இந்துமத, ஜாதி, கடவுள் வழிபாடுகள், குலதெய்வ வழிபாடுகள், கிராமத் திருவிழாக்கள் ஆகிய அனைத்தையும் புறக்கணித்து வாழும் திருப்பூர் தோழர்கள் பிரியா - சண்முகம் அவர்களுடன் ஓர் நேர்காணல்.

priya shanmugam 350தோழர் சண்முகத்திடம்:

என்னுடைய பெயர் சண்முகம். நான் பிறந்து வளர்ந்தது திருப்பூர். மாஸ்கோ நகரில் வசிக்கிறேன். எனது துணைவியார் ப்ரியா. எங்கள் குழந்தையின் பெயர் புரட்சிக்கொடி. எங்க தாத்தாவின் பூர்வீகம் தஞ்சாவூர். பாட்டி உடைய பூர்வீகம் சேலம்.

எங்க அப்பா பிறந்த ஊர் சேலம் சீலநாயக்கன்பட்டி. என்னுடைய அம்மா பெயர் ஜெயா, அப்பா பெயர் மாணிக்கம். எங்க அப்பா, அம்மா 45 ஆண்டுகளுக்கு முன்பே தொழில் சம்பந்தமாகத் திருப்பூருக்குக் குடிப்பெயர்ந்து வந்தார்கள்.

நமது பெரியவர்கள் ‘குலதெய்வத்தைக் கும்பிட்டால்தான் பல தெய்வமும் நல்ல வழியைக் காட்டும்’ என்று சொல்கிறார்கள்? இது பற்றி உங்கள் கருத்து?

நான் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்தவன். எங்களது குலதெய்வம் அய்யனார். என்னைப் பொறுத்தவரைக்கும் இந்து மதம் அப்படி சொல்லுது. இந்துமதம் உயிர்த் துடிப்போட இருக்கிறதுக்கு குல, கோத்திரங்கள் தான் முதல் படியே.

ஒருகுலத்திற்கு ஒருநீதி சொல்லும்படி மனுநீதிப்படிதான் வாழணும் அப்படின்னு சொல்லித்தான் இந்து மதத்தின் ஆதாரமான மனுதர்மம் சொல்லுது. இந்தக் குலதெய்வத்தினுடைய வழிபாட்டு முறையே சாதியைப் பாதுகாக்கும் முக்கிய இடமாகும்.

நம்மளுடைய உழைக்கும் மக்களிடையே பணத்தை வீண் செலவு செய்வதற்கான விழாக்களாகத் தான் இருக்குது.

அதாவது,சிறு தெய்வமாக இருக்கும் குல தெய்வத்தில் தொடங்கி பெருந்தெய்வம் என்று சொல்ற திருப்பதி, காசி, இராமேஸ்வரம் வரைக்கும் வருடம் முழுவதும் தெய்வ வழிபாடுகளைத் தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறோம்.

ஆனால், எந்த உழைப்பாளியுடைய கஷ்டமும் தீர்ந்ததாக இல்லை. வேலையற்ற சோம்பேறிகளுடைய பழமொழி தான் நம்மள முட்டாள் ஆக்குது.

குலதெய்வ வழிபாட்டுக்கு மாங்கல்ய வரி, குலவரி, குடும்பவரின்னு கேட்டு வந்து இருக்காங்களா? நீங்க வரி கொடுத்து இருக்கீங்களா? கொடுக்காத பட்சத்தில் அவர்கள் எப்படி எடுத்துக்கிட்டாங்க?

நான் பெரியாரிஸ்ட். என்னிடம் இப்படிக் கேட்பதே தவறு. ஆனால் இப்போது நிலைமை இப்படித்தான் உள்ளது. அம்பேத்கரிஸ்ட், பெரியாரிஸ்ட் என்று சொல்லிக் கொள்வோம். ஆனால், நம் சொந்த வாழ்க்கையில் இந்துமதம் சொல்ற எல்லாக் கடமைகளையும் தவறாம செய்றோம்.

ஒரு பெரியார் தொண்டன் அல்லது அம்பேத்கரிஸ்ட் என்றால் அவரிடம் வரி கேட்கவே கூடாது என்ற எண்ணத்தை நாம உருவாக்கல. முஸ்லீமாக உள்ள ஒரு பாய்கிட்ட போய், எந்தக் குலதெய்வம் கும்பிடறதுக்காகவாவது வரி கேப்பாங்களா? அவங்க வேற, இந்துக்கள் வேறன்னு சராசரி மக்களே புரிஞ்சு வச்சிருக்காங்க. ஆனா, நம்மகிட்ட வந்து வரி கேக்குறாங்கன்னா…நாம இன்னும் நம்ம தலைவர்கள் வழிகாட்டின மாதிரி வாழ்ந்து காட்டலைன்னுதானே அர்த்தம். சும்மா வாயில ஜாதிய ஒழிக்கணும்னா அது ஒழிஞ்சிருமா?

என்னைப் பொறுத்தவரைக்கும் குலதெய்வ வழிபாட்டை சுத்தமா மறுத்து வெளியே வந்துட்டேன். அப்பா பிறந்த ஊரான சீலநாயக்கன்பட்டிக்குப் போறதுகூட இல்லை. குறிப்பாக கிராம விழாக்களுக்கும், குலதெய்வ வழிபாடுகளுக்கும் எங்ககிட்ட வரி கேட்டு யாரும் வருவதில்லை. நாங்க திருப்பூர் நகரத்தில வசிக்கிறதால எனக்கு வரித் தொந்தரவுகள் முற்றிலும் இல்லை. ஆனாலும் இந்த மாதிரியான வரிகள் கொடுக்காததால் அந்தந்த கிராமங்களில் வசிக்கும் மக்களுடைய கஷ்டங்களைப் பார்த்து நான் ரொம்ப வேதனைப்பட்டு இருக்கேன்.

அது எப்படின்னா கோவில் கட்டி, குலதெய்வ வழிபாட்டு வரின்னு ஒரு குடுமபத்துக்கு 6000 முதல் 10,000 வரை வசூலிப்பார்கள். இதில் 100 ரூபாய் குறைவாக இருந்தாலும் அதை விழா அன்று மைக் செட்டில் தெரிவிப்பாங்க. அது ரொம்ப ஊர் அறிய நம்மள அவமானப்படுத்துற மாதிரி இருக்கும். எதுக்குடா இந்த அவமானம்னு சொல்லி 100-க்கு 10 ரூபாய் வட்டிக்குக் கூட வாங்கிக் கொடுத்தவங்களை நான் பார்த்து இருக்கேன்.

நம் குலத்தையே காப்பாத்துற கடவுள்னு சொல்றாங்க. ஒரு குலத்துக்காரங்கன்னா அண்ணா, தம்பி, சித்தப்பா, பெரியப்பா, பங்காளிகள் என்று சொல்லுவாங்க.ஆனாலும் கோயில் நிர்வாகமே அவர்களாக இருந்தாலும் நம்மைக் கேவலப்படுத்துவதை அவர்கள் நிறுத்தமாட்டார்கள். சொல்லப்போனால் ஒரு குலத்துக்காரங்க ஒரே கிராமத்துக்குள்ள வசிக்கரவங்களா இருந்தா இன்னும் அடிப்படை வசதிகளுக்குக்கூட தடை விதிப்பாங்க வரி கட்டலையின்னா.

தோழர் நீங்க குலதெய்வ வழிபாடுகள் செய்யறது இல்லை சரி. உங்களுடைய நண்பர்கள் அல்லது உறவினர்களுடைய குலதெய்வ வழிபாடுகளுக்குப் போய் இருக்கீங்களா? ஏதாவது அனுபவம் இருந்தா சொல்லுங்க?

நான் பெரியார் அமைப்புக்கு வருவதற்கு முன்பு, ஜட்டி கம்பனியில வேலை பாத்துட்டு இருக்கும்போது இரண்டு நண்பர்களுடைய  குலதெய்வ வழிபாட்டு கிடா வெட்டு விருந்துக்கு நான் போயிருக்கேன். அந்த விழா நிறைவுல ஒருத்தருக்கு ஒருத்தர் அடிச்சுக்குவாங்க .என்ன காரணமுன்னு பார்த்தா... மொய்ப் பணம் வைக்காத்தாலயும், கறி விருந்துல சரியா கவனிக்காத காரணமா ஒருத்தருக்கு ஒருத்தர் அடிச்சுக்குவாங்க.

உங்களுடைய குழந்தைக்கு முதல் முறையாக மொட்டை அடிச்சது குலதெய்வக் கோயிலிலா?

நான் என்னுடைய குழந்தைக்கு முதல் மொட்டை அடித்தது எந்த ஒரு கோயிலுக்கும் போய் அடிக்கவில்லை. குழந்தை பிறந்து 9 - 11  மாதம் மொட்டை அடிக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருந்தார்கள். குழந்தை பிறந்து 9 மாதம் குழந்தையின் பிறப்பு அழுக்கு என்று சொல்வார்கள். அது பொடுகு போல இருக்கும். அது போக வேண்டுமானால் மொட்டை அடிக்க வேண்டும் என்று சொன்னார்கள். எனக்கு அதிலும் உடன்பாடு இல்லை. அது ஷாம்பு அல்லது அரப்புப் போட்டுக் குளிப்பாட்டினால் போய்விடும்.

வீட்டில் இருக்கும் பெரியவர்களின் வற்புறுத்தல்... சரி அதுதான் காரணம் என்றால் கோயிலுக்கு எதற்குப் போய் அடிக்கணும்? நானும் எனது நண்பரும் இருவரும் எனது குழந்தையை அழைத்துக்கொண்டு அருகில் இருந்த சலூன் கடைக்குச் சென்று மொட்டை அடித்துவிட்டு வந்தோம்.

சலூன் கடையில் மொட்டை அடித்ததால் எதாவது எதிர்ப்பு இருந்ததா?

ஆமாம். எங்க அம்மா, எனது தாய்மாமன் மற்றும் ப்ரியாவின் உறவினர்கள் அனைவரும் என் மீது கோபப்பட்டார்கள். அதற்கு அவர்களுக்கு விளக்கம் அளித்தேன். குழந்தையைக் காரணமாக வைத்து நான் மொய், சீர், சடங்கு விழாக்களைச் செய்வதாக இல்லை. எனது குழந்தைக்கு நல்ல கல்வியும், தற்காப்பையும் கற்றுக் கொடுப்பதே சிறந்தது என்று நினைக்கிறேன் என்றேன்.

உங்களுக்குத் தெரிந்த நண்பர்கள், உறவினர்கள் வெளி மாநிலங்களில், வெளி நாடுகளில் வசிக்கிறார்களா? அவர்கள் குலதெய்வ வழிபாடுகளுக்கு வருகிறார்களா?

அப்படி யாரும் தெரிந்த நண்பர்கள் இல்லை. ஆனாலும் இன்னைக்கு கிராமப்புறங்களில் வசிக்கிற ஒரு குலத்து மக்களில் யாராவது கிறிஸ்தவராக மதம் மாறி இருந்தால்கூட அவர்கள் இன்னும் குலதெய்வ வழிபாடு விழாவிற்கு வரி கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். வணங்கும் தெய்வங்கள் வேறு மதக் கடவுளாக இருந்தாலும் அவர்கள் வரி கொடுப்பதை நிறுத்துவது இல்லை. கோயில் கமிட்டியாரே கூறுவார்கள் நீங்க கோயிலுக்கு வராட்டியும் பரவாயில்லை உங்க குடும்பத்துக்கான வரியைக் கொடுத்துருங்க என்பார்கள். அவர்களும் சரி நமக்கு உறவுக்காரங்க என்று வரியைக் கொடுத்து விடுவார்கள்.

இது எப்படி இருந்தாலும் தற்சமயத்தில்கூட தமிழ் சினிமாவில் கூட நடிகர் ரஜினி நடித்த கபாலி படத்தில் ஒரு காட்சியை வைச்சுஇருப்பாங்க. என்னனா வெளிநாட்டுல போயி வாழ்ந்தாலும் தொழில், கலாச்சாரம் மாறி வாழ்ந்தாலும் நம்ம மதுரைவீரன் குலதெய்வ சாமிக்குப் பொங்கல் வைச்சு, கிடா வெட்டிட்டு வந்தா... எல்லாம் சரியாப்போயிடும்... என்று ஒரு காட்சி வரும்.

நகர மக்கள் குலதெய்வ வழிபாடுகளை மறந்து வாழ்ந்தாலும் இதுபோன்ற திரைப்படக் காட்சிகள் நினைவுபடுத்துகின்றன. எனவே, இதுபோல ஜாதி, மத, கடவுள் வழிபாடுகளைத் தடை செய்வதே சிறந்தது. நமது வாழ்க்கையில் தேவையற்ற பணச்செலவும், சண்டைகளையும் தவிர்க்கலாம்.

தோழர் ப்ரியாவிடம்:

என்னுடைய பெயர் பிரியா.எங்க அப்பா பெயர் மோகன்ராஜ், அம்மா வசந்தா. சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் வல்லம். நாங்க திருப்பூர் மாஸ்கோ நகரில் தற்போது வசிக்கின்றோம்.

உங்களுடைய குலதெய்வம் என்ன? உங்களுடைய குலதெய்வ வழிபாட்டுக்குப் போனதுண்டா? அதன் அனுபவத்தை சொல்லுங்க?

எங்க அப்பாவுடைய குலதெய்வம் மதுரைவீரன். பொதுவா, குலதெய்வ வழிபாடு என்பதே பெண்களைக் கேவலப்படுத்தும் விழாதான். பெண்களை விலக்கி வைக்கும் விழாவாகவே உள்ளது. கோயிலுக்கு வெளியவே நின்று வணங்கும் நிலைதான் உள்ளது. பெண்களே பூஜை செய்து வணங்கும் உரிமை கிடையாது. சில மேற்கு மாவட்டங்களில் பெண்களுக்கும் சரி, தென் மாவட்டங்களில் வசிக்கும் பெண்களுக்கும் சரி அனுமதி கிடையாது.

எங்க தாத்தா சொல்லி இருக்காங்க... கருப்பராயன் சாமி மற்றும் பல சிறு குலதெய்வ வழிபாடுகளிலும் சரி, கிடாய் வெட்டிப் பொங்கல் வைத்து சாப்பிடுவதில்கூட  பெண்களுக்கு அங்கு அனுமதி கிடையாது. அங்கு சமைக்கும் உணவுகளை அங்கேயே சாப்பிட்டு முடித்து விட்டுத்தான் வரணும். இல்லையெனில் கொட்டிவிட்டு வருவார்கள். இந்தக் குலதெய்வ வழிபாட்டுல விருந்து படைக்கிறது கறியும், சாராயமும்தான் பயன்படுத்துவாங்க.

உங்க திருமணத்திற்கு முன்பு நீங்க ஏதாவது கிராமத் திருவிழாவுக்கோ, குலதெய்வ வழிபாட்டுக்கோ போனது உண்டா?

என் திருமணத்திற்கு முன்னால் கிராமத் திருவிழாவுக்குப் போய் இருக்கேன். அப்ப எனக்கு அந்த கிராமத் திருவிழாவில் ஏற்படும் செலவுகளும், அங்கு நடக்கும் பிரச்சனைகளும் பெருசா எடுத்துக்க மாட்டேன். அப்ப கொண்டாட்ட மனநிலையில்தான் இருந்தேன். தோழர் சண்முகத்தைத் திருமணம் செய்ததற்குப் பிறகு இந்த மாதிரி தேவையில்லா விழாக்களும் பெண்களை இழிவாக்க பயன்படுத்தும் பள்ளிகளாக இருக்கிற குலதெய்வ வழிபாடுகளைப் பத்தியும் சொல்லி இருக்கிறார். அதற்குப் பின்னால் நான் யோசித்து, கிராம விழாக்களையும், குலதெய்வ வழிபாடுகளையும் முற்றிலும் விலக்கிவிட்டோம். எங்களுடைய வாழ்க்கையில் சந்தோசமாகத் தான் இருக்கிறோம். கடன் தொல்லைகள் இல்லாமல் சிக்கனமாக சந்தோசமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.