மனித நாகரிகம் வளர்ச்சி அடைந்து இனக்குழு தலைவராக இருந்தவர்கள் மன்னர்களாக மாறிய காலந்தொட்டு அந்த மன்னர்களின் வாழ்வுக்கான பணத்தை மக்கள் கொடுத்த காலத்தில் இருந்தே வரி என்பது தொடங்கியது. முதன் முதலாக தம்முடைய இனத்தை காத்துக் கொள்வதற்கு தமது எதிரி இனக் குழுக்களை முறியடிப்பதற்கு குறிப்பாக தம்மிடம் உள்ள கால்நடைகளை எதிரிகள் கவர்ந்து செல்லாமல் இருப்பதற்கு கவர்ந்து செல்ல வருபவர்களை எதிர்த்து சண்டையிடுவதற்கு வலிமை மிக்க ஒருவர் தேவைப்பட்டார். அப்படிப்பட்ட ஒருவரையே அவர்கள் தன் இனக்குழுவின் தலைவராக தேர்வு செய்தார்கள்.

இப்படி இனக்குழுவின் தலைவராக தேர்வு செல்யப்பட்டவர்களே பிற்காலத்தில் மன்னர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். இந்த மன்னர்கள் ஆரம்பமுதலே தங்களின் ஆடம்பர வாழ்வுக்காக மக்களிடமிருந்து பணத்தைப் பெற்று தம்மை வளமாக்கிக் கொண்டார்கள். மக்களுக்கும் இந்த மன்னர் என்ற அமைப்புமுறை தாமாக உருவாக்கிக் கொண்டாலும் அந்த அடிப்படை கட்டமைப்புகளில் இருந்து அவர்களால் வெளியேற முடியவில்லை. ஒரு சமூக இனக்குழு சமுதாயமான பின்னர் நாடு என உருவமாற்றம் அடைந்தது.

நிலப்பகுதி கூடக்கூட அதிக நிலம் கொண்டவர்கள் பேரரசர்கள் எனப் போற்றப்பட்டார்கள். இந்தப் பேரரசர்கள் பட்டத்தை இவர்கள் பெறுவதற்கு வலிமையும், வலிமை கொண்ட வீரர்களின் எண்ணிக்கையும் கூடுதலாக தேவைப்பட்டது. அப்படி அவர்கள் நிலப்பகுதியை விரிவடையச் செய்யும்போது, அந்த விரிவடைந்த நிலப்பகுதி ஆதிக்க சக்தியாக மாறியது. குறைந்த நிலப்பகுதி கொண்டவர்கள் சிற்றரசர்கள் எனப்பட்டார்கள்.

பேரரசுகளுக்கு சிற்றரசுகள் கப்பம் கட்ட தொடங்கின‌. தங்கள் நிலத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக பேரரசுகளுடன் சிற்றரசுகள் இணக்கம் கொள்வதற்கு தமது நிலத்தில் வாழும் மக்களிடம் கொடை பெற்றது. இந்தக் கொடை பிறகு கட்டாயமாக்கப்பட்டது. பெரும் கொடையிலிருந்து பொது குளங்களும், சத்திரங்களும், கோயில்களும் கட்டப்பட்டது. இது நாளடைவில் தமது நிலப்பகுதியை காப்பாற்றிக் கொள்வதற்காக தேர்வு செய்த‌ வீரர்களின் பராமரிப்புக்காகவும், மக்களிடம் இருந்து பெற்ற இந்த கொடை பயன்படுத்தப்பட்டது.

இருபதாவது நூற்றாண்டுக்குப் பிறகு கொஞ்சம் மக்கள் தாங்களாகவே தங்களின் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறத் துவங்கினார்கள். முடியாட்சி கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி மக்கள் ஜனநாயக குடியரசு இந்த உலகம் முழுக்க பரவத் தொடங்கியது. மக்கள் நலனுக்காக மக்களே தங்களை தீர்மானித்துக் கொள்ளும் சக்தியாக உருமாறினார்கள்.

இந்த இருபதாவது நூற்றாண்டு காலத்திலே வேகமாக வளர்ச்சி அடைந்த அறிவியல் இந்த குடியரசு தத்துவத்தோடு கை கோர்த்தது. இந்த உலகத்தின் மாபெரும் பொருளாதார மேதை கார்ல் மார்க்ஸ் முதன் முதலாக உற்பத்தி, உழைப்பு, மூலதனத்திற்கான அடிப்படை கட்டமைப்புகளை கண்டுபிடித்து இந்த உலகிற்கு அறிவித்தார். அதுவரை முதலாளிகள் தங்களைக் காப்பாற்றும் கடவுள்களாக நினைத்துக் கொண்டிருந்த மக்கள் முதன்முதலாக அப்போதுதான் தங்களுடைய உழைப்பு என்னும் கொடையைத் தந்தே கூலியைப் பெறுகிறோம் என்று உணர்ந்து கொண்டார்கள்.

உற்பத்தியில் கிடைக்கும் லாபம் தமது உழைப்பால் வந்த பலன் என்பதை மக்கள் அறியத் தொடங்கிய காலமே, மனித வாழ்வியலை ஒரு மகத்தான நடைபாதைக்கு அழைத்துச் சென்றது. 'அரசு என்பது மக்கள்' என்ற தத்துவத்தை மார்க்ஸ் முன்வைத்தார்.

இந்த அரசை மக்களுக்காக மக்கள் நலன் சார்ந்து சிந்திக்கும் அனைவரும் முன்மொழிந்தார்கள். இந்த மக்களின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, வீடு, கல்வி, மருத்துவம் இவைகளை மக்களுக்கான அரசே செய்ய வேண்டும் என்பதை இவர்கள் வலியுறுத்தினார்கள். இதற்காக மக்களிடமிருந்து வரி வசூலிக்கப்பட்டது. இந்தவரி நேரடியாகவும், மறைமுகமாகவும் மக்களிடமிருந்து பெறப்பட்டது. நேரடியாக வரி செலுத்துவதற்கு தமது மொத்த வருமானத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட விழுக்காடு அரசுக்கு செலுத்த வேண்டும் என்பது சட்டமாக்கப்பட்டது.

இச்சட்டத்தின்படி பெருந்தொழில் செய்வோர், குறுந்தொழில் செய்வோர், உயர் சம்பளம் பெறும் மக்கள் இவர்கள் இந்த நேரிடை வரியர்களாக தேர்வு செய்யப்பட்டார்கள். ஆனால் இவர்கள் எவ்வளவு குறுக்குவழியில் இந்த வரியை கட்டாமல் தவிர்க்க முடியுமோ அத்தனையும் செய்து இந்த நாட்டின் வளர்ச்சியை ஆழத்திற்கு அழைத்துச் செல்பவர்களாக இருக்கிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றத்திலே வரி கட்டாதவர்களின் பட்டியலை அமைச்சர்கள் அறிவிப்பதோடு சரி. அது வசூலிக்கப்பட்டதா, இல்லையா என்பதையும் அப்படி வரி கட்டாதவர்களின் மேல் இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்பதையும் மக்களுக்கு அறிவிக்க வேண்டிய பெருங்கடமையிலிருந்து தவறுகிறார்கள். சந்தை, வணிகம், திரைப்பட நடிகர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள், நிலத்தரகர்கள், பெரு முதலாளிகள் இவர்களின் வருமானமும், இவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட வேண்டிய வரியும் இதுவரை கற்பனையாகவே இருந்து வந்தது. ஆனால் அடிப்படை வசதிகள்கூட இல்லாத ஏழை மக்கள் ஒரு தீப்பெட்டி வாங்குவதில் தொடங்கி பேருந்தில் செல்வது வரை மறைமுக வரி என்னும் போர்வையில் அரசுக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரிகளையும் மிகச் சரியாக செலுத்திவிடுகிறார்கள்.

இந்த நாட்டின் வரிவிதிப்பு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20க்குள் முடிக்கப்பட்டு ஏப்ரல் முதல் தேதிக்குள் நடைமுறைப்படுத்தப்படும். இதற்கான ஆட்சியில் இருக்கும் கட்சிகள் தாம் தயாரிக்கும் நிதிநிலை அறிக்கையை அந்த காலத்திற்கேற்றவாறு தமது கட்சி வரும் தேர்தலில் ஆட்சியை பிடிப்பதற்கு என்னவெல்லாம் அறிவித்தால் சாதகமாக இருக்கும் என்பதை எல்லாம் நிலைப்படுத்தி நிதிநிலை அறிக்கை என்னும் பட்ஜெட்டில் பொறித்து வைக்கிறார்கள்.

ஆனால் இந்த நாட்டில் 110 கோடி மக்களில் 35 கோடிக்கு மேற்பட்ட மக்கள் இரவு படுக்கச் செல்வதற்கு முன்னால் பட்டினியை சுமந்தே செல்கிறார்கள். நமது நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் சரியான மருத்துவம் இன்றி அடிப்படைக் கல்வியின்றி சில நேரங்களில் உயிர்வாழ்வதற்கே உத்தரவாதமின்றி ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்ற கேடு நிறைந்த சேதியால் இந்த நாடு போர்த்தப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு முறையும் இயற்கை இடர்பாடுகளால் 100 விழுக்காடு பாதிப்பவர்கள் இந்த ஏழை எளிய மக்களாகத்தான் இருக்கிறார்கள். தொடர் மழையாகட்டும், புயல், வெள்ளமாகட்டும், கடும் வறட்சியாகட்டும் இதில் கடும் பாதிப்புக்கும், உயிரிழப்புக்கும் உள்ளாவோர்கள் இந்த மக்களே தான். அவர்கள் தங்க வீடின்றி பணியிலும், மழையிலும் வாடுவதோடு சரியான மருத்துவம் இன்றி கடும் நோயினால் செத்தொழிகிறார்கள். கல்வி என்றால் என்னதென்றே தெரியாமல் வாழ்வை முடித்துக் கொள்கிறார்கள். வரி என்பது இப்படி அடித்தட்டு மக்களிடமிருந்து தான் முழுமையாக பெறப்படுகிறது. ஆனால் அந்த மக்களுக்கான வாழ்வு உத்திரவாதமற்றதாகவே இருக்கிறது.

இந்த நாட்டில் நிதிநிலை அறிக்கை தயார் செய்யப்படுவதும் பற்றாக்குறைக்கான பணம் அச்சடிக்கப்படுவதும் இந்த 100 கோடி மக்களுக்கும் சேர்த்து தான். ஆனால் இந்த ஒட்டு மொத்த நிதிநிலை அறிக்கை இரண்டு, மூன்று விழுக்காடு மக்கள் மட்டும் வளமான வாழ்வு வாழ்வதற்கான காரணத்தைக் கண்டுபிடித்து, இந்தியாவின் ஒட்டு மொத்த பொருளாதாரமும் பரவலாக்கப்படும்போது இந்த நாட்டின் அவலமான வாழ்வியல் முறை முற்றிலுமாக துடைத்து அழிக்கப்பட்டிருக்கும்.

ஆனால் நம் நாட்டில் நிலவுவது கூம்பு நிலை பொருளாதாரம். இந்த கூம்பின் உச்சத்தில் இருக்கும் சிலர் இந்த நாட்டின் உச்சநிலை பணக்காரர்களாக இருந்து கொண்டும் ஏறக்குறைய 70 விழுக்காடு மக்களின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தை, கனிமங்களை, கடல் வளத்தை, நிலங்களை வெறும் 2, 3 விழுக்காடு மக்கள் வைத்துக் கொண்டிருக்கும் இந்த நாட்டில் ஆண்டுதோறும் கொண்டு வரப்படும் நிதிநிலை அறிக்கை என்ன மாற்றத்தை தரப்போகிறது? மின்வெட்டை சரிசெய்ய போராட்டங்கள் எவ்வளவோ நிகழ்ந்து கொண்டிருக்க, மின்சாரமே என்ன என்று தெரியாமல் கோடிக்கணக்கான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆக ஒவ்வொரு ஆண்டும் வரிவிதிக்கப்படுவதும், அது நடைமுறைபடுத்தப்படுவதும் அந்த ஆண்டு கூடுதலாக ரூபாய் நோட்டு தேவையை அச்சடித்து நிதிநிலையை சமன்படுத்துவதுமான இந்தப் போக்கு இந்தியாவை எந்த அளவிற்கு உயர்த்தி வைக்கும் என்பது இன்னமும் விளங்காத புதிராகவே இருக்கிறது.

ஒரு நாட்டின் அடிப்படை கட்டமைப்பை அந்த மக்களின் வாழ்வியல் தளங்களில் இருந்து புரிந்து கொள்ள முடியும். ஆனால் நம் நாட்டின் வாழ்வியல் தளங்களை நாம் கூர்ந்து நோக்கும்போது எமது மக்கள் அறியாமையும், வேதனையும், கண்ணீரும் கலந்த ஒரு விளிம்பு நிலை வாழ்வையே வாழ்க்கையின் அடையாளமாகக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த ஆண்டின் இடைநிலை நிதி அறிக்கையில் ராணுவத்திற்கும், போர்ப்படை கருவிகள் வாங்குவதற்கும், செலவிட்ட தொகைக்கும் கல்விக்கு செலவிடப்பட இருக்கும் தொகைக்கும் ஒப்பீடு செய்து பார்த்தால் ஒரு நீண்ட இடைவெளி இந்த இரு கட்டமைப்புகளுக்கு இடையே இருப்பது நமக்குப் புரியும். ஆகவே இனிவரும் காலங்களிலாவது மக்களுக்கு வலி ஏற்படுத்தாத மகிழ்ச்சியும், மனநிறைவும் தரக்கூடியதாக நிதிநிலை அறிக்கை அமைய வேண்டும் என்பதே நமது விருப்பம். அதை ஆட்சியாளர்கள் ஏற்பார்கள் என்று நம்புகிறோம்.

-கண்மணி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It