத்த முயற்சிக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறையாகும்.

அந்தக்காலத்தில் இராணுவத்தில் பார்ப்பனர் களும், முஸ்லீம்களும் ஏராளமாக இருந்ததே இக்கலகத்திற்குக் காரணமாகவும் இருந்தது. அடுத்து 1835 முதல் 1920 வரை வெள்ளைக்கார அரசாங்கம் ஆட்சியில் உள்ள எல்லா உயர்வையும் தங்களுக்கு உள்ளதுபோக மற்ற எல்லாப் பெரும் பதவிகளையும், அதிகாரத்தையும் பார்ப்பனர்களுக்கு மட்டுமே கொடுத்து வந்தார்கள். பார்ப்பனர்களும் அதே முயற்சியில் மதத்தையும் இணைத்தே பெற்று வந்தார்கள்.

இந்நிலையில் நாட்டின் தேர்தல்முறை புகுத்தப் பட்டபோது மேற்கண்ட பயன்களும், பலன்களும் மாறத் தொடங்கியது. 1920-ல் பார்ப்பனரல்லாதார் அரசுப் பதவிகளையும் அதிகாரத்தையும் பெறும்படி யான சூழல் உருவானது. திராவிடர்கள் பலம் பதவிப் படிக்கட்டுகளில் பவனிவரத் தொடங்கியது. விளைவு 1920-முதல் 1947 வரை பார்ப்பனர்கள் தேசியம் என்ற பெயரைச் சூட்டிக்கொண்டு நாசவேலைகளைச் செய்யத் தொடங்கினர்.

பார்ப்பனர்களின் சூழ்ச்சியான மதியால் மக்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டனர். கொலைகள் நிகழ்த்தப்பட்டன. வேறுபாடுகள் விதைக்கப்பட்டன. ஆங்கில வைசிராய் மீதே குண்டெறியும் அளவிற்கு வன்முறைகள் துணிந்து நடந்தேறின. விளைவு எதிரிகள் ஒழிந்து ஆட்சி அதிகாரங்கள் வடநாட்டு பார்ப்பன கொள்ளைக் கும்பல் வசமானது.

1947-க்கு பின்பு ஆட்சிக்கு வந்தவுடன் 100-க்கு 7 பேர்கள் மட்டுமே படித்தவர்கள். 90-க்கு மேற் பட்டவர்கள் தற்குறிகளாகவும் இருக்கும் இந்நாட்டில் ஆட்சி பீடத்தில் அமர்ந்தவுடன் முதல் வேலையாக 2500, 3000, 6000 என்கின்ற கணக்கில் பள்ளிக்கூடங்களை மூடவும் மக்களை எல்லாம் இந்தி கட்டாயம் படிக்க வேண்டும். இவை மாத்திரமல்லாமல் பள்ளியில் ஒருநேரம் மாத்திரமே படித்துவிட்டு மறுநேரம் பார்ப்பனரல்லாத மாணவர்கள் கண்டிப்பாக அவரவர் ஜாதித் தொழிலைப் படிக்க வேண்டும் என்ற ‘குலக்கல்வி‘ திட்டத்தை, கண்டிப்பான சட்டமூலம் நடைமுறைப் படுத்திட உத்தரவு போடும் காரியத்தைச் செய்தார்கள்.

நாடே போராட்டக்களமாக மாறியது. ஆரியத்தின் சூழ்ச்சியால் அறிவு வீழ்ச்சியானதை உணர்ந்த மக்கள் காங்கிரசில் இருந்த பார்ப்பன ஆதிக்கத்தை ஒழித்து, பார்ப்பனரல்லாதவர்கள் கட்சிப் பொறுப்பில் அமரவைக்கும் நிலையை உருவாக்கினர். நாட்டின் நிலை கருதி காங்கிரசானது நல்ல திட்டங்களை உருவாக்க முற்பட்டது. எல்லோருக்கும் படிப்பு, எல்லோருக்கும் வேலை, எல்லோருக்கும் வீடு, எல்லோருக்கும் வயிறாற உணவு, சமுதாயத்திலும், பொருளாதாரத்திலும் எல்லா மக்களுக்கும் சமநிலை வாழ்வு என்ற திட்டத்தைக் கொள்கையாக அறிவித்தது. இதற்குத் தலைமையேற்று நடத்திடப் பார்ப்பனரல்லாத வகுப்பைச் சார்ந்த பெருமகனார் காமராசர் அவர்கள் தலைவராக நியமிக்கப்பட்டார். பெருந்தலைவர் காமராசர் புதிய சமுதாயம் காணத் தீவிரம் காட்டினார்.

இக்காலகட்டத்தில் காங்கிரசு விரோதி களுக்கு, சமதர்ம விரோதிகளுக்கு, சாதிப் பெருமையால் பிழைக்கும் அயோக்கியர்களுக்கு, காங்கிரசையும், சமதர்மக்கொள்கை களையும் எதிர்த்துக் குறைகூறவோ, தடுத்துப்பேசவோ ஆதாரம் எதுவும் இல்லாத காரணத்தால், மதக் குறிப்புகளைச் சாக்காக வைத்து, அதுவும் யோக்கிய மான முறையில் அல்லாமல், அயோக்கியத் தனமான முறையில் பாமர மக்களின் முட்டாள்தனத்தை மூலதனமாக்கிக் கொண்டு நாட்டில் கொலை பாதகப் புரட்சிகளைத் தூண்டி விட்டார்கள்.

மாட்டுக்கறிக்குத் தவம்கிடந்த பார்ப்பனர்கள்

நம் நாட்டில் பார்ப்பன அயோக்கியர்கள் மதக்குறிப்பு என்று எதைக் குறிப்பிட்டார்கள் என்றால் ‘பசுவதையைத் தடுக்கச் சட்டம் இயற்ற வேண்டும்’ என்ற பிரச்சனைகளைக் காரணமாகக் கொண்டு காலித்தனத்தைச் செய்யத் தொடங்கி னார்கள். (இது அய்யா தந்தை பெரியார் வழங்கிய குறிப்பு) “பசுவதைத் தடுப்புப் பித்தலாட்டம்” என்றார் பெரியார். பார்ப்பனர்கள் தாங்கள்தான் காலம் காலமாகப் பசுவைத் தெய்வமாகப் போற்றி வருபவர்கள் என்றும், பசுவைக் காப்பாற்றுவது மனுதர்மம், இந்து தர்மமாகும் என்றும் கூப்பாடு போட்டார்கள். ஆனால் பார்ப்பனர்களின் முன்னோர்கள், ரிசிகள், முனிவர்கள் போன்ற எல்லா ஆரியர்களுக்கும் ‘பசுக்கள்’தான் விருந்து நடத்தப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பார்ப்பனர்களின் நூல்களில் இதற்கு எண்ணற்ற ஆதாரங்கள் குவிந்து கிடக்கின்றன.

மகாபாரதம்-துரோணபர்வம் 60-1-2-ல் அரசர்களின் மாளிகைகளில் பார்ப்பனர்களுக்கு விருந்து படைப்பதற்கென்றே 2000 சமையற்காரர்கள் இருந்தனர். நாளொன்றுக்கு 2000 பசுக்கள் வீதம் கொல்லப்பட்டன. இப்படி விருந்தில் பசு மாமிச ருசியில் மந்தை மந்தையாய்ப் பார்ப்பனர்கள் வந்து சமாளிக்க முடியாமல் போய்விட்டதால் அவர் களைப் பார்த்து சமையற்காரர்கள் “மாமிசம் குறைவாக இருக்கிறபடியால் தயவுசெய்து சூப்பை அதிகமாக ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று கேட்டுக் கொண்ட நிலைமை ஏற்பட்டு உள்ளது.

பார்ப்பனர்களின் மதுவெறி (சுராபானம்) மாமிசவெறி பற்றி வால்மீகி இராமாயணம், காளிதாசர் ரகுவம்சம், அபஸ்தம்ப தர்ம ஆத்திரம், யஜீர்வேதம், பிரகதாரண்ய உபநிஷதம் ஆகியவை பசு மாமிசம் உண்டதை விளக்குகின்றன. இப்படிப் பசு மாமிசம் தின்றுவந்த பார்ப்பனக்கூட்டம் பாராளு மன்றக் கூட்டத்தொடரில் ‘பசுவதைத் தடுப்புச் சட்டம்’ இயற்ற வேண்டுமென்று கூக்குரல் இட்டார்கள். கிளர்ச்சி செய்தார்கள்.

2.1.01.1966 காங்கிரசுக் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் பசுவதைத் தடுப்புக் கிளர்ச்சியைப் பற்றி காங்கிரசுத் தலைவர் காமராசர் அவர்கள் மிகவும் வன்மையாகக் கண்டித்ததோடு அக்கிளர்ச்சியை ஏதாவது ஒரு இடத்தில் நடத்தவேண்டுமென்றால் பொருத்தமான இடமாகச் சென்னையில் நடத்தலாமே தவிர, டெல்லியில் நடத்துவதற்கு எவ்விதப் பொருத்தமும் இல்லை. காரியக் கமிட்டியில் இது சம்பந்தமாக எந்தத் தீர்மானமும் வருவதைத் தம்மால் ஒப்புக்கொள்ள முடியாது என்று திட்டவட்ட மாக மறுத்து விட்டார்.

காமராசருக்கு எதிராகப் பார்ப்பனர்களின் காலித்தனம்

இச்செய்தி கிளர்ச்சிக் கூட்டத்தார்க்குச் சென்றடைந்தது. ஆத்திரம் அடைந்த ஆர்.எஸ்.எஸ், ஆரியசமாஜ், சங்பரிவார், ஜனசங்கம், நிர்வாண சாமியார்கள், சன்னியாசிகள், பார்ப்பனச் சங்கராச்சாரியார்கள், அழுக்குமூட்டை சாதுக்கள், பார்ப்பனக் குருமார்கள், பார்ப்பன தர்மிகள் ஆகியோர் 7.11.1966 திங்களன்று டெல்லியில் பாராளுமன்றப் பகுதியில் மிகப்பெரிய கலவரத்தை முன்கூட்டியே திட்டமிட்டபடி நிகழ்த்தினார்கள். முன்கூட்டியே திட்டமிடப்பட்ட கலவரம் என்பதால் அன்று அதிகாலையே சீருடை (யூனிபார்ம்) அணிந்த ஆர்.எஸ்.எஸ் சகாக்கள் ஊர்வலப் பாதையில் பொறுப்புக்களை மேற் கொண்டனர்.

தொடர்ந்து கடைகள், பெருந்தொழில் நிறுவனங்கள், அலுவலகங்களுக்குச் செல்வோர் போகவேண்டாமென்று தடுத்தனர். தமக்குத்தாமே நியமித்துக்கொண்ட கலாச்சாரக் காவலர்கள் 11.30-க்கு முதல்பலியாக இர்வின் மருத்துவமனையை கல்வீசித் தாக்கி நோயாளிகள் உட்பட ஊழியர்களையும் முதியோர்களையும் வெளியேற்றினர். அடுத்து ஆசஃப் அலி சாலையில் பலகடைகளில் சன்னல்கள் அடித்து நொறுக்கப்பட்டன. சப்ஜிமண்டி, சதர்பஜார் பகுதிகளில் உள்ள கடைகளில் கை கலப்பு ஏற்பட்டது.கடைகள் மூடப்பட்டன. நடுத்தரமக்கள் வாழும் பகுதியான சக்திநகர் பயத்தின் பீதியில் நடுநடுங்கியது. 2 மின்சார நிலையங்கள் அரசு அச்சுக்கூடம் கல்வீசிதாக்குண்ட தோடு தீக்கிரையாகத் தொடங்கியது. 11.40-க்கு அரசுப்பேருந்து இர்வின் மருத்துவமனை அருகில் தீயிடப்பட்டது பகல் 1.00 மணிக்கு பாராளு மன்றத்தெரு ஆர்ப்பாட்டக்காரர்களால் நிரம்பி வழிந்தது. எதிரில் உள்ள பேரக்ஸ் மேல் உள்ள மொட்டை மாடிகளில் ஏறி வெறிக்கூச்சம் போட்டது.

லோக்சபை அரைமணி நேரமே நடந்தநிலையில் அறையிலிருந்து வெளியேற்றப் பட்ட ஜனசங்க எம்.பியான ராமேசுர ஆனந்த மேடைமேல ஏறி ஒலி பெருக்கியில் “நான் சபையிலிருந்து வெளியேற்றப்பட்டேன். வேகமாக அணிவகுத்து முன்னேறுங்கள், பார்லிமெண்டைச் சுற்றி வளையுங்கள். ஒரு மந்திரி கூட வெளியே போகக்கூடாது” என்று ஆவேசக் கூச்சலிட்டுப் பேசினார். அவர் பேசி முடிப்பதற்குள் நூற்றுக்கு மேற்பட்ட நிர்வாண சாமியார்கள் போலீசு வளையத்தை உடைத்துக் கொண்டு பார்லிமெண்ட் வாயில் கதவுமுன் போர் நடனத்தை ஆடத் தொடங்கினார்கள். பெண்கள் உட்பட நிர்வாணச் சாமியார்கள் வாயில் கதவைத்தாண்டி உள்ளே ஓடமுற்பட்டபோது சிறுஅளவிலான போலிசார் அவர்களை நோக்கி கரம் கூப்பு கும்பிடு போட்டனர்.

அடுத்த நொடி அதோ அங்கு ஒரு மகாத்மா தாக்கப்படுகிறார் என்று கூச்சல் கேட்டது. உடனே போர் துவங்கிவிட்டது. நிர்வாண சாதுக்கள், திரிசூலங்கள், ஈட்டிகள் சகிதமாக கோமாதாக்கி ஜே, என்று பெரும் தாக்குதல் நடத்தினர். போலீசார் அடித்து வீழ்த்தப்பட்டனர்.பார்லிமெண்ட் தாக்கும் நிலையில் 1.40-க்கு கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசப்பட்டது. அடுத்த 15-வது நிமிடத்தில் வானொலி நிலையம், டிராஸ்போர்ட் பவனம், ஷிராம் சக்திபவனம் என மேலும் பல இடங்கள் தீயிட்டுக் கொழுத்தப்பட்டன. பெட்ரோல் தீப்பந்தங்கள், பஞ்சு உருண்டைகள்,அக்கினி திராவக வெடிகள், ஆகாஷ்வாணிபவன், வானொலிநிலையம், பி.டி.அய் பத்திரிகை அலுவலகம் இந்திய ஆயில் கம்பனி, தனியார் பெட்ரோல் பங்க்,சூப்பர் மார்க்கெட்,தபால் ஆபீசு ஆகியவை மீது மேற்படி குண்டுகள் வீசப்பட்டன.

காமராசர் வீட்டு முன்பு

ஆர்ப்பாட்டக்காரர்களில் 25 முதல் 30 பேர்களை நல்ல குண்டான வாலிபர்களைப் பொறுக்கி இரண்டு குழுவாகப் பிரித்து அகில இந்திய காங்கிரசு கட்சி அலுவலகம் முன்பு காங்கிரசு தலைவர் காமராசர் அவர்கள் வீட்டுக்கு முன்பும் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். சுமார் 3-மணி அளவில் கையில் பெட்ரோல் டின்னுடனும் பஞ்சு உருண்டைகளுடனும் ஆயத்தமாக வந்திருந்த மற்றொரு கலகக்கூட்டம் ஜந்தர்மந்தர்சாலை, அசோக் சாலையில் வந்து இணைந்தது.

காமராசர் அவர்கள் பகலுணவுக்குப்பின்பு ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார். ஓவென்று இரைச்சலுடன் கூட்டம் காமராசர் வீட்டிற்குள் வரமுயல அவரின் உதவியாளர் நிரஞ்சன்லாலும், சேவகர் பகதூர்சிங்கு அவர்களை எதிர்த்தனர். தனியாளாக நிரஞ்சன் எதிர்க்க பகதூர்சிங் ஆகாயத்தை நோக்கிச் சுட்டார். கூட்டம் கற்களை வீசியது. நிரஞ்சனும் கல்லை வீசினார். துப்பாக்கி ரவை முடிந்தது. நிரஞ்சன் கல்லடிபட்டுக் கீழே வீழ்ந்தார். பகதூர்சிங் வேறுவழியின்றி நிரஞ்சனுடன் காமராஜரையும் வைத்து அறையில் உள்ளே தாளிட்டு நிலைமையைச் சொன்னார்.

அப்போது காமராசர் அவர்களோடு நான் பேசுகிறேன் என்றார். கூட்டம் நாலாபுறமும் சூழ்ந்து கற்களை வீசியது. உள்பக்கம் வலைக்கதவு ஆனதால் கற்கள் உள்ளே விழவில்லை. அச்சம், வாக்குவாதம், குழப்பம் வெளியில் தகவல் சொல்ல முடியாதநிலை. தீயிடப்பட்டு புகை நாற்றம். அப்போது காமராசரின் சமையல் உதவியாளர் அம்பி (எனும் வரதராஜன்) வெளியில் ஓடிவந்தார். மெட்ரிக்குலேசன் வரை படித்தவர். காமராசரின் எல்லாப்ப்பணிகளையும் கவனிப்பவர்.

“எங்கே காமராசர்” என்று கலகக்காரர்கள் கேட்க “அவர் வீட்டில் இல்லை” என்று கூறி விட்டார். அம்பியை அடித்து நொறுக்கினர். தலை, முகம், மூக்கு, தோள் என்று பார்க்காமல் அடிவிழ ரத்தம் வழிந்தது. அவர்மேல் பெட்ரோல் துணி வீசப்பட்டது. அவர் பனியனைக் கழற்றி வீசினார். அவர் ஏற்கனவே வயிற்றுவலி ஆப்ரேசன் செய்தவர். வலி தாங்காமல் என்னைக் கொன்றுவிடுங்கள் என்று கத்துகிறார். பெட்ரோல் டின்னுடன் ஒருவன் வந்திட மற்றொருவன் அதைத் தடுத்திட அம்பி மயக்கம் அடைந்து கீழே வீழ்ந்தார். உடனே காமராசர் அறையின் ஏர்கண்டிசன் கருவி உடைக்கப்பட்டது. பொருள்கள் நாசம். வீட்டிலிருந்து எழுந்த புகை பின்னால் இருந்த அய்ந்தாம் அடுக்கு வித்தல்பாய் ஹவுஸில் இருந்தவர்களின் கவனத்தைக் ஈர்த்தது. அவர்கள் போலீசுக்குத் தகவல் கொடுக்க ஒரு பெரிய படை வந்து, போராட்டக்காரர்களை விரட்டி அடித்தது.

 வெளியே வந்த காமராசர் சரசரவென்று காரியத்தில் இறங்கினார். எரியும் பொருள்களின்மீது மணலை அள்ளி வீசினார். அந்த நேரத்திலும் அவரது கடமையுணர்வு அனைவரையும் சிலிர்க்கச் செய்தது. நண்பர்களின் வற்புறுத்தலின் பேரில் பின் பங்களாவுக்குச் சென்று ஓய்வெடுத்துக் கொண்டார்.

“டெல்லிக் கலவரமும் காலித்தனமும் பார்ப்பனரின் மனுதர்மத்திற்கும் காமராசரின் மனித (சம்) தர்மத்திற்கும் நடந்துவரும் பலாத்காரப் போராட்டம்” என்கிறார் தந்தை பெரியார்.

ஆதாரங்கள்:

காமராசர் கொலை முயற்சி சரித்திரம் டிசம்பர் 1966-இல் தந்தை பெரியார் எழுதிய முகவுரையுடன் முதற்பதிப்பு-ஜனவரி 1967-என்ற நூல், திராவிடர் கழக வெளியீடு, பெரியார் திடல், 50 ஈ.வெ.கி.சாலை, வேப்பேரி, சென்னை-600007.