இன்றைய வாழ்வியல் முறையில் தனிக்குடித்தனம் அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது என்பது தான் நிதர்சனம். இருமணம் இணைந்தால் மட்டுமே திருமணம். பண்டைய தமிழர் வாழ்க்கை அகம், புறம் என்று வாழ்க்கை இரண்டு வகையாகக் கொண்டனர். இவற்றுள் ஒரு ஆணும், பெண்னும் காதலால் இணைந்து தனக்குள்ளே இன்பம் துய்த்து வாழும் அகவாழ்வு மீண்டும் மலரவேண்டும். உடல் மொழி அறிய, அவர்களுக்குத் தேவை தனிமையே. இருவேறு சூழ்நிலையில் பழக்கப்பட்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் உணவு, உடை, சுவை, பழக்கவழக்கங்கள், விருப்பு, வெறுப்பு இப்படி பலவும் ஒத்திசைவாக அமைவதில்லை.

joint family cartoonஇதனை இந்தத் தலைமுறை உணர்ந்தாலும், இது ஏதோ பாவச்செயல் போல சித்தரிப்பது ஆணாதிக்கச் சமூகத்தின் உச்சக்கட்டப் பார்வை. பெண் தனக்கான பணி, இணையரைத் தேர்வு செய்யும்போது, ஆணும், பெண்ணும் சேர்ந்து வெற்றிகரமாக வாழ்க்கை வாழக் கனவுகளையும் சுமந்து சுகவாழ்வு வாழ இயலும் அல்லவா?

சங்கத் தமிழர் வாழ்வியல், தனிக்குடும்பத்தை ஆதரித்தது. களவு வாழ்க்கை வாழ்ந்து காதலுடன் கடந்தவர்கள் தான் நம் முன்னோர்கள். இடைப் பட்ட ஜாதிய சமய, மதச்சாயங்கள் தான் ‘குடும்பம்’ என்ற காதல் வாழ்க்கையைச் சுயநலமாக மாற்றிப் போட்டது. பிற்போக்கான குறுகிய சிந்தனை உள்ள ஜாதி, மதவாதத் தலைமுறையின் சிந்தனை, சொல், செயல் அனைத்தும் நமக்குப் பாதகமாகவே அமையும். பெண்ணடிமை, ஜாதிவெறி இவை மேலோங்கிய பழமைவாதிகளின் பரிந்துரைகள் கண்மூடித்தனமானவை. அதிகமான விவாகரத்து என்ற நிலைக்கு, கணவன் - மனைவி கருத்து வேற்றுமைகளைவிட, நெருங்கிய உறவுகளின் நெருக்கடிகளும், தலையீடுகளுமே மணமுறிவுக்கு வழிவகை செய்கின்றன.

நிகழ்வுகளிலும், விழாக்களிலும் ஒன்றிணைந்து கொண்டாடிக்களிப்பதுவும், முடிந்ததும் இயல்பாய்த் தன் கூடுகளைத் தேடும் ஜோடிப் பறவைகளாய் பிரிவதுமாக அமைந்தால் உறவுப்பாலம் பலப்படும். “கிட்ட இருந்தால் முட்டப்பகை” என்ற பழமை மொழியின் உண்மைத் தன்மையை ஒவ்வொருவரும் அனுபவித்துத் தான் வருகிறோம். கூட்டுக்குடும்ப உறவுமுறைகளில் போன தலைமுறையில், கட்டுப்பட்டியாகவே வாழ்ந்து அதன் ரணங்களை ஆராத தழும்புகளாக சுமந்து வாழும், பெண்கள் இன்றைய சுதந்திரத்தின் எதார்த்தத்தைக்கூட கேள்விக்குள்ளாக்குவது இயல்புதானே.

. நேற்றுவரை பெற்றோரின் நிழலில் வாழ்ந்தவர்களுக்கு உலகம் விரிந்து எதார்த் தங்களைப் பட்டியல் போட்டுக்காட்டும். நீந்திக் கரை தேடும் போது, அந்த அனுபவங்கள் நாளைய தலைமுறைக் குழந்தைகளைக் செப்பனிடப் பயன் படும். அந்த அனுபவம் தனித்குடித்தனம் நடத்தும் போது தான் வசப்படும். பிடிகளைத் தளர்த்துங்கள். சுதந்திரம் எத்தகையது எனச் சுவாசித்து, அனுபவத்தைப் பாடமாக ஏற்றுத் தானும் வாழ்ந்து, தலைமுறையையும் வாழவைப்பார்கள்.

ஒட்டுமொத்தமாய் முதுமைக்கு டாட்டா காட்டிவிட்டு, எப்படி? இது துரோகம் அல்லவா என்றால்... ‘இல்லை’ என்பதுதான் என் பதில். முதுமைக்கும் தனிமை அவசியம்தான். ஒட்டுமொத்த மாய்த் தவிப்பது அல்ல. அடுத்த தெருவில், அடுக்குமாடிகளில் அடுத்தடுத்த குடிஇருப்புகளில் எனத் தனித்து விடுங்கள். தாம்பத்தியம் 40 இல் தான் இனிக்கும், 60 இல் தான் சுவைக்கும். கடமை முடிந்த களைப்பை, மீண்டும் 60 களின் காதல் மறுபரிசீலனை செய்யும்.

முயன்று பாருங்கள். இல்லை அவர்களின் தனிமைக்கு வயது ஒத்த நண்பர்களுடன் பகிர்வதும், கடந்த காலத்தை அசைப்போட்டு மீதிப்பாதியைச் சுகமாய் வலிகள் மறந்து கடந்துவருவார்கள். எது வாழ்க்கை? வயது ஒத்தவர்களுடன் பகிர்வது தானே வாழ்க்கை? வெறும் கட்டிலும், கைத்தடியும் மட்டுமேவா வாழ்க்கை?

கூட்டுக்குடும்பமுறை என்பது இன்றைய தலைமுறை கனவுகளைச் சிதைக்கும். வாழ்ந்த வாழ்க்கை, குடும்பம் இப்படி ஒட்டு மொத்தமாய் இடம் பெயர்ந்து வரும் பெண்கள் கூட்டுக் குடும்பத்தில் வேற்று ஆளாகவே தெரிவாள். மாறாக, தனிக்குடித்தனம் அவளது சுதந்திரத்தைப் பறிக்காமல், இயல்பாய்க் குடும்பவாழ்க்கை வாழவும் - ஆணைப் பெண்ணும், பெண்ணை ஆணும் கொண்டாடி மகிழவும் வாய்ப்பு உருவாகும்.

பிணக்குகள் தோன்றினாலும் தானாய் மறையும். ஊடல் இயல்புதானே? மூன்றாம் நபர் தலையீடு இல்லாமல் இருந்தால் தனிமனித உணர்வுகள் மதிக்கப்படும். ஒற்றுமையும் பலப்படும். சிந்திப்போம், செயல்படுவோம்.

- தோழர் நந்தினிதேவி, தமிழர் அறிவியப் பேரவை