sumathi karupasamy 350என்னுடைய பெயர் சுமதி, நான் பிறந்த ஊர் பொள்ளாச்சி அருகில் விளாமரத்துப்பட்டி எனும் கிராமம். எனக்கு இரண்டு தங்கைகள். எனக்கு முதல் திருமணம் 1999ல் நடந்தது. பெற்றோர்கள் பார்த்து நடத்தி வைத்த திருமணம். எனக்கு அந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை. அப்போது எனக்கு 17 வயது.

பெற்றோர்களுக்காக திருமண வாழ்க்கையை ஏற்றுக் கொண்டு வாழ்ந்தேன். எங்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக ஆறு மாதம் எங்களுடைய வீட்டிலும், ஆறு மாதம் அவர்களின் வீட்டிலும் இருப்பேன். இப்படி இரண்டு வருடம் கடந்து விட்டது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் அதிகம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் கட்டிய தாலியை கழற்றி கொடுத்தவிட்டு என்னுடைய அம்மா வீட்டிற்கே வந்து விட்டேன்.

தோழர் கருப்பசாமியின் அறிமுகம் எப்போது கிடைத்தது?

கருப்பசாமியின் உறவினர் என்னுடைய ஊரில் இருக்கிறார்கள். அவர்களுடைய வீட்டிற்கு கருப்பசாமி அடிக்கடி வருவார். அப்போதுதான் அவருடைய அறிமுகம் எனக்கு கிடைத்தது. நாங்கள் இருவரும் பேசிப் பழகினோம். அவரை நானும், என்னை அவரும் புரிந்து கொண்ட பின்பு நாங்கள் இருவரும் சேர்ந்து வாழலாம் என்று முடிவு எடுத்தோம்.

உங்கள் திருமணம் எங்கு, எப்படி நடந்தது?

எங்களுடைய திருமணம் நல்ல நாள் பார்த்து எந்த கோவிலிலும் நடக்கவில்லை. தாலியும் நாங்கள் கட்டவில்லை. இருவரும் சேர்ந்து வாழலாம் என்று முடிவு செய்து வீட்டை விட்டு வெளியேறினேன். நாங்கள் இருவரும் வாடகைக்கு வீடு பார்த்து எங்களுடைய வாழ்க்கையைத் தொடங்கினோம். இந்த சமுதாயம் தாலி இல்லாமல் இருந்தால் என்னைக் கேவலமாக நினைக்கும் என்று கடையில் மஞ்சள் கயிற்றை வாங்கி அதை நானே கட்டிக் கொண்டேன். இப்படித்தான் நடைபெற்றது.

தாலியை நீங்களே கட்டிக் கொண்டேன் என சொல்கிறிர்களே, தாலி கட்ட வேண்டும் என்று உங்கள் கணவரிடம் நீங்கள் கேட்டீர்களா?

நான் கேட்டேன். அதற்கு அவர், அதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. ஒருவொருக் கொருவர் புரிந்து கொண்டு சேர்ந்து வாழ்வோம். ஒரு தாலி மட்டுமே நம்முடைய வாழ்வியலை மாற்ற முடியாது. ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு விட்டுக் கொடுக்கின்ற மனப்பான்மையும் இருந்தாலே போதும் என்று சொல்லிவிட்டார். ஆனால் நான் தான் இந்த சமுதாயத்தில் தாலி இல்லாமல் இருக்கக் கூடாது என்று நானே தாலியை வாங்கிக் கட்டிக் கொண்டேன்.

மாங்கல்ய பூஜை பற்றியும், தாலி கட்டிய கணவனே கண் கண்ட தெய்வம் என்று சொல்வது பற்றியும் உங்களுடைய கருத்து என்ன?

மாங்கல்ய பூஜை என்பது தேவையில்லாத ஒன்று. மாங்கல்ய பூஜை செய்வதால் கணவருக்கு ஆயுட்காலம் அதிகரிக்கும் என்கிற மூடத்தனம் உண்டு. அதைப் பின்பற்றி மக்கள் பூஜைகள் செய்வது வீண் பொருட்செலவையும், நேரச் செலவையும் ஏற்படுத்துகிறது. வசதியாக இருப்பவர்கள் சுமங்கலிகளை அழைத்து ஏழு பேர் அல்லது ஐந்து பேருக்கு வீட்டில் விருந்து ஏற்பாடு செய்வார்கள். மாங்கல்ய பூஜை முடிந்தவுடன் அவர்கள் வீட்டிற்கு செல்லும்போது ஒரு தட்டில் பூ, பழம், புடவை, மஞ்சள் கயிறு, குங்குமம்,  வளையல் ஆகிய பொருட்களையும் கொடுத்து ஆசிர்வாதம் வாங்குவார்கள். ஒரு சிலர் புடவைக்கு பதிலாக ஜாக்கெட் துணி கொடுப்பார்கள். ஆனால் கிறாமப்புற அடித்தட்டு மக்கள் இதைப் பின்பற்றுவதில்லை.

இதில் என்னுடைய கருத்து என்னவென்றால் மாங்கல்ய பூஜையே கணவன் நூறு ஆண்டுகள் வாழவேண்டும். கணவன் வாழ்ந்தால்தான் நாம் பூ, பொட்டு எல்லாம் வைத்து சுமங்கலியாக வாழ முடியும் என்றுதான் அந்த பூஜையை நடத்துகிறார்கள். ஆனால் எத்தனை ஆண்கள் தன்னுடைய மனைவி நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் என்று நினைத்து பூஜை செய்கிறார்கள். (அதாவது பெண்கள் சுமங்கலி பூஜை செய்வது போல்) சுமங்கலி பூஜை செய்வதே பெண்கள் தன்னைத்தானே அடிமை என்று கூறிக்கொள்ளும் ஒரு விழாவாகத்தான் பார்க்கிறேன்.

இந்து மதத்தில் தாலி கட்டாத பெண்கள் ஒழுக்கம் இல்லாதவர்கள் என்கிறார்களே, அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?

தாலி கட்டிய பெண்கள் எல்லாம் ஒழுக்கமுடைய பெண்கள், தாலி கட்டாத பெண்கள் எல்லாம் ஒழுக்கம் இல்லாத பெண்கள் என்பது தவறான கருத்து. அது அவர்களுடைய வாழ்வியலையும் மனநிலையையும் பொறுத்தது. இதில் தாலி என்கின்ற ஒரு அடிமைச்சின்னத்தை அடையாளப்படுத்தி பெண்களை நாம் ஒழுக்கம் இல்லாதவர்கள் என விமர்சிக்கக்கூடாது.

தோழர் கருப்பசாமியிடம்...

என்னுடைய பெயர் கருப்பசாமி. துணைவியார் பெயர் சுமதி. நாங்கள் பல்லடம் செம்மி பாளையத்தில் வசிக்கிறோம். எங்களுக்கு இரண்டு குழந்தைகள். மகன் கோகுல், மகள் வைஷ்ணவி. பெரியார் கொள்கையின் மீது ஈடுபாடு கொண்டதால் எங்களுடைய மகளுக்கு வைஷ்ணவி என்ற பெயரை கருந்திணை என்று மாற்றிவிட்டோம்.

உங்களுடைய திருமணத்தை பற்றி சொல்லுங்கள்?

எங்களுடைய திருமணம் 2001 ல் நடந்தது. எனக்கு இது முதல் திருமணம். என்னுடைய துணைவியாருக்கு இது இரண்டாவது திருமணம். என்னுடைய வீட்டில் யாருடைய சம்மதமும் கேட்காமல் நான் திருமணம் செய்து கொண்டேன். இதனால் என்னை வீட்டில் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. சுமதியின் வீட்டிலும் ஏற்றுக் கொள்ளவில்லை.

இதனால் நாங்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி வாடகைக்கு வீடு எடுத்து தங்கினோம். நாங்கள் தாலி கட்டித் திருமணம் செய்யவில்லை. ஒருவருக்கொருவர் புரிந்து எங்களுடைய வாழ்க்கையை எந்த ஒரு சடங்கு, சம்பிரதாயம் இல்லாமல் தொடங்கினோம்.

இந்த சமூகத்தில் தாலி இல்லாமல் சேர்ந்து வாழ்ந்தால் சமூக மக்கள் நம்மைத் தப்பாகப் பேசுவார்கள் என்று சுமதியே கடையில் மஞ்சள் கயிறு ஒன்றை வாங்கி கட்டிக்கொண்டார்கள். ஊரில் இருப்பவர்களுக்கு அது நான் கட்டிய தாலி. ஆனால் உண்மையில் நாங்கள் இத்தனை ஆண்டுகளும் தாலி கட்டாமல்தான் சேர்ந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். முதலில் எங்களை ஏற்றுக் கொள்ள மறுத்தாலும் எங்களுக்கு குழந்தை பிறந்த பிறகு எங்களை ஏற்றுக் கொண்டார்கள்.

நீங்கள் திருமணம் செய்யும் போது பெரியார் இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தீர்களா?

இல்லை. எனக்கு அறிவியல் சார்ந்து முற்போக்கு சிந்தனை மட்டும் உண்டு. நான் பெரியாரின்  இயக்கத்திற்கு வந்ததற்கு காரணம் சுக்கம்பாளையம் வடிவேல், மணிகண்டன் இவர்களின் மூலமாகத்தான் வந்தேன். 2012 - ல் இருந்து பெரியார் இயக்கக் கொள்கைகளை கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறேன்.

தாலி தமிழர் பண்பாடா? இந்துப் பண்பாடா?

தாலி இந்துமதப் பண்பாடோ, தமிழர் பண்பாடோ இல்லை. முதலில் இந்துமதப் பண்பாடு இல்லை என்று இராமனுஜ தாத்தாச்சாரியார் எழுதிய சடங்குகளின் கதை என்னும் நூலில் 41 ம் பக்கத்தில் எல்லாத் திருமணங்களிலும் “மாங்கல்யம் தந்துநாநே ம்மஜீவந ஹேதுநா” என்கிற சுலோகம் ஒலிக்கும் போதுதான் தாலி கட்டுகிறார்கள். இந்த சுலோகத்துக்கு வயது என்ன? என்று பார்த்தால் வேத காலத்திலோ வேத மந்திரத்திலோ இந்த தாலி என்கிற சடங்கே இல்லை. மாங்கல்ய தாரணம் அதாவது தாலி கட்டுவதற்கென்று வேதத்தில் மந்திரமே இல்லை. இது குறிப்பிடப்படவே இல்லை. இந்த சுலோகம் இடையில் நுழைக்கப்பட்டது.சங்க காலத்தில் தமிழர்களிலே தாலி கட்டும் பழக்கம் இல்லை.

தாலியை அகற்றணும் என்று முடிவு எடுக்க காரணம் என்ன? எப்போது நீங்கள் தாலியை அகற்றினிர்கள்?

பெரியார் கொள்கையை ஏற்றுக் கொண்டதற்குப் பிறகு பெண்களுக்குத் தாலி தேவையில்லாத ஒன்று என்று உணர்ந்தேன். அதை அகற்றுவது என்று நாங்கள் இருவருமே முடிவு செய்தோம். சுயமரியாதை கலைப் பண்பாட்டுக் கழகம் சார்பாக மாட்டுக்கறி உணவுவிழா -  தாலி அகற்றும் விழா 3-4-2015ல் சூலூர் எஸ்.ஆர்.எஸ் திருமண மண்டபத்தில் நடப்பதாக இருந்தது.

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் தாலி அகற்றும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஒரு சில காரணங்களால் அந்த நிகழ்ச்சி நடக்கவில்லை. நாங்கள் அந்த நிகழ்ச்சியில் தாலியை அகற்றிவிடலாம் என் முடிவு செய்தோம். விழா நடக்காததால் நாங்களே எங்களுடைய வீட்டில் தாலியை அகற்றி விட்டோம்.

திருமணமான பெண்கள் கண்டிப்பாக தாலி அணிய வேண்டும், தாலி புனிதம் என்கிறார்களே இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?

திருமணமான பெண்கள் தாலி அணிந்திருந்தாலும் கணவரிடம் சண்டை போட்டு ஒரு கட்டத்தில் அதிகமாகச் சண்டை ஏற்பட்டு, கணவன், மணைவியை அடிக்கும் போது அந்த மனைவி “நீ கட்டியிருக்கிற தாலி இருக்கிறதால் தானே அடிக்கிறாய், இந்தா உன்னுடைய தாலி” என்று கழற்றி வீசிவிட்டு வந்துவிடுகின்றனர். மீண்டும் சிறிய இடைவெளிக்குப் பிறகு இருவரும் சேர்ந்து வாழும்போது தாலியைப் போட்டுக் கொள்கிறார்கள்.

இப்படியாக  பெண்கள் தன்னுடைய உரிமைக்கு ஒரு பிரச்சனை என்று வரும்போது பெண்களே தாலியை கழற்றி எடுத்த வீசி விடுகிறார்கள். தாலியைப் புனிதம் என்று சொல்லும் இந்து அமைப்பினரே காதலர் தினத்தன்று நாய்களுக்கு தாலிகட்டித் திருமணம் செய்து வைக்கின்றனர். தாலியை புனிதம் என்று சொல்கிறவர்களே இதையும் செய்கிறார்கள்.

தாலியைப் புனிதம் என்று சொல்கிறவர்களே... தாலி கட்டியவுடன் இவள் நமக்குச் சொந்தமானவள் என்பதற்கான ஒரு அடையாளம். அடிமைச் சின்னம். இனி நமக்கு வேண்டிய எல்லாத் தேவைகளையும் மணைவி செய்ய வேண்டும். தனக்கு ஒரு அடிமை. தன்னுடைய குடும்பத்திற்கு ஒரு சம்பளமில்லாத வேலைக்காரி. எங்கே போக வேண்டுமென்றாலும் தன்னுடைய ஆலோசனையில் செல்ல வேண்டும். எந்த ஒரு தன்னிச்சை முடிவும் எடுக்கக் கூடாது. இதற்கான ஒரு அடையாளம்தான் தாலி.

கடவுளர் திருக்கல்யாணம் மற்றும் அதில் தாலி கட்டும் நிகழ்வுகள் பற்றி கருத்து என்ன?

இம்மாதிரித் திருமணங்கள் எல்லாம் மக்களை இந்தச் சோம்பேறிப் பார்ப்பனர்கள் ஏமாற்றவே தவிர வேறு எதுவும் இல்லை. இதையெல்லாம் மக்கள் சிந்திக்க வேண்டும். நாத்திகர்கள் நாங்கள் சொல்ல வேண்டியது இல்லை. திருக்கல்யாண நிகழ்வில் நடப்பதைப் பாருங்கள். மணமகனான கடவுள் பக்கத்தில் இருப்பார் ஆனால் மணமகளான பெண் கடவுளுக்குப் பார்ப்பனர்தான் திரு மாங்கல்யம் கட்டுவார். இதை மக்கள் எல்லாம் வணங்குகிறார்கள்.

இருவரிடமும் கேள்வி

இந்த வாழ்க்கை முறையை தங்களது குடும்பத்தினரும், உறவினரும், சமூகத்தினரும் எப்படி பார்க்கிறார்கள்? நீங்கள் அதை எப்படி எடுத்துக் கொள்கிறிர்கள்?

இந்து மதத்தில் கணவன் இறந்ததற்கு பிறகு பூ, பொட்டு எல்லாம் இல்லாமல் வாழவேண்டும். இந்த சமூகத்தில் அவளுக்கு விதவை என்கிற பட்டமும் உண்டு. வெளியில் போகும் போது விதவையை பார்க்கக் கூடாது என்கிற மூடநம்பிக்கையும் உண்டு. ஆனால் பெரியார் கொள்கையில் இருக்கும் நாங்கள் வாழும் போதும், இறந்ததற்குப் பிறகும் தாலி இல்லாமல் இருக்கலாம். எப்போதும் போல இயல்பாக இருக்கலாம். ஒரு சுதந்திரப் பெண்ணாக வாழலாம்.

இந்தச் சமூகத்தின் பார்வையில் உறவினர்கள் சொல்வது, பத்தோடு பதினொன்றாக தாலி, சடங்கு, சம்பிரதாயங்களைச் சார்ந்துதான் வாழணும் என்கிற ஒரு கருத்து எங்களது வீடுகளிலும், உறவினர் களிடமும் இருக்கிறது. அதைப்பற்றி எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. எங்கள் மனதிற்கும், அறிவிற்கும் சரி என்று பட்ட வாழ்க்கை முறையில் எங்கள் வாழ்நாளிலேயே வாழ்ந்து விட்டோம் என்ற மனநிறைவுடன் வாழ்கிறோம்.