ஒரு பெரிய இயக்கத்தை வைத்துக் கொண்டு ஆணித்தரமான ரேடிக்கல் பெண்ணியத்தைப் பேசிய பெரியாரை அவருக்குப் பின் எந்த ஒரு திராவிட இயக்கமும் பெறவில்லை என்பது நம் கவலை தான். பெரியார் அளவுக்கு பெண் விடுதலையில் அதிக Frequency இல் இயங்கும் ஒர் தலைமையை இந்தத் தலைமுறை காணாததன் விளைவாகத்தான், சில கம்யூனிஸ்ட்கள் பெண்ணியத்திற்குள் வர்க்கப் பார்வையைப் புகுத்தி அதன் Frequency ஐ குறைத்துவிட்டனர்.

அதனாலே, ‘காட்டாறு’ வெளியிட்டிருக்கும் இக்கோரிக்கைகளைப் பார்த்தால் பலருக்கு சிரிப்பு வரலாம். ஏன் இயக்கப் பணிகளில் இருப்பவர்களே கூட இவைகளைப் பார்த்து நகைக்கலாம். ஆனால் இதையெல்லாம் அந்த ஈரோட்டு கிழவன் 50 வருடங்களுக்கு முன்பாகவே தீவிரமாகப் பேசி அறிவுறுத்திய கோரிக்கைகள் தான்.

பிள்ளைகளை இருபாலர் கல்வி நிலையங் களில் படிக்க வைக்க வேண்டும் என்கிற நிலைமை இப்போது சகஜமாகி விட்டது. ஒரு காலத்தில், இது ஒழுக்கக் குற்றமெனக் கருதப்பட்டது. இன்று ஒன்றாய்த்தான் படிக்கட்டுமே என்கிற நிலைமைக்கு முன்னேறியுள்ளது. ஆனால் பல கல்வி நிலையங் களில், குறிப்பாகக் கல்லூரிகளில் ஆண் மாணவர்கள், பெண் மாணவர்களுடன் பேசக் கூடாது, பழகக்கூடாது, எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்கிற கட்டுப் பாடுகளை விதித்துள்ளன. இதனால் என்ன ஆகிவிடப் போகிறது ??

தஷ்வந்த்களை உருவாக்கும் கல்வி நிலையங்களை இழுத்து மூடுவோம்!

ஏன் ஆண் மாணவர்கள், பெண் மாணவர்களுடன் பழகக்கூடாது? இன்று வன்புணர்வு செய்யும் விஷமிகள் எல்லாம் யாரால் உருவாக்கப் பட்டவர்கள்? அட 8 வயதுக் குழந்தையை வன்புணர்ந்து எரித்த தஷ்வந்துக்கு தூக்குத் தண்டனை கிடைத்துவிட்டது. அதனால் இனி ஒரு தஷ்வந்தும் உருவாக மாட்டானா என்ன ? தஷ்வந்த்கள் உருவாக காரணம் யார்? ரொம்ப யோசிக்க வேண்டாம். தஷ்வந்தை வளர்க்கும் பெற்றோர்களும், ஆண் - பெண் நட்பு அனுமதிக்காத கல்வி நிலையங்களும் தான்.

மொத்தமாக ஆணாதிக்க ஊட்டச்சத்தை ஊட்டி வளர்க்கும் பெற்றோர்கள், ஆண் குழந்தை களைப் பருவம் ஈட்டியவுடன் பெண் குழந்தை களுடன் பழக அனுமதிப்பதில்லை. பெண் பிள்ளைகளின் பெற்றோர்கள் இன்னும் மோசம். இருபாலர்களும் சேர்ந்து பழகிவிடவே கூடாது. அப்படிப் பழகிவிட்டால் கலாச்சாரம் கெட்டுப் போகிவிடும் என கூறி கூறியே . . . . காட்டுமிராண்டிக் காலத்திலிருந்து தஷ்வந்த் காலம் வரை “வன்புணர்வுக் கலாச்சாரத்தை” பாதுகாத்து வளர்த்து வருகிறோம்.

எதிர் பாலினத்துடன் சகஜமாய் நட்புடன் பழகாத எந்தப் பிள்ளையும், எதிர்பாலினத்தின் மீது புரிதலற்ற அறிவை தான் கொண்டிருக்கும். ஊரிலிருந்து நகரத்திற்கு படிக்க, வேலை பார்க்க வந்த பல ஆண்களுக்கு பெண்களிடம் பேசவே தெரிவதில்லை. அவர்களின் மூளையில், பெண் பற்றிய என்னமெல்லாம், அதிகமாக காமம் பற்றியதாய் மட்டுமே இருக்கும். அது மட்டுமின்றி பெண்கள் மீதான அவர்களின் பார்வையும் ஆதிக்கம் கொண்டவையாய் தான் இருக்கும்.

படிக்கும் போதே பெண் பிள்ளைகளுடன் பழகிய ஆணுக்கு அவர்களுடன் சகஜமாய் பழக வேண்டும், நட்பாய் இருக்க வேண்டும், ஆதிக்கம் செலுத்தக்கூடாது என்கிற குணாதிசியங்கள் தானாய் அவனுடன் வளர்ந்து வரும்.

இதையெல்லாம் வளர விடாமல், அவனைக் கட்டிப்போட்டு வளர்க்கும்போது தான், பெண்ணின் மீதான அவனின் சிந்தனையெல்லாம் காமம் என்பதாய் மட்டும் இருக்கிறது. ஆக, தஷ்வந்த்களை உருவாக்குவது “பெண் பற்றிய புரிதல் கொடுக்காமல்” வளர்க்கும் பெற்றோர்களும், கல்வி நிலையங்களும் தான் என ஏற்றுக்கொள்வோம்.

அதுமட்டுமல்ல. பிள்ளைகளை Alphabetical order இல் உட்கார வைக்க வேண்டும். ஏன்? நம் கல்வி நிலையங்களில் .ஆண்களெல்லாம் ஒரு பக்கமும், பெண்கள் ஒரு பக்கமும் உட்கார்வார்கள். ஏன் எனக் கேட்டால், ஆணையும் பெண்ணையும் ஒன்றாய் உட்கார வைத்தால் அவர்களுக்குள் காம எண்ணங்கள் தான் வரும் என்பார்கள்.

அட முட்டாள்களே. . . இல்லையென்றால் மட்டும் வராதா என்ன? அப்படி இருவருக்குள் ஈர்ப்பு இருந்தால் நீங்கள் எத்தனை சுவர் கட்டினாலும், தடுக்க முடியாது.

சரி அப்படி உட்கார வைத்தால் என்ன நடக்கும்??

ஆண் பிள்ளைகளும், பெண் பிள்ளைகளும் பாலின பேதமற்று சகஜமாய் பக்கத்தில் இருப்பவருடன் நட்பு பாராட்ட இது உதவும். சொல்லப்போனால், ஆண்-பெண் என தான் உட்கார வேண்டும் என்கிற விதிமுறை யைப் பின்பற்றுவதும் மிக சிறப்பானது.

எனக்குத் தெரிந்து எங்கள் பகுதியில் ஒரு தனியார் பள்ளியில் இது தான் விதிமுறை. அங்கு படித்த என் நண்பர்கள் எல்லாம். பெண்ணியம் பேசும் என்னைவிட நன்றாகவே பெண்களுடன் பழகுகிறார்கள். ஆணுடன் பழகுவதற்கும், பெண் ணுடன் பழகுவதற்கும் அவர்களிடமிருந்து வித்தியாசமே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இருக்கிறார்கள். மேலும் பெண்ணைச் சமமாய் மதிக்க வேண்டும் என்பது பள்ளிப் பருவத்திலிருந்தே அவர்களிடம் வளர்ந்துவிட்டது என்றே கூற வேண்டும். அந்த பள்ளியில் படித்த ஒருத்தனும் தஷ்வந்த் போல் ஆக மாட்டான் எனக் கொஞ்சம் பலமாய் என்னால் கூற முடியும்.

ஆண்களுடன் பழகாத பெண் குழந்தைகள் எப்படி இருப்பார்கள்?

எப்படி ஆண் பிள்ளைகள் பெண் பிள்ளைகள் மீது புரிதலற்று காமம் பற்றிய சிந்தனை மட்டுமே வைத்திருப்பார்களோ, அப்படியே தான் பெண் பிள்ளைகளும் இருப்பார்கள். ஆனால் ஆண்கள் ஆதிக்க நிலையிலும், பெண்கள் அடிபணிதல் நிலையிலும் இருப்பார்கள். ஆண்களுடன் பழகாத பெண்கள், ஆண்கள் மீது அச்ச உணர்வுடன் இருப்பார்கள். மேலும் ஆணின் அத்தனை அசைவு களிலும் காமத்துடன் இருப்பதாய் எண்ணுவார்கள். இப்படி எதிர்பாலின புரிதலற்ற, பாலின பேதம் கொண்ட சமூகத்தைத் தான் கலாச்சாரம் என்கிற பெயரில் வளர்த்துக்கொண்டு வருகிறோம்.

மேற்கத்திய நாடுகளிலும், JNU, AIMS போன்ற நிறுவனங்களிலும் ஆண், பெண் இருபாலரும் ஒன்றாய்த் தங்கி படிக்க கூடிய விடுதிகள் உள்ளன. அப்படிப்பட்ட விடுதிகள் நாடு முழுவதும் வரவேண்டும். அப்போது தான் பாலியல் புரிதலுடைய, வன்புணர்வுகளற்ற சமூகம் உருவாகும். பூட்டிப் பூட்டி வைக்கப்பட்ட காமம் தான் குற்றமாய் மாறுகிறதே ஒழிய, காமம் என்பது எளிதில் கிடைக்கப்பெறுபவையாய் இருக்கும்போது, ஒரு வரின் விருப்பமின்றி அவரைப் புணரும் எண்ணம் ஏற்படாது.

இதற்கு, குழந்தைப் பருவத்திலிருந்தே பாலியல் கல்வியைக் கொடுப்பதும் அவசியம். குறிப்பாக பெற்றோர்கள் இதைப்பற்றிப் பிள்ளைகளிடம் பேச வேண்டும். அப்படிப்பட்ட ஒரு சமூகமே அறிவளவிலும், குணமளவிலும், பாலியல் புரிதலு டைய முன்னேறிய சமூகமாய் இருக்க முடியும்.

பாலியல் புரிதலுடன், பாலினச் சமத்து வத்தையும் கற்றுத்தர வேண்டும். அதை செய்முறையிலிருந்தே பெற்றோர்கள் வீட்டிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். ஆண் பிள்ளைகளையும் வீடு பெருக்க, குப்பை அல்ல, சமையல் செய்ய, உடை அலச வற்புறுத்த வேண்டும். குறிப்பிட்ட வயதிற்கு மேல். ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, கட்டாயமாக இவ்வேலைகளை வீட்டில் செய்ய வேண்டும். அப்படி இருக்கும்போது தான் இல்வாழ்வில் ஆணும் பெண்ணும் சம உரிமையோடு, சுயமரியாதையோடு இருப்பார்கள். அப்படி இல்லையேல், வீட்டில் சமையலறையை வைக்கக் கூடாது. இருவரும் வெளியில் உண்ணலாம்.

சமையலறை அற்ற வீடு கட்டுங்கள்

பெண்களே சமையல் செய்ய வேண்டும் என்கிற நிலை ஒழிய, பெரியார் அன்றே சொன்னார், “சமையலறை அற்ற வீடு கட்டுங்கள்”

என! அப்போது உணவு எப்படிக் கிடைக்கும் எனும் கேள்வியை வைப்பவர்கள், ஆணுக்கு எப்படிக் கிடைக்கிறதோ அப்படியே பெண்ணுக்கும் கிடைக்க வேண்டும் என்கிற நியாயத்தையும் ஏற்றுக் கொள்ளட்டும்! சமையலறைகள் இல்லா வீடுகள் உண்டானால் தான், தரமான உணவுகள் செய்யும் உணவகங்கள் உருவாகும். அதிக அளவில் உருவாகும். அன்று பெண்களுக்குச் சமையலில் இருந்து விடுதலை கிடைக்கும்.

மேலும், பெண்களைத் திருமணம் என்கிற ஒற்றை நோக்குக்காக வளர்ப்பதைப் பெற்றோர்கள் நிறுத்த வேண்டும். ஆணை போல் சுயமரியாதை யுடைய, சுய சம்பாத்தியம் உடைய பிறவிகளாக பெண்களை யோக்கியமான பெற்றோர்கள் உருவாக்க வேண்டும். அவர்களின் வாழ்க்கை இணையை அவர்களாகவே தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் பார்த்து எடுத்துக்கொடுக்கும் பச்சை சுடிதாரை விட, அவள் ஆசைப்பட்டு எடுத்த சிகப்பு டாப்பை தான் அவள் விரும்பி அணிவாள். ஆனந்தமாய் ரசிப்பாள்.

அப்படிப்பட்ட ஆனந்தத்தைப் பார்க்கும் பெற்றோர்களாய் பெண்களை அவர்களின் வாழ்க்கை இணையை அவளுக்கு ஏற்றவாறு அவள் தேர்ந்தெடுக்க விட வேண்டும். பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு வாழ உதவ வேண்டுமே ஒழிய, பிள்ளைகளின் வாழ்க்கையையும் அவர்களே வாழ்ந்து விட கூடாது. பிள்ளைகள் சந்தோஷம் தான் முக்கியம், கலாச்சார கோட்பாடுகள் முக்கியமல்ல என நினைக்கும் பெற்றோர்களால் மட்டும் தான் இந்தச் சமூக அமைப்பை மாற்ற முடியும் என்பதை உணர்வோம்!

தோழர் தமிழ்வாணன், பெரியாரியப் பெண் விடுதலை இயக்கம்