நாம் பல காரணங்களுக்காக, பல நூல்களைப் படித்திருப்போம். பெரியார் எழுதிய, பேசிய தொகுப்புகளையும் படித்திருப்போம். பெரியாரின் எழுத்துக்களைப் படிக்கும்போது, நாம் படிப்பது போன்ற உணர்வு மெல்ல மெல்ல மறைந்து அவர் சொல்லிக்கொண்டிருக்கும் களத்திலேயே நாம் நிற்பதைப் போல உணர்வோம். அந்த அளவுக்கு, சமூகத்தின் அன்றாட நடைமுறை வாழ்க்கையிலிருந்து எடுத்துக் காட்டுகளைக் கூறிக்கொண்டே போவார். மிகப் பெரிய தத்துவ விளக்கங்களைக்கூட நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களின் வாயிலாக - நம் வாழ்க்கையிலேயே நாம் சந்தித்திருக்கும் நிகழ்வுகளின் வாயிலாக எளிமையாகப் புரியவைத்து விடுவார். அப்படி, ஒரு மனநிலையைத் தோழர் ஜெயராணி அவர்களின் “உங்கள் குழந்தை யாருடையது?” என்ற நூல் ஏற்படுத்தியது.

jayarani book on childrenநூலில் உள்ள உணவு, மருத்துவம் தொடர்பாக உள்ள கட்டுரைகளில் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருப்பவன் நான். ஒருவேளை எதிர்காலத்தில் எனக்கு உரிய விளக்கங்கள் கிடைத்தால் அவற்றையும் ஏற்கலாம். அவை தொடர்பான கட்டுரைகளில் கூட உணவு, மருத்துவம் போன்ற துறைகளில் உள்ள சிக்கல்கள், அவற்றால் மக்கள் அடையும் துன்பங்கள் பற்றிய தகவல்களில் எனக்கு எந்த மாறுபாடும் இல்லை. அவற்றுக்கான தீர்வுகளில் எனக்கு இன்னும் முழுமையான உடன்பாடு வரவில்லை. உடன்பாடு உள்ளவைகளைப் பார்ப்போம்.

குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமா? வேண்டாமா? என்பதை நாம் முடிவு செய்வதில்லை. சமுதாயம் நம்மை அந்தத் திசை நோக்கித் தள்ளிவிட்டுள்ளது. சமுதாயத்தின் பொதுப்புத்தி, பண்பாடு, பழக்கவழக்கங்கள் போன்றவை, நம்மைப் பிள்ளை பெற்றுக்கொள்ள வற்புறுத்தாவிட்டால், இயல்பாக, நாமே விரும்பிக் குழந்தை பெற்றுக் கொள்வோம் என்று உறுதிசொல்ல முடியாது.

குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமே நம்முடையதாக இல்லாத சமுதாயத்தில், நமக்குப் பிறக்கும் குழந்தைகள் நம்முடையதாக இருக்க வாய்ப்பே இல்லை. அப்படிப் பிறக்கும் குழந்தைகளும் அவர்களது தன் இயல்பாக வளர்வதற்கும் வாய்ப்பு இல்லை. இதை மிக எளிமையாக, விளக்கமாக, அறிவுப்பூர்வமாகப் பேசுகிறது இந்நூல்.

நூலுக்கு எழுதப்பட்டுள்ள அணிந்துரையில் தோழர் உமர் ஃபாரூக் அவர்கள், கிராமங்களில் நாம் கேள்விப்பட்ட, “பிடி குஞ்சுகள்” என்ற சொல்லை மிக நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு நினைவு படுத்தியுள்ளார். அந்த ஒற்றைச் சொல்லிலேயே நூலின் பல பக்கங்களைப் புதைத்து வைத்துள்ளார்.

தோழர் ஜெயராணியின் முன்னுரையிலும் அதே போன்ற ஒரு வாக்கியம் வருகிறது. “குழந்தை வளர்ப்பில் நாம் செய்யும் ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் தான் ஒரு சமூகத்தின் பண்பாட்டு மாற்றத்திற்கு நல்ல வகையில் பங்களிக்கின்றன” இது தான் இந்த ஒட்டுமொத்த நூலின் நோக்கமாக இருக்கிறது.

முதல் கட்டுரையிலேயே “குழந்தைகள் மீது நமக்குப் பொறுப்பு உண்டு. அதிகாரம் கிடையாது” என்று அழுத்தமாகத் தொடங்குகிறார். 2 ஆம் கட்டுரையில் உணவுப் பொருட்களை வீணடிப்பது, தேவையின்றி வாங்கிக் குவிப்பது, அலுமினியக் கவர்களில் அடைக்கப்பட்ட பன்னாட்டு நிறுவனங்களின் சிறுதீனிகளைத் தேடி ஓடுவது போன்றவை பேசப்படுகிறது. இவை மறுக்க முடியாத சீரழிவுகள்தான்.

சாப்பாடோ, சிற்றுண்டியோ, தீனிகளோ, உணவுப் பண்டங்கள் எதுவாக இருந்தாலும், அவை தயாரிக்கப்படும் இடத்திற்கும் பயன்படுத்தப்படும் இடத்திற்கும் எந்த அளவுக்கு தூரமும், நேரமும் குறைவாக இருக்கிறதோ - அந்த அளவுக்கு ஆரோக்கியமானது. ஒரு உணவுப்பொருளைப் பயன்படுத்து வதற்கான காலம் (Best Before Date) முடிவதற்கு இன்னும் 3 மாதமோ, 6 மாதமோ, 1 வருடமோ இருக்கிறதென்றால், அது உறுதியாக Sodium Benzoate Powder போடப்பட்டது தான்.

இதன் அளவைக் கண்காணிப்பதற்காக சுகாதாரத்துறையில் அரசு அலுவலர்கள் இருக்கிறார்கள். அவர்களால், பன்னாட்டு நிறுவனங்கள், இந்திய தேசிய நிறுவனங்களின் பொருட்களை ஆய்வு செய்துவிட முடியாது. ஜி.எஸ்.டி வரம்பிற்குள் வரவே முடியாதவர்களின் நிறுவனங்களில் மட்டுமே இவர்களால் நுழையவே முடியும். எனவே, குழந்தைகளுக்கு Sodium Benzoate என்ற E211 - Preservative கலக்கப்பட்ட உணவுகளை அறிமுகப்படுத்தாமல் இருப்பதே நல்லது. குறைந்தபட்சம் பள்ளிக் காலங்களில் மட்டுமாவது தள்ளிவைக்க வேண்டும்.

குழந்தைகளுடன் சுற்றுலா என்பதே இந்தச் சமூகத்தில் இல்லை. கோவில்கள், அம்மா வீடு, மாமா வீடு என தன் ஜாதிச் சொந்தங்களின் வீடுகளுக்குச் செல்வது தான் இங்கு சுற்றுலா. வேறு எங்கும் செல்வதாக இருந்தாலும் அந்தச் சுற்றுலா இடத்தைப் பற்றிய எந்தத் தகவலையும் அறிந்து கொள்ளப் பழக்கப்படவில்லை. வெறும் செஃபிக்காகவே அந்தச் சுற்றுலாக்கள் பயன்படுகின்றன. சுற்றுலாவே இல்லாத சமுதாயத்தில் “பயணங்கள்” இருக்க வாய்ப்பில்லை. பயணங்கள் இல்லாத குழந்தைப் பருவம் எதைக் கற்க முடியும்?

குழந்தைகளுடன் மனம் விட்டுப் பேசுதல், அவர்களைப் பேசுவதைக் கேட்கப் பழகுதல், அவர்களுடன் உரையாடுதல், இயற்கையைப் புரிந்து கொள்ளப் பழக்கப்படுத்துதல் போன்றவை மிகவும் அவசியமானவை.

குழந்தைகளுடன் தான் வசிக்கிறோம். குழந்தைகளுக்காகத் தான் வாழ்கிறோம். குழந்தைகளைப் புரிந்து கொண்டோமா? குழந்தைகளுக்கு நம் குடும்பத்தைத் தவிர, இந்த நாட்டில் வாழும் வேறு பிரிவு மக்களை அறிமுகப்படுத்தினோமா? நமது குழந்தைகளுக்கு நமது ஜாதி, மதத்தைத் தவிர வேறு ஜாதி, மதங்களில் நண்பர்கள் இருப்பதை நாம் அனுமதித்தோமா? வாய்ப்பாவது கொடுத்தோமா?

மனித இனத்தைத் தவிர, இந்த உலகம் இயங்குவதற்குப் பங்காற்றிவரும் எண்ணற்ற தாவரங்கள், விலங்குகள், பறவைகள், ஆறுகள், கடல், பருவநிலைகள், நில அமைப்புகள், எரிமலை, பூகம்பம், மழை, வெயில், பனி, சூரியன் போன்றவை குறித்த அடிப்படைப் புரிதல்களைக் கொடுத்தோமா? முதலில் நமக்காவது அவை பற்றிய அறிவு இருக்கிறதா?

மனிதர்களைப் பற்றித் தான் பேசுவது என்றாலும், மனித இனத்தின் முக்கியத் தேவையான உணவு, உடை, வாழ்விடம், குடிநீர், ஆரோக்கியம், வளர்ச்சி இவை பற்றிய புரிதல்களைக் கொடுத்தோமா? மிக முக்கியமாக பாலியல் பற்றிப் பேசியிருக்கிறோமா? உலகம் தோன்றிய விதம், உயிர்கள் தோன்றிய விதம் பற்றி நமக்கே தெரியாத போது குழந்தைகளுக்கு எப்படிப் புரிய வைப்போம்?

இவை மட்டுமல்ல; பசி என்றால் என்ன என்றே புரியாத குழந்தைகள், வறுமையில் வாடுவோரை எப்படிப் புரிந்து கொள்ளும்? சமுதாயத்தின் அனைத்துப் பிரிவு மக்களோடு சரிநிகராக வாழப் பழகாத குழந்தைகள் தீண்டாமை வன்கொடுமைகளையோ, ஜாதியையோ எப்படிப் புரிந்துகொள்ள முடியும்? பூமியைப் பற்றியும், சக மனிதர்களைப் பற்றியும், சக உயிர்களைப் பற்றியும் அறியாத குழந்தையால் அந்தக் குழந்தைக்குத் தான் என்ன நன்மை? என்பது போன்ற பல கசப்பான உண்மைகளாலும், கேள்விகளாலும் நமது தவறுகளைப் புரியவைத்துக் கொண்டே பயணிக்கிறது இந்நூல்.

குறிப்பாக, பாலியல் கல்வி, பாலின சமத்துவக் கல்வி என்பவற்றை ஒரு தற்காப்புக் கலையாகக் கற்க வேண்டும் என்ற பார்வை சிறப்பானது. “அடல்ட்ஸ் ஒன்லி” பக்கங்களில் விவரித்துள்ள காட்சிகள் நாம் தினந்தோறும் பார்ப்பவை தான். உண்மையாகவே “அடல்ட்ஸ்Þஒன்லி” என்ற பட்டியலில் வரவேண்டியவை எவை என்பதை நாம் உணர முடிகிறது.

கிறித்துவ மதத்தில் திருமணத்திற்கு முன்பு பாலியல் பற்றிய அறிமுகக் கல்வி கொடுப்பார்கள் எனக் கேள்விப்பட்டுள்ளேன். அதுபோல, திருமணம் நிச்சயிக்கப் பட்ட மணமக்களிடம் பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள்? நூலையும் இந்த நூலையும் படிக்கச் சொல்ல வேண்டும்.

முற்போக்குத் தோழர்கள், திராவிடர் இயக்கங்களைச் சேர்ந்தோர், தங்களது திருமணத்தை உறுதி செய்யும் போதே, திருமணத்திற்கு முன்பே இந்த இரண்டு நூல்களையும் படிக்க வேண்டும். பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் குழந்தை பெற்றுக்கொள்வது பொதுவாழ்க்கையைக் கெடுக்கும் அல்லது குழந்தைகளின் வாழ்க்கையைக் கெடுக்கும். குழந்தை அவசியம் தேவை என்றால், பாலியல் கல்வி, பாலின சமத்துவம், குழந்தை வளர்ப்பு இந்த மூன்றிலும் நல்ல பயிற்சி பெற்ற பிறகுதான் பெற்றுக் கொள்ள வேண்டும். திருமணம் செய்து கொள்வதற்கே இவற்றைக் கட்டாயமாக்கிவிட்டால், குழந்தை பெற்றுக் கொள்வதுகூடக் குறைந்துவிடும்.

தோழர் ஜெயராணி அவர்கள், இந்த நூலை ஒரு 15 நாள் தொடர் வகுப்புக்கான பாடத்திட்டம் போல மாற்றி, திராவிடர் இயக்கங்கள், தலித் இயக்கங்களின் தோழர்களுக்கும், பள்ளி, கல்லூரிகளிலும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களிலும் பயிலரங்குகளாக நடத்த முன்வர வேண்டும்.

காட்டாறைப் பொறுத்தவரை, பாலியல் கல்வி, பாலின சமத்துவப் பரப்புரைகள் போல, குழந்தை வளர்ப்பு குறித்த பரப்புரைகளையும் தொடங்க வேண்டும் என்ற சிந்தனையை இந்நூல் விதைத்துள்ளது. தனிப்பட்ட முறையில், “நல்ல வேளை நாம் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை” என்ற மகிழ்ச்சியை உருவாக்கியது. நமது தோழர்கள் அனைவரும் அவசியம் படியுங்கள்.

நூல் கிடைக்குமிடம்: தமிழ்வெளி, எண் 1, பாரதிதாசன் தெரு, சினிவாச நகர், மலையம்பாக்கம், சென்னை - 600 122, செல்: + 91 90 9400 5600, மின்னஞ்சல் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.