சங்க இலக்கியங்களில்  ஆரியர் தம் வருணாசிரமக் கருத்துக்கள், வேத வேள்விகள், மூடப்பழக்க வழக்கங்கள் முதலியன எப்படிக் குடி புகுந்து விட்டனவோ அதுபோலவே வடமொழி இதிகாசங்கள் புராணங்கள் ஆகியவற்றில் காணப்படும் செய்திகள் கருத்துக்கள் ஆகியவைகளும் சங்கஇலக்கியங்களில் காணக்கிடக்கின்றன.

இராமாயணக்கதைச் செய்திகள்

இராமன் சீதையை இலங்கையினின்று மீட்டுவரும் பொருட்டு வானர சேனைகளுடன் தனுஷ்கோடியில் ஓர் பெரிய ஆலமரத்தின்கீழ் அமர்ந்து அலோசனை நடத்தினான். அப்போது அம்மரக்கிளையில் தங்கி இருந்த பறவை இனங்கள் ஒன்றோடொன்று சண்டையிட்டுக் கூச்சலிட்டுக் கொண்டிருந்தன. இதனால் இராமனுடைய மந்திராலோசனைக்குத் தடை ஏற்பட்டுவிட்டது.

உடனே இராமன் தனது கையினைக் குவித்து அப்பறவைகளின் ஒலியினை அடக்கினான். இப்படி அகநானூற்றுப் பாடல் ஒன்று கூறுகின்றது.

வெவ்வெல் கவுரியர் தொன்முதுகோடி

முழங்கு இரும் பெளவம் இரங்கு முன்துறை

வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த

பல வீழ் ஆலம் போல - பாடல் 70 : 13 -16

புறநானூற்றுப் பாடல் ஒன்று “இராமன் காட்டில் சீயுைடன் வசிக்கும்போது இலங்கை வேந்தனான இராவணன், சீதையினை இராமன் அறியாவண்ணம் தூக்கிச் சென்றான் என்றும், அப்போது சீதையானவள் தன்னுடைய ஆபரணங்களை ஒவ்வொன்றாகக் கழற்றி வழிநெடுகப் போட்டுக்கொண்டே போனாள் என்றும், இந்தக்காட்சியினைக் கண்ட குரங்குக் கூட்டங்கள் அந்த ஒளிமிக்க ஆபரணங்களைக் கண்டு மிக்க வியப்படைந்தன ” என்றும் கூறுகின்றது.       

கடதெறல் ராமன் உடன்புணர் சீதையை

வலித்தகை அரக்கன் வவ்விய ஞான்றை

நிலம்சேர் மதர் அணிகண்ட குரங்கின்

செம்முகப் பொருங்கினை  - பாடல் 378 : 18 -21

இராவணன் கைலை மலையைப் பெயர்த்த செய்தி

கலித்தொகை பாடல் ஒன்றில் “சிவபெருமான் உமாதேவியுடன் கைலைமலையில் வீற்றிருக்கும் போது, பத்துத் தலைகளை உடைய அரக்கனான இராவணன், தனது வலிமைமிக்க கைகளால் அம்மலையினை எடுக்கத் தலைப்பட்டான் என்றும் அது கண்டு சிவபெருமான் தனது கட்டை விரல் நுனியினால் அம்மலையினை அழுத்த - அதனுள் அகப்பட்டு இராவணன் வருந்தினான்” என்றும் கூறப்படும் புராணக்கதை குறிக்கப்பட்டுள்ளது.

இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்

உமையமர்ந்து உயர்மலை இருந்தனன் ஆக

தொடிப்பொலி தடக்கையின் கீழபுகுத்து அம்மலை

எடக்கல் செல்லாது உழப்பவன் போல - பாடல் 38 : 1 - 5

மகாபாரதக் கதைச்செய்திகள்

மேற்கண்ட இராமயணக் கதைகளின் செய்திகள் போலவே, மற்றொரு இதிகாசமான பாரதக் கதைச் செய்திகளும் பல காணப்படுகின்றன.

அரக்குமாளிகைக்குத் தீயிட்டது

துரியோதனன் அரக்கினால் பொய்யாக ஓர் மாளிகை அமைத்து அம்மாளிகைக்குப் பாண்டவர்களை அழைத்து இருக்கச்செய்தான் என்றும், அப்படி அவர்கள் தங்கி இரவில் உறங்கிக் கொண்டு இருக்கும் நேரத்தில், அவன் அந்த அரக்குமாளிகைக்குத் தீ இட்டான் என்றும் கூறப்படும் புராணச் செய்தியும் கலித்தொகை நூலில் காணப்படுகிறது.

வயக்குறு மண்டலம் வடமொழிப் பெயர் பெற்ற

முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால்

அய்வர் என்று உலகேத்தும் அரசர்கள் அகத்தராக

கைபுனை அரக்கில்லைக் கதழ்எரி சூழ்ந்தாங்கு  - பாடல் 25 : 1-4

தீப்பற்றிய அரக்குமாளிகையிலிருந்து பீமன் அய்வரையும் காப்பாற்றியது

அரக்குமாளிகை தீப்பற்றி எரியும் காலத்தில் தருமன் , அர்ச்சுனன்,  நகுலன், சகாதேவன், திரெளபதை ஆகிய அய்வரும் நன்கு உறங்கிக்கொண்டு இருந்தார்கள் என்றும், அதுசமயம் விழித்துக்கொண்ட பீமன்,  அந்த அய்வரையும் தோளின் மேல் தூக்கிப் போட்டுக்கொண்டு சுரங்கத்தின் வழியாக வெளியேறி, காப்பாற்றினான் என்றும் கூறப்படும் செய்தி மேற்படி பாடலிலேயே உள்ளது.

ஒள்ளுரு வரக்கில்லை வளிமகன் உடைத்துத்தன்

னுள்ளத்துன் கிளைகளோ டுயப்போகு வான்போல - என்று வந்துள்ளது.

மேலும் பீமன் துர்ச்சாதனன் நெஞ்சத்தைப் பிளந்து தன் சபதம் முடித்த செயல், கலித்தொகையில்  பாடல் 101 : வரிகள் 18 - 20 லும், போர்க்களத்தில் துரியோதனன் தொடையினை பீமன் அறுக்கும் செய்தி, பாடல் 52 : வரிகள் 2 - 3 லும், அசுவத்தாமன் தன் தந்தையாகிய துரோணச்சாரியனைக் கொன்றவனைத் தன் தோள்வலியினால்  கொன்ற செய்தி, பாடல் 101 : வரிகள் 30 - 32 உள்ளன.

பரசுராமன் சூளுரை

பரசுராமன்  “இம்மண்ணுலகிலேயே Bத்திரிய அரசத் தரப்பினர் ஒருவர்கூட இல்லாமல் பூண்டோடு ஒழிப்பேன்” என்று சபதம் செய்து, மிக்க முயற்சியோடு ஓர் பெரிய வேள்வியைச் செய்து முடித்தான் என்ற செய்தி

மன்மருற் கறுத்த மழுவாள் நெடியோன்  

முன்முயன் றரிதினின் முடித்த வேள்வி  

கயிறரை யாத்த காண்டகு  வனப்பின்

அருங்கடி நெடுந்தூண் போல ” அகப்பாடல் 220 : 5-8

கிருஷ்ணன் ஆயர் பெண்களின் ஆடைகளை ஒளித்தல்

ஆயர் பெண்கள் யமுனை ஆற்றின் கரையில் ஆடைகளையெல்லாம் வைத்துவிட்டு, நதியில் நீராடிக்கொண்டு இருந்தனர். அவர்கள் அறியாவண்ணம் கண்ணன் அவர்களது உடைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு அருகில் இருந்த குருந்த மரத்தில் ஏறிக்கொண்டான்.

அது கண்ட ஆயர்மகளிர் தங்கள் கைகளால், தங்கள் அங்கங்களை மறைத்துக்கொண்டு, உடையினைத் தரும்படி கண்ணனை வேண்டிக் கொண்டனர். கண்ணணோ எல்லோரும் தங்கள் இரு கைகளையும் நீட்டி வெளியில் வந்து கேட்டால் தருவதாகக் கூறிக்கொண்டு இருக்கும்போது, கண்ணனுக்கு மூத்த பலராமன் அவ்விடம் வந்தான்.  அது கண்ட கண்ணன் குருந்த மரத்தின் கிளையினை மிதித்து அதனைத் தாழும்படி செய்து அதில் அப்பெண்களை மறைத்துக் கொள்ளும்படி செய்தான். இச்செய்தியும் அகநானூற்றில் காணப்படுகின்றது.       

வடா அது வண்புனல் தொழுதை  

வார்மணல் அகன்றுறை அண்டர்மகளிர்

மரஞ்செல மிதித்த மாஅல் போல  ”

அகநானூறு பாடல் 59 : வரிகள் 3 - 6

இவைமட்டும் அல்லாமல் சங்க இலக்கியங்களில் அருந்ததி, அகலிகை, பிரகலாதன் பற்றிய செய்திகள், சிவன் விஷ்ணு, பிரம்மா, முருகன், பலராமன் ஆகியவர்கள் பற்றிய புராணக்கதைகள் ஆகியவைகளும் ஆங்காங்கு காணப்படுகின்றன. இவற்றினைச் ‘சங்க இலக்கியங்களில் கடவுள்கள்’ என்ற தலைப்பின் கீழ் அடுத்துக் காண்போம்.

எனவே இதுகாறும் மேலே காட்டிய எடுத்துக்காட்டுகளில் இருந்து சங்க காலம் எனப்படும் இன்றைக்கு சற்றேறக்குறைய 1800 அண்டுகளுக்கு முன்னமேயே தமிழகத்தில் வடமொழிப் புராணக் கதைகள் நன்கு பரப்பப்பட்டு இருந்திருக்கின்றன எனத் தெரிய வருகிறது. பண்டை இலக்கியங்களில் இச்செய்திகளை எடுத்தாளும் அளவுக்கு இவைகள் செல்வாக்குப் பெற்று இருக்கின்றன என்பதனைப் பார்க்கும் போது ஆரிய ஆதிக்கம் எந்த அளவுக்கு தமிழ்நாட்டில் வேரூன்றி இருந்தது என்பது விளங்கும்!

இந்தக் காலத்தில் எப்படி நமது மந்திரிகள், சட்டசபை உறுப்பினர்கள், அரசியல்வாதிகள், ஆங்கிலம் படித்த மேதாவிகள், பட்டதாரிகள் எனக் கூறப்படுபவர்கள் புலவர்கள் ஆகியவர்கள் மூடநம்பிக்கையும் புராண நம்பிக்கையும் உடையவர்களாக இருந்து வருகின்றனரோ - அது போலவே சங்ககாலத்துப் புலவர்கள், அரசர்கள், பொதுமக்கள் ஆகியவர்களும் மூடநம்பிக்கை உள்ளவர் களாகவே இருந்திருக்கின்றனர். இப்படி, பன்னெடு நாட்களுக்கு முன்னமேயே நம் நாட்டில் குடிபுகுந்து வேரூன்றிய ஆரிய ஆதிக்கம், இன்று செழித்து வளர்ந்து, பூத்துக் காய்த்து, கனிந்து காணப்படுகின்றது.

சங்க இலக்கியங்களில் புராணக் கடவுள்கள்  

பண்டைய தமிழர்கள் “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்ற உயரிய நெறி நின்று ஒழுகி வந்தார்கள் என்றும், அவர்கள் பல்வேறு தெய்வங்களைக் கொண்டவர்கள் அல்லர் என்றும் தாங்கள் தாம் தமிழ்பற்றுக்கும், தமிழ் நாகரீகத்துக்கும் கர்த்தாக்கள் என்று எண்ணிக்கொண்டு சிலர் எழுதியும் கூறியும் வருகின்றனர்.

தமிழன் என்றைக்குமே ‘ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’ என்ற உயரிய கொள்கையினைக் கொண்டு  வாழ்ந்தான் என்று பெருமை பாராட்டிக்கொள்ள நமக்கு எந்தவித ஆதாரமும் இல்லை.

“ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்பது, சங்ககாலத்திற்கு மிகப் பிந்திய காலத்தில் வாழ்ந்த திருமூலரின் திருமந்திரத்தின் ஒரு பாட்டின் ஒரு அடியில் வரக்கூடியதை மட்டும் எடுத்துக்கொண்டு பெருமிதப்பட்டால் போதுமா ?

இலக்கிய ஆதாரமென்ன?

இன்றைக்கு நமக்குக் கிடைத்திருக்கும் இலக்கிய ஆதாரங்களை வைத்துக் கொண்டு பார்த்தால் காலத்தால் முற்பட்ட தொல்காப்பியத்தில் ஆகட்டும், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை முதலிய சங்க நூல்களில் ஆகட்டும் தமிழன் ஏகதெய்வ வணக்கத்துடன் வாழ்ந்தான் என்பதற்கு ஆதாரமே இல்லை.

அவன் ஆரியர்களின் இதிகாசங்களிலும், புராணங்களிலும் காணப்படும் சிவன், விஷ்ணு, பிரம்மா, முருகன், கொற்றவை (துர்க்கை), இந்திரன், பலராமன் போன்ற தெங்வங்களை வணங்கியதோடு சிறுதெய்வங்களையும், துஷ்ட தெய்வங்களையும் வணங்கி வந்திருக்கின்றான். மேற்கூறிய செய்திகள் பற்றி இக்கட்டுரையில் ஆய்வோம்.

சிவன்

சிவன் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவன்; காளை வாகனன்; கங்கையைச் சடையில் கொண்டவன்; நெற்றியில் பிறைச் சந்திரனைத் தரித்தவன்; உமையொருபாகன்;  நீலகண்டன்; திரிபுரம் எரித்தவன்;  முக்கண்ணன்;  மழுப்படையை உடையவன்; கொடுகொட்டி, பாண்டுரங்கம், கபாலம் முதலிய கூத்துக்களை ஆடுபவன் ”  என்பவைகள் சங்க இலக்கியங்களில் குறிக்கப்பட்டுள்ளமையினை இங்கு காண்போம்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவன்  

அரும்பெறல் ஆதிரையான் அணிபெற மலர்ந்க . கலி 150 : 20

ஆதிரை முதல்வனின் கிளந்த நாதர் பன்னொருவரும் - பரிபாடல் 8 : 6-7

காளை வாகனன்

காளை மாட்டை வாகனமாகக் கொண்டு ஊர்ந்து வருவபவன்.

ஊர்தி வால் வெள்ளேறே - புறநானூறு  1 : 3

புங்கவம் ஊர்வோனும் ( புங்கவம்-காளை) - பரிபாடல் 8 , 2  

உருவ ஏற்று ஊர்தியான் - கலி 150 : 13

கங்கையினைச் சடையில் வைத்திருப்பவன்

விரி சடைப் பொறை ஊழ்த்து

விழுநிகர் மலர் ஏய்ப்பத்

தனிவுற தாங்கிய தனி

நிலைச் சலதாரி

மணி மிடற்று அண்ணற்கு - பரிபாடல் 9 : 5 - 7

தேறுநீர் சடைக் கரத்து திரிபுரம் தீமடுத்து - கலி :  1 -2

இமைய வில் வாங்கிய ஈர்ஞ்சடை யந்தணன் - கலி: 38 : 1

பிறங்குநீர் சடைக் கரந்தான் ”  -  கலி 150 : 9

நெற்றியில் பிறைச்சந்திரனைச் சூடியவன்

கொலைவன் சூடிய குழவித் திங்கள் போல - கலி 103  : 15

“ கோடுவாய் கூடாப் பிறையைப் பிறிதொன்று

நாடுவேன் கண்டனென் சிற்றிலுட் கண்டாங்கே

ஆடையான் மூஉ யகப்படுப்பேன் சூடிய

காணான் றிரி தருங்கொல்லோ மணிமிடற்று

மாண்மலர்க் கொன்றையவன் - கலி : 142 : 24-28

புதுத்திங்கள் கண்ணியான் பொற்பூண் ஞான் றன்னநின் - கலித்தொகை 150 : 17

தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்

பிறைநுதல் வண்ணம் ஆகின்று அப்பிறை - புறநானூறு 1 : 8 – 9

கறை மிடற்று அண்ணல் காமர் சென்னிப்

பிறைநுதல் விளங்கும் ஒருகண் போல - புறநானூறு 55 : 4 – 5

உமாதேவியை இடப்பாகத்தில் கொண்டவன்:

உமையமர்ந்து விளங்கும் இமையா முக்கண் - திருமுருகாற்றுப்படை 153

பெண்ணுரு வொருதிறன் ஆகின்றது ; அவ்வுருத்

தன்னுள் அடக்கின் கரக்கினும் கரக்கும் - புறநானூறு 1 : 7-8  

நீலகண்டன்

தேவர்களும் - அசுரர்களும் மேருமலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பை நாணாகவும் கொண்டு அமிர்தம் வேண்டிக் கடல்கடைந்த போது,  வாசுகி என்ற அந்தப் பாம்பானது வலி பொறுக்க மாட்டாது நஞ்சைத் திரண்டுவரும் அமிர்தத்தில் கக்கிவிட்டது.

அதுகண்ட தேவர்கள் கலங்கினர். சிவன் அந்த விஷத்தை எடுத்து உண்டான்.  உமாதேவி அதுகண்டு பயந்து ஓடிப்போய், அவனது கண்டத்தினைப் பிடித்தாள். அதனால் அந்த நஞ்சானது கண்டத்திலேயே நின்றுவிட்டது. இதன் காரணமாக சிவன் நீலகண்டன் என்று பெயர் பெற்றான் என்பது புராணக்கதை.

நீலமணிமிடற்று ஒருவன் போல - புறநானூறு : 91 -6

மறுமிடற்று அண்ணற்கு மாசிலோள் தந்த - பரி பாடல் 8 : 127

மணி மிடற்று அணி போல - கலித்தொகை : 105 , 13

மணிமிடற்று  மாண்மலர்க் கொன்றையவன் - கலித்தொகை : 142 : 27-28

கறைமிட றணியலு மணிந் தன்றக் கறை

மறைநவி லந்தணர் நுவலவும் படுமே - புறநானூறு : 1 : 5 - 6

திரிபுரம் எரித்தவன்

பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் ஆகிய மதிற் சுவரைக் கொண்ட மூன்று கோட்டை களையுடைய அவுணர்கள் தேவர்களை துன்புறுத்தினர். தேவர்கள் எல்லாம் பிரம்மாவினிடம் சென்று முறையிட, பிரம்மா தேவர்களை கூட்டிக்கொண்டு சிவனிடம் சென்று முறையிட்டான்.

அப்போது சிவன் பூமியை இரதமாகவும், தேவங்களை குதிரைகளாகவும், பிரம்மாவைத் தேரோட்டியாகவும், விஷ்ணுவை அம்பாகவும், மேரு மலையை வில்லாகவும், வாசுகி என்ற பாம்பை நாணாகவும் கொண்டு ஒரே அம்பினால் மூன்று கோட்டைகளையும் தகர்த்து, அவுணர்களையும் அழித்தானென்பது புராணக்கதை. இதுவும் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றது.

ஆதியந்தணனறிந்து பரிகொளுவ

வேதமாபூண் வையத்தேரூர்ந்து

நாகம் நாணா மலை வில்லாக

மூவகை ஆரெயில் ஓரழல் அம்பின்முளிய

மாதிரம் அழவவெய் தமரர் வேள்வி - பரிபாடல் 5 : 22-26

ஓங்குமலைப் பெருவிற்பாம்பு ஞான்கொளீஇ

ஒருகனை கொண்டு மூவெயிலுடற்றிப்

பெருவிற லமரர்க்கு வென்றி தந்த

கறைமிடற்றண்ணல்………” தியந்தணனறிந்து பரிகொளுவ - புறநானூறு   55 : 1-4

மூன்று கண்களை உடையவன்

முக்கட் செல்வர் நகர்வலம் செயற்கே - புறநானூறு 6 : 18  

உமையமர்ந்து விளங்கும் இமையா முக்கண்- திருமுருகாற்றுப்படை 153

மிக்கொளிர் தாழ்சடை மேவரும் பிறைநுதன்

முக்கண்ணா னுருவேபோன் - கலித்தொகை  104 : 11-12

இது மட்டுமல்லாமல் கலித்தொகை என்னும் சங்க இலக்கிய நூலுக்குக் கடவுள் வாழ்த்தாகக் கூறப்பட்ட பாட்டில் சிவன் ஆடியதாகக் கூறப்படும் கொடுகொட்டி, பாண்டரங்கம், கபாலம் ஆகிய கூத்துக்கள் கூறப்பட்டு உள்ளன.

கொடு கொட்டி

இது சிவன் உலகை எல்லாம் அழித்து நின்று கை கொட்டி ஆடும் கூத்தாகும்.

படுபறை பல வியம்பப்  பல்லுருவம் பெயர்த்து நீ

கொடுகொட்டி யாடுங் காற் கொடுய ரகல் குறிக்

கொடிபுரை நுசுப்பினாள் கொண்ட சீா தருவாளோ - கலித்தொகை ; கடவுள் வாழ்த்து 5:7

பாண்டரங்கம் கூத்தாடல்

இது சிவன் திரிபுரங்களையும் அழித்து நின்று, எரிந்த சாம்பலைப் பூசிக்கொண்டு ஆடிய கூத்தாகும்.

மண்டமர் பல கடந்து மதுகையானீறணிந்து

பண்டரங்கம் ஆடுங்காற்பணை யெழி லணைமென்றோள்

வண்டரற்றுங் கூந்தலாள் வளர் தூக்குத் தருவாளோ- கலித்தொகை ; கடவுள் வாழ்த்து 8 -10

கபாலக் கூத்தாடல்

இது சிவன் எல்லாவற்றையும் அழித்து மண்டையோட்டைக் கையில் ஏந்தி அடிய கூத்தாகும்.

கொலையுழுவைத் தோலைசக்இக் கொன்றைத்தார் சுவற்புரளத்

தலையங்கை கொண்டு நீ காபால மாடுங்காண்

முலையணிந்த முறுவலான் முற்பாணி தருவாளோ - கலித்தொகை ; கடவுள் வாழ்த்து  11 – 13

‘உண்மை’  இதழ் - 14.05.1970

- தொடரும்