காலம் காலமாய் கழுதைகளுக்கு கல்யாண மார்கெட்டில் மவுசு அதிகம். ஆனால் இன்றைய தேதியில் பெண்களுக்கும் விழிப்புணர்வு அதிகமாகி வருவதால் அவர்களும் கழுதைகளுக்கே கழுத்தை நீட்ட பிரியப்படுகிறார்கள். காதலிக்கவும், கனவு காணவும் அழகிகளை நாடுபவர்கள் கல்யாணம் என்று வரும்பொழுது கழுதைகே முதலிடம் கொடுக்கிறார்கள். ஆனால் கழுதைகளைப் பற்றி சில உண்மைகளை எடுத்து சொல்ல விரும்புகிறேன். நீங்கள் ஒரு (இலக்கிய) மேதை அல்லது அறிவுஜீவியாய் இருந்தால், வாழ்க்கை சுமுகமாய் போக ஒரு கழுதையை வாழ்க்கைத் துணையாய் கொள்ள முடிவெடுக்கலாம். கழுதை என்றால் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்ளும் என்பது உங்கள் எண்ணமாய் இருந்தால், அய்யகோ தவறு செய்கிறீர்கள் ஐயா!

கழுதையின் உலகம் அமைதியானது. தன் வேலையை, தனக்குக் கொடுத்த வேலையை மட்டுமே பார்க்கும். அனாவசியமாய் இன்னொருவர் விஷயத்தில் மூக்கை நுழைத்து சண்டை, சச்சரவு அல்லது உங்கள் மொழியில் சொன்னால், கருத்து மோதல் போன்றவைகளுக்குப் போகாது. இதுப்போன்ற பிரச்சனையால் மன உளைச்சலில், அழுத்ததில், தலைவலியில் நீங்கள் தவிக்கும்பொழுது, பக்கத்தில் நிம்மதியாய் உறங்கும் கழுதையைப் பார்த்து உங்கள் எரிச்சல் அல்லது ரத்த அழுத்தம் கூடும் சாத்தியங்கள் உண்டு. இத்தகைய அறிவுஜீவித்தனமான விஷயங்களை அதற்கு நீங்கள் எவ்வளவு எடுத்துக் கூறினாலும், அது முகத்தில் எந்த உணர்வும் காட்டாமல் கடனே என்றுக் கேட்டுக் கொண்டிருக்கும்பொழுது, க... தெரியுமா க... வாசனை என்ற பழமொழியை நினைவுக்கூர்ந்து நீங்கள் அவ்விடத்தை விட்டு விலகிவிடுதல் உங்கள் உடம்புக்கு நல்லது.

கழுதை தன்னுடைய உலகில் சஞ்சாரித்துக் கொண்டு, சும்மா இருக்கும். சும்மா என்றால் வாய் வார்த்தை பேசாமல், மண்டைக்குள் குடைச்சல் பட்டுக்கொண்டு இருப்பது ஆகாது. தான் உண்டு தன் வேலை உண்டு என்று அமைதியாய் இருப்பது. நீங்கள் திட்டினாலும், உதைத்தாலும் அதற்கு ஒன்றும் ஏறாது. திட்டு என்பது நேரடியாய் திட்டினாலே பேசாமல் இருக்கும் நீங்கள் அறிவுஜீவித்தனமாய் இரட்டை அர்த்ததில், ஜாடையாய் திட்டினால் எந்த உணர்வும் காட்டாது.

ஆனால் இவைகளை ஓரளவு பொறுத்து போகுமே தவிர, பொறுமைக்கு பூஷணமான கழுதையும் சட்டென்று முரண்டு பிடிக்க ஆரம்பித்துவிடும். எந்த சாம, தான பேதங்களுக்கும் அசையாது. கடைசியில் நீங்கள் காலில் விழுந்து அதன் வழிக்குப் போக வேண்டியும் இருக்கும். அதைவிட, சில சமயம் கோபித்துக் கொண்டு பின்னங்காலால் ஒரு உதை விட்டு விட்டு, எங்காவது ஓடிப் போய் விடும். அப்பொழுதும் நீங்கள்தான் அதனை சமாதானப் படுத்தி அழைத்து வரவேண்டும். கழுதை ஒரு பொழுதும், சண்டைக்கும் வராது, அதே சமயம் அதுவே, சமாதானத்துக்கும் வெள்ளை கொடியும் காட்டாது என்பதை நினைவில் கொள்க.

Marriageகடைசியாய், கழுதையின் வாழ்க்கை சுகமானது. எதுவுமே அதை பாதிக்காது. தன்னால் முடிந்ததை முகம் கோணாமல் செய்யுமே தவிர, நீங்களாய் அறிவுஜீவிதனமாய் ஏதாவது பிரச்சனை செய்யாமல் இருந்தால், அதனுடன் வாழ்வது சுகமானதுதான்.

கழுதைக்களுக்கும் சிலசமயம் வாழ்க்கை அலுத்துவிடும். வேலை செய்வது, சாப்பிடுவது, தூங்குவது மீண்டும், மீண்டும் வே..., சா..., தூ.... வா? என்று யோசிக்க ஆரம்பிக்கும். எப்பொழுதுமே அத்தனை பிரச்சனைக்கும் காரணமே இந்த யோசனை தானே? பரிணாம வளர்ச்சி சிந்தாந்தப்படியும் ஏன் அடுத்தக்கட்டமான எருமை மாடாய் மாறக்கூடாது என்று நினைத்து யாரிடமும் யோசனை எதுவும் கேட்காமல் ஒரு நாள் எருமைகளாக மாறிவிடும். ஆனால் இதனால் ஊரும், உலகமும் அல்லோகல்லப்படும். கழுதையால் இவ்வளவு நாளும், சந்தோஷமாய் இருந்தவர்களுக்கு அஸ்தியில் ஜூரமே வந்துவிட்டது. சிலரோ எருமை மாட்டால் கிடைக்கும் நல்லது, கெட்டதை பட்டியல் இட்டுப் பார்த்ததில், அவர்களுக்கு பெரிய வித்தியாசம் ஒன்றும் கிடைக்கவில்லையாததால், பேசாமல் இருந்து விட்டார்கள்.

ஆனால் வித்தியாசம் அதிலும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கத்தான் செய்தது. கழுதையின் அருகில் போய் நின்றால் போதும். அது மெதுவாய் தலையைத் தூக்கி, உலகில் உள்ள துக்கத்தை எல்லாம் தன் கண்களில் தேக்கி, உங்களை பரிதாபமாய் பார்க்கும். அதே சமயம், எருமை மாட்டுக்கு அருகில் போங்களேன். முதலில் அது உங்களை கண்டுக்கவே கண்டுக்காது. திரும்ப, திரும்ப கவன ஈர்ப்பு தீர்மானம் போட்டால், போனால் போகிறது என்று தலையை திருப்பி, உங்களை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு திரும்ப தலையை திருப்பிக் கொள்ளும். அந்த பார்வையில் எந்த உணர்வும் இருக்காது. அது உங்களை அலட்சியப் படுத்துகிறது என்று உண்மை உங்களுக்கு புலனாகி, உங்கள் தன்மானத்தில் முதல் அடி விழும்.

எருமை மாடுகள் சந்தோஷமாய் தான் நினைத்ததை சாதிக்க புறப்பட்டு விட்டன. யாரையும் குறித்து எந்த அச்சமோ, நினைப்போ இல்லாமல் தங்கள் வேலையைப் பார்க்கத் தொடங்கின. ஆரம்பத்தில் அமைதி காட்டியவர்கள், நடப்பதைப் பார்த்து பீதிக் கொள்ள தொடங்கினர். தாங்கள் கொண்ட பீதியை மற்றவர்களுக்கு சொல்லி, சொல்லி எல்லாருக்கும் பயம் காட்ட தொடங்கினர். வேகமாய் வந்தவர்கள், அவைகளின் மேல் இடித்தும் இடிக்காமலும் நின்றுவிட்டு, வாய்க்கு வந்தப்படி திட்டி விட்டு நகர்ந்தனர். ஆனால் எருமை மாடுகளுக்கு மேல்தோல் கடினமானது. அதனால் வெய்யிலும் மழையும் அவைகளை எந்த வகையிலும் பாதிக்கவேயில்லை. பாவம்! அவர்கள் கோபம் அவர்களுக்கு! ஆனால் கருமமே கண்ணான எருமை மாடுகள் அசைந்தும் கொடுக்கவில்லை. ஒன்றிரண்டு பேர்கள் அவைகளின் பொறுமையைப் போற்றினாலும் எருமை மாடுகள் அதற்கும் ஒன்றுமே பதில் சொல்வதில்லை. மெதுவாய் ஊர்ந்து போய் கொண்டேயிருந்தன.

இன்றைய பதில் இல்லாத கேள்வி எல்லார் மனங்களிலும், சிலரின் வாய் வார்த்தையாலும் வெளியே வரத் தொடங்கி விட்டது. இது எங்குப் போய் முடியும்? இன்று கழுதை எருமை மாடானது, நாளை குலைத்து பின்பு கடிக்க தொடங்கும் நாய் ஆகலாம்! அதற்கு பிறகு.... நினைக்கவே முடியாமல் எல்லாரும் பயத்தில் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் சில பெருசுகள் "காலம் கலி காலம்" என்று சொல்லி பெருமூச்சு விட்டுக் கொண்டு, கழுதையுடன் தாங்கள் வாழ்ந்த இனிய வாழ்க்கையை சொல்லி பெருமூச்சு விட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இனியும் அந்த சுகமான வாழ்க்கை யாருக்குமே அமையாது என்ற கசப்பான உண்மை மட்டும் எல்லாருக்கும் தெள்ள தெளிவாய் புரிந்துவிட்டது. ஆனால் ஏற்றுக் கொள்ளத்தான் மனம் வரவில்லை.

- ராமசந்திரன் உஷா, ஐக்கிய அரபு குடியரசு

Pin It