தாய்மதம் திரும்பிய டாக்டர் சட்வா சாக்யா அவர்களுடன் ஒரு உரையாடல்

- பிரபாகரன் அழகர்சாமி

1956 ம் ஆண்டு அக்டோபர் 14 ம் தேதி,மகாராஷ்டிர மாநிலத்தின் நாக்பூரில், இந்து மதத்தில் இருந்து வெளியேறி பெளத்த மதத்திற்கு மாறினார் தோழர் அம்பேத்கர். அவருடன் சேர்ந்து அந்த நிகழ்வில் 6 லட்சம் மக்கள் பெளத்தத்தைத் தழுவினர். அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு நடந்து 60 ஆண்டுகள் ஆகிறது. இதை நினைவுகூறும் வகையில் கடந்த அக்டோபர் 16 ம் தேதி சென்னையில் 47 மருத்துவர்கள் தங்களுடைய பூர்வீக மதமான பெளத்த மதத்துக்குத் திரும்பியிருக்கின்றனர்.

இந்து மதத்திற்கு எதிராக நடக்கும் எந்த ஒரு நிகழ்வும் காட்டாறு குழுவுக்கு ஒரு பெரும்விழாதான். அந்த அடிப்படையில் மருத்துவர்களின் மதமாற்ற நிகழ்வை வரவேற்கிறோம்.வாழ்த்துகிறோம். மகிழ்ச்சியடைகிறோம்.

பெளத்த மதத்திற்குத் திரும்பிய இந்த நிகழ்வு குறித்தும், தோழர் அம்பேத்கர் பெளத்த மதத்தைத் தேர்ந்தெடுத்ததன் காரணங்கள் குறித்தும், இன்றைக்கு மதமாற்றத்திற்கான தேவைகள் குறித்தும் நம்முடைய கேள்விகளை, இந்த நிகழ்வை ஒருங்கிணைத்த மக்கள் மருத்துவர் அணியினைச் சேர்ந்த, அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மயக்கவியல் நிபுணர் டாக்டர் சட்வா சாக்யா என்ற ஜானகிராமன் அவர்களிடம் உரையாடினோம்.

இந்த உரையாடலில் டாக்டர் சட்வா சாக்யா அவர்கள் கூறியுள்ள கருத்துக்களில் சிலவற்றில் நாம் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருக்கிறோம். இந்த உரையாடலின் தொடர்ச்சியாக அவை பற்றிய கூடுதல் தகவல்களை டாக்டர் சட்வா சாக்யா அவர்களிடமும், மதமாற்றத்தில் அக்கறையுள்ள தோழர்களிடமும் கேட்டுப் பெற்று வெளியிடுவோம். இந்த உரையாடலை ஒரு ஆக்கப்பூர்வமான விவாதமாக எடுத்துச்செல்ல விரும்புகிறோம். எனவே இந்த உரையாடலை வரவேற்கும் கட்டுரைகளையும், விமர்சனம் செய்யும் கட்டுரைகளையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

- காட்டாறு

satwa sakya

தாய் மதம் திரும்புவோம்என்ற பெயரில் இந்து அமைப்புகள், இஸ்லாமியர்களாகவும், கிறிஸ்தவர்களாகவும் வாழும் மக்களை இந்து மதத்திற்கு மதம் மாற்றி வருகின்றன. இப்போது இந்துக்களாக உள்ளவர்களுக்கு, ‘தாய்மதம்எது? சற்று விளக்கமாகக் கூறுங்கள்.

‘இந்து’ என்கிற வார்த்தையே முகமதியர்கள் வந்து நமக்குக் கொடுத்த பெயர்தான் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். சிந்து நதிக்கரைக்கு இந்தப் பக்கம் வாழ்ந்தவர்களைப் பெயரளவில் வேறுபடுத்திக்காட்ட இஸ்லாமிய மன்னர்கள் கொடுத்த பெயர்தான் இந்து என்பது. அதற்கு முன்பு இந்துமதம் என்ற ஒன்று கிடையவே கிடையாது. இங்கு மக்கள் ஜாதிரீதியாகப் பிரிந்திருந்தனர். அது சதுர்வர்ண முறை. அதுதான் Social Civil code ஆக, அதாவது சமூகச் சட்டமாக இருந்தது. இதில் முக்கியமாக நாம் கவனிக்கவேண்டியது என்னவென்றால், இப்போது இந்தியாவில் பட்டியல் சாதியினர் என்கிற பெயரில் அறியப்படுகிற மக்கள் யார் என்கிற கேள்விதான் அது. இந்த ஒரு கேள்வியை நாம் திரும்பத் திரும்ப ஆராய்ந்தாலே, இந்த ஒட்டுமொத்த பிரச்சனைக்குமான தீர்வுகளும் கிடைத்துவிடும்.

இது மிகவும் நியாயமான தர்க்கப்பூர்வமான கேள்வி. இந்தியா முழுக்க ஒவ்வொரு கிராமத்திலும், எப்படி ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டும் ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளனர். இது எப்படி Uniform ஆக நடந்தது என்கிற கேள்வி மிக மிக முக்கியமான கேள்வியாக இருக்கிறது.

இப்போது ஒரு ஊரில் நூறுபேர் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். ஓருநாள் திடீரென அதில் பத்துப்பேரை அழைத்து, இனி நீங்களெல்லாம் ஊரைவிட்டு வெளியேதான் வாழவேண்டும் என்றும், மலம் அள்ளுதல் போன்ற வேலைகளைத் தான் செய்யவேண்டும் இனி, என்று சொன்னால், அதை அந்தப் பத்துப்பேர் ஒப்புக்கொண்டிருக்கப் போகிறார்களா என்றால், ஒப்புக் கொண்டிருக்கமாட்டார்கள்.

இன்னொன்று, அந்தப் பத்துப்பேரை அவர்கள் எப்படி அடையாளம் கண்டு, இந்தந்த பத்துப்பேர்தான் என்று முடிவுசெய்திருப்பார்கள்? இந்தக் கேள்விகளெல்லாம் மிக முக்கியமான கேள்விகளாக இருக்கின்றன. இந்தியா முழுவதும், ஒவ்வொரு கிராமத்திலும், எப்படி ஒரு குறிப்பிட்ட பிரிவினர் ஊருக்கு வெளியே உள்ளனர் என்கிற கேள்வி மிக முக்கியமான பெரிதும் பேசப்படாத கேள்வியாக உள்ளது. இதைப்பற்றி யாருமே சமூகத்தில் பேசுவது கிடையாது. இதைச் சிந்தித்த ஒரே ஆள் டாக்டர் அம்பேத்கர் மட்டும்தான்.

டாக்டர் அம்பேத்கர் இந்தக் கேள்விகளை ஆராய்ந்து இதற்கே மூன்று நான்கு புத்தகங்களை எழுதியிருக்கிறார். முதல் கேள்வியே நீங்கள் யார்? என்பதுதான். அவர் பல ஆய்வுகளைச் செய்து, பல அறிஞர்களின் நூல்களைப் படித்து, சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்குப் பயணம் செய்து தன் ஆய்வு முடிவுகளை வெளியிட்டிருக்கிறார். இதுவரை மறுப்புகள் எதுவும் இல்லாத அந்த ஆய்வுகள் என்ன சொல்கிறது என்றால், ஆரியர்கள் இந்தியாவில் நிலைபெற்றபிறகு, இங்குச் சதுர்வர்ண முறையை Civil Code ஆக, அதாவது சமூகச்சட்டமாக ஆக்குகிறார்கள்.

அதை எப்படிச் செய்கிறார்கள் என்றால், இங்குள்ள மன்னர்களை முதலில் ஒப்புக் கொள்ளவைப்பதன் மூலம் செய்கிறார்கள். தங்களிடம் உள்ள வேதம், கடவுள் எங்களிடம் தந்தது. இதைப் படிப்பதற்கான உரிமை எங்களிடம் மட்டும்தான் உள்ளது. நீங்கள் யாரும் படிக்கக்கூடாது. இந்த வேதத்தில் என்ன உள்ளதென்றால், நாங்கள் எல்லாம் பிராமணர்கள், மற்றவர்களைச் சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என்று பிரிக்கவேண்டும். இந்த முறையின்படி, இந்தந்த பிரிவினர்களெல்லாம், இந்தந்த வேலைகளைதான் செய்யவேண்டும். நாங்கள் உயர்வானவர்கள் மற்றவர்கள் தாழ்வானவர்கள் என்று சொல்லி இந்தச் சமூகச் சட்டத்தைக் கொண்டுவருகிறார்கள். மக்கள் இந்த நான்கு வர்ணங்களின் அடிப்படையில் பிரிக்கப்படுகிறார்கள்.

கி.மு. 5 ஆம் நூற்றாண்டில் புத்தர் பிறக்கிறார். புத்தர் மன்னர் பரம்பரையில் பிறந்தவர். அவர் நடைமுறையில் இருக்கும் சதுர்வர்ண முறைக்கு எதிராகப் பிரச்சாரம் செய்கிறார். மனிதர்கள் அனைவரும் சமம், இங்குச் சூத்திரன் - பார்ப்பனன் என்று எதுவும் கிடையாது, எல்லோரும் சமமானவர்கள்தான். ஆண் - பெண் வேறுபாடு எதுவும் கிடையாது. பெண்கள் மீது தீட்டு என்று எதுவும் கிடையாது, ஆணும் பெண்ணும் சமம்தான் என்கிற கருத்துகளைப் பிரச்சாரம் செய்திருக்கிறார். வெறுப்புக் கூடாது அன்புதான் வேண்டும் என்று பிரச்சாரம் செய்கிறார். எல்லாமே பார்ப்பன சமூகச்சட்டத்திற்கு எதிரான கருத்துகளாக இருக்கின்றன.

மக்கள் இந்தக் கருத்துகளால் கவரப்பட்டு, புத்தரைப் பின்பற்ற தொடங்கு கிறார்கள்.அவர் அங்கங்கு புத்த சங்கங்களை ஆரம்பிக்கிறார். அதன்மூலம் புத்த பிக்குகளை உருவாக்கி இந்தக் கருத்துகளைப் பரப்புகிறார். மவுரியப் பேரரசில் தோன்றிய அசோகர் புத்த மதத்தை ஏற்கிறார். அவர் புத்த மதத்தை ஏற்றுக்கொண்ட பிறகு, புத்தமதம் சமூகச் சட்டமாக மாறுகிறது. பார்ப்பன சமூகச் சட்டமான ‘சதுர்வர்ணம்’ என்பது நீக்கப்பட்டு, ‘சமத்துவம்’ என்பது சமூகச் சட்டம் ஆகிறது.

பார்ப்பனர்களுடைய உயர்வுநிலை தகர்கிறது. மவுரியப் பேரரசு காலத்தில் புத்தமதம் வேகமாகப் பரவுகிறது. புத்தபிக்குகள் பல நாடுகளுக்கும் சென்று மதத்தைப் பரப்புகிறார்கள். அம்பேத்கர் ஒரேவரியில் என்னசொல்கிறார் என்றால், இந்தியாவின் பொற்காலம் என்றால் அது மவுரியப்பேரரசின் காலம்தான் என்கிறார். கி.மு 5 ஆம் நூற்றாண்டில் இருந்து கி.பி 2 ஆம் நூற்றாண்டு வரை, கிட்டத்தட்ட 700 ஆண்டுகள் புத்தமதம் சட்டமாகவும், புத்தக்கலாச்சாரமும் இங்கிருந்திருக்கிறது. கி.பி 2 ஆம் நூற்றாண்டில் ஒரு சதிச்செயல் நடக்கிறது.

மவுரியப் பேரரசில், புஷ்யமித்திர சுங்கன் என்கிற பார்ப்பனன் படைத்தளபதியாக இருக்கிறான். அவன் மன்னரைக் கொன்றுவிட்டு ஆட்சியைபிடித்து, மீண்டும் சதுர்வர்ணத்தைச் சமூகச்சட்டமாக அறிவிக்கிறான். அரசர் என்ன மதமோ, அந்த மதம்தான் மக்களிடமும் திணிக்கப்படும் என்பதுதான் உலகவரலாறு. அதே வரலாறுதான் இங்கேயும். புத்த பிக்குகளைக் கொன்று, புத்தர் சிலைகளைச் சிதைத்து உருமாற்றுவது, புத்த விகார்களைப் பார்ப்பனக் கோயில்களாக மாற்றுவது என்று புத்த மதத்தை வேட்டையாடுகிறார்கள். அப்போது புத்த மதத்தைப் பின்பற்றிய மக்களுக்கு ஒரு சிக்கல் ஏற்படுகிறது. நிறையப்பேர் சதுர்வர்ணத்தை ஏற்றுக் கொண்டார்கள், அவர்கள்தான் தற்போது உள்ள இந்துக்கள் ஆவார்கள்.

சதுர்வர்ணத்தை ஏற்கமறுத்த, பார்ப்பன உயர்வுநிலையை ஏற்க மறுத்த, பசுமாடு புனிதம் என்பதை ஏற்க மறுத்த, சடங்கு யாகம் போன்ற மூடநம்பிக்கைகளை ஏற்க மறுத்த, உறுதியான பவுத்தர்களும் இருந்தனர். சுங்கனுடைய அரசு அவர்களைப் பெருவாரியான மக்களிடம் இருந்து பிரித்து ஊரைவிட்டு வெளியேற்றுகிறது. பெருவாரியான மக்கள் செய்கின்ற வேலைகளைச் செய்ய அனுமதிக்காமல், இழிவான வேலைகளைச் செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள். அவர்கள் மீது தீண்டாமை கற்பிக்கப் படுகிறது. இதுதான் தற்போது இந்துக்களாக இருப்பவர்களுடைய சுருக்கமான வரலாறு.

தாங்கள் புத்தமதத்தைத் தழுவியதற்குக் காரணம் புத்தம் நமது தாய் மதம் என்பதற்காக மட்டுமா? எதற்காக இந்து மதத்தைவிட்டு வெளியேற வேண்டும்?

இந்த முடிவை எடுப்பதற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட காரணங்கள் உண்டு. முதலில் நாங்கள் பாபாசாகேப் அம்பேத்கரின் சீடர்கள். அப்படித்தான் எங்களை நாங்கள் அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புகிறோம். டாக்டர் அம்பேத்கர் புத்தமதத்தைத் தழுவினார். அதனால் நாங்கள் கண்மூடித் தனமாகக்கூடப் புத்தமதத்தைத் தழுவினோம் என்றுகூட இதை வைத்துக்கொள்ளலாம். அது ஒரு பக்கம் இருக்கட்டும். இதற்கு என்ன காரணம் என்று பின்னால் சொல்கிறேன்.

இப்போது தீண்டாமை என்பது எங்கள் மேல் இருக்கிறது. அது எதனால் இருக்கிறது என்பதற்கு நான் ஏற்கனவே சொன்ன வரலாற்றுப் பின்னணிதான் காரணமாக இருக்கிறது. எதனால் நாங்கள் தீண்டத்தகாதவரானோம், எதனால் தீண்டாமையை இந்துக்கள் எங்கள் மீது கடைபிடிக்கிறார்கள் என்றால், நாங்கள் அவர்களுடைய கலாசாரத்தையே மறுத்து, அவர்களுடைய சித்தாந்தத்தையே நாங்கள் ஒதுக்கியதால்தான் அவர்கள் எங்களை ஒதுக்கிவைத்து நாங்கள் தீண்டத்தகாதவர் என்றானோம்.

பிறகு சுங்கன் காலத்திற்குப் பிறகு நான்கு வர்ணங்கள் என்பது ஐந்து வர்ணம் ஆகிறது. எப்படியென்றால், இந்த மாதிரி ஊரைவிட்டு ஒதுக்கிவைத்தவர்களை யெல்லாம் அவர்ணா, அதாவது வர்ணங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று சொல்லப்பட்டவர்களையும் ஒரு வர்ணமாக்கினார்கள்.

இதில் இந்த இடைநிலைச் சாதியினருக்கு ஒரு வகை Psychological Cushion Effect ஒன்றை அதாவது உளவியல் மகிழ்ச்சியை இந்தத் தீண்டத்தகாதவர்கள் கொடுக்கிறார்கள். எப்படியென்றால், இப்போது உள்ள பிற்படுத்தப்பட்டவர்களிடம் போய் நீங்கள் பிராமணர்களுக்குக் கீழேதான் என்று சொல்லி பிராமணர்கள் அவர்களை நம்பவைக்கவேண்டும். அதற்கு, வெறுமனே நீங்கள் பிரமணர்களுக்குக் கீழேதான் என்று சொன்னால் அவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதை அவன் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றால், அவனுக்குக் கீழே ஒரு ஆளை அவனிடம் காட்டவேண்டும்.

அப்படிக் காண்பித்து, உனக்குக் கீழே அவன் இருக்கிறான், எனக்குக் கீழே நீ இருக்கிறாய் என்று சொன்னால், ஒரு வகையில் அது அவனுக்கு ஒரு உளவியல் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. இந்த உளவியல் மகிழ்ச்சிதான், கிட்டத்தட்டத் தீண்டாமையை இந்தியாவில் 1800 வருடங்களாகக் காப்பாற்றி வந்திருக்கிறது. இந்த உளவியல் மகிழ்ச்சியைப் பிற்படுத்தப்பட்ட யாரும் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை 1800 வருடங்களாக. இவன் நமக்குக் கீழேதான் என்பதையும், இவன் நம்மைக் கண்டால் கும்பிடவேண்டும் என்பதையும், இவன் நம்மைப் பார்த்தால் வேட்டியை இறக்கிவிடவேண்டும் என்பதையும், செருப்பைக் கையில் எடுத்துச்செல்ல வேண்டும் என்பதையும், இதுபோன்ற உளவியல் மகிழ்ச்சியை அவன் விட்டுக் கொடுக்கத் தயாராயில்லை. இது ஒரு Mob Mentality யாக அதாவது குழு மனப்பான்மையாக இருக்கிறது

பிற்படுத்தப்பட்டவனுக்கு இந்த அமைப்பை அப்படியே காப்பாற்றவேண்டிய அவசியம் இருக்கிறது, அது அவனுக்கு ஒரு வாழ்வியல் கடமையாகவே இருக்கிறது. அதாவது, பட்டியல் சாதியினருக்கும் பிற்படுத்தப்பட்டவனுக்கும் இடையே இருக்கும் இடைவெளியைக் காப்பாற்ற வேண்டியது பிற்படுத்தப்பட்டவனுக்கு ஒரு வாழ்வியல் கடமையாகவே ஆகிவிடுகிறது. அப்படிக் காப்பாற்றிக்கொண்டிருந்தால்தான் அவன் பிற்படுத்தப்பட்டவனாகவே இருக்க முடியும். இல்லை யென்றால் அவனும் இவனும் ஒன்றாகிவிடுவான். இது மிகவும் முக்கியமாகக் கவனிக்கவேண்டிய விசயம்.

இதுதான், பிற்படுத்தப்பட்டவனைத் தனக்கு மேலே பிராமணர்கள் இருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்ள வைக்கிறது. தனக்குக் கீழே யாரும் இல்லையென்றால், இயல்பாகவே அவன் தனக்கு மேலேயும் யாரும் இல்லை என்பதையும் ஒப்புக்கொள்வான்.

இப்போது உள்ள பட்டியல் சாதியினர், தீண்டத்தகாதவர்களாக இருப்பவர்கள் இந்துமதத்தில் இருந்து வெளியேறுவதன் மூலமாக, பிற்படுத்தப்பட்டவர்களுக்குக் கீழே இங்கு யாரும் இல்லை என்கிற நிலையை உருவாக்குகிறோம். அப்படி ஒரு நிலையை உருவாக்கினால், இந்த மொத்தக் கட்டிடமும் விழுந்துவிடும். தனக்குக் கீழே யாரும் இல்லை என்கிற நிலையேற்பட்டால், பிற்படுத்தப்பட்டவர்கள் இயல்பாகவே பார்ப்பன உயர்வுநிலையை மறுப்பார்கள்.

ஜாதி என்பதும், தீண்டாமை என்பதும், தீண்டாமையைக் கடைபிடிக்கவேண்டும் என்பது ஒரு Social Learning. யாரும் தனியாக ஒரு சாதி இந்துவுக்கும், பிராமணருக்கும் அதையெல்லாம் சொல்லிக் கொடுப்பதல்லை. சமூகத்தில் இருந்தே ஒரு குழந்தை அதைக் கற்றுக்கொள்கிறது. சமூகம் என்றால் இங்கிருப்பதெல்லாம் இந்துச் சமூகம்தான். சமூகத்தில் இருந்து கற்றுக்கொள்வது என்றால் அது மறுபடியும் இந்துமதத்தில் இருந்து கற்றுக்கொள்வது என்பதுதான் அதன் பொருள். மதம் என்பதுதான், சாதி இந்துவுக்கும் பிராமணருக்கும், ஜாதியையும் தீண்டாமை யையும் கடைபிடிப்பதற்கு ஒரு பலத்தைக் கொடுக்கிறது. பட்டியல் சாதியின ரெல்லாம் உன் மதமே இல்லை என்கிற நிலை உருவாகிறபோது, இந்த மொத்த அமைப்புமே தகர்ந்துவிழும்.

மதமாற்றம் கூடுதலாக வேறு என்ன பயன்களைத் தருகிறது?

இந்தியாவில் ஒரு வருடத்திற்கு, National Crime Records Bureau கொடுத்திருக்கும் புள்ளி விபரங்களின் படி, இரண்டு லட்சம் குற்றங்கள் பட்டியல் சாதியினரின் மீது நடத்தப்படுகிறது. இவை பதிவு செய்யப்பட்டவை மட்டுமே. பதிவு செய்யப்படாதவை இதைவிட மூன்று நான்கு மடங்கு இருக்கும். கிட்டத்தட்ட குறைந்தது ஐந்து லட்சம் வன்முறை குற்றச்செயல்கள் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மீது இந்தியாவில் நடக்கிறது.

ஆனால், இது உலகத்தில் வேறு யாராலும் கவனிக்கப்படுவதில்லை. ஏன் இது மற்றவர்களால் கவனிக்கப்படாமல் இருக்கிறது என்றால் இது வெறும் ஒரு குடும்பச் சண்டை போலதான் பார்க்கப் படுகிறது. இந்து மதத்திற்கு உள்ளே இருக்கும் ஒருவன் இன்னொருவனை அடிக்கிறான் என்பது, இந்து மதத்திற்கு உள்ளே நடக்கும் பிரச்சனையாகப் பார்க்கப்படுவதால், யாரும் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

இந்த மதமாற்றம் என்ன செய்யுமென்றால், இந்தியாவில் உள்ள முப்பதுகோடி பட்டியல் இன சாதியை சேர்ந்த மக்களும் புத்த மதத்திற்கு மாறிவிடுவார்களே யானால், இந்தியாவில் உள்ள எழுபது கோடி இந்துக்கள், இங்குள்ள சிறுபான்மை யினரான புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் மீது வருசத்துக்கு இரண்டு லட்சம் வன்முறைகளைச் செய்கிறார்கள் என்பதை யாரும் ஏற்றுக்கொள்ளப்போவது கிடையாது.

அது உலகப்பிரச்சனையாகிவிடும். இந்துக்கள் புத்தமதத்தின் மீது எத்தனை வன்முறைகள் செய்யமுடியும்? இன்று நடப்பதுபோல இரண்டு லட்சம் வன்முறைகள் செய்யமுடியுமா? மூன்று லட்சம் வன்முறைகள் செய்ய முடியுமா? அது ஒரு பெரிய பிரச்சனையாகப் பார்க்கப்படும். அவ்வளவு முக்கியமான பிரச்சனை இன்று உலகத்தில் யாராலும் கவனிக்கப்படவில்லை என்றால் அதற்குக் காரணம் இது ஒரு குடும்பத் தகறாராக இருப்பதுதான்.

புருசன் பொண்டாட்டியை அடிப்பது போன்ற ஒரு மனநிலைதான் சாதி இந்துக்கள் மனதில் இருக்கிறது. என் பொண்டாட்டியை நான் அடிக்கிறேன் உனக்கு என்னடா? என்கிற எண்ணத்தில்தான் அவன் இவளை அடிப்பதைத்தான் தன்னுடைய வாழ்க்கையின் கடமையே என்கிற ஒரு நினைப்புதான் இங்கு இருக்கிறது. மதமாற்றத்தின் மூலமாக, இன்னொரு மதத்தவனைத் தன் மதத்தைவிடத் தாழ்வானவனாகக் கருதமுடியாது, அவன் மீது வன்முறையை எளிதாக நடத்தமுடியாது. அப்படி நடந்தால் அது உலகவிலான பிரச்சனையாகப் பார்க்கப்படும்.

ஜாதியற்ற சமுதாயம் படைக்க இராமானுஜர், சுவாமி சகஜாநந்தர் போன்ற தலைவர்களைப் போல இந்து மதத்தைச் சீர்திருத்தலாமே?

சீர்திருத்தலாம். ஆனால் அதை யார் செய்யவேண்டுமென்றால், இந்த மதத்தினால் பயன் பெற்றவர்கள்தான் செய்யவேண்டும். இந்துமதத்தைச் சீர்திருத்தவேண்டும் என்பது நியாயமானதும்கூட. எந்த ஒரு வீணாப்போனதையும் சீர்திருத்தவேண்டும் என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் அதைச் செய்யவேண்டியது இந்த மதத்தினால் பயனடைந்தவர்கள்தானே தவிர, இந்த மதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல.

நாங்கள் இந்த மதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள், அதனால் நாங்கள் வெளியே போகிறோம். இதை டாக்டர் அம்பேத்கர் மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறார். “Reforming Hindu society is neither our field of action nor our aim” என்று ஒரே வரியில் சொல்லிவிட்டார். அதாவது, “இந்துச் சமூகத்தை சீர்திருத்துவது எங்கள் கடமையும் அல்ல நோக்கமும் அல்ல.”

பெளத்த மதத்தில் பிரிவுகள் உள்ளதா? அதில் தாங்கள் முன்வைக்கும் பெளத்த மதம் எந்தப் பிரிவை சேர்ந்தது?

பிரிவுகள் என்பது இயற்கையானது. எடுத்துக்காட்டாக மருத்துவத்துறைக்குள்ளும் நிறையப் பிரிவுகள் உள்ளன. மதத்தில் மட்டுமல்ல உலகம் முழுவதும் பிரிவுகளால் நிரம்பியவைதான். மனிதனுடைய வசதிக்காகப் பிரிவுகள் உருவாகிறது. மனிதனுடைய இயல்பான பரிணாம வளர்ச்சியினால் பிரிவுகள் இயல்பாகத் தோன்றுகிறது. பிரிவுகளால் நமக்கு எந்தப் பிரச்சனையும் கிடையாது. பிரிவுகளுக்குள் பாகுபாடுகள் வரும்போதுதான் அது நமக்குப் பிரச்சனையாகிறது.

புத்த மதத்தில் பிரிவுகள் உள்ளது. அவை இயல்பான பிரிவுகள். உதாரணத்திற்கு, போதி தர்மர் இங்கிருந்து சீனா சென்று புத்த மதத்தைப் பரப்புகிறார். அவருடைய பரப்புரையால் புத்த மதத்திற்கு மாறியவர்கள் ‘ஷையோலின்’ என்கிற ஒரு பிரிவை இயல்பாக உருவக்குகிறார்கள். இலங்கைக்கு வேறு ஒரு பிக்கு போகிறார், அவருடைய பரப்புரையை ஏற்றுக்கொண்டவர்கள் அங்கு வேறு ஒரு பிரிவாகிறார்கள். ஆனால் இந்தப் பிரிவுகளுக்குள் எந்தவிதமான சண்டையோ, முரண்பாடுகளோ, அடிதடியோ நடப்பதில்லை. ஷியா - சன்னி பிரிவுகளுக்கு இடையிலான போர் போன்ற முரண்பாடுகள் புத்த மதப் பிரிவுகளுக்கு இடையில் எங்கும் இல்லை.

நாங்கள் முன்வைக்கும் புத்தமதத்தை ‘நவயனா’ என்கிற பெயரில் அழைக்கிறோம். டாக்டர் அம்பேத்கர்தான் இதை ஏற்படுத்தியவர். மஹாயானா, ஹீனயானா என்று இரண்டு பிரிவுகள் ஏற்கனவே இருக்கிறது. டாக்டர் அம்பேத்கர் ‘நவயனா’ என்பதை இவையிரண்டும் அல்லாத புதிய ஒன்றாக அறிவித்திருக்கிறார். அதற்கு முக்கியக் காரணம், அந்த இரண்டு பிரிவுகளின் மீது ஏதாவது பிரச்சனை வந்தால் அது இந்த நவயனா பவுத்தத்தைப் பின்பற்றுபவர்களைப் பாதித்துவிடக்கூடாது என்பதுதான்.

நவயனா பவுத்தத்திற்கு என்று டாக்டர் அம்பேத்கர் தனியாக ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார். புத்தமும் தம்மமும் (Buddha and his Dhamma) என்பது அதன் பெயர். இதற்கான ஆராய்ச்சிக்காகவே அவர் பாலி மொழியெல்லாம் கற்றுக்கொண்டார். அதில் முக்கியமாக என்ன சொல்லியிருக்கிறார் என்றால், எதிர்காலத்தில் புத்தமதத்தை யார்வேண்டுமானாலும் இந்தியாவில் மீண்டும் சிதைத்துவிடமுடியும். அப்படி அந்தச் சிதைவில் இருந்து காப்பாற்றுவதற்காக, இந்தப் பிரிவை உருவாக்கி, இந்தப் பிரிவின் மதப் புத்தகம் என்பது ‘புத்தமும் தம்மமும்’ என்பதுதான், வேறு எதையும் பின்பற்றதாதீர்கள் என்று டாக்டர் அம்பேத்கர் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.

பிற்காலத்தில் பார்ப்பனர்களாலோ அல்லது வெளிநாட்டுப் படையெடுப்பின் காரணமாகவோ அல்லது வேறு ஏதோ ஒரு காரணத்தினாலோ இதில் ஒரு திரிபு ஏற்பட்டு, இந்தப் புத்தமதமே வீணாகிவிடக்கூடாது, இந்தியாவில் இந்தக் குறிப்பிட்டப் பிரிவினர் பாதிப்புக்கு உள்ளாகிவிடக்கூடாது என்பதற்காக நவயனா என்கிற புதிய பிரிவினை அம்பேத்கர் உருவாக்கினார். மற்ற பிரிவினருடன் வேறு எந்த முரண்பாட்டின் காரணமாகவும் இது உருவாக்கப்படவில்லை.

பெளத்த மதம் பரவலாகப் பின்பற்றப்படுகிற சீனா, இலங்கை, பர்மா போன்ற நாடுகளில் பின்பற்றப்படும் பெளத்த மதத்திற்கும், தாங்கள் முன்வைக்கும் பெளத்த மதத்திற்கும் ஏதேனும் வேறுபாடுகள் உள்ளதா?

பெரிய வேறுபாடுகள் எதுவும் இல்லை. ஏற்கனவே பதில் சொன்னதுபோல இது ஒரு தனிப் பிரிவுதான். இந்தியாவில் டாக்டர் அம்பேத்கர் முன்வைத்த அரசியல்ரீதியான காரணங்களுக்காக புத்தமதத்தைத் தழுவியவர்கள் என்கிற அடையாளத்திற்காக ‘நவயனா’ என்கிற ஒன்று ஏற்படுத்தப் பட்டிருகிறது.

நடைமுறையில் புத்தமதத்தை பின்பற்றுகிற வழிமுறைகளில் ஏதும் வேறுபாடுகள் கிடையாதா?

உண்மையில், புத்த மதத்தில் நீங்கள் நினைப்பது போன்ற பெரிய வழிமுறைகள் எதுவும் கிடையாது. புத்தமதம் பற்றி எளிமையாகக் கூறுவதென்றால், எது சரியானதோ, எது பகுத்தறிவுக்கு உட்பட்டதோ, எது அறிவியல்பூர்வமானதோ அதை ஏற்றுக்கொண்டு பின்பற்றுங்கள் என்பதுதான். இதுதவிர பஞ்சசீலக் கொள்கை என்று சொல்லப்படுகிற ஐந்து கொள்கைகள் உள்ளன. அவை, திருடாதே, பொய்சொல்லாதே, முறையற்ற காமம் கொள்ளாதே, மது அருந்தாதே, கொல்லாமை ஆகிய ஐந்து கொள்கைகள்.

பவுத்தத்தின் அடிப்படைக் கருத்து என்பது, ஒரு மனிதன் அவனுடைய அறிவை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். அவனால் அவனுக்கும் மற்றவர்களுக்கும் எந்தத் துன்பமும் வரக்கூடாது. சமூகத்தில் மனிதர்களிடையே வெறுப்புகள் ஏதுமற்ற சுமூக உறவு நிலவவேண்டும்.

தமிழர்களிடையே புத்தமதம் குறித்துப் பேசும்போது, இலங்கையில் உள்ள புத்தமதம் குறித்தும், அங்குள்ள புத்தபிக்குகள் குறித்தும் நாம் பேசவேண்டியிருக்கிறது. இலங்கை இனபிரச்சனையில் அங்குள்ள புத்தமதமும் புத்த பிக்குகளும் பெரும் பாலும், சிங்கள இனவாதப் போக்கிற்கு ஆதரவாகவே இருந்திருப்பதாக நாம் பார்க்கிறோம். இது குறித்து உங்களுடைய கருத்து என்ன?

இலங்கை இனப் பிரச்சனையை இந்தியாவில் உள்ள பட்டியலின மக்களுடைய அரசியலோடு இணைத்துப் பேசுவது ஒரு பெரிய மோசடி. மனித வரலாற்றில், அதாவது மனித இனம் தோன்றி வாழத்தொடங்கிய காலத்தில் இருந்து இன்றைக்கு வரைக்கும், தோராயமாக ஐயாயிரம் போர்கள் இதுவரை நடந்திருக்கிறது. இந்தப் போர்களில் பெரும்பாலான போர்களுக்கு ஒரு மத அடிப்படை இருக்கிறது. ஒரே மதத்தைச் சேர்ந்தவர்களுக்குள்ளேயும் போர்கள் நடந்திருக்கிறது. இப்படி நடந்த ஐயாயிரம் போர்களில், இந்தக் குறிப்பிட்ட இலங்கை இனப் பிரச்சனையை ஒரு குறிப்பிட்ட மதத்துடன் இணைத்துப்பார்ப்பது என்பது ஒரு மோசடி. முதலில் இது ஒரு இனப்பிரச்சனை. அதை மதத்துடன் இணைத்துப் பார்ப்பது தவறு.

இரண்டாவதாக, அப்படியே இந்தப் பிரச்சனையை மதத்துடன் இணைத்துப் பார்ப்பவர்களிடம் எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது. நீங்கள் சிங்களவர்களை பவுத்தர்களாகப் பார்க்கிறீர்கள் என்றால், தமிழர்களை இந்துக்களாகதான் பார்க்கிறீர்களா? நீங்கள் சிங்களவர்களை சிங்கள மொழி பேசுகிறவர் களாகப் பார்த்தால்தான், தமிழர்களைத் தமிழ்மொழி பேசுகிறவர்களாகப் பார்க்கமுடியும். சிங்களவர் களுக்கு ஒரு அளவுகோளும் தமிழர்களுக்கு வேறொரு அளவுகோளும் வைத்துக் கொள்ளமுடியாது.

மூன்றாவது விசயம்தான் ரொம்பவும் முக்கியமானது. அதைதான் நான் ஆற்றாமையோடு பதிவு செய்ய விரும்புகிறேன். இந்த இலங்கை இனப்பிரச்சனை என்பதே ஏறத்தாழ 35 அல்லது 50 ஆண்டுகளாக இருக்குமா? எவ்வளவு பேருடைய பிரச்சனை? தோராயமாக ஒரு 25 அல்லது 50 லட்சம் தமிழர்களுடைய பிரச்சனையாக இருக்குமா?. ஆனால் இந்தியாவில் உள்ள பட்டியல் சாதியினருடைய பிரச்சனை என்பது 1800 வருடகாலப் பிரச்சனை 35 கோடி மக்களுடைய பிரச்சனை. அதாவது, 1800 வருடகால 35 கோடி மக்களுடைய பிரச்சனை என்பது அளவிலும் அமைவிலும் (Quantity and Quality) மிகப் பெரியது. இதை இலங்கை இனப்பிரச்சனையோடு ஒப்பிடவே முடியாது. நியாயமான எவர் ஒருவரும் இந்திய தலித் மக்களுடைய பிரச்சனையையும் இலங்கை இனப்பிரச்சனையையும் ஒப்பிடவே மாட்டார்கள்.

இந்திய தலித் மக்களுடைய பிரச்சனையோடு ஒப்பிடும்போதும் இலங்கை இனப்பிரச்சனை என்பது Negligible அதாவது புறக்கணிக்கத்தக்கது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தீண்டத்தகாதவரும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் தீண்டமையால் பாதிக்கப்படுகிறான். பல இடங்களில் அதைச் சொல்ல முடிகிறது, பல இடங்களில் அது சொல்லவே முடியாத நவீன தீண்டாமையாக இருக்கிறது. இந்த 35 கோடி மக்களுடைய, 1800 ஆண்டுகளாக இருக்கிற பிரச்சனைக்கு டாக்டர் அம்பேத்கர் தன் வாழ்நாளையே அர்பணித்து ஒரு தீர்வை முன்மொழிகிறார்.

இது மொழிகளைக் கடந்த ஒரு பிரச்சனை. தமிழ்த்தேசியம் என்பதெல்லாம் இதற்குள் வரவே வராது. ஒரு மனிதர் இதற்காக அராய்ந்து ஒரு தீர்வை முன்வைக்கிறார். அதற்கு வலுவான பல காரணங்களும் இருக்கிறது. வரலாற்றுரீதியாகப் பார்த்தால்கூட நாங்கள் பவுத்தர்கள்தான் என்கிற காரணம் உட்பட.

அப்படியிருக்கும் போது, இலங்கைப் பிரச்சனையை நாங்கள் குறைத்து மதிப்பிடுகிறோம் என்று நினைக்க வேண்டாம். இலங்கை என்கிற சின்ன நாட்டில் அதிகப்பட்சம் ஒரு 50 லட்சம் மக்களுடைய 50 ஆண்டுகாலப் பிரச்சனையோடு ஒப்பிட்டு, எங்களுடைய முழுமையான விடுதலையையே மறுக்கிறீர்கள் என்பது ஒரு மிகப் பெரிய அநியாயம் என்று நான் சொல்வேன். இன்னும்கூடக் கடுமையான வார்த்தைகளை இங்கு நான் பயன்படுத்த விரும்புகிறேன்.

பெளத்த மதத்திற்கான வேதநூல் அல்லது புனித நூல் என்பது என்ன? பெளத்த மதத்தின் இறைக் கோட்பாடு என்ன? வழிபாட்டு முறைகள் யாவை? மதவிழாக்கள் / பண்டிகைகள் என்பவை என்னென்ன? அவற்றில் பின்பற்ற வேண்டிய சடங்குகள் என்னென்ன?

வேதநூல் என்றோ புனிதநூல் என்றோ எதுவும் கிடையாது. வழிகாட்டு நூல் என்று உள்ளது. அது டாக்டர் அம்பேத்கர் எழுதிய ‘புத்தமும் தம்மமும்.’ தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் பெரியார்தாசன். பெளத்தத்தில் புனிதம் என்கிற கருத்தாக்கமே கிடையாது.

இறைக்கோட்பாடு என்றால், பௌத்தம் அடிப்படையில் கடவுள் மறுப்பை முதன்மையான கருத்தாக்கமாகக் கொண்ட ஒரு மதம். இன்னும் சரியாகப் பௌத்தர்களுடைய மொழியில் சொல்வதென்றால், Agnostic என்று சொல்லவேண்டும். அதாவது கடவுள் உண்டு, இல்லை என்பது குறித்துக் கவலையில்லாதவர்கள் என்று பொருள்.

ஏன் கவலையில்லாதவர்கள் என்பதற்குக் குறிப்பிடத்தகுந்த காரணம் உள்ளது. நாளைக்கே கடவுள் வரலாம், அதற்கான வாய்ப்புகளையும் நாங்கள் மறுக்கவில்லை. இதுவரை வரவில்லை, வந்ததாக யாரும் நிருபிக்கவில்லை. இப்படிப் பார்ப்பதுதான் ஒரு அறிவியல்பூர்வமான பார்வையாகவும்கூட இருக்கும். அதாவது எதையும் ஏற்பதும் மறுப்பதும் அறிவியல் அனுகுமுறைகிடையாது. எதையும் ஆராய வேண்டும். புத்தமதமும் அதைதான் வலியுறுத்துகிறது. கடவுள் இருக்கிறார், இல்லை என்பது குறித்து எங்களுக்குக் கவலையில்லை. யாராவது நிருபிக்கத் தயாராக இருந்தால் நிருபியுங்கள். இதுவரை யாரும் நிருபிக்கவில்லை அதனால் இதுவரை நாங்கள் நம்பவில்லை .

கடவுளை மறுத்ததன் மூலமாக அவருடைய அவதாரங்களை மறுக்கிறோம். ஆசி பெற்றவர்கள், புனிதர்கள் போன்றவற்றை மறுக்கிறோம். உருவ வழிபாட்டை மறுக்கிறோம். கடவுளுக்குப் பலியிடுவதை மறுக்கிறோம். யாகம் வளர்ப்பது போன்ற மூடநம்பிக்கைகளை மறுக்கிறோம். பகுத்தறிவையும், மனிதன் தன்னுடைய அதிகபட்ச அறிவை பயன்படுத்தவேண்டும் என்பதைதான் வலியுறுத்துகிறோம்.

வாழ்வியல் என்று பார்த்தால், புத்த மதரீதியான வாழ்வியல் என்று தனியாக எதுவும் இல்லை. புத்தர் படத்திற்கு மலர் தூவுவது போன்ற நிகழ்வுகள் இருக்கிறது. அதை நீங்கள் பெரியார் சிலைக்கு மாலை போடுவது போன்ற ஒரு நிகழ்வாகப் புரிந்துக்கொள்ளவேண்டியதுதான். எங்களுடைய மதமாற்ற நிகழ்வு நடந்த போதுகூட மூன்று புத்த பிக்குகள் வந்திருந்தனர்.

அதில் ஒருவர் வெளிநாட்டில் இருந்துகூட வந்திருந்தார். அவர்கள் அனைவருமே திரும்பத் திரும்ப நான்கைந்து முறை சொன்ன செய்தி என்னவென்றால், புத்தர் கடவுள் இல்லை, புத்தர் கடவுள் இருக்கிறார் என்று சொல்லவும் இல்லை, புத்தர் கடவுளுடைய தூதுவரும் இல்லை. இந்த மதத்தின் பிக்குவாக இருப்பவர்களே இதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி சொல்கிறார்கள். இது இந்துமதம் போன்ற ஒன்றாக மாறிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள். எனவே இதில் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பில்லை.

பண்டிகைகள் என்று பார்த்தால், இந்தியாவில் நவயனா பெளத்தர்கள் கொண்டாடும் பண்டிகைகள் என்று சில உண்டு. ‘புத்த பூர்ணிமா’, ‘அம்பேத்கர் பிறந்த நாள்’, ‘அம்பேத்கர் பெளத்தம் தழுவிய நாள்’ (அக்டோபர் 14) என்பவை உள்ளிட்ட சில பண்டிகைகள் உண்டு.

தலித்துகள் எந்த மதத்தையும் ஏற்றுக்கொள்ளாத நாத்திகர்களாக இருக்கலாமே? நாத்திகர்களாக இருப்பதைவிடப் புத்த மதத்திற்கு மாறுவதை எப்படி ஒரு முழுமையான தீர்வாக நீங்கள் சொல்கிறீர்கள்?

இந்தியாவில் இருக்கும் பட்டியல் சாதியினருக்கு நாத்திகராக இருப்பது உதவுமா என்றால், ஒரு சதவிகிதம்கூட உதவாது. நான் தனிப்பட்ட முறையில் என்னுடைய வாழ்க்கையில் கடந்த 10 வருடங்களாக முழு நாத்திகராக இருக்கிறேன். நூறு சதவிகிதம் கடவுள் இல்லை என்பதை நம்புகிறேன். பல ஆய்வுகளைப் படித்து, பல தத்துவங்களைப் படித்து கடவுளை மறுத்து பத்து வருடங்களாக வாழ்கிறேன். ஆனால் தீண்டாமை ஒழிப்பில் இது எந்த வகையிலும் எனக்கு உதவவில்லை.

இந்தியாவில் உள்ள எந்தப் பட்டியல் சாதியினருக்கும் உதவாது. ஏன் உதவாது என்றால், நீங்கள் நாத்திகராக இருந்தால் இந்து நாத்திகர், முஸ்லிம் நாத்திகர், கிருத்தவ நாத்திகர் என்கிற அடையாளம்தான் கிடைக்கும். சவுதி அரேபியாவில்கூட மூன்று சதவிகிதம் நாத்திகர்கள் இருக்கிறார்களாம். அந்த அடையாளம் எந்த வகையிலும் உதவாது.

எது தீண்டாமையை ஒழிக்கவல்லது என்றால், நீங்கள் வேறு ஒரு மதக்காரராக உங்களை அடையாளப்படுத்திக்கொள்வதுதான் தீண்டாமையை ஒழிக்கவல்லது. கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது ஒரு தீண்டத்தகாதவருக்கு ஒரு கேள்வியே கிடையாது. அவருடைய வாழ்கையில் அந்தக் கேள்வியே கிடையாது அது நோக்கமும் கிடையாது. இந்தியாவில் ஒரு தீண்டத்தகாதவருக்கு அவருடைய வாழ்க்கையில் நோக்கம் என்னவென்றால், தீண்டாமையில் இருந்து வெளியே வருவதுதான் முதல்நோக்கம், கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது இரண்டாவதுதான். இந்த அடிப்படையில் இருந்து பார்க்கும்போது, நீங்கள் இந்து மதத்தைச் சார்ந்தவர் அல்ல, வேறு மதத்தைச் சார்ந்தவர் என்று நிறுவும்போதுதான், உங்கள் மீது உள்ள தீண்டாமை மறையும். அது எப்படி மறையும் என்பது குறித்து முந்தைய பதில்களில் பேசியிருக்கிறோம்.

அதேசமயம் இந்தியாவில் உள்ள பிற்படுத்தப்பட்டவர்கள் நாத்திகர்களாக இருக்கலாம், இருக்கவேண்டும். அதை நான் வரவேற்கிறேன். அதுதான் காலத்தின் தேவையும். தந்தை பெரியாரை நாம் மதிக்கிறதுக்குக் காரணமும் அதுதான். ஏனென்றால் பிற்படுத்தப்பட்டவருக்கு இந்துமதத்தைப் புணரமைக்கவேண்டிய எந்தத் தேவையும் கிடையாது. தங்களுக்குக் கீழே தீண்டத்தகாதவர் என்கிற ஒருவர் இருக்கும்போது, அந்த உளவியல் மகிழ்ச்சியிலேயே தங்களை ஆண்டபரம்பரை என்று சொல்லிக்கொண்டு வாழ முடியும்.

அதையெல்லாம் அவர் மறுத்திருக்கிறார். தான் ஆண்டபரம்பரை இல்லை, அனைவரும் சமம் என்று சொல்லியிருக்கிறார். பிற்படுத்தப்பட்டவன் நாத்திகராக இருக்கமுடியும், இருக்கவேண்டும், இந்துமதத்தைச் சீர்திருத்தும் வேலையை அவன் செய்யவேண்டும், அதில் அவர்கள் வெற்றிபெற முடியுமா முடியாதா என்பது வேறு பிரச்சனை. வெற்றிபெற முடியாது என்று நாங்கள் கருதுகிறோம். ஆனால் அந்தச் சீர்திருத்த நடவடிக்கைகளைப் பிற்படுத்தப்பட்டவர்களால்தான் செய்யமுடியும், பட்டியல் சமூகத்தினரால் அது முடியாது, அது எங்களுக்குப் பயனற்றது.

பெரியார் பெளத்தக் கருத்தியலுக்கு ஆதரவாளர்தான், அதேசமயம் ஒரு காலக்கட்டத்தில் தீண்டாமைக் கொடுமைகளில் இருந்து விடுபடுவதற்கு, முஸ்லிம் மதத்திற்குக் கூட்டம் கூட்டமாக மாறுங்கள் என்று அவர் சொல்லியிருக்கிறார். தீண்டாமை ஒழிப்பு என்கிற ஒரு காரணத்திற்காக முஸ்லிம் மதத்திற்கு மாறுவதை அவர் ஆதரித்து வரவேற்றுப் பேசியிருக்கிறார். தலித்துகள் முஸ்லிம் மதத்திற்கு மாறுவது குறித்து உங்கள் கருத்து என்ன?

மதமாற்றம் என்கிற கருத்தளவில், பட்டியலின மக்கள் எந்த மதத்திற்கு மாறிக்கொள்வதையும் நாங்கள் வரவேற்கிறோம். அதை நாங்கள் தடுப்பது கிடையாது. ஆனால் அதேசமயத்தில், இதை இன்னும் ரொம்பவும் கூர்மைபடுத்தி டாக்டர் அம்பேத்கர் கொடுத்த அறிவின்படி யோசிக்கும்போது, புத்தமதம் தான் இந்த நாட்டிற்குச் சரியானதாக இருக்கமுடியும். இரண்டாவதாக, நீண்டகால நோக்கில் பார்க்கும்போது, உலகம் முழுக்கக் கடவுள் மறுப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக ஐரோப்பாவிலும், ஸ்கேண்டி நேவியன் நாடுகளிலும் அதிகரிக்கிறது.

ஏன் அங்குக் கடவுள் மறுப்பாளர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டிருக்கிறது என்றால், அங்கு மனித வளர்ச்சிக் குறியீடு (Human development index) அதிகமாக இருகிறது. அதாவது அங்கே பெரும்பாலானவர்கள் பொருளாதாரத்திலும், வாழ்க்கை தேவைகளிலும் தன்னிறைவை அடைந்து விட்டார்கள். இயல்பாகவே அவர்களுக்குக் கடவுள் தேவையில்லாதவராகிவிட்டார். அதுபோல, உலகம் முழுவதும் மனித இனம் ஒரு காலத்தில் நாத்திகத்தையும் பகுத்தறிவையும் நோக்கி போகத்தான் போகிறது.

அப்படி ஒரு சூழல் வரும்போது, அப்போது அந்த மதம் அதை ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கவேண்டும். பகுத்தறிவை ஏற்றுக்கொண்ட, அறிவியலை ஏற்றுக்கொண்ட, மூடநம்பிக்கைகளை மறுக்கிற ஒரு மதமாக இருக்கவேண்டும். அப்படி ஒரு தொலைநோக்குச் சிந்தனையில், டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் அறிவாற்றலின்படி யோசிக்கும்போது, புத்தமதத்தைதான் நாங்கள் வலியுறுத்து கிறோம். ஆனால், தீண்டாமை ஒழிப்பிற்கு மதமாற்றம் உதவும் என்கிற வகையில் ஒரு தலித் எந்த மதத்திற்கு மாறுவதையும் நாங்கள் தடுப்பதுகிடையாது.

அம்பேத்கர் வழிகாட்டியபடி புத்தமதத்தைப் பின்பற்றிய இலட்சக்கணக்கான மக்கள் இந்துமதப் பண்பாடுகளுக்கு எதிராக, மாற்றுப் பண்பாட்டுப் பழக்க வழக்கங்களை வாழ்வியலாகப் பின்பற்றி வருகிறார்களா?

நிச்சயமாகப் பின்பற்றி வருகிறார்கள். அம்பேத்கர் புத்தமதத்தைத் தழுவியபோது இலட்சக் கணக்கானவர்கள் அவருடன் புத்தமதத்தைத் தழுவினார்கள். ஆனால் 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி பார்த்தால், 92 லட்சம்பேர் இந்தியாவில் புத்தமதத்தைப் பின்பற்றுகிறவர்களாக இருக்கிறார்கள். இவர்களில் ஆகப்பெரும் பான்மையானவர்கள் அம்பேத்கரை பின் தொடர்ந்து புத்த மதத்திற்கு மாறியவர்கள்தான். அவர்களில் பெரும்பாலானோர் அம்பேத்கரின் சொந்த மாநிலமான மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள்தான். அவர்கள் அன்றாட வாழ்க்கையில் முழுக்கவே பெளத்தர் களாகவே வாழ்கிறார்கள். மகாராஷ்டிராவில் பெளத்தர்கள் சாதி இந்துக்களுக்குக் கடுமையான சவாலை தினந்தோறும் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள் .

அம்பேத்கர் காட்டிய பெளத்தத்தை வாழ்வியலாக ஏற்ற மக்களை, இந்து மதம் விதித்துள்ள அனைத்து பண்பாட்டு நடவடிக்கைகளுக்கும் மாற்றான பண்பாட்டு நடவடிக்கைகளைக் கடைபிடிக்கச்செய்ய, அம்பேத்கருக்குப் பிறகு இருந்த அம்பேத்கரிஸ்ட்டுக்கள் மற்றும் அம்பேத்கர்வழி பெளத்தமதத் தலைமைகள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் என்ன?

டாக்டர் அம்பேத்கர் நம்மால் கற்பனைசெய்ய முடியாத அளவுக்கு ஒரு அறிவாளி அவர். அவருடைய வாழ்நாளில் 25,000 புத்தகங்களை அவர் படித்திருக்கிறார். அவரால் கைபட எழுதப்பட்டது மட்டுமே 40,000 பக்கங்கள் அளவுக்கு இருக்கிறது. அவர் மறைந்த பிறகு அவர் எழுத்துக்களை புத்தகமாகக் கொண்டுவருவதற்கு இருபது வருடங்கள் ஆகிவிட்டது. தமிழில் அவற்றைக் கொண்டு வருவதற்கு அதன்பிறகு ஒரு இருபது வருடங்கள் ஆகிவிட்டது.

அதற்கு முன்னால் வரை யாரும் இங்கு அம்பேத்கரைப் பெரிதாகப் படிக்கவில்லை. அதுவரை அம்பேத்கருக்குச் சிலை வைத்து அவரைத் தலைவராக ஏற்றுக்கொண்டவர்கள் நிறைய உண்டு. ஆனால் கருத்துகள் பெரிதாகப் போய்ச் சேரவில்லை. ஆனால் 1991 க்குப் பிறகுதான் தமிழில் புத்தகங்கள் வருகிறது. 91க்கு பிறகு அதை முழுமையாகப் படித்துப் புரிந்துக்கொண்டவர்கள் என்பதும் குறைவாகதான் இருக்கிறார்கள்.

இந்தக் கால அளவே 2016 வரை நம்மை இழுத்துக்கொண்டுவந்துவிட்டது. இதில் யாரும் கருத்துப் பரவாமல் தடுத்துவிட்டார்கள் என்றோ, உதவாத கருத்து என்றோ, அம்பேத்கர் தவறு செய்துவிட்டார் என்றோ இவை பரவாமல் இல்லை. முழுமையாக இந்தக் கருத்துகள் போய்ச் சேருவதற்கு இன்னும் 200 வருடங்கள்கூட ஆகலாம்.

வழக்கமான மற்ற இயக்கங்களைப்போலதான் இதையும் பரவலாக முன்னெடுக்கவேண்டும். பெளத்த மதமாற்றம் என்பது ஒரு அரசியல் இயக்கம்தான். மத இயக்கம் கிடையாது. தலித் அரசியல் கட்சிகளும் இதை முன்னெடுக்க வேண்டும். அன்னை மாயாவதி இதை முன்னெடுக்கிறார். புத்தமத மாநாடுகளை நடத்துகிறார். அவருடைய கட்சியினர் பலர் மதம் மாறிக்கொண்டிருக்கிறார்கள். அவரே புத்த மதத்திற்கு மாறப்போவதாக அறிவித்திருக்கிறார்.

அரசியல் தலைவர்கள் முன்னெடுக்கிறார்களோ இல்லையோ, மக்கள் தன்னெழுச்சியாக இதை முன்னெடுப்பார்கள் என்பதுதான் டாக்டர் அம்பேத்கரின் வெற்றி. நாங்கள் 47 மருத்துவர்கள் பெளத்தம் தழுவியது எந்த அரசியல் கட்சித் தலைவர்களையும் அழைக்காமல் அவர்களுடைய வழிகாட்டுதல் இல்லாமல், தன்னெழுச்சியாக நாங்களே அம்பேத்கரை படித்து விவாதித்து முடிவெடுத்து நாங்களே குழுவாக மதம் மாறியதுதான். இது மாதிரியான நிகழ்வுகள் தொடர்ந்து நடக்கும்.

தாழ்த்தப்பட்ட மக்கள் இஸ்லாமுக்கோ, கிறிஸ்தவத்திற்கோ மாறினாலும் அந்த மதங்களிலும் தீண்டாமைக் கொடுமைகள் தீர்ந்தபாடில்லை. இந்து மத நோயின் தாக்கத்தால், இந்தியாவில் மட்டும் மேற்கண்ட மதங்களிலும் ஜாதியப் பாகுபாடுகள் முற்றாக ஒழியவில்லை. அதுபோலப் புத்த மதத்திற்கு மாறிய தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை என்ன? அவர்களுக்குத் தீண்டாமை வன்கொடுமைகள் நடப்பதில்லையா? ஜாதியப் பாகுபாடுகள் இருப்பதில்லையா?

முதலில் இஸ்லாம் பற்றிப் பேசுவோம். இஸ்லாம் மதத்துக்கு மாறிய தலித்துகள் தீண்டாமையை அனுபவிக்கிறார்கள் என்பதை நான் நேரடியாக மறுக்கிறேன். எங்காவது மிக அரிதாக நடக்கலாம். ஆனால் அது எந்தக் காலத்திலும் முஸ்லிம் மதத்தில் நிலைபெறாது. அவர்கள் ஜாதி என்றில்லை, நாடு, இனம் போன்றவற்றையே கடந்துவிடுகிறார்கள். அவர்களுடைய மதம் சகோதரத்துவத்தை வலியுறுத்துகிறது. அதனால் அங்குத் தீண்டாமை இருக்கிறது என்பதை நான் முற்றிலும் மறுக்கிறேன்.

இரண்டாவதாக, கிருத்துவ மதம் குறித்துப் பார்ப்போம். கிருத்துவ மதம் என்பது 1800க்குப் பிறகுதான் இந்தியாவில் பரவலாக வளர்ந்திருக்கிறது. இந்துக்களாக இருந்து கிருத்துவ மதத்திற்கு மாறியவர்கள், இன்னும் அங்குபோய் இந்து பழக்க வழக்கத்தைப் பின்பற்றுகிறார்கள். கிருத்துவ மதத்தில் தீண்டாமை நிலைபெற முடியுமா என்றால், முடியாது. ஏனென்றால் அதற்கு அங்கு ஒரு மதக் கட்டமைப்பு இல்லை. பைபிளிலும் அதற்கு இடமில்லை.

எடுத்துக்காட்டாக, ஒரு சர்ச்சுக்குள் பட்டியல் சாதியினர் செல்ல முடியாத நிலை இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த மக்கள் போய் தங்களை அனுமதிக்கச் சொல்லி முறையிடுகிறார்கள், இங்கு முறையிட்டு அனுமதி பெற முடியவில்லை என்றால் போப்பாண்டவர் வரை சென்று முறையிடுவார்கள். போப் அனுமதிக்கச் சொல்லிதான் ஆணையிடமுடியும், ஏனென்றால் தீண்டாமைக்கு ஆதரவான மதக் கட்டமைப்பு அவர்களிடம் இல்லை. எனவே,காலப்போக்கில் இதெல்லாம் அங்குத் தகர்ந்தேயாகவேண்டும்.

இரண்டாவதாக, போப்பாண்டவருக்கு அடுத்த நிலைக்குவரை பட்டியல் சாதியை சேர்ந்த ஒருவர் போயிருக்கிறார். மூன்றாவதாக முக்கியமான ஒரு விசயம், முத்துகுமார் என்று ஒரு பட்டியல் சாதியை சேர்ந்தவர் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். முத்துகுமார் மதம்மாறி மைக்கேல் அகஸ்டியன் ஆகிவிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். கிருத்துவ மதத்திற்குள் அவர் ஒரு தலித் கிருஸ்டியனாக அறியப்படலாம். கிருத்துவ மதத்திற்குள் அவருக்குப் பிரச்சனை இருக்கலாம், நான் அதை மறுக்க வில்லை. ஆனால் இந்துக்கள் அவரைத் தீண்டத்தகாதவனாகப் பார்க்கமுடியாது.

அதுபோலவே, புத்தமதத்திற்குள்ளே தீண்டாமைக்கு இடமே கிடையாது. ஆனால் புத்தமதத்திற்கு மாறியவர் மீது இந்துக்கள் நடத்தும் வன்கொடுமைகள் சிலகாலம் தொடரலாம். அது இரண்டு மதங்களுக்கு இடையிலான பிரச்சனையாகதான் பார்க்கப்படவேண்டும். ஒரு மதத்தினர் இன்னொரு மதத்தினர் மீது நடத்தும் வன்முறையாகதான் அதை பார்க்கவேண்டும்.

எதிர்காலத்தில், பண்பாட்டுத் தளத்தில், இந்து மதத்திற்கு எதிராகத் தங்களது நடவடிக்கைகள், செயல்பாடுகள், திட்டங்கள் என்ன?

இந்து மதத்திற்கு எதிரான நடவடிக்கை என்பது இந்த இடத்தில் சரியான வார்த்தை கிடையாது. இந்து மதத்தில் இருந்து வெளியேறி, பூர்வீக பெளத்த கலாச்சாரமான பகுத்தறிவு கலாச்சாரத்தைக் கட்டமைப்பது என்பதுதான் நோக்கம்.

புத்த மதத்திற்கு மாறுவதால் இடஒதுக்கீடு உரிமைகளுக்கு ஆபத்து வருமா?

ஆபத்து எதுவும் வராது. சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் ஆட்சியில் இருக்கும்போது ஒரு சட்டத்திருத்தம் கொண்டுவந்திருக்கிறார். அதாவது, சீக்கிய மதத்திற்கும், புத்த மதத்திற்கும் ஒரு பட்டியல் சாதியினர் மாறினாலும், அவருக்கு உரிய பட்டியல் சாதியினருக்கான இடஒதுக்கீடு உரிமைகள் தொடரும் என்கிற சட்டதிருத்தம் அது.

- தொடரும்